பெருந்தோட்ட தரிசு காணி பகிரப்பட வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட தரிசு காணி பகிரப்பட வேண்டும்!

சுரேஷ் வடிவேலுவின் யோசனை நனவாகுமா?

பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்கள் பற்றி தற்போது பேச்சு எழுந்துள்ளது. ஆங்கிலேயர் தோட்டங்களை நிர்வாகம் செய்த காலத்தில் தரிசு நிலம் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. 1851இல் ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் தேயிலைப் பயிர்ச்செய்கை பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டது. முதன் முதல் 19ஏக்கர் நிலப்பரப்பில் அறிமுகம் செய்யப்பட்ட தேயிலைப் பயிர்ச்செய்கை 1880களில் 9728ஏக்கராக அதிகரித்தது. 1886ஆம் ஆண்டு 150.000ஏக்கராக விஸ்தீரணம் கண்டது. பின்னர் படிப்படியாக வளர்ச்சியுற்று 243,539, ஏக்கராக உயர்ந்து நின்றது. 

பெருந்தோட்டத்துறையில் பயன்படுத்தப்பட்டுள்ள மொத்த நிலப்பரப்பு 750,000ஹெக்டயராகும். இதில் தேயிலைப் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்த நிலப் பரப்பை விடுத்து இதர நிலப்பரப்பில் 200,000ஹெக்டயர்களில் இறப்பரும் எஞ்சியவற்றில் தென்னையும் பயிர்செய்யப்பட்டன. 

1972களில் பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு கட்டங்களாக நிகழ்ந்தன. அதுவரை லண்டன் ஸ்ரேலிங் கம்பனி மற்றும் கொழும்பு ரூபாய்க் கம்பனி என்பவற்றின் நிர்வாகத்திலேயே தோட்டங்கள் இருந்தன. இவற்றையே அரசாங்கம் மக்கள் மயமாக்கல் என்னும் பெயரில் சுவீகரித்துக் கொண்டது. சுவீகரிக்கப்பட்டக் காணிகள் இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம் (SLPC), மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) என்னும் அரசு நிறுவனங்களின் பொறுப்பில் விடப்பட்டன. இங்கு இருந்துதான் பெருந்தோட்டத்துறையின் அழிவு காலம் ஆரம்பமாகியது. 

பெருந்தோட்டத் துறையின் மீது அரசியல் ஆதிக்கம் உருவாக ஆரம்பித்தது. ஏராளமான காணிகள் பல்வேறு வேலைத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டன. குத்தகை அடிப்படையில் பெருந்தோட்டக் காணிகளில் விவசாயம் (நெற் பயிர்ச்செய்கை) செய்து கொண்டிருந்த கிராமத்து சிங்களவர்கள் அக்காணிகளைத் தமதாக்கிக் கொண்டனர். பெளத்த விகாரை அமைப்பதற்கும் கிராம விஸ்தரிப்புக்கும் காணிகள் வழங்கப்பட்டன. தோட்ட எல்லைகளில் காணிகளை வைத்திருந்தோர் பெருந்தோட்டக் காணிகளையும் உள்ளடக்கி வேலி போட்டுக் கொண்டனர்.  இவை எதனையும் அரசு நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் பயனடைந்தவர்கள்     கிராம சிங்களவர்கள் என்பதாலேயே இந்தப் பாராமுகம். இதேநேரம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளை சிறிது விஸ்தீரப்படுத்தினாலோ வீட்டருகில் குடிசைகளைக் கட்டினாலோ குற்றவாளிகளாக நடத்தப்படார்கள். சும்மா கிடக்கும் இடங்களில் விவசாயம் செய்தால் கூட வினையாகப் போய்விடும்.

ஒரு வகையில் ஆங்கிலேய கம்பனி நிர்வாகத்தினரை விட சுதேசிய நிர்வாகிகளே பிரபுத்தனங்களைக் காட்டத் தலைப்பட்டனர். பெருந்தோட்டங்களைக் காக்கும் கரிசனை இருந்ததால் அந்நிய நிர்வாகங்கள் அக்கறையுடன் செயல்பட்டன. ஆனால் உள்ளூர் நிர்வாகங்களிடம் அந்த உந்துதல் இருக்கவில்லை. தோட்டத் தொழிலாளர்களின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை.

