புதிய தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதிர்பார்ப்புகளை ஈடேற்றுமா? | தினகரன் வாரமஞ்சரி

புதிய தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதிர்பார்ப்புகளை ஈடேற்றுமா?

நாட்டில் மீண்டுமொரு தேர்தல் திருவிழா நடைபெறுவதற்கான களைகட்டல்கள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. அரசியல் கட்சிகளின் அறிக்ைகச் சமர்கள் ஊடகங்களுக்குத் தீனி போட்டு வருகின்றன.  

மீண்டும் ஒரு தேர்தல் வாக்களிப்பு. பழைய வாக்குறுதிகள் புதியவைகளாக உருவாகி வரும்போது, வாக்காளர்களும் தங்களைப் புத்துயிர் பெற்றவர்களாக நினைத்துக் ெகாள்கிறார்கள். ஆனால், உண்மையில் நடப்பது என்னவென்று இன்னொரு தேர்தல் நடந்த பின்னர்தான் உணர்ந்துகொள்ளப்படுகிறது! 

ஏனிந்த நிலைமை என்பதை எண்ணிப்பார்ப்பதற்குக் காலம் கைகொடுப்பதில்லை என்கிறார்கள் சாமானியர்கள். மக்கள் தங்களின் எதிர்காலத்தைப் பற்றிய பொறுப்பினை அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்துவிட்டுத் தங்களிலும் நாட்டின் மீதும் அக்கறையில்லாது இருந்து விடுகின்றனர். இறுதியில், தாம் எதிர்பார்த்த அரசியல் தலைவர்கள் தமது எதிர்பார்ப்பினை நிறைவேற்றாதபோது நொந்துகொள்கிறார்கள். இஃது இன்று நேற்றல்ல தேர்தல் ஆரம்பித்த காலந்தொட்டே நீடித்து வருகிறது. 

ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கொரு தடவை மக்கள் மத்திக்கு வரும் அரசியல்வாதிகள், மக்களையும் அவர்களின் வாக்குகளையும் கவர்வதற்கென்று தங்களின் எதிர்கால செயற்பாடுகளை விஞ்ஞாபனங்களாக தருகிறார்கள். மக்களும் அவற்றில் ஈர்க்கப்பட்டு வாக்களிக்கிறார்கள். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேற்றப்படாமல், அடுத்த சுற்று விஞ்ஞாபனமும் முன்வைக்கப்படுகிறது. இப்படி காலத்திற்குக் காலம் தேர்தல்களின்போது முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் எதுவுமே முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லை. 

இந்த நிலைமையில், இன்று அரசாங்கத்தின் மீது மாத்திரமன்றி அரசியலின் மீதும் நாட்டு மக்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகளை வெறுத்தொதுக்குவது என்பது வேறு விடயம். ஆனால், நமது அன்றாட வாழ்க்ைகயுடன் பின்னிப்பிணைந்துள்ள அரசியலிலிருந்து அந்நியப்படுவதென்பது ஓர் இருண்ட யுகத்திற்கு இட்டுச்செல்வதாகவே அமைந்துவிடும்.  

மக்கள் அரசியலிலிருந்து அந்நியப்படுவதற்கான காரணத்தை ஆழமாக நோக்கினால், அரசியல் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதில்லை என்ற ஆதங்கம்தான் என்பது புலனாகும். நாட்டு நடப்புகள் பற்றித் தலைவர்களை விடவும் நன்கு நாடிபிடித்து வைத்துள்ள பொதுமக்கள், அவற்றுக்கான தீர்வுகளையும் தம்முள் வைத்திருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் எதிர்பார்க்கின்ற தீர்வுகளை அரசியல்வாதிகள் வழங்காதபோது, அவர்கள்மீது வெறுப்புகொள்கிறார்கள். 

முன்பிருந்த அரசாங்கத்தைவிடப் புதிய அரசாங்கம் சிறந்ததாக இருக்கும் என்ற அபிப்பிராயம் தவிடுபொடியாகும்போது இந்த விரக்தி நிலை தோன்றுகிறது. தேசிய பொருளாதாரம், பாதுகாப்பு, சிவில் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குலுக்குப் பொறுப்புக் கூறும் விடயத்தில் அரசாங்கம் தப்பித்துக்ெகாள்ள முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இப்போது அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும் சந்தர்ப்பத்தில், ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட விஞ்ஞாபனங்கள் மீது அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். 

தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த நான்கு வருட காலத்தில் அவர்கள் எதிர்பார்த்த எதனையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள். அதேநேரம், இந்த அரசாங்கத்தைத் தவிர்த்து வேறு யாரைத்தான் ஆட்சிக்குக் கொண்டு வருவது என்பதிலும் ஒரு தர்மசங்கடமான நிலை அவர்களுக்கு. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்தவாறு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை; ஆகவே, புதிதாக வரவிருக்கும் அரசாங்கத்துடன் இணக்க அரசியலை முன்னெடுத்து நமது தேவையைப் பூர்த்தி செய்யலாம் என்ற நம்பிக்ைகயில்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த 2015இல் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவை வழங்கியது. 

நடந்தது என்ன? 

