உலமா சபையின் வழிகாட்டலில் செயற்பட முஸ்லிம் சமூகம் உறுதி | தினகரன் வாரமஞ்சரி

உலமா சபையின் வழிகாட்டலில் செயற்பட முஸ்லிம் சமூகம் உறுதி

'முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்'மாநாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து வருகிறது. இந்த பிரச்சினையுடன் முஸ்லிம் பெண்களின் முகத்திரை ஆடைக்கு தடைவிதிக்கப்பட்டதோடு முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்தும் அழுத்தங்கள் எழ ஆரம்பித்தது. 

'முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனங்களின் ஏற்பாட்டில் கொழும்பு தெஹிவளை முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் விசேட மாநாடொன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இன்றைய நெருக்கடி சூழ்நிலையில் எதிர்பார்த்ததை விட பெருந்திரளான மக்கள் நாடுபூராவும் இருந்து கலந்து கொண்டார்கள். இது தவிர முஸ்லிம் அரசியல் தலைவர்கள், உலமாக்கள், கல்விமான்கள் உட்பட முக்கியமான பலரும் இதில் பங்கேற்று காத்திரமான கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைத்திருந்தனர். 

குறிப்பாக முஸ்லிம்களின் முகத்திரை ஆடை விடயத்தில் விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை நிரந்தர தடை யாக்குவதற்கான முயற்சி பற்றியும் முஸ்லிம்களின் ஏனைய இஸ்லாமிய சமயக் கடமைகளை முன்னெடுப்பதற்கு இருக்கும் இடையூறு தொடர்பாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சுக்களை தடை செய்வது பற்றியும் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட திருத்தம் குறித்தும் இங்கு முக்கியமாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இதன்போது உலமா சபையின் வழிநடத்தல், மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட சகலரும் உறுதி பூண்டது முக்கிய அம்சமாகும். அத்தோடு 6முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதற்கு அனைவரும் அல்லாஹு அக்பர் என கோசமெழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.

 அமைச்சர் ரவுப் ஹக்கீம் இங்கு ஆற்றிய உரை பலரதும் கவனத்தை ஈர்த்தது. 

முஸ்லிம் சமூகம் அனுபவிக்கும் உரிமைகள் படிப்படியாக பறிபோய் விடலாம் என்கின்ற ஒரு பீதி, சலனம் எல்லோரையும் பீடித்திருக்கிறது. இந்நிலையில் முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும் வகையில் எமது சமய அனுஷ்டானங்கள், கலாசார விடயங்கள் என்பவற்றிலும் தேவையற்ற தலையீடு மேற்கொள்ளப்படுகிறது. 

புர்காவை முற்றாகத் தடை செய்வதற்கான சட்டம் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சி தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டம் கொண்டுவருவது அடிப்படை மனித உரிமை மீறலாகவே கருத வேண்டும். உலமா சபையுடன் கலந்துரையாடியே முடிவு எடுக்க வேண்டும். தனிமனித உரிமைகளில் அரசு கைவைக்கக் கூடாது.  

விவாகம், விவாகரத்து சட்டத்திலும் சரியான நெறிப்படுத்தல் வேண்டும். சில விடயங்களில் முரண்பாடுகள் இருக்கின்றன. மத்ரஸாக்களையும் ஓரளவு நெறிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். 

 அமைச்சர் றிஷாத் பதியுதீனும் முக்கியமான சில கருத்துக்களை இங்கு முன்வைத்தார். 

 முஸ்லிம்கள் அனுபவித்து வரும் உரிமைகளை இழக்க நேரிடுமா என்ற பாரிய அச்சம் எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ளதை உணர முடிகின்றது. எங்களுடைய நிக்காப் விடயங்களை விட்டுக்கொடுத்து விடாதீர்கள், முஸ்லிம்களுக்காக இருக்கின்ற சட்டங்களை விட்டுக் கொடுத்து விடாதீர்கள் என்று எம்மை சந்தித்த உலமாக்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க எம்மிடம் கோரினார்கள். நாம் அமைச்சு பதவி ஏற்ற மறுநாள் அமைச்சரவைக்கு சென்றபோது நிக்காபை தடை செய்யவேண்டும் என்று கோரும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. நான் அமைச்சர் தலாதா அதுகோரளையுடன் தொலைபேசியில் உரையாடினேன். சில காலம் இதனை நிறுத்தி வைக்கலாம் என்று கோரினேன். ஆனால் ஜனாதிபதி இது விடயத்தில் அவசரப்படுவதாக அமைச்சர் என்னிடம் கூறினார். 

வீட்டுக்கு வெளியில் வரும்போது முகத்தை மறைக்க வேண்டாம் என எமது தாய்மார்களிடமும் சகோதரிகளிடமும் உலமா சபை ஊடாக கோரியிருந்தோம். அவர்கள் அதனை இன்று வரை கடைப்பிடித்து வந்துள்ளனர். இது குறித்தும் தாம் அமைச்சருக்கு தெளிவுபடுத்தியிருப்பதாகவும் அமைச்சர் இங்கு கூறினார். 

