இரு சமூகங்களும் இணைந்தால்தான் நல்லிணக்கம் சாத்தியம் | தினகரன் வாரமஞ்சரி

இரு சமூகங்களும் இணைந்தால்தான் நல்லிணக்கம் சாத்தியம்

கணேசமூர்த்தி கோபிநாத் பேட்டி

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும், இந்துசமய விவகார அமைச்சின் கிழக்கு மாகாண பொறுப்பான உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி

கேள்வி : தங்களுடைய அமைச்சினால் இலங்கையில் இரண்டாவது மாகாண நிலையம் மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ள காரியாலயத்தின் செயற்பாடுகள் எவ்வாறு அமையவுள்ளன?  

பதில் : இவ்வருட முற்பகுதியில் வடமாகாணத்திற்குரிய எமது அமைச்சின் நிலையம் ஒன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி மட்டக்களப்பிலும் எமது நிலையத்தைத் திறந்து வைத்துள்ளோம். வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் அமைச்சரிடம் அதிகளவு கோரிக்கைகளை முன்வைத்து உதவிகளைக்கோரி நிற்கின்றனர். அந்தவகையில் எமது அமைச்சர் வடக்கு கிழக்கில் பல கோடிக்கணக்கான ரூபாக்களைச் செலவு செய்து அபிவிருத்திகளைச் செய்துள்ளார். மட்டக்களப்பில் மாத்திரம் 11கோடிக்கு அதிகமாகவும், அதேபோல் அம்பாறையிலும், திருகோணமலையிலும் அவ்வாறுதான் ஏறாத்தாள 80கோடிக்கு அதிகமான நிதி வடக்கு, கிழக்கில் எமது அமைச்சினால் அபிவிருத்திக்காக செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் அபிவிருத்தித் திட்டங்களை இலகுபடுத்துவதற்காகவும் மக்களுக்கு எமது அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளை இலகுவில் செயற்படுத்துவதற்காகவும், இரண்டாம் மொழிப் பயிற்சிகளை கிழக்கிலுள்ள மக்களும் கற்றுக் கொள்வதற்காக ஏதுவாக குறிப்பாக “தமிழர்கள், சிங்கள மொழியையும், சிங்களவர்கள் தமிழ் மொழியையும்” கற்பதற்காக வேண்டித்தான் கிழக்கிலும் எமது அமைச்சின் நிலையம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளோம்.  

கேள்வி : பொது அமைப்புக்களுக்கு என்ன வகையான உதவிகளை மேற்கொண்டு வருகின்றீர்கள்?  

பதில் : கடந்த யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஆலயங்கள், விளையாட்டுக்கழகங்கள், ஏனைய சங்கங்கள் உள்ளிட்ட பொதுஅமைப்புக்கள், போன்றவைகளை அடையாளங்கண்டு புனரமைப்புக்காக 5 - 10இலட்சம் ரூபா வரை உதவிகளை வழங்கி வருகின்றோம்.  

கேள்வி : இந்த காரியாலயத்தினூடாக இன நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளீர்களா?  

பதில் : நாங்கள் இளைஞர், யுவதிகளுக்காக சிங்களவர்களுக்கு தமிழும், தமிழர்களுக்கு சிங்களமுமாக, மொழி பயிற்சி முகாம்களை மேற்கொண்டு வருகின்றோம், கடந்தவருடம் மட்டக்களப்பு, ஆரையம்பதி, வெல்லாவெளி, அரசடித்தீவு, வவுணதீவு, போன்ற பல இடங்களில் நடைபெற்ற மொழிப்பயிற்சிகளில் 2000இற்கு மேற்பட்டோர் அதில் பங்கெடுத்திருந்தனர். அதில் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள இளைஞர், யுவதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதுபோன்ற செயற்றிட்டங்களை கிழக்கில் மேலும் முன்னெடுக்கவுள்ளோம்.  

இதனைவிட அரச உத்தியோகஸ்த்தர்கள் எமது இந்தக் காரியாலயத்தில் நடைபெறும் மொழி வகுப்புக்களில் கலந்து கொண்டு பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாரதி, மற்றும் சிற்றூழியர்களும், 50வயதிற்கு மேற்பட்ட அதிபர்களும், எமது அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மொழி வகுப்பில் 50மணித்தியாலங்கள் கலந்து கொண்டு சான்றிதழைப் பெற்றால், அவர்கள் அதற்குரிய பரீட்சை எழுத்தவேண்டியதில்லை. ஆனால் ஏனைய உத்தியோகஸ்த்தர்கள் எமது அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டு மொழித் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற பரீட்சையில் சித்திபெற வேண்டும்.  

கேள்வி : மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாகத்தான் வாழவேண்டும், இந்நிலையில் இன நல்லுறவு பற்றி நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?  