வருடக்கணக்காக நடத்தப்பட்டு வரும் மக்கள் போராட்டத்திற்கு ஒரு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் சிறிய விடயத்தைக்கூட இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியவில்லை. ஆக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல் தோற்றுப் போய்விட்டது என்பது தமிழ் மக்களின் கருத்து. அதனால், தமக்கான ஒரு மாற்றுத் தலைமையைத் தீர்மானிக்கும் உரிமை அந்த மக்களுக்கு இருக்கிறது. அப்படியென்றால், ஒரு தேசிய தேர்தலில் தமக்கான தலைமைத்துவத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு தமிழ் மக்களால் தீர்மானத்தை எடுக்க முடியுமா? 

நிச்சயமாக முடியாது! ஒரு நாட்டை நிர்வகிக்கப்போகின்ற ஒரு தேசிய கட்சியின் தலைமைத்துவத்தைப் பற்றிச் சிந்திக்காமல் அரசியல் முடிவுகளை மேற்கொள்ள முடியாது. அதுவும் தனி நபர் ஆளுமைகளைத் தவிர்த்துக் கட்சியின் கொள்கையைச் சீர்தூக்கிப் பார்ப்பதும் முக்கியமானது.  

அந்த வகையில், கடந்த காலங்களைப்போன்று இனியும் தென்பகுதி சிங்களத் தலைவர்கள் வழங்கும் எழுத்து மூலமான இரகசிய உடன்பாடுகளில் நம்பிக்ைககொள்வதற்குத் தமிழர் தரப்பு தயாராக இல்லையென்று இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்திருக்கிறது. தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பகிரங்கமாகச் சிங்கள மக்களுக்கு அறிவிக்கும் ஒருவருக்ேக இனி ஆதரவு வழங்குவோம். சிங்கள மக்களுக்குத் தெரியாமல் செய்துகொள்ளப்படும் உடன்பாடுகள்; சிங்கள மக்களின் ஆதரவுக்குப் புறம்பான தீர்வுகள் எதுவும் சாத்தியமில்லை என்ற புதிய ஓர் அரசியல் சாணக்கியத்தைத் தமிழர் தரப்பு முன்வைத்திருக்கிறது. 

மேலும், தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதாக உறுதி வழங்கும் ஒரு வேட்பாளருக்ேக ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவோம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, தமிழ் மக்களுக்குப் 13+ ஊடாகத் தீர்வினைப் பெற்றுக்ெகாடுப்பதாக முன்னாள் ஜனாதிபதியான தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கிறார். 

பதின்மூன்று பிளஸ் என்பது தமிழ் மக்களால் எப்போதோ நிராகரிக்கப்பட்ட ஒரு தீர்வுத்திட்டம் என்பதை உலகறியும். அதுவும் தாம் பதவியில் இருந்தபோது அதனை நிறைவேற்றுவதாக இந்தியாவிடமும் உறுதியளித்துவிட்டு அவர் அதனைச் செய்யவில்லை. அதனால்தான் அவரை மாற்றுவதற்குத் தமிழர்கள் தீர்மானித்தார்கள். இப்போது மீண்டும் பிளஸ் பற்றிப் பேசுவது ஓர் ஏமாற்று நடவடிக்ைக. பருவகால அரசியல் விஞ்ஞாபனம் என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தளவில் பதின்மூன்று பிளஸ் என்பது ஒரு புளித்துப்போன, விரும்பப்படாத ஒன்றென்று விமர்சிக்கப்பட்டிருக்கிறது. 

ஐக்கிய தேசிய கட்சியானது இன்னமும் எவ்வாறான தீர்வினை முன்வைக்கப்போகிறது என்பதைச் சொல்லவில்லை; சொல்லவும் முடியாது! ஏனெனில், அஃது இனித் தனித்து அதன் கொள்கையை வெளிப்படுத்தும் நிலையில் இல்லை. ஜனநாயக தேசிய கூட்டணியின் அரசியல் யாப்பு, கொள்கைகளை முன்வைத்த பின்னரே அந்தக் கட்சியின் தீர்வு எவ்வாறு அமையும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.  

தற்போதைய சூழ்நிலையில், ஏதோ ஒரு வகையில் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இருபெரும் பலம்பொருந்திய கட்சிகளாக உருவெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகச் சொன்னாலும், அதனிடம் ஒரு தீர்வுத் திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை.  

இந்நிலையில், தமிழ் சிறுபான்மைக் கட்சிகளும் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் முஸ்லிம் கட்சிகளும் மேலும் மேலும் தங்களுக்குள் விரிசல்களை விசாலப்படுத்திக் ெகாள்வதையே காணக்கூடியதாக இருக்கின்றது. 

எனவே, எதிர்காலத் தேர்தலில் கட்சிகள் முன்வைக்கும் விஞ்ஞாபனங்கள், கொள்கைகள் கட்சிகளின் நலனையோ தனிப்பட்ட ஆளுமைகளின் செல்வாக்கு கருதியோ அல்லாமல், நாட்டையும் நாட்டு மக்களின் நலனையும் கருத்திற்கொண்டதாக அமைய வேண்டும். ஏனெனில், கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு ஓர் அரசியல் கட்சியை ஆதரிக்கும் சூழல், இலங்கை போன்ற ஒரு வளர்ச்சியடைந்து வரும் நாட்டுக்குப் பொருத்தப்பாடானது அல்ல. ஆகவே, ஒட்டுமொத்த மக்களினதும் உடனடி எதிர்பார்ப்புகளை ஈடேற்றும் வகையில் விஞ்ஞாபனத்தை முன்வைத்து நிறைவேற்றுவதற்குத் திடசங்கற்பம் பூண வேண்டும்.

Comments