இயல்பு வாழ்வு ஸ்தம்பிதம் வாழ்வாதாரம் முடக்கம் | தினகரன் வாரமஞ்சரி

இயல்பு வாழ்வு ஸ்தம்பிதம் வாழ்வாதாரம் முடக்கம்

மலையகத்தைப் புரட்டிப்போட்ட சீரற்ற காலநிலை 

மலையகத்தில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலையால் அப்பகுதியில் முற்றாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்று உயிர்கள் பலியானதுடன் 85வீடுகள் சேதமடைந்துள்ளன. தொடர் மழையால் இதுவரை 254குடும்பங்களைச் சேர்ந்த 1252பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இயற்கையின் அனர்த்தத்தினால் 85வீடுகள் பகுதியளவிலும் 10கடைககள் முற்றாகவும் சேதமடைந்தன. மண்சரிவு, பலத்த காற்றினால் மரங்கள் முறிந்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 22குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 95பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன் 134குடும்பங்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமார தெரிவித்தார்.  

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை அலுபொத்தை தோட்டத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மதியழகன் லெட்சுமி(12), மதியழகன் சங்கீதா (12) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

அக்கரபத்தனை, டொரிங்டன் பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் பாதுகாப்பற்ற பாலத்தை கடக்க முற்பட்டபோதே இரு மாணவிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒரு மாணவி கடந்த 18ஆம் திகதியன்று மாலை 4.00மணயளவில் பிரதேசவாசிகளால் சடலமாக மீட்கப்பட்டார். எனினும் தொடர்ச்சியாக மழை பெய்ததாலும் ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்தாலும் மற்றைய மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்தும் 19ஆம் திகதியன்று இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்து காணாமல்போன மாணவியை தேடும் பணியினை முன்னெடுத்தபோது காலை 10மணியளவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சடலமாக மீக்கப்பட்டார். மாணவிகளின் இரு சடலங்களும் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை அக்கரபத்தனை அலபொத்தை தோட்டத்தில் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.  

இந்த ஆற்றுப்பகுதியில் இதுவரை சுமார் ஆறு பேர் பலியாகியிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். எனினும் இதுவரை உரிய பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  

இதேவேளை கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹ ற்றன்   _கண்டி பிரதான வீதியில் கடந்த 19ஆம் திகதியன்று அதிகாலை 5மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் 10கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளன. குறித்த கடைப் பகுதியில் வியாபாரம் செய்வதனை தவிர்க்குமாறு கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பல தடவைகள் அறிவுறுத்தியிருந்த போதிலும் அவர்கள் அதிலிருந்து வெளியேற மறுத்து வந்தனர்.

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என இனங்காணப்பட்ட அவ்விடத்திலிருந்து விலகுமாறு அரசாங்கம் வழியுறுத்துகின்றதே தவிர அவர்களுக்கு வேறொரு இடத்திற்கு செல்வதற்கான வசதிகளை செய்து கொடுப்பதில்லை. இதனால் பலர் தமது பெறுமதிமிக்க உயிர்களை பணயம் வைத்துள்ளனர்.  

கினித்தேனை நகரம் இன்றும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. அத்துடன்  ஹ ற்றன்   _கொழும்பு பிரதான வீதியில் பல இடங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கி வருகிறது. கடந்த மூன்று தினங்களாக மலையகத்தின் பல பகுதிகளில் கடும் காற்று வீசுவதனால் பல   இடங்களில் மரமுறிந்து வீழ்ந்து பல பிரதேசங்களுக்கு மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதேவேளை நீர்த்தேக்கங்களை அண்டிய பகுதிகளில் அதிக மழை வீழ்ச்சி   பதிவாகி உள்ளதால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளன. இதனால் லக்ஷபான, மேல் கொத்மலை, விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இடைக்கிடையே திறக்கப்பட்டு வருகின்றன.  

தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.  மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.  

நுவரெலியா _ ஹ ற்றன்,  _ கொழும்பு ஆகிய பிரதான வீதிகளில் பல இடங்களில் மண் திட்டுகள் சரிந்துள்ளதுடன்  மண்சரிவு அபாயம் நிலவும்  பகுதிகளிலுள்ள   வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தமது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து போலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன் கடும் காற்று வீசுவதாலும் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

தேயிலைத் தோட்டங்களிலும் தொழிலாளர்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்படுவதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தேயிலை உற்பத்தியும் குறைவடைந்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் மரக்கறி செய்கையும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  

கடந்த 19ஆம் திகதியன்று தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 09குடும்பத்தைச் சேர்ந்த 44பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் மரம் முறிந்து விழுந்ததில் பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். வெள்ளத்தினால் 9வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 44பேர் வெளியேற்றப்பட்டு தோட்ட சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 44பேரில் 9ஆண்கள், 12பெண்கள், 23சிறுவர்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.  

வெலி ஓயா, புதுக்காட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிதாக கட்டப்பட்ட வீடுகள் பலவும் சேதமடைந்துள்ளன. கூரைகள் காற்றில் பறந்ததுடன், சுவர்களும் இடிந்து விழுந்துள்ளன.

வீடுகளுக்கு முன்னால் நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி குளம்போல் காட்சியளிக்கிறது. புதிய வீடுகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அங்கு இன்னும் மக்கள் குடியமர்த்தப்படவில்லை என தெரியவருகிறது.  

மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் லக்கம் பிரதேசத்தில் கடந்த 19ஆம் திகதியன்று பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதில் அவ் வீதியுூடான போக்குவரத்து சுமார் 3மணித்தியாலயத்திற்கு மேல் தடைப்பட்டிருந்தது. இதனை மவுஸ்ஸாக்கலை இராணுவ முகாமின் இராணுவத்தினர், மஸ்கெலியா பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து மிக சிரமத்திற்கு மத்தியில் அகற்றியுள்ளனர்

ஹற்றன்
கே. சுந்தரலிங்கம்

Comments