இரும்புப் பெண்மணி சுஷ்மா சுவராஜ் | தினகரன் வாரமஞ்சரி

இரும்புப் பெண்மணி சுஷ்மா சுவராஜ்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் திகதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67வயது.

அடல் பிகாரி வாஜ்பேய் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்பநலம், தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளுக்கும் அமைச்சராக இருந்துள்ளார்.

சுஷ்மா - சுவராஜ் கௌஷல் திருமணம்

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான சுவராஜ் கௌஷலை 1975ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி திருமணம் செய்தார் சுஷ்மா சுவராஜ்.

1990ல் இந்தியாவிலேயே மிகவும் இளம் வயதில் ஆளுநர் ஆனவர் சுவராஜ் கௌஷல்.

1990−1993வரை மிசோரத்தின் ஆளுநராக சுவராஜ் கௌஷல் பணியாற்றினார்.

1998−2004வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

1973ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார் சுஷ்மா சுவராஜ்.

சுஷ்மா சுவராஜ் அரசியலுக்கு வந்தது எப்படி?

1970இல் மாணவர் தலைவராக இருந்தார் சுஷ்மா சுவராஜ், அப்போதைய இந்திரா காந்தி அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினார்.

மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கிய அவர், ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு அவசர காலத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார். இந்திய அரசியல் மீது அவருக்கு இருந்த ஆர்வம், அவரை டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக்கியது. பின்னர் சுஷ்மா சுவராஜ், முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார்.

தனது 27வயதிலேயே ஹரியானா மாநில ஜனதா கட்சியின் தலைவரானார்.

சுஷ்மா சாதனைகள்

1977 - அவரது 25வது வயதில் இந்தியாவின் இளம் கேபினட் அமைச்சரானார் சுஷ்மா சுவராஜ்.

1979, -27வயதில் ஹரியானா மாநில ஜனதா கட்சியின் தலைவரானார்.

தேசிய அளவிலான கட்சியில் செய்தித் தொடர்பாளர் பதவியை வகித்த முதல் பெண் சுஷ்மா சுவராஜ்.

இந்தியாவின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2009ஆம் ஆண்டு டிசம்பர் 21அன்று அத்வானிக்கு மாற்றாக சுஷ்மா எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

மே 26, 2014இல் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரானார்.

2008மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதை அவர் பெற்றார். மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி என்ற விருதை பெற்ற இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான்.

சுஷ்மாவின் உடல்நலக்குறைவு

சுஷ்மா சுவராஜ் சிறுநீரக பிரச்சினை தொடர்பாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

நரேந்திர மோதி தலைமையிலான முதல் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சகராக இருந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக 2019நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பிரபலமான வெளியுறவுத்துறை அமைச்சராக விளங்கிய சுஷ்மா

இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கியதாக இந்தியர்கள் யாரேனும் ட்விட்டரில் தங்கள் நிலையை பதிவு செய்தால், அவர்களுக்கு உடனடியாக உதவினார் சுஷ்மா. இலங்கைக்கும் இந்தியாவின் மறைந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. அசோகச் சக்கரவர்த்தியின் மனைவி விதிஷா தேவி பிறந்த, மத்திய பிரதேசத்தின் விதிஷாவே இவரது தேர்தல் தொகுதி என்பதோடு மாத்திரமல்லாமல், இலங்கையுடனான அவரது உறவு, அவர் இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் இருந்து நெருக்கமானதாக இருந்திருக்கின்றது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த சில காலங்களில், இலங்கையில் உள்நாட்டில் மீளக்குடியமர்ந்தோர், காணி விடுவிப்பு, புனர்வாழ்வு நடவடிக்ைககள் என்பவற்றை பார்வையிட இந்தியாவில் இருந்து வந்த குழுவுக்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக அவர் தலைமைதாங்கி வந்தார். இலங்கையில் யுத்தத்தின் பின்னரான நடவடிக்ைககளைப் பார்வையிட்ட அவர், இலங்கையில் பயங்கரவாத ஒழிப்பு, இலங்கையைப் பிளவுபடாத நாடாகப் பேணுவது என்பனவற்றில் இந்தியாவின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருமித்த கொள்கையையே கொண்டிருப்பதாகக் கூறினார். அதன் பின்னராக, மோடி அரசின் வௌிவிவகார அமைச்சராகவும் அவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அவரது ஒவ்வொரு விஜயமும், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவை கட்டியெழுப்புவதையே மையமாகக் கொண்டிருந்தது. ஆனால் தனது உடல் நிலை காரணமாக இம்முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.

