என்னால் தமிழர்களை ஏமாற்ற முடியாது | தினகரன் வாரமஞ்சரி

என்னால் தமிழர்களை ஏமாற்ற முடியாது

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் பொதுச் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரன்

எல்லாம் முடிந்த பின்னர் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பிரேத பரிசோதனை செய்வதற்கு வரக் கூடாது

காணாமற் போனோர் குறித்து கூட்டமைப்பு எந்தவித அக்கறையையும் செலுத்தவில்லை என்பதை வெளிநாடுகளுக்குச் சென்று பார்த்த போதுதான் தான் உணர்ந்து கொண்டதாகக் கூறுகின்றார் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரன். தினகரன் வாரமஞ்சரிக்கான நேர்காணலில், கூட்டமைப்பனரைப் போன்று தன்னால் தமிழர்களை ஏமாற்ற முயாதெனவும் கூறினார். அவரது நேர்காணலின் முழு விபரம் ....

கேள்வி: உங்களது கணவரும் காணாமலாக்கப்பட்ட நிலையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கும், அதன் உண்மைகளை அறிந்து கொள்வதற்கும் எத்தகைய நடவடிக்கைகளை நீங்கள் எடுத்திருக்கின்றீர்கள்?  

பதில் - சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பாக உள்நாட்டுப் பொறிமுறைக்கமைய அமைக்கப்பட்ட எல்எல்ஆர்சி மற்றும் ஐனாதிபதி ஆணைக்குழு என்றெல்லாம் நாங்கள் போயிருக்கிறோம். இவ்வாறான நிலையில், நான் அரசியலுக்கு வந்த பின்னர் காணாமற்போனோர் தொடர்பில் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தோம்.  

ஐக்கிய நாடுகள் சபைக்கும் சென்று இது விடயம் சம்பந்தமாக அறிக்கை யொன்றையும் சமர்ப்பித்தோம். தொட ர்ந்தும் நடைபெறும் ஐ.நா அமர்வுக ளிலும் எங்களது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றோம். சரணடைந்தவர்கள் தொடர்பாக உள்நாட்டில் வழக்கொன்றையும் தொடுத்தேன்.  

சரணடைந்த எனது கணவர் உட்பட காணாமலாக்கப்பட்ட அனைவரையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் நான் முன்னெடுப்பேன். இது என்னுடன் முடிந்து போகிற விடயமல்ல. எனது பிள்ளைகளும் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பார்கள். இது என்னுடைய வாழ்க்கை. ஆகவே எனது நடவடிக்கையை நான் தொடர்ந்தும் முன்னெடுப்பேன்.  

கேள்வி: நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் காணாமற் போனோர் விவகாரத்தில் அக்கறையாகச் செயற்பட்ட போதும், அரசியலுக்கு வந்த பின்னர் அது விடயத்தில் அக்கறையற்றிருப்பதாக உங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறதே.  

பதில்: - இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சிலர், திட்டமிட்ட வகையில் முன்வைக்கின்றனர். உண்மையில் கடந்த காலங்களில் காணாமற்போனவர்களின் உறவினர்கள், வடக்கு மாகாணம் தழுவிய ஒரு அமைப்பாக செயற்பட்டிருந்தனர். ஆனால் இன்றைக்கு அவர்களுக்குள்ளேயே பிளவுண்டு பல அமைப்புக்களாக செயற்படுகின்றனர்.  

இத்தகைய அமைப்புக்களுடனும், அதன் தலைவர்களுடனும் முரண்பட்டிருக்கின்ற பலரும் அதே நேரத்தில் அந்த அமைப்புக்களில் இருக்கின்ற பலரும் கூட இன்றைக்கு எங்களுடன் தொடர்பில் தான் இருக்கின்றனர். ஆனாலும் எங்கள் மீது சிலர் வேண்டுமென்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

கேள்வி: காணாமற்போனோரின் உறவினர்கள், பல்வேறு பெயர்களில், பல அமைப்புக்களாக இயங்கி வருகின்றனர். ஆனால் அவர்கள் ஒரே அமைப்பாக இயங்கியதாக நீங்கள் குறிப்பிட்டிருக்கின்ற நிலையில் மீளவும் இவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்க்க முடியுமா? அதற்கான முயற்சிகளை எடுக்கப்படுகின்றனவா?  

