ஈரானின் கடலாதிக்கமும் அமெரிக்காவின் பதில் நடவடிக்கைகளும் | தினகரன் வாரமஞ்சரி

ஈரானின் கடலாதிக்கமும் அமெரிக்காவின் பதில் நடவடிக்கைகளும்

ஈரான் வளைகுடாப் பகுதியில் மேற்கொண்டுவரும் கடற்படைசார் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. படிப்படியாக ஹேமேர்ஸ் மற்றும் வளைகுடாப் பகுதியை நோக்கிய விஸ்தரிப்புகளுக்கு திட்டமிடுவதாக அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு வளைகுடா நாடுகள் அச்சமடைந்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவுக்கு இப்பிராந்தியம் ஈரானின் ஆதிக்கத்திற்குள் சென்றுவிடுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் அண்மைய வாரத்தில் வளைகுடா நாடுகளுடன் இணைந்து கொண்டு அமெரிக்கா செயல்படுவதுடன், வளைகுடா நாடுகளை தூண்டும் விதத்தில் செயல்பட முனைகின்றது. இக்கட்டுரையும் ஈரானின் நடவடிக்கையையும் அமெரிக்காவின் பதில் உத்திகளையும் பரிசீலிப்பதாக அமையவுள்ளது. 

கடந்த வாரம் எரிபொருள் கடத்திய கப்பல் ஒன்றை ஈரான் கைப்பற்றியுள்ளது. வளைகுடாப் பகுதியில் எரிபொருளை கடத்தி சென்றதாக ஒரு சரக்குக் கப்பல் ஒன்றினை கைப்பற்றியது. அக்கப்பலில் ஏழு இலட்சம் லீற்றர் எரிபொருள் இருந்ததாகவும் அதிலிருந்து ஏழு மாலுமிகளை கைது செய்ததாகவும் , அவர்கள் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆரம்பத்தில் ஈரான் தெரிவித்தது.  

இவ்வாறே சர்வதேச கடல் விதிகளை மீறியதாக பிரித்தானியாவின் எண்ணெய்க் கப்பல் ஒன்றினை கடந்த யூலை மாதம் ஈரான் கைப்பற்றியது. இதனால் பிரித்தானியாவுடன் ஈரான் மோதிக் கொண்டாலும், ஈரானின் கப்பல் ஒன்றினை பிரித்தானியா கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும். அதாவது சிரியாவுக்கு எண்ணெயை கடத்தி சென்றதாக ஈரானியக் கப்பலை பிரி-த்தானியா கைப்பற்றியது. ஆனால் ஈரான் தரும் விளக்கம் தனித்துவமமானதாக அமைந்துள்ளது. குறிப்பாக கடல் சட்டத்தையும் சர்வதேச கடல் சட்டங்களையும் ஆதாரமாகக் கொண்டு ஈரான் செயல்பட முனைகிறது. ஒரு வகையில் அவதானித்தால்  சர்வதேசக் கடல் சட்டத்தை முதன்மைப்படுத்தும் ஒரு வல்லரசு போல் ஈரான் செயல்பட விளைகிறது. இப்பகுதிக் கடல் முழுவதையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஆரம்பமாகவே இந்நடவடிக்கைகள் அமையப் பெற்றுள்ளன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஈரான் கடந்த மூன்று வாரங்களில் மூன்று கப்பலை கைப்பற்றியுள்ளது. அதில் ஒன்றினை எச்சரித்து விட்டு, விடுவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.  

ஆனால் ஈரானின் நடவடிக்கையைப் பற்றி அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை கப்பலின் தளபதி தெரிவிக்கும் போது, ஈரானின் நடவடிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அது ஒரு கடல் கொள்ளையரது நடவடிக்கையாக அமைந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய நடவடிக்கை பற்றி ஈரானின் தகவல்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றது என்றும் பிராந்திய நாடுகளுக்கும் குழப்பமாக உள்ளமையும் புலனாகிறது. ஆனாலும் இதுவும் அமெரிக்க கடற்படை வளர்வதற்கு காரணமானது என்பது அமெரிக்கர்களுக்கு நன்கு தெரியும். காரணம் அமெரிக்க கடறபடையை கட்டி வளர்த்தவர்  கடற்கொள்ளையரிடமிருந்து தமது நாட்டுக் கப்பலை பாதுகாக்க ஒரு கடற்படைப் பிரிவு அவசியம் என்று குறிப்பிட்டே கடற்படையை உருவாக்கினார். அப்போது அவர் குறிப்பிட்ட விடயம் கடலிலும் கரையோரத்திலும் தரையிலும் தாக்குதல் திறனுடைய படையால் தான்   கப்பலை பாதுகாக்கலாம் என்றும்,  அத்தகைய உத்தியே காலப்போக்கில்   அமெரிக்கா கடற்படையை அமைப்பதற்கு காரணமாக அமையும் என்றும் குறிப்பிட்டார். ஏறக்குறைய அத்தகைய உத்தியையே உலக நாடுகள் பிற்காலத்தில் கடைப்பிடித்து கடற்படைகளை வளர்த்துக் கொண்டன. அவ்வாறே சீனாவும் தனது பிந்திய கடல் படை வளர்ச்சிக்கு காரணம் கூறியது. அவ்வாறுதான் ஈரானும் செயல்படுவது தெளிவாகத் தெரிகிறது.  