ஓர் அரசியல் தலைவர், அதிலும் ஒரு பெண் தலைவர், தான் இருக்கும் கட்சியினர் மட்டுமின்றி மாற்று கட்சியினர்களும் மதிக்கும் வகையில் நடந்து கொண்ட, மிகச்சில தலைவர்களில் ஒருவராக சுஷ்மா சுவராஜ் திகழ்ந்தார். தனது நாற்பது ஆண்டுகள் அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்தாலும், கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் மதிக்கும் தலைவராக அவர் விளங்கியதுதான் மிகச்சிறப்பானது. பல சரித்திர சாதனைகளையும் செய்தவர்தான் இந்த சுஷ்மா சுவராஜ். மிகவும் இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்தவர். இந்திரா காந்திக்குப் பின் அதிகப் புகழை சம்பாதித்த இந்தியப் பெண் அரசியல் தலைவர் ஆவார். இந்திரா காந்திக்குப் பின் வெளியுறவுத்துறையக் கையில் எடுத்தப் பெண் தலைவரும் இவர்தான். ஹரியாணா மாநில அரசில் மிகவும் இளம் பெண் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர். இதுவரை 7முறை எம்.பி ஆகவும் 3முறை எம்.எல்.ஏ ஆகவும் பதவி வகித்துள்ளார்.

டெல்லியின் முதல் பெண் முதல்வர், தேசியக் கட்சி ஒன்றின் முதல் பெண் செய்தித் தொடர்பாளர், முதல் முழுநேர பெண் வெளியுறவுத்துறை அமைச்சர், மக்களவையின் முதல் பெண் எதிர்கட்சித் தலைவர் எனப் பல பெருமைகளையும் கொண்டவர் சுஷ்மா.

கடந்த மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதிவியில் சுஷ்மா இருந்தபோது சமூக வலைதளங்களில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வந்தார். ஆன்லைனில் உதவி எனக் கேட்டாலே போதும் ‘செவ்வாய் கிரகத்தில் மாட்டிக்கொண்டாலும் இந்திய வெளியுறவுத் துறை உங்களை வந்து மீட்கும்’ என வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஊக்கமளித்தவர் சுஷ்மா.

நாடாளுமன்றத்தில் சிறந்த பேச்சாளர், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து கட்சியினரின் நட்பை பெற்றவர். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் எனில் இவரைப் போல் இருக்க வேண்டும் என்று பாராட்டியுள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாளில் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார் சுஷ்மா சுவராஜ், தமது வாழ்நாளில் இந்த நாளைக் காண்பதற்காகத்தான் தாம் உயிர் வாழ்வதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதுதான் அவர் பதிவு செய்த கடைசி டுவீட் ஆகும்.

சுஷ்மாவின் மறைவு பாஜகவுக்கு மட்டுமின்றி இந்திய மக்களுக்கே ஒரு பேரிழப்பு தான். இந்திய அமைச்சரவை கண்டிராத நவயுக அமைச்சர் மட்டுமல்லாமல் மக்களுக்கான அமைச்சராகவும் அடையாளப்படுத்தப்படுபவர் மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை சுஷ்மா சுவராஜ் செய்து வந்தார். சமூக வலைதளங்களில், இந்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்து வந்தார். இதனால், பலரும் அவரை பாராட்டி வந்தனர். அண்மைய இந்திய மக்களவை தேர்தலில், உடல்நலக்குறைவால் சுஷ்மா சுவராஜ் தேர்தலில் போட்டியிடவில்லை.

அரவிந்தன்

 

Comments