சர்வதேசத்தின் குப்பை மேடாக இலங்கை மாறும் அபாயம் | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேசத்தின் குப்பை மேடாக இலங்கை மாறும் அபாயம்

உலகத்தில் உள்ள செல்வந்த நாடுகள் இலங்கை போன்ற வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளை எந்தெந்த விதங்களில் அடிமைப் படுத்த முடியுமோ அல்லது சீரழிக்க முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுவதை இக் காலங்களில்காணமுடிகின்றது.  

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு உத்திகளைக் கையாண்டு மிக இலாவகமாக அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் சட்டங்களும் சிலவேளைகளில் அதற்கு உறுதுணையாக அமைவது கவலைக்குரியது.  

இதில் வியப்பு என்னவென்றால் இலங்கையை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள நாடுகளில் வாழும் நம்மவர்களும் இது போன்ற விடயங்களில் சுயநலமாகச் செயற்படுவதுதான்.  

நாடு, நாட்டின் மீதான அக்கறை, அன்பு, தேசப்பற்று என ஒரு பக்கம் தம்மை மிக நல்லவர்களாக இனங்காட்டிக் கொண்டு, சிலர் நாட்டை சீரழிக்கும் அல்லது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகக் கொடுமையானதும் வேதனையானதுமாகும்.  

கடந்த வருடங்களில் வெளிநாடுகளிலிருந்து தரக்குறைவான தேயிலையை கொண்டுவந்து சர்வதேச ரீதியில் மிகவும் பெயர் போன நமது தேயிலையில் கலப்படம் செய்து மீண்டும் அதை வெளிநாட்டுக்கு அனுப்பி நமது தேயிலையின் நற்பெயரை கெடுத்தவர்கள் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். 

அதே போன்று வெளிநாட்டில் இருந்து மிளகு இறக்குமதி செய்தும் கொட்டைப் பாக்கு இறக்குமதி செய்தும் இன்னோரன்ன பொருட்களை இறக்குமதி செய்தும் கலப்படம் செய்து தமது வருமானத்திற்காக, நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதுடன் நமது அப்பாவி விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தித்துறையினரை பாதிப்புக்குள்ளாக்கியதை மறந்துவிட முடியாது.  

இப்போது அதே போன்று புதிய விவகாரம் ஒன்று தலை தூக்கி உள்ளது. இது புதிய விடயம் இல்லைதான் காலங்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மோசமான செயல்தான் எனினும் இது தொடர்பில் நம்மவர்கள் இப்போதுதான் கண்திறந்திருக்கின்றார்கள்.  

செல்வந்த நாடுகளின் குப்பைத் தொட்டியாக இலங்கையை மாற்றும் செயற்பாடுதான் அது.  

தமது நாட்டின் குப்பைகளை தங்கள் நாடுகளிலேயே அழிக்க முடியாத அத்தகைய நாடுகள் கொள்கலன்கள் மூலம் அவற்றை இலங்கைக்கு அனுப்பி இங்கு தரகர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கு டொலர்களை வாரிவழங்கி தமது காரியத்தை கச்சிதமாக செய்து முடிப்பதை காணமுடிகின்றது.  

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஆஸ்பத்திரிக் கழிவுகள், பாவித்த மெத்தைகளின் கழிவுகள், இலத்திரனியல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என்பவற்றை கொள்கலன்களில் அடைத்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி நாட்டை குப்பை மேடாக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதுதான் புதிய செய்தி.  

நூற்றுக்கணக்கான கொள்கலன்களில் இத்தகைய குப்பைகள் இலங்கையை வந்து சேர்ந்துள்ளன. அதற்கு இலங்கையில் உள்ள சில இறக்குமதியாளர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர்.  

நாடு எக்கேடு கெட்டுப் போனால் என்ன கைக்கு பணம் வந்தால் போதும் என்ற மட்டமான சிந்தனையில் அவர்கள் செயற்படுவது எவ்வளவு மோசமானது என்பதை நாம் இப்போதாவது அறிந்துகொள்ள முடிந்தது என்பதில் மகிழ்ச்சி.  

பிரிட்டனிலிருந்து நூற்றுக்கணக்கான கொள்கலன்களில் இத்தகைய கழிவுகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. என்றாலும் கடந்த சுமார் 17 மாதங்களாக சுங்க அதிகாரிகள் இதனை பரிசோதிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது கசப்பான உண்மை.  