ஈரான் கடற்படையை சர்வதேச விதிகளை முன்னிறுத்தி செயல்படுவதென்பது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல,  வளைகுடா நாடுகளுக்கும் ஆபத்தானது. காரணம் சர்வதேச விதிகளின் பிரகாரம் 200கடல் மைல் விசேட பொருளாதார வலயத்திற்குள் நுழைவது, அதுவும் அனுமதியின்றி நுழைவது என்பன குற்றச் செயலாகவே கருதப்படுகிறது. இவ்வாறெல்லாம் ஈரான் கருதுமாக இருந்தால் அதன் கட்டுப்பாட்டுக்குள் அதன் கடல் எல்லை பாதுகாக்கப்படுவதுடன், அதன் மீது எந்த நாட்டுக் கப்பலும் அத்து மீறும் போது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்  அதற்குக் கிட்டும்.  

எனவே தான் ஈரானின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சு செயலாளர் மைக் பாம்பியோ சவூதி அரேபியா மற்றும் யெமன் நாட்டுத் தலைவர்களுடன் கடல் பாதுகாப்புப் பற்றிய உரையாடல் ஒன்றினை தொலைபேசிவாயிலாக அவசரமாக மேற்கொண்டுள்ளார். அவரது உரையாடலில் முக்கிய விடயமாக அமைந்திருந்தது. வளைகுடாப்பகுதியில் சுதந்திரமான கடல் பயணத்திற்கான பலமான கடல் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறே பிராந்திய மற்றும் இரு தரப்புக்குமிடையிலான அபிவிருத்தியை ஏற்படுத்துவதுடன், ஈரானின் ஆதிக்கத்திற்கு பதிலீடான ஈரானின் ஸ்திரமற்ற நிலைக்கான நடவடிக்கை அவசியம் என்றார். இத்தகைய நடவடிக்கை பற்றிய உரையாடலில் சவூதி அரேபியா மற்றும்  யெமனுடன் ஒத்துழைப்பினை வெளிப்படுத்தவும் அமெரிக்கா முயன்றுள்ளது. 

எனவே, அமெரிக்கா ஈரானின் நடவடிக்கைக்கு எதிராக வளைகுடா நாடுகளைத் தூண்டிவிட முயலுகிறது. இவ்வாறே சவூதி அரேபியாவை தூண்ட முயன்ற போதும், அது சாத்தியமற்றதாகியது. இதனால் தற்போதுள்ள நிலையைப் பயன்படுத்திக் கொண்டு செயல்பட முனைகிறது. எதுவாயினும் இப்பிராந்தியத்தில் வலுமிக்க சக்தி தான்தான் என்பதை ஈரான் வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டது. அதனை பாதுகாப்பதும் தக்கவைப்பதும் ஈரானின் அரசியல் தலைமைகளிடமே உண்டு. அதனை கையாளும் திறனும் வல்லமையும் ஈரான் தரப்பிடம் உண்டு. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40வீதம் ஈரானின் ஹோமேர்ஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக மொத்த எண்ணெய் வழங்கலில் இது 20வீதம் ஆகும். ஹோமேர்ஸ் நீரிணை, ஓமான் வளைகுடாவையும் பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. இதனால் ஈரானின் பலம் தனித்துவமானது. இதனை தகர்ப்பதே அமெரிக்காவின் பிரதான நோக்கமாகும். அதனை நோக்கியே அமெரிக்காவின் நகர்வுகள் காணப்படுகின்றன. 

ஈரான், அமெரிக்க முறுகல் பல திசைகளில் நிகழ ஆரம்பித்துள்ளது. அதனை,  எதிர்கால அரசியல், இராணுவ திறனும், தந்திரங்களும்  தான் தீர்மானிக்கும்.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்

Comments