அமைச்சர் நவீனின் கருத்து முற்றிலும் தவறானது | தினகரன் வாரமஞ்சரி

அமைச்சர் நவீனின் கருத்து முற்றிலும் தவறானது

அரசியல்வாதிகளின் புரளிகளை  கண்டுகொள்ளத் தேவையில்லை

அமைச்சர் நவீன் திசாநாயக்க ஒரு தோட்டத் தொழிலாளி அல்ல. அவர் முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தோட்டத் தொழிலாளர் பற்றித் தெரியாது என்கிறார் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் - பழனி திகாம்பரம். தோட்டத் தொழிலாளர்கள் முப்பதாயிரத்திற்கும் அதிகமாக சம்பளம் பெறுவதாக நவீன் திஸாநாயக்க கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்றும் வாரமஞ்சரிக்கான நேர்காணலின்போது அமைச்சர் திகாம்பரம் தெரிவித்தார். அவரது நேர்காணல் வருமாறு....  

மலையக மக்களுக்கு ஒரு இலட்சத்து அறுபது ஆயிரம் வீடுகள் தேவை. இவற்றை ஒரே நேரத்தில் கட்ட முடியாது. கட்டங்கட்டமாகவே அமைக்க வேண்டும். வீடமைப்புத் திட்டங்கள தற்போது சகல மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை மழுமையாக முடிப்பதற்கு இன்னமும் சில காலங்கள் தேவைப்படும். 

மலைநாட்டு வீடமைப்பு திட்டத்தில் கட்டப்படும் வீடுகள் தரமற்றவை எனக் குறை கூறப்படுகிறதே?  

அவ்வாறு குற்றம்சாட்டுவது மக்களா அல்லது அரசியல்வாதிகளா என்பதை பார்க்க வேண்டும். மக்களுக்கு நல்ல சேவைகளை முன்னெடுத்துச் செல்கிறேன். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அரசியல்வாதிகளே குறைகூறுகின்றனர். ஆனால் மக்கள் அவ்வாறு குறை சொல்லவில்லை. பத்து இலட்சம் பெறுமதியான வீட்டை எவ்வாறு சிறந்த முறையில் கட்டமுடியுமோ அதனையே நாங்கள செய்கின்றோம். இது குறித்து வயிற்றெரிச்சல்படுவோரே குறை கூறுகின்றனர். இந்த விமர்சனங்களை எவரும் கவனிக்க வேண்டியதில்லை. சமூகவலைத்தளங்களில் வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமேதும் இல்லை. வீட்டை பெற்றவர்கள் குறை கூறினால் பரவாயில்லை. கவனத்தில் கொள்ளலாம். எமது மக்களுக்கான சேவையே முக்கியமானது.  

 மலையக மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டாலும் மலையகத்திலும் தென்பகுதியிலும் இன்றும் லயன் வீடுகளே அதிகமாகவுள்ளன. லயன் வீடுகளில் வாழ்வோருக்கு விடிவு கிட்டுவது எப்போது?  

மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் வீடு கட்டிக் ெகாடுத்து வருகிறோம். இது இரு நூறு வருடத்திற்கு மேற்பட்ட பிரச்சினையாகும். மலையக மக்களுக்கு ஒரு இலட்சத்து அறுபது ஆயிரம் வீடுகள் தேவை. அவற்றை ஒரே நேரத்தில் கட்ட முடியாது. கட்டங்கட்டமாகவே அமைக்க வேண்டும். இப்போது சகல மாவட்டங்களிலும் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக முடிப்பதற்கு இன்னும் சில காலங்கள் தேவைப்படும். மாத்தளை, கண்டி, பதுளை, பண்டாவரவளை, கேகாலை ஆகிய பகுதிகளுக்குச் சென்றால் இவ்வீடுகளை காணலாம். தற்போது பத்தாயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இன்னும் பத்தாயிரம் வீடுகள் நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நடும் வைபவம் நடைபெறவுள்ளது.  