141,000ஹெக்டெயர்  காணிகள் இந்த அரசு சபைகளின் பொறுப்பில் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும் இதில் பல ஹெக்டயர்  நிலங்கள் இழக்கப்பட்ட நிலையே காணப்பட்டது. அரசியல் தலையீடுகள், வீண் விரயம், உற்பத்தியில் வீழ்ச்சி, முறையற்ற முகாமைத்துவம், உற்பத்திச் செலவில் ஏற்பட்ட அதிகரிப்பு போன்ற காரணங்களால் இத்துறை சவாலுக்குட்பட்டது, தோட்டக் காணிகள் ஒழுங்கான பராமரிப்பின்மை காரணமாக கைவிட நேர்ந்தது. இவ்வாறு கிராமப்புறங்களை ஒட்டியிருந்த பயன்படுத்தப்படாத காணிகளில் சிங்கள குடியேற்றங்கள் நிகழ்ந்தன. பலாத்காரமான நில அபகரிப்பு நடந்தது. இவ்வளவு நடந்தும் பெருந்தோட்ட மக்களுக்கு ஓரங்குல காணிதானும் சொந்தமாக்கிக் கொள்ளவோ பயன்படுத்திக் கொள்ளவோ வாய்ப்பில்லாமலே போனதுதான் அபத்தம். 

பெருந்தோட்ட நிர்வாகம் பெருந்தலையிடியாக மாறியதையடுத்து 1992இல் இப்பெருந்தோட்டங்களை தனியார் நிறுவனங்களின் தலையில் கட்டிவிட அரசாங்கம் தயாரானது. இது இரண்டு கட்டங்களாக நடந்தது. 1992ஜுன் மாதத்திலிருந்து 'மக்கள் மயமாக்கல்'    ஆரம்பமானது. 1995களில் இவை முற்றுமுழுதாக தனியார் கம்பனிகளுக்கு தாரைவார்க்கப்பட்டன. பெருந்தோட்டக் கம்பனிகளின் பொறுப்பிலிருந்து 402தோட்டங்கள் இவ்வாறு குத்தகைக்கு விடப்பட்டன. 95, 885ஹெக்டெயர் நிலங்களும் 360,669தொழிலாளர்களும் 1349தோட்ட உத்தியோத்தர்களும் நிர்வாக மாற்றம் காணவேண்டி நேர்ந்தது. 1992இல் முதல் 5வருடகால குத்தகைக்கு என்று கூறப்பட்ட போதும் 1995ஆம் ஆண்டு இது 55வருட காலமாக நீடிப்புப் பெற்றது.  

பெருந்தோட்ட மக்களை பேரினவாத அரசாங்கங்கள் எப்படி நடத்துகின்றன என்பது இந்த தனியார் கம்பனிக்குத் தனியாக பாடஞ்சொல்லித்தர வேண்டிய சங்கதியல்லவே. தவிர, குத்தகைக்கு எடுத்துள்ள காணியில் முடிந்த மட்டும் தம் வித்தையைக் காட்டி ஆதாயம் அடைந்துவிட வேண்டும் என்னும் ஆர்வம் கொண்டவையாக இந்தத் தோட்டக் கம்பனிகள் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனவே அவை திட்டமிட்டுச் செயலாற்றத் தலைப்பட்டன. அவர்களின் எதிர்பார்ப்பு குறைந்த செலவில் கூடிய அறுவடை. இதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கின. பல தேயிலைத் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன. இதனால் பலர் வேலையிழந்தனர்.

கான் வெட்டுதல், கல்கட்டிடம் கட்டுதல், உரம் போடுதல், முள்ளுக்குத்துதல், புல்லு சுரண்டல், இலுக்கு அகற்றல் போன்ற சில்லறை வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.  இவர்கள் இதுவரை செய்துவந்த வேலைகளுக்குப் பதிலாக கொழுந்து பறிக்கச் செல்லும்படி கோரப்பட்டது. சில்லறை வேலைகள் என்பது பிற்பகல் 2மணிவரை மட்டுமே நடக்கும். தேயிலைச் செடிகளின் எண்ணிக்கையைக் கொண்டும் நேரம் நிர்ணயிக்கப்படும். இதை மரக்கணக்கு என்பர். ஆனால் கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபடுவோர் காலையிலிருந்து மாலை 4முதல் 5மணிவரை வேலை செய்தாக வேண்டும். இதனால் இந்த ஆண் தொழிலாளர்கள் அதற்கு உடன்படாது தோட்டத் தொழிலைப் புறக்கணிக்கத் தலைப்பட்டனர். தொழிலுக்காக நகர்ப்புறங்களை நாடிச் செல்லலாயினர்.  