பதில்: இவர்களை ஒன்றுபடுத்துவதற்கு எங்களால் முடியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாகச் செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஒவ்வொருவரதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்குள் சென்று சிக்குப்பட நான் விரும்பவில்லை.  

காணாமற்போனோரின் உறவினர்களை பிரித்ததன் பின்னணியில் இருப்பது இராணுவப் புலனாய்வாளர்கள்தான். அவர்களே இந்தப் போராட்டங்களையும் மழுங்கடிக்கச் செய்கின்றனர். ஆகவே அந்த வலைக்குள் சிக்குப்படாமல் அனைவரும் மீளவும் ஒருங்கிணைவது அவசியம். அத்தகைய முயற்சிகளை அனைவரும் இணைந்து பலமான அமைப்பாக உருவாக்க வேண்டும்.  

கேள்வி: - கூட்டமைப்பினூடாக அரசியலுக்கு வந்திருந்த நீங்கள் இன்றைக்கு கூட்டமைப்பிலிருந்து ஏன் விலகியிருக்கின்றீர்கள், கூட்டமைப்பின் மீது எதற்காக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றீர்கள்?  

பதில்: - காணாமற்போனோர் விவகாரம் தொடர்பாக தேர்தல் மேடைகளிலும் தமிழரசுக் கட்சிக் கூட்டத்திலும் நான் பேசியிருக்கின்றேன். அத்தோடு இந்த விடயத்தை மாகாணம் தேசியம் கடந்து சர்வதேசம் வரை எடுத்துச் செல்வேன் என்றும் கூறியிருந்தேன். அவ்வாறு தேர்தலில் நான் கூறியிருந்ததற்கமைய சர்வதேசத்திற்கும் சென்று அறிக்கையை வழங்கியிருந்தேன்.  

ஆனால் இந்த விவகாரத்தில், கூட்டமைப்பினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவும் இல்லை. இது குறித்து பெரிதாக அவர்கள் அக்கறையையும் செலுத்தவில்லை என்பதை நான் வெளிநாடுகளுக்குச் சென்று பார்த்த போது அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டேன். கூட்டமைப்பினரைப் போல் எனக்கு மக்களை ஏமாற்றி பொய்யாக நடிக்கத் தெரியாது. அவர்களைப் போல் என்னால் மக்களை ஏமாற்ற முடியவில்லை. சாதாரண மக்கள் கூட்டமைப்பினரை நம்பியது போலத் தான் நானும் அவர்களை நம்பி ஏமாந்தேன் என்பதை நான் புரிந்து கொண்டேன்.  

இதன் பின்னர் வந்த 2015தேர்தலில் மனங்களால் ஒன்றிணைந்தோம் என்று மைத்திரிக்கு ஆதரவு கொடுப்பதாக தமிழரசுக் கட்சியில் முடிவெடுத்தார்கள். ஆனால் அவ்வாறான முடிவை எடுக்க முன்னரே கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நானும் சிவகரனும், பேராசிரியர் சிற்றம்பலமும் மைத்திரியோ, மஹிந்தவோ யாராயினும் அவர்கள் போர்க்குற்றவாளிகள் தான் என்று சொன்னோம். போர்க்குற்றவாளிகளுக்கு ஆதரவு வழங்கக்கூடாது என நிராகரித்திருந்தோம்.  

என்னுடைய மனச்சாட்சிக்கு விரோதமாக இவர்களை ஆதரிக்க மாட்டேன் என்று தெளிவான கருத்தை சொல்லியிருந்தேன். அந்த அடிப்படையில் தமிழரசுக் கட்சி எனக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தது. மக்களின் கஷ்டங்களை, அபிலாசைகளை பேசுவதற்காககத் தான் மக்களிடம் வாக்குப் பெற்றேன். மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது, உண்மையைப் பேச வேண்டுமென்ற அடிப்படையில் தான் பேசினேன். அதனால் கூட்டமைப்புடன் முரண்பட்டேன்.  

எங்களுடைய பிரச்சினைகளை தீருங்கள். காணாமல் போனவர்களின் முகமாக என்னைக் கொண்டு வந்தவர்கள் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த நடவடிக்கையை நான் எடுக்க கூட எனக்கு ஒத்துழைக்கவில்லை.  