இலங்கைக்கு பதக்கங்களை பெற்றுக் வந்த ராஜகுமாரன், சண்முகேஸ்வரன் போன்ற நம் வீரர்கள் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனரே?  

இல்லை. அவர்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. அவர்களது திறமைகளை அடையாளம் கண்டு ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்ற ராஜகுமாரன் மற்றும் மரதன் ஓட்டப் போட்டியில் பதக்கம் வென்ற சண்முகேஸ்வரன் ஆகிய இருவரையும் பாராட்டி தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான உறுதிபத்திரம் கடந்த 6ஆம்திகதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தனியான ஏழு பேர்ச் காணியுடன் வீடுகள் கொடுக்கப்படும். இவ்வீட்டின் பெறுமதி பன்னிரெண்டு இலட்சமாகும்.  

ஐம்பது ரூபா சம்பள உயர்வினைக் கூட உங்களால் பெற்றுக்ெகாடுக்க முடியவில்லை என்று விமர்சிக்கின்றனரே?  

ஐம்பது ரூபா சம்பள உயர்வு என்பது அது ஒரு வருடத்துக்கான கொடுப்பனவே. இதற்கு அமைச்சர் நவீன் திசாநாயக்கா முரண்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் இக்ெகாடுப்பனவை எமக்கு தருவதாக பிரதமர் வாக்குறுதி அளித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் இதற்கான தீர்வு கிடைக்கும். இந்த ஐம்பது ரூபா கொடுப்பனவு விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும்.  

தோட்டத் தொழிலாளர்கள் முப்பதாயிரத்திற்கும் அதிகமாக சம்பளம் பெறுவதாக நவீன் திசாநாயக்கா கூறுகிறாரே. இது குறித்து உங்கள் கருத்து?  

அமைச்சர் நவீன் திசாநாயக்க ஒரு தோட்டத் தொழிலாளி அல்ல. அவர் முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தோட்டத் தொழிலாளர் பற்றித் தெரியாது. ஒரு பொறுப்புள்ள அமைச்சர் அப்படி பேசக்கூடாது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். தோட்டத் தொழிலாளர்களுக்கு முப்பது, நாற்பதாயிரம் ரூபா தேவை. இந்த சம்பளம் தேயிலை கொழுந்து பறிக்கும் காலத்தில் மட்டுமே கிடைக்கும். கொழுந்து இல்லாத காலத்தில் இப்படியான சம்பளத்தை பெறமுடியாது. கொழுந்தும் ஒவ்வொரு நாளும் பறிக்க முடியாது. மழைக்காலத்தில் அதிகமான கொழுந்து எடுக்கலாம். ஆனால் வெயில் காலத்தில் கொழுந்து பறிக்க முடியாது. மழைக்காலத்தில் முப்பதாயிரம் எடுத்தால் வெயில் காலத்தில் அத்தொகையினை பெறமுடியாது. அவர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவு. எல்லோருமே அதை ஏற்றுக் கொள்கின்றனர். அமைச்சரும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  

எதிர்வரும் தேர்தல்களில் உங்கள் அரசியல் கூட்டு எவ்வாறு அமையப் போகின்றது?  

 ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஜனாதிபதி தேர்தலுக்காக ஐக்கிய தேசிய முன்னணியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கூட்டணி சார்பிலும் பேச்சுவார்தை நடைபெறுகிறது. சரியான நேரத்தில் தேர்தல் ஒப்பந்தமொன்று கையொப்பமிடப்படும். எல்லோரும் இணைந்து மெகா கூட்டணி அமைக்கப்படவுள்ளது. இதில் நாங்களும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக இணைவோம்.  

மலையகத்தில் சிறிய சிறிய கட்சிகள் அதிகம் உள்ளன. அவற்றையும் இணைத்து நீங்கள் பயணிக்கலாமே?  