பதில் : இன நல்லுறவு, இன ஐக்கியம் என்பது ஒரு தரப்பால் மாத்திரம் செய்யக்கூடியது அல்ல. இது இரு சமூகங்களும் ஒன்றிணைந்துதான் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் விட்டாலும் அது இரு தரப்புக்களுக்கும் நல்லதல்ல. எனவே நல்லிணக்கத்தை இரு தரப்புக்களும் இணைந்துதான் மேற்கொள்ளவேண்டும். இந்நிலையில் தமிழ் தலைமைகள் மீதும் பிரச்சினைகள் உள்ளன. கடந்தவருடம் வடக்கு கிழக்கில் 50ஆயிரம் வீட்டுத்திட்டத்தை எமது அமைச்சர் மனோகணேசன் அவர்கள் கொண்டுவருவதற்கு முனைந்தபோது அதனை எதிர்த்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. எனவே “இரு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்பதற்கப்பால் தமிழர்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்” என்பதையே நான் முதலாவதாக எதிர்பார்க்கின்றேன். எங்களிடையே நல்லிணக்கம் இல்லாமல் ஏனையவர்களிடம் எவ்வாறு அதனை ஏற்படுத்த முடியும். எனவே அரசியலுக்காக மாத்திரம் சில விடையங்களைப் பாவிக்காமல் மக்கள் நலன்கள் பற்றிச் சிந்திக்க வேண்டும். எனவே அனைத்தையும் தமிழ் மக்கள் மத்தியில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு தமிழ் மக்கள் மத்தியிலிருந்து இளம் அரசியல் தலைமைகள் உருவாகவேண்டும். அதற்கான தேவையும் தற்போது எழுந்துள்ளது.  

தமிழ் மக்கள் மத்தியில் இளம் ஆண்கள் திருமணம் முடித்துவிட்டு, மனைவிமாரை இங்கே விட்டு விட்டு வெளிநாடுகளுக்குச் செல்கின்றார்கள், காரணம் தொழில்வாய்ப்பில்லை, தற்கொலைகள் அதிகரித்துள்ளன, இவைகளுக்கு முடிவுகட்டவேண்டுமாக இருந்தால் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் சரியான அரசியல் தலைவர்களை மக்கள் உருவாக்கவேண்டும். எனவே அரசியலில் தமிழர்கள் கடந்த 40வருடமாக எவற்றைச் சாதித்துள்ளார்கள், ஏனையவர்கள் எதனைச் சாதித்துள்ளார்கள், “எதிர்காலத்தில் கடவுளால்கூட தமிழ் மக்களைக் காப்பாற்றமுடியாத நிலமைதான் தற்போது போய்க்கொண்டிருக்கின்றது.” எமது மக்களை சரியாக வழிநடாத்த வேண்டியவர்கள் சரியாக வழிநடாத்தாததினால்தான் எமது சமூகம் தற்போதைய நிலையில் சீர்குலைந்து செல்கின்றது.  

கேள்வி : மட்டக்களப்பில் புதிய புதிய கட்சிகளிள் காரியாலயங்கள் திறந்து அவர்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் நீங்கள் எதிர்காலத்தில் அரசியலில் இறங்கும் எண்ணம் உள்ளதா?  

பதில் : கட்சிகளை உருவாக்குவதும், அங்கத்துவங்களைப் பெருக்கிக் கொள்வதும், காரியாலயங்களைத் திறப்பதுவும்தான் அரசியல் என எல்லோரும் நினைக்கின்றார்கள். உண்மையில் அது அரசியல் அல்ல. இவற்றைவிடுத்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். “கட்சிக்காக மக்கள் இல்லை, மக்களுக்காகத்தான் கட்சி அமைய வேண்டும்.” அதுதான் உண்மையான கட்சியாகும். மக்களுக்காக எவர் சேவை செய்கின்றாரோ, அவர்தான் உண்மையான அரசியல்வாதி. அரசியலில் தலைமைத்துவங்களுக்காகச் சண்டைபிடிக்கின்றார்களே தவிர எவருமே மக்களுக்காகச் சண்டைபோட்டது கிடையாது. என்னுடைய நோக்கம் மக்களுக்குச் சேவை செய்வதாகும். நான் அரசியலுக்குள் வருவதா? இல்லையா? என்பதை முதலாவது தீர்மானிப்பது மக்கள்தான். நிச்சயமாக மக்களின் தீர்புக்கு நான் அடிபணிவேன். அவ்வாறு நான் அரசியலில் வந்தாலும் நான் தொடர்ந்து அரசியலில் இருப்பதா இல்லையா என்பதையும் தீர்மானிப்பதும் மக்கள்தான்.  

கேள்வி : கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி என்ன கருதுகின்றீர்கள்?  

பதில் : கடந்த தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகள் அனைத்தும் ஏனையவர்களை தெரிவு செய்வதற்கு அல்ல தமிழர்களைத் தெரிவு செய்வதற்காகத்தான் வாக்களித்தார்கள். கீழ்த்தர அரசியல்வாதிகள், தேசிய கட்சிகளில் போட்டியிடும் தமிழர்களுக்கு வாக்களித்தால் ஏனைய சமூகத்தினர் வருவார்கள் என்ற கருத்தை தமிழர்களே உருவாக்கி விட்டுள்ளர்கள், இதேவேளை, தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு கிழக்கின் முதலமைச்சர் பதவியை ஏனையவர்களுக்குக் கொடுத்த வரலாறும் கிழக்கிற்கு உண்டு.  

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதுவித நிபந்தனைகளும் இன்றி ஆதரவு வழங்கிய காரணத்தினால்தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியாதுள்ளது.”  

எனவே நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் சரியான முறையில் வாக்களித்தால் 4 ஆசனங்களை தமிழர்கள் பெற்றுக் கொள்ளலாம். அபிவிருத்தியும், உரிமையும் சமாந்தரமாகப் பயணிக்க வேண்டியுள்ளது. இனியும் வங்குரோத்து அரசியல் வேண்டாம்.

நேர்காணல்:
வ.சக்திவேல்

Comments