தானத்தில் சிறந்த தானம் எது? | தினகரன் வாரமஞ்சரி

தானத்தில் சிறந்த தானம் எது?

ஒரு நாள் புத்த பகவானைச் சந்தித்த ஒருவர், அவரைக் கடுமையான  வார்த்தைகளால் திட்டிவிட்டாராம். அதற்குப் புத்தர் எந்தப் பதிலும்  பேசவில்லை. மறுநாள் அங்குச் சென்ற அந்த நபர், நேற்று உங்களை நான் கடுமையான  வார்த்தைகளால் திட்டிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் பகவானே! என்று  மன்னிப்பு கோரியிருக்கின்றார். அதற்குப் புத்தர், "நீர் பேசியது நேற்று  அல்லவா! நேற்றைய அந்த மனிதன் இன்று இந்த இடத்தில் இல்லை. எனவே, நேற்றைய  விடயத்திற்கு இன்று மன்னிப்பு அவசியம் இல்லை" என்றாராம். 

நேற்றைய விடயத்திற்கு மன்னிப்பு கேட்பவர்கள் அன்று  இருந்திருக்கிறார்கள். இன்று அப்படியான ஒரு குணவான்களைக் காண்பதே கஷ்டம்.  பழிக்குப் பழி வாங்குவோரைத்தான் காணக்கூடியதாக இருக்கிறது. என்றாலும்  கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை நினைக்க பெருமையாகத்தான் இருக்கிறது  என்கிறது என்கிறார் நண்பர். 

மனிதர்களுக்குப் பொறுமை மட்டும் இருந்தால் இந்தப் பூமியை ஆளலாம் என்பது பொய்யில்லை.  

ஒரு சில நொடிகள் நமக்கு வீதிச் சமிக்ைஞயைத் தாங்கிக்ெகாள்ள  முடி யாது. வங்கிகளில், அலுவலகங்களில் ஓரிரு நிமிடங்கள் வரிசையில்  நிற்பதற்குச் சிரமம். இப்படி எதைத் தொட்டாலும் பதற்றம். இந்தப்  பதற்றத்தினால், வீணாகச் சுட்டெரிந்துபோவது நம்முடைய இரத்தம் என்று எத்தனை  பெரியவர்கள் சொன்னாலும் நாம் கேட்கமாட்டோம். அந்தப் பதற்றத்தால்தான்  நமக்கு நோய் வருகிறது என்பதைத் தெரிந்திருந்தும் பதற்றப்படுகிறோம். ஆனால்,  பொறுமையைக் கடைப்பிடித்து வாழ்வதால், நூறு ஆண்டுகளைக் கடந்தும் உயிர்  வாழ்வதாகச் சொல்கிறார்கள் சில தம்பதியினர். 

"அகழ்வாரைத் தாங்கும்

நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை"

என்கிறார் வள்ளுவர்.  

தன்னைத் தோண்டுபவரை பொறுத்துத் தாங்கிக் கொள்ளும் நிலம்போல, தம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் முதன்மையான அறமாகும்.  

அதாவது,  

தன்னை மண்வெட்டியால் வெட்டிக் கிளறும் மாந்தரையும் விழாமல்  தாங்குகின்ற நிலம் போல, தம்மை மனம் நோகும்படி இகழ்ந்து பேசுவாரையும்  பொறுத்துக் கொள்பவரே மாந்தரில் தலையாய பண்பினை உடையவர் என்று திருக்குறள்  குறிப்பிடுகின்றது. வலிமை மிக்கவனின் உண்மையான வலிமை என்னவெனில்,  அறிவில்லாதவர் செய்த தீங்கினைப் பொறுத்துக் கொள்ளல் என்று  குறிப்பிடுகிறது. ஒருவர் நிறைவு உடைமை அல்லது நற்பண்பில் முழுமை பெறுதலை  அடைய வேண்டுமானால், பொறுமையைப் போற்றிக் கடைப்பிடித்தல் வேண்டும்  என்கின்றது திருக்குறள். மேலும் தீங்கு செய்தவரைப் பொறுத்துக்கொள்ளாமல்  வருத்தினவரை உலகத்தவர் ஒரு பொருளாக மதிக்கமாட்டார் என்றும், அதற்கு  மாறாகத் தீங்கு செய்தவரைப் பொறுத்துக் கொண்டவரைப் பொன்போல் மனத்துள்  வைத்து மதிப்பர் என்றும் குறிப்பிடுகிறது. இதனாலேயே பொறுமை கடலிற் பெரிது  என்பார்கள்.  