இன்றைக்கும் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் எங்கள் அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரட்டும். நாங்கள் அரசியலில் இருந்து ஒதுங்குகிறோம். எங்களுக்கு அரசியல் தேவையில்லை. இன்றைக்கு இங்கு ஒரு கதையும் அங்கு ஒரு கதையுமாக கூட்டமைப்பினர் மக்களை ஏமாற்றுகின்றனர். தெற்கில் இணக்க அரசியல் நடாத்தி வருகின்ற கூட்டமைப்பினர், வட,கிழக்கில் உரிமை அரசியல் என ஆழமாகப் பேசுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. அதனால் தான் நாங்கள் இவற்றைப் பற்றி பேசுகிறோம். இதனை நாங்கள் பேசுவதால் எங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் தெரியும். ஆனால் நான் பேசுகிறேன்.

மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டாம். ஏமாற்றக் கூடாது. அகவே அந்த உண்மைகளை சொல்வதற்கு நான் ஒரு போதும் தயங்கப் போவதில்லை.  

கேள்வி: -இவ்வாறான நிலையில் கூட்டமைப்பின் இன்றைய செயற்பாடுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.  

பதில்: கூட்டமைப்பினரின் சமகாலச் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால் விடுதலைப் புலிகள் உருவாக்கியது தான் கூட்டமைப்பு என மக்கள் கருதுவதால் அதே கூட்டமைப்பை தான் ஆதரிக்க வேண்டுமென்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. அவ்வாறிருந்தும் இன்றைக்கு கூட்டமைப்பினர் ஏமாற்றுகின்றனர் பொய் சொல்கின்றனர், என்ற உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.  

குறிப்பாக, இன்றைக்கு இணக்க அரசிலும் சலுகை அரசியலையுமே கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர். ஆனால் இதே அரசியலை செய்த தமிழ்த் தரப்புக்களை, கடந்த காலத்தில் எதிர்த்து அல்லது குற்றஞ்சாட்டியிருந்ததும் இதே கூட்டமைப்பு தான். இன்றைக்கு அதைத்தான் கூட்டமைப்பினர் செய்கின்றனர். ஆனால் இவற்றை எதிர்க்கின்றவர்களும் உரிமைக்காக குரல் கொடுக்கின்றவர்களும் எம் மத்தியில் இருக்கின்றார்கள். இன்றைக்கு சந்தைகள் சனசமூக நிலையங்கள், பொது இடங்கள் என பல இடங்களிலும் இது தொடர்பில் மக்கள் பேசுகின்றதை அவதானிக்கலாம். சம்பந்தன் ஐயா மாறு வேடங்களில் மக்கள் மத்தியில் சென்று கருத்துக் கணிப்பைச் செய்வது சாலப் பொருத்தமாக இருக்கும்.  

கேள்வி: - கூட்டமைப்பினர் தான் உங்களை அரசியலுக்கு கொண்டு வந்ததாக கூறுகின்றீர்கள். ஆனால் இன்றைக்கு கூட்டமைப்பை கடுமையாக விமர்சிக்கின்றீர்கள், ஆனால் அடுத்த தேர்தலில் கூட்டமைப்பு அழைத்தால் மீளவும் செல்வீர்களா?  

பதில்: - இல்லை. உண்மையில் அவர்கள் என்னை இணைக்கவும் மாட்டார்கள். நானும் போகவும் மாட்டேன். ஏனென்றால் அந்தக் கட்சிக்குப் போய் மனம் நொந்துதான் அங்கிருந்து திரும்ப வந்திருக்கிறேன். சாதாரண ஒரு குடும்பத் தலைவியாக இருந்த நான் அரசியலுக்கு வந்து பலபக்க அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்தேன். குறிப்பாக உயிர் அச்சுறுத்தல் முதல், உளப் பாதிப்பு வரை ஆளாக்கப்பட்ட ஒருவராகத்தான் இருக்கிறேன்.  

ஆனால் மகிந்த ராஐபக்சவை மின்சாரக் கதிரையில் இருந்து பாதுகாத்தது தான் என ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். அதே ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்தது தாம் என கூட்டமைப்பினர் கூறுகின்றனர். ஆகவே போர்க்குற்றவாளிகளை பாதுகாத்து நீதியை இல்லாமல் பண்ணிவிட்டு இனிமேலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று கூறிக் கொண்டு கூட்டமைப்பினர் வரக்கூடாது. விரும்பியோ விரும்பாமலோ இதற்கான பொறுப்பை அவர்கள் ஏற்றே ஆக வேண்டும். எல்லாம் முடிந்த பின்னர் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரேத பரிசோதனை செய்வதற்கு வரக்கூடாது. எங்களது கைவிரலைக் கொண்டு எங்களது கண்களைக் குத்தியவர்களாகத் தான் தமிழரசுக் கட்சி நடந்திருக்கிறது. எனவே இவர்களை நான் மட்டுமல்ல, தமிழர்கள் கூட மன்னிக்க மாட்டாதவர்களாகத் தான் இருக்கின்றார்கள்.

