ஆளுமை, வசீகரத்தால் உலகை ஈர்த்த பேரன்புத் தலைவி | தினகரன் வாரமஞ்சரி

ஆளுமை, வசீகரத்தால் உலகை ஈர்த்த பேரன்புத் தலைவி

இந்திய அரசியல் வரலாற்றில் உச்சங்களை தொட்ட ஆளுமை மிக்க பெண் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ். பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர்.

உயர்மட்ட குழுவில் பெண்கள் அதிகம் இடம்பெற வேண்டும் என்ற குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் பெண்கள் பாராளுமன்ற தேர்தலில் அதிகம் போட்டியிட வேண்டும் என்று அதிகம் ஆர்வம் காட்டியவர். மத்திய அமைச்சர் மற்றும் கட்சிப் பொறுப்பு ஆகிய பதவிகளில் ஆண்களுக்கு நிகராக தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். எப்போதும் புன்னகை முகத்தோடும் சிவப்புப் பொட்டோடும் மகிழ்ச்சியுடன் காணப்படும் பெண்ணாக தன்னை அடையாளம் காட்டிய சுஷ்மா இந்திய கலாசாரத்தை உலகிற்கு புடம் போட்டுக் காட்டிய மிகப்பெரிய ஆளுமைப் பெண்ணாகத் திகழ்ந்தார். புன்னகையையே தன்மொழியாகக் கொண்ட அவர், இந்தியா எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு சுமுகமாகத் தீர்வு கண்ட பெரும் தகை.

சுஷ்மா சுவராஜ் ஹரியானா மாநிலத்தின் இளம் வயது அமைச்சர். டெல்லியின் முதல் பெண் முதலமைச்சர், 2-வது பெண் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் என்று பல்வேறு சிறப்புகளை கொண்ட 67வயதான சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 07ம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார் என்பது கவலைமட்டுமல்ல, பாரிய இழப்புமாகும்.

1953பெப்ரவரி மாதம் 14-ஆம் திகதி ஹரியானா மாவட்டத்தில் பிறந்தார் சுஷ்மா சுவராஜ்.  சமஸ்கிருதம் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற சுஷ்மா, அதன்பின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். 1970-களில் ஜனசங்கத்தின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

இவர் சட்டப்படிப்பை முடித்ததும் 1973ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற வழக்கறிஞரானார். பின் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 25வயதில் ஹரியானா மாநில அமைச்சராக பொறுப்பேற்றார்.

1998ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் திகதி முதல் 52நாட்கள் டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.

இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார அமைச்சர் பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ் ஆவார்.

1990-இல் இருந்து 3முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் 4முறை மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார். பல்வேறு துறைகளில் அமைச்சராக பொறுப்பு வகித்தார் சுஷ்மா. கடந்தமுறையான பாஜக ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்று, பல்வேறு வகையிலும் தனது பணியை திறம்பட செய்துள்ளார். அவர் வெளியுறவுத்துறை  அமைச்சராக இருந்த போது டுவிட்டரில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளித்து வந்தார்.

வெளிநாடுகளில் சிக்கலில் உள்ள இந்தியர்களை மீட்பதில் துரிதமாக செயல்பட்டு பல்வேறு தரப்பினரின் ஆதரவுகளையும் குவிய பெற்றார்.  பாகிஸ்தான் நாட்டு குழந்தையொன்று மருத்துவம் மேற்கொள்ள இந்தியா வருவதற்கு விசா வழங்க சுஷ்மா உதவியதோடு, மருத்துவம் தொடர்பாக இந்தியா நுழைய முடியாத பாகிஸ்தானியர் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.

பாஜக ஆட்சியில் முக்கிய அமைச்சரவை சுஷ்மாவுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல்நல குறைவால் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தன் மறைவுக்கு  3மணி நேரத்துக்கு முன்புவரை நாட்டின் நலன் குறித்த சிந்தனையுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு வரவேற்பு அளித்ததோடு, இந்த நாள் தனது வாழ்நாளில் மறக்கமுடியாத நாள் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்திய அரசியலில் சிறந்த பெண்  தலைவராக  மதிக்கப்படும் தலைவராக இருந்தார் சுஷ்மா ஸ்வராஜ்

இவரின் பெருமைகள்...

1. டெல்லியின் முதல் பெண் முதலமைச்சர்

2.பாஜகவில் இருந்து முதலமைச்சராக பதவியேற்ற முதல் பெண்

3.தேசியக் கட்சியின் முதல் பெண் செய்தித்தொடர்பாளர்

4.முழு நேர முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்

5.மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த முதல் பெண்.

 

 

Comments