இலங்கையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியின்றி இந்த கொள்கலன்கள் இலங்கை துறைமுகத்திற்கு வந்துள்ளன.  

இதில் உள்ள பொருட்கள் அனைத்துமே உபயோகிக்கப்பட்ட அல்லது குப்பைக்கு சமமானவை என்பதை சுங்க அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு 102 கொள்கலன்களில் பிரிட்டனின் குப்பைகள் இலங்கைக்கு வந்துள்ளதை அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.  

இதன் உண்மை நிலையை ஊடகங்களுக்கு தெரிவிப்பதற்காக சுங்க திணைக்களத்தின் தொழிற்சங்க தலைவர்கள் சில தினங்களுக்கு முன் கொழும்பில் செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.  

அந்த மாநாட்டில் சுங்கத் திணைக்கள தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவரான என்டன் கிருசாந்தவும் அச் சங்கத்தின் செயலாளர் குணதிலக்கவும் பிரிட்டனின் குப்பை கொள்கலன்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.  

இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு குப்பை கொள்கலன்கள் தொடர்ச்சியாக வருவதற்கு வழிவகுத்துக் கொண்டிருக்கின்ற நாட்டில் நடைமுறையில் உள்ள வர்த்தமானி தொடர்பாகவும் அவர்கள் இதன்போது தகவல் வெளியிட்டனர்.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாம் நிதியமைச்சராக செயற்பட்ட இரண்டாயிரத்து பதின்மூன்றாம் ஆண்டில் இந்த வர்த்தமானியில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள், 2013 /-7-/11ம் திகதிய 1818/30 என்ற இலக்கமுடைய இந்த வர்த்தமானியை அவரே அனுமதித்துள்ளார். அந்த வர்த்தமானி இன்று வரை நடைமுறையில் உள்ளது. அது இத்தகைய குப்பைகள் இலங்கைக்கு கொண்டு வரப்படலாம் என்பதை உறுதிப்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  

இந்த வர்த்தமானியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையை விடயத்துக்கு பொறுப்பான நிதியமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.  

அத்துடன் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சராக உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது விடயத்தில் தலையிட்டு உடனடியாக சம்பந்தப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்கி உலக நாடுகளின் குப்பைமேடாக இலங்கை மாறுவதை இப்போதாவது தடுக்க முன்வர வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  

இதன் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ள முனைபவர்கள் இத்தகைய செயற்பாடுகளை அனுமதித்தாலும் சுங்க அதிகாரிகள் என்ற ரீதியில் தம்மால் இதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சுட்டிக்காட்டிய அவர்கள், அரசாங்கம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொண்டு பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள நேரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  

இது தொடர்பில், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நாட்டை சீரழிக்கும் இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில், ஊடகங்களும் தமது பொறுப்பை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பதையும், அவர்கள் வலியுறுத்தினார்கள்.  

உண்மையில் இத்தகைய சர்வதேச குப்பைகள் நாட்டில் தற்போது வாழும் மக்களை மட்டுமன்றி எதிர்கால சந்ததியையும் பெரிதாக பாதிப்பது உறுதி.  

குறிப்பாக பாவிக்கப்பட்ட மெத்தைகள் ஆஸ்பத்திரி கழிவுகள், என்பன மிக மோசமான தொற்றுக் கிருமிகளை தாங்கியே இந்த நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன  

அவை கொட்டப்படும் சூழலில் வாழும் மக்களுக்கு, இதன் மூலம் பல்வேறு நோய்கள் தொற்றுவதற்கு இடம் உண்டு.  

நாட்டிற்குள் பல தொற்று நோய்கள் காலத்துக்கு காலம் வெளிநாடுகளிலிருந்து வந்து சேர்கின்றன அதனால் எமது மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.  

அந்த வகையில் இந்த குப்பைகள் கொள்கலன்களும் புதுப்புது நோய்களை எமது மக்கள் மத்தியில் பரப்ப முடியும் என்ற சந்தேகம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.  

இதற்கு நாட்டு மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சுங்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.  

நாட்டில் காட்டுச் சட்டத்தை இல்லாதொழித்து மக்களை நிம்மதியாக வாழ வைக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் சம்பந்தப்பட்டோர், அதற்கான நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.  