பொறுமையின் சிறப்பினை உணர்த்தும் திருக்குறள், தீங்கு  செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவருக்கு ஒரு நாள் இன்பமே கிட்டும் என்றும்  அத்தீங்கு செய்தவரைப் பொறுத்தவருக்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ்  உண்டு என்றும் குறிப்பிடுகின்றது. இதனையே, “பொறுத்தார் பூமி ஆள்வார்”  எனும் வழக்காலும் குறிப்பிடுவர். செருக்கினால் தீங்கானவற்றைச்  செய்கின்றவர்களை வெல்வதற்கு மிகச் சிறந்த வழி பொறுத்தலே என்கிறது  திருவள்ளுவம்.  

தாங்கொணாத, எல்லை கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடும்  சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் பற்றுக்களைத் துறந்த துறவியைப் போன்று  தூய்மையானவர்கள் என்கின்றது திருக்குறள். பொறுமைப் பண்பு உடையவர்களின்  சிறப்பின் முத்தாய்ப்பாகத் திருக்குறள் குறிப்பிடும் அரிதான ஒன்று  என்னவெனில் உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவரைக் காட்டிலும் பிறர் சொல்லும்  கொடும் சொற்களைப் பொறுப்பவர் நோன்பு நோற்பவரைக் காட்டிலும் நிலையில்  உயர்ந்தவர் என்பதுதான்.  

'பொறுத்தார் பூமி ஆழ்வார்' என்கின்ற நன்மொழி நமக்கு தெரிந்த  ஒன்றே. நாம் சற்று இந்தக் கருத்தை உள்நோக்கி ஆராய்வோமேயானால், பொறுமை  என்ற குணம் தங்களுக்காக மட்டுமல்லாமல் பிறருடைய நலன் கருதியும் அக்கால  மகான்கள் எவ்வாறு பொறுமை காத்து வாழ வேண்டும் என இலக்கிய வடிவமாகவும், ஞான  நூல் வடிவமாகவும் விட்டுச் சென்றுள்ளனர். 

பொறுமை என்ற வார்த்தைக்கு இலக்கணமாக வாழ்ந்த மகான்கள் பலர்  இருந்தாலும், நமக்குச் சற்றே நினைவுக்கு வருபவர் மகாத்மா காந்தி. இன்று  அவர் மறைந்தாலும் அவரின் வாழ்க்கை நெறி இன்றளவும் உலகில் மூச்சு விட்டுக்  கொண்டிருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. இதனைத்தான் அந்தக் காலத்திலேயே  புத்த பகவான் நமக்குப் போதித்துச் சென்றிருக்கிறார். 

இன்றைய உலகில் பொறுத்தாரை எல்லோரும் ஏமாற்றிவிட்டுச்  சென்றுவிடுவார்கள் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், தானங்களில் சிறந்த  தானம் நிதானம் என்கிறார்கள் மூத்தவர்கள். எல்லாத்தானங்களும் பிறரை  வாழவைக்கும், ஆனால், நிதானம் மட்டுமே நம்மை வாழவைத்துப் பிறரையும்  வாழவைக்கும் என்கிறார் எழுத்தாளர் அருப்புக்ேகாட்டை செல்வம்; மனிதனை  மனிதனாய் அடையாளம் காட்டும்! தன் காலம் வரை பிறரால் உயர்வாய் மதிக்கச்  செய்யும். அந்த மகத்தான சக்தியை் பொறுமையே தரும் என்கிறார் அவர். எனவே,  எதற்கெடுத்தாலும் எதிர்வினையாற்றுவதை விடுத்து, சாதகமாய் சிந்தித்துச்  சிகரம் தொடுவோம்!

Comments