விவாக, விவாகரத்துச் சட்ட திருத்தம் தொடர்பில் பல சுற்று பேச்சுக்கள் நடத்தியிருக்கிறோம். 

முஸ்லிம் பெண்ககளுக்கு அநியாயம் நடக்கின்றது என்பது போன்ற ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. 

எனவே இஸ்லாமிய வரையறைக்குட்பட்டவாறு அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாவுடன் இணைந்து தேவையான திருத்தங்களை கொண்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் இங்கு உரையாற்றுகையில்,  

உலமா சபையின் வழிநடத்தலின் கீழே பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவார்கள். அதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என உறுதிபடக் கூறியிருந்தார். 

 எமது உயிரிலும் மேலான மார்க்க விடயங்களை தொடர்ந்தும் கடைப்பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. எமக்கெதிரான முன்னெடுப்புகளை கண்டு நாங்கள் அஞ்சி ஒடுங்க வேண்டியதில்லை. முஸ்லிம் சமூகத்தினை ஒடுக்க முடியாது. 21பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து முஸ்லிம் சமுகம் சார்ந்த முடிவுகளை எடுத்துள்ளோம். உலமா சபை எதைச் செய்யச் சொல்கின்றார்களோ அதைச் செய்யத் தயாராக இருக்கின்றோம். இதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடம் இல்லை. நிக்காப் போன்ற பிரச்சினைகள் தற்பொழுது தான் தூக்கிப்பிடிக்கப்படுகிறது என சற்று கனத்த குரலில் கூறினார்.  

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ராஹ்மான் உரையாற்றுகையில் 

எமது நாட்டில் வாழும் 22இலட்சம் முஸ்லிம்களுடைய தலையெழுத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் ஒரு நிகழ்வாக இந்த மாநாடு அமைந்துள்ளது. முஸ்லிம்களை நாட்டை விட்டும் துரத்த வேண்டும் என்று இனவாதிகளாலும், மதவாதிகளாலும், திட்டமிட்டு சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாங்கள் 21பேரும் ஒன்று பட்டுள்ளோம் சிறை சென்றாலும் முஸ்லிம் சமூகத்திற்காக குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில்  போராடுவோம் என்று உறுதி பட கூறுகின்றேன் எனக் கூறினார்.

அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி இங்கு முக்கிய உரையாற்றினார். 

இறைவனிடமிருந்தே அனைத்து விடயங்களிலும் உதவி ​தேடுவோம் என்ற அடிப்படையுடன் தான் எங்களுடைய அனைத்துக் காரியங்களும் நடைபெற வேண்டும். நமக்கு பெரும் ஆயுதம் துஆ தான். 

எமது குறைபாடுகளை அல்லாஹ் விடத்தில் முன்வைக்க வேண்டும்.  

எனவே எம்மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டும். எல்லோரும் ஒன்றுபட்டதால் எம்மால் பல விடயங்களை சாதிக்க முடிந்தது.. இந்த ஒற்றுமை குலைந்து விடக்கூடாது என வலியுறுத்தினார்.. 

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியும் இங்கு கருத்து வெ ளியிடுகையில், 

எமக்கு எதிராக பிரச்சினைகளின் போது நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது விவாக, விவாகரத்து தனியார் சட்டம் தொடர்பில் இரண்டு குழுக்கள் யோசனைகளை முன்வைத்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம்களின் விவாக சட்டம் பற்றி கூடுதலாக பேசப்படுகிறது. பெட்டிகலோ கெம்பஸ் பற்றி விமர்சிக்கிறார்கள்.

மத்ரஸாக்களை மேற்பார்வை செய்வதற்கு சட்டம் வரப்போகின்றது. ஸஹ்ரான் மத்ராஸா சென்று தான் கற்றாரா? குண்டுதாரிகளும் உலமாக்களா. சம்பந்தமில்லா விடயங்களை இணைத்து பிரச்சினை தோற்றுவிப்பதை அனுமதிக்க முடியாது என்று உறுதி பட கூறியிருந்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இங்கு கருத்து வெளியிடுகையில்  

 சிங்கள இனவாத சக்திகள் இன்று நேற்று அல்ல சுதந்திரத்திற்கு முன்பிருந்தே சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்க முற்பட்டிருக்கின்றன. 

சிங்கள மக்கள் மத்தியில் எங்களைப் பற்றி பல தவறான கருத்துக்கள் வேருன்றியுள்ளன. எந்த நிலையிலும் எமது உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. எமது பிரச்சினைகளை தீர்க்க பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் பல போராட்டங்களை நடாத்தியுள்ளோம்.