இந்த விவகாரம் தொடர்பில், தாம் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேற்படி நூற்றுக்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் துறைமுகத்தின் பொறுப்பில் இருந்தாலும் அதனை பரிசோதிக்கும் அதிகாரம் முதலீட்டு சபை வசமே உள்ளது நாட்டிலுள்ள பாரிய வர்த்தகர்களும் இதில் சம்பந்தப் பட்டுள்ளனர் என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.   

நாட்டில் நடைமுறையில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி சட்டங்கள் மற்றும் நியதிகளுக்கு முரணாக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

எமது நாட்டின் சில சட்டங்களில் சம தன்மை கிடையாது. சட்டம் சகலருக்கும் ஒரே விதமாக செயல்படுத்தப்படுவதில்லை. அதனால் மேற்படி கொள்கலன்களை இலங்கைக்குள் கொண்டுவந்தது யார் என்பதைக் கூட இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. இதுபோன்ற பல கொள்கலன்கள் ஏற்கனவே துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  

நாட்டில் உள்ள மதத் தலைவர்கள், கல்விமான்கள், சமூக சேவை அமைப்புகள் ஆகியன தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டி வருகின்றன.  

நிதியமைச்சு இதில் சம்பந்தப்படுவதால் உடனடியாக குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்கி இத்தகைய வாய்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.  

காலத்துக்கு காலம் அமெரிக்காவிலிருந்து இந்தோனேசியாவுக்கு இத்தகைய குப்பைகள் செல்வதைக் கண்டிருக்கின்றோம். அண்மையில் மலேசியாவில் இத்தகைய குப்பை கொள்கலன்கள் கொண்டுசெல்லப்பட்டதும் மலேசியா அதனை திருப்பி அனுப்பியதும் நாம் அறிந்ததே  

அதேபோன்று கனடாவிலிருந்து கொண்டுவரப்பட்ட குப்பைகளை பிலிப்பைன்ஸால் திருப்பி அனுப்பப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையும் நாம் அறிவோம்.  

முன்பு சில ஆண்டுகள் உலகெங்கிலுமுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சீனா உள்வாங்கிக் கொண்டது பின்னர் அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு அந்த நடைமுறைக்கு சீனா முற்றுப்புள்ளி வைத்தது.  

இந்த நிலையிலேயே பெருந்தொகையான குப்பைகள் மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.  

அதன் ஒரு அம்சமாகவே தற்போது பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு குப்பைகள் அனுப்பப்படுகின்றன.  

அண்மையில் இயற்கைக்கான உலகளாவிய நிதியம், ஒரு தகவலை வெளியிட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு வருடமும் சுமார் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவதுடன் அவைகளில் பெருமளவிலான பிளாஸ்டிக்குகள் குப்பை மேடுகளிலும் அல்லது கடலில் கொட்டப்படும் நிலையை தெரிவித்து அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சுட்டிக்காட்டியிருந்தது.  

தற்போது துறைமுகத்தின் பொறுப்பிலுள்ள மேற்படி கொள்கலன்களை திறந்து அதற்குள்ளே என்ன இருக்கின்றது என்பதை பார்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. எனினும் அது மிக மந்தமாகவே இடம்பெற்றுவருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள்   தெரிவிக்கின்றனர்.  

அதேபோன்று துறைமுகத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட கொள்கலன்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன. அல்லது அதற்குள் இருந்த குப்பைகள் எங்கே கொட்டப்பட்டிருக்கின்றன என்பது தொடர்பில் திருப்திகரமான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.  

கொழும்பில் உள்ள குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டில் கொட்டுவதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், நமது நாட்டின் கழிவுகளை கொட்டுவதற்கு முறையான திட்டங்கள் இல்லாத நிலையில், கண்டி மாத்தளை புத்தளம் போன்ற பகுதிகளில் குப்பை மலைகள் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளிலிருந்து வரும் இந்த குப்பைகளை எங்கே கொட்டுவது? அதற்கான அனுமதியை வழங்கியவர்கள் யார்? சுயநலத்திற்காக இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு சர்வதேச குப்பைகள் குவியும் நாடாக இலங்கை மாறுவதை தடுப்பதற்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வழிவகுக்க வேண்டும் என்பதே எமது கருத்து.

லோரன்ஸ் செல்வநாயகம்   

Comments