கேள்வி: நீங்கள் தனி ஒருவராக அரசியலுக்கு வந்து, தற்போது ஒரு கட்சியை உருவாக்கியிருக்கின்றீர்கள். உங்கள் கட்சி எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கிறது.  

பதில்: - நாங்கள் இப்போது பரவலாக சகல பிரதேசங்களிலும் எங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். மக்கள் மத்தியில் வர்க்க வேறுபாடுகளைக் களைந்து மிக நிதானமாக செயற்படுகிறோம். புதிதாக எங்கள் கட்சி ஆரம்பித்திருந்தாலும் எங்கள் கட்சியை புலனாய்வாளர்கள் பின்தொடருகின்ற நிலைமை இருக்கின்றது. ஆகையினால் மிக மிக அவதானமாக நாங்கள் எங்களது ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுத்து வருகின்றோம். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் எங்கள் கட்சியின் பேராளர் மாநாடு நடாத்துவதற்கும் தீர்மானித்திருக்கின்றோம்.  

கேள்வி: முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய அணியொன்று உருவாக்கப்படப் போவதாகச் சொல்லப்படுகின்றது. அந்த அணியில் உங்களது கட்சியும் இணைந்து கொள்ளவுள்ளதா?  

பதில்: -எங்கள் கட்சி விக்கினேஸ்வரன் ஐயாவுடன் சேர்ந்து தான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்களுக்கிடையில் நல்ல ஒற்றுமையான, ஆழமான பிணைப்பு இருக்கிறது. அந்த வகையில் கொள்கைகள் ஒன்றாக இருப்பதால் கொள்கை ரீதியாக நாங்கள் இணைந்து பயணிக்கின்றோம். அதற்கமைய தொடர்ந்து வரும் தேர்தல்களையும் விக்கினேஸ்வரன் ஐயா தலைமையில் சந்திக்க இருக்கின்றோம்.  

கேள்வி: விக்கினேஸ்வரன் தலைமையிலான இந்தக் கூட்டில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் இணைந்தால் தாம் வரப் போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ள நிலையில் நீங்கள் இணைவதில் ஏதும் பிரச்சினை உள்ளதா?  

புதில்: - இல்லை. எங்களுக்கு அதில் எந்தவொரு தடையும் இல்லை. ஏனென்றால் தேசியத் தலைவர் பிரபாகரனுடைய காலத்தில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்தக் காலங்களில் ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் எல்லாம் என்ன செய்தது என்று எங்களுக்கு தெரியும். நாங்களும் அந்த வரலாறுகளைப் பார்த்துக் கொண்டுதான் வந்திருந்தோம். ஆனாலும் அவர்கள் எல்லாரையும் மன்னித்து ஒரு குடைக்கு கீழ் தேசியத் தலைவர் கொண்டு வந்த தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் நிராகரிக்க முடியாது.  

ஒருமித்த ஒரு பலமான கூட்டு ஒன்று உருவாக்கப்பட வேண்டியதே இன்றைய தேவையாக இருக்கிறது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று கூறுவது மாதிரி குற்றம் பார்க்கில் எல்லாக் கட்சிகளிலும் குற்றம் பார்க்கலாம்.  

மக்களுடைய அபிலாசைகள், விருப்பத்திற்கேற்றவாறு கொள்கை ரீதியாக ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்றே விரும்புகின்றோம்.  அவ்வாறு நாங்கள் ஒன்றுபட்டு கூட்டிலிருந்தாலும் மக்கள் விரும்பினால் யாரை வேண்டுமானாலும் நிராகரிக்கட்டும். விக்கினேஸ்வரன் தலைமையில் நாங்கள் பலமான அணியாக களம் இறங்குவது தான் பொருத்தமானதாக இருக்கும்.

பருத்தித்துறை-
எஸ்.நிதர்ஷன்

Comments