இப்போதைய எமது கூட்டணி சரியான கூட்டணியே. இதுவே மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் கூட்டணியாகும். இதில் இருப்பவர்களும் எம்மவர்களே. சிறுகட்சிகளை இணைக்கும் போது அவர்கள் வருவார்கள் போவார்கள். கூட்டணி என்றால் தொடர்ந்து ஒன்றிணைந்தே இருக்க வேண்டும். நான்கு வருடங்கள் ஐக்கியத்துடன் ஒன்றிணைந்தே பயணிக்கிறோம். அதுவே எங்களது வெற்றியாகும். கூட்டணியை நாங்கள் பலப்படுத்திக் கொண்டே செல்கிறோம். இக்கூட்டணியின் மூலமே மக்களின் அதிகமான உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். அபிவிருத்தி வேலைகளை செய்துள்ளோம். தொடர்ந்து அபிவிருத்து நடவடிக்ைககளை முன்னெடுப்போம். எமது மூன்று கட்சிகளும் ஸ்திரமாகவுள்ளது. இப்படியான ஒரு கூட்டணியே முக்கியமானது. இன்று எம்மோடு இருந்து நாளை இன்னொருவருடன் பயணிப்பது கூட்டணிக்கு ஒத்துவராது. கடந்த காலங்களில் கூட இப்படியானவர்கள் வந்தார்கள் முகவரியின்றி சென்றுவிட்டனர். மலையக மக்களுக்கு தேவையான இந்த கூட்டணியை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.  

அடுத்த தேர்தலில் மக்கள் உங்களுடன் இருப்பார்களா?  

மக்களுக்கு நாங்கள் நேர்மையாக சேவை செய்துள்ளோம். இம்மக்கள் எங்களுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்ைக எனக்குண்டு. தேர்தல் நேரத்தில் முடிவு எவ்வாறு அமையும் என்று இப்போது கூறமுடியாது. ஆனால் எமது மக்கள் சரியான முடிவினை எடுப்பார்கள் என்ற நம்பிக்ைகயுண்டு.  

வருங்காலத்தில் மலையக மக்களுக்கான திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கவுள்ளீர்கள்?  

இப்போது மேற்கொள்ளப்படும் திட்டங்களை முன்னெடுத்தாலே போதுமானது. எதிர்காலத்தில் வீடமைப்பு திட்டங்கள், மலையகத்திற்கான பல்கலைக்கழகம், தொழில்வாய்ப்புகளை பெற தொழில் பேட்டைகளை அமைக்க வேண்டியுள்ளது. இவற்றை ஓரிரு வருடங்களில் செய்துவிட முடியாது.     

இது மக்களின் நீண்டகால பிரச்சினை. இப்போது இப்பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்னெடுத்து வருகிறோம். இதற்கு சில காலங்கள் செல்லும். வருகின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி, இத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.  

* உங்களுக்கு எதிரான பலவாறாக விமர்சனங்கள் எழுகின்றன. இவற்றுக்கு உங்கள் பதில் என்ன?  

எனக்கு எதிராக மக்கள் விமர்சனம் செய்தால் அதற்கான பதிலை நான் அளிக்க வேண்டும். அரசியல் பின்னணியில் செயற்படுபவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. எமது அபிவிருத்தித் திட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களின் செயலாகவே இதனை நான் காண்கிறேன். இப்படியான விமர்சனங்களுக்கு அஞ்சப் போவதில்லை. மக்களின் விமர்சனத்தையே கருத்தில் எடுப்பேன்.  

மக்களின் இரு நூற்றாண்டுகால பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கவே நடவடிக்ைககளை முன்னெடுத்து வருகிறோம். மலைநாட்டுக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட்டுள்ளது. இம்மக்களுக்கான ஏழு பேர்ச் காணியை பெற்றுக்கொடுத்து வருகிறோம். அத்துடன் காணிக்கான காணி உறுதி பத்திரத்தை பெற்றுக் கொடுத்துள்ளோம். பிரதேச சபை சட்டத்தை மாற்றியுள்ளோம். மலையகத்திற்கு தேவையான முக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறேன். இம்மக்களுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்களின் தேவைகளை முன்வைத்து பேரம் பேச வேண்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்களுடன் இணைந்து இவ்வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.             

போல் வில்சன்

Comments