இவ்வாறான காரணங்களுடன் தொழிலாளர்களுக்குப் போதிய சம்பளம் கிடைப்பதில் தொடரும் இழுபறி நிலை. கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தும் எதுவுமே நடக்காத இக்கட்டு. இதனால் விரக்தியடைந்த நிலையில் ஆண்தொழிலாளர்கள் வெளியேற்றம் காரணமாக ஆளணிப்பற்றாக்குறை ஏற்படலானது.

எனினும் நியாயமான சம்பளத்தைத்தானும் தருவதற்கு நிர்வாகங்கள்  தயாரில்லை. இன்று சிறந்த தேயிலை உற்பத்தி செய்யக்கூடிய விளை நிலங்கள் கூட கைவிடப்பட்டுக் காடுகளாகியுள்ளன. இவ்வாறு 38000ஹெக்டயர் பெருந்தோட்டக் காணிகள் தரிசாக கிடப்பதாக முன்னைய மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்தது.

பெருந்தோட்ட தரிசு நிலங்களை மலையக இளைஞர்களுக்கும் கிராமிய இளைஞர்களுக்கும் பிரித்துக் கொடுத்து அவர்களை விவசாயம் செய்யத் தூண்டப் போவதாக அவர் கூறினார். பெருந்தோட்ட இளைஞர்களோடு கிராமப்புற இளைஞர்களையும் இணைப்பது பற்றி முணுமுணுப்புகள் கிளம்பினாலும் பெரிதாக எவ்வித எதிர்ப்பும் எழவில்லை. இவ்வாறு இத்தரிசு நிலங்கள் வழங்கப்பட்டிருக்குமானால் விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் சூழ்நிலை இளைஞர்களுக்குக் கிடைத்திருக்கும். இதனால் வேலையில்லாப் பிரச்சினை பெரிதும் குறைந்திருக்கும்.

ஆனால் அப்படி ஏதும் ஆகவில்லை. தரிசு நிலங்கள் பகிரப்படவும் இல்லை. இதன் பின்னர் இந்தத் தரிசு நிலங்கள் பற்றி ஊடகங்கள் மட்டுமே பேசின. அரசியல் வாதிகள் யாரும்மே அலட்டிக் கொள்ளவில்லை. இப்பொழுதுதான் அரசியல்வாதி ஒருவா் அது பற்றிப் பேசியுள்ளார். அவர்தான் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ். 

பெருந்தோட்டங்களில் கைவிடப்பட்டு தரிசாக காணப்படும் நிலங்களை பெருந்தோட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சுயதொழில் முயற்சிகளுக்கு பயன்படுத்த முடியும். இதை எவராலும் தடுத்த நிறுத்தமுடியாது என்கிறார் வடிவேல் சுரேஷ்.

ஆனானப்பட்ட முன்னாள் ஜனாதிபதியே செய்யத் தயங்கிய சங்கதி இது. அரசின் அனுமதியின்றி அரசு அனுமதித்தாலும் பெருந்தோட்டக் கம்பனிகள் கருணை காட்டாவிடில் எங்ஙனம் இளைஞர்கள் கையாள்வது. கரைகாண்பது? இவ்வாறான தரிசு நிலங்களில் காடுகளை வளர்க்கவும் மரங்களை வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ள பின்புலத்திலேயே வடிவேல் சுரேஷின் அறிவிப்பு நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவாரா? வடிவேல் சுரேஷ் என்ற கேள்வி இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அப்படிச் செய்யாவிட்டால் அவரின் பேச்சை மட்டும் வைத்துக் கொண்டு தோட்ட தரிசு காணிகளில் தமது கைவரிசையைக் காட்டப்போய் வம்பில் மாட்டிக் கொள்வோமா என்னும் அச்சம் இளைஞர்களிடம் உருவாவது இயல்பே. வடிவேல் சுரேஷின் ஆலோசனை நல்லதுதான். இளைஞர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு கட்டாயம் இது நடைமுறைக்கு வரவேண்டிய விடயமே. ஆனால் சட்ட ரீதியான சங்கதிகளையெல்லாம் சரிக்கட்டியாக வேண்டும். 

இதனைச் செய்து எந்தவொரு பிக்கல் பிடுங்களுமின்றி சிக்கலில்லாமல் சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிக்க பயமற்றச் சூழ்நிலை ஏற்படுமா? இதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் இணக்கத்தை காட்டுமா? இல்லாவிட்டால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வரை இது வெறும் அறைகூவலாக மட்டுமே ஆகி நிற்குமா? இதற்கான அனைத்து விடைகளும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மூலமே கிடைக்க முடியும். காத்திருப்போம்

பன். பாலா    

Comments