முஸ்லிம் சமூகத்தினை விட்டுக் கொடுத்து எமது பதவிகளை பாதுகாக்க நாங்கள் விரும்பவில்லை. ஒருவருக்கு முகத்தை திறந்து செல்ல உரிமை இருக்குமானால் முகத்தை மூடிச் செல்வதற்கும் உரிமை இருக்கின்றது என்றார்.

மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலும் இங்கு சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். 

முஸ்லிம்களின் சமய விடயங்கள் தொடர்பில் சட்ட மூலம் கொண்டு வருவதானால், அது தொடர்பில் எமக்கு சரியான தெளிவு இருக்க வேண்டும். முகத்திரை சட்டம் தொடர்பில்,  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு முடிவிற்கு வரவேணடும். இந்தச் சட்டத்தை இப்போது கொண்டு வரவேண்டுமா? என்ற விடயத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். 

எஸ்.எம். மரைக்கார் எம்.பி பேசுகையில், 

 நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிரானவர்கள். முகத்திரை தொடர்பான அமைச்சரவை பத்திரம் குறித்து பேஸ் புக்கினூடாகத் தான் அறிந்தேன். முஸ்லிம் விவாகச் சட்ட விடயம் கடந்த 9வருடங்களாக பேசப்பட்டு வருகின்றது. ஜமிய்யல் உலமா சபையுடன் இணைந்து அவர்களின் வழிநடத்தலின் கீழ் தான் செயற்பட வேண்டும். நாங்கள் பாராளுமன்ற  உறுப்பினர்களாக இருந்தாலும் சமய ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டியவர்கள் உலமாக்கள் தான் என்றார். 

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் மௌலவிமார்களின் கருத்துக்களை தொடர்ந்து 6முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

1. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்நாட்டின் குடிமக்களாகிய முஸ்லிம் சமூகம் வரலாறு முழுவதும் தமது மத அனுஷ்டானங்களை நிறைவேற்றத் தேவையான மதச் சுதந்திரம் இருந்தது. முஸ்லிம்களின் மார்க்கம் மற்றும் கலாசாரம் சம்பந்தமான அனைத்து உரிமைகளையும் தொடர்ந்தும் பாதுகாக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

2. கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடைபெற்ற தாக்குதலின் பிறகு நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி முஸ்லிம் பெண்கள் தங்களது மார்க்கமென நம்பி அணிந்து வந்த முகத்திரைக்கு அவசரகால சட்டத்தின் கீழ் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில் முஸ்லிம்களாகிய நாம் அச்சட்டத்தை முற்றுமுழுதாகப் பேணி நடந்தோம்.

பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் முற்றுமுழுதாக நிராகரித்து நாட்டின் இறைமைக்கும் பாதுகாப்புக்கும் பக்க பலமாக முஸ்லிம்கள் இருந்து வந்துள்ளனர். 

3. இந்நிலையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கான தற்காலிகத்தடையை தற்பொழுது நிரந்தரமாக்க முயற்சிப்பதை அறிந்து பேரதிர்ச்சியடைந்துள்ளோம். உடையென்பது தனி மனித அடிப்படைச் சுதந்திரங்களில் ஒன்றாகும்.

அதற்கும் மேலாக மார்க்கமென நம்பி முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரை மதச் சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்டதும் உணர்வுபூர்வமானதுமாகும். முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கெதிரான சட்டம் அடிப்படை மனித உரிமை மீறலாகும், மதச் சுதந்திரத்தின் மீதான தடையாகவும் அமைகின்றது.

எனவே கடந்த காலங்களில் மதச் சுதந்திரத்தை கடைப்பிடித்தது போன்று தொடர்ந்தும் கடைப்பிடிக்க ஆவன செய்ய வேண்டும். 

4. நாட்டில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான வெறுப்பூட்டும் பேச்சுக்கள் ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. இதனைத் தடைசெய்து நாட்டின் உண்மையான அமைதிக்கும், சமாதானத்துக்கும் சக வாழ்வுக்கும் வழிசெய்ய வேண்டும். 

5. ஊடகச் சுதந்திரம் என்ற பேரில் இனங்களுக்கு மத்தியில் சந்தேகங்களையும் முறுகல்களையும் தோற்றுவிக்கும் அறிக்கையிடலைக் கட்டுப்படுத்தி இனங்களுக்கு இடையில் ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்த காத்திரமான செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

6. இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது, அண்மைக்காலங்களில் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை களைவதற்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்குமான நல்ல செயற்திட்டங்களை வகுக்க வேண்டும். 

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஏகமனதாக அங்கீகாரம் கிடைத்தது.இதே வேளை இந்த மாநாட்டின் பின்னர் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முகத்திரை தடை குறித்து ஆராயப்பட்டுள்ளதோடு இதற்கு சட்டம் கொண்டுவராமல் தாமாக முகத்திரையை தவிர்த்துக் கொள்ள இடமளிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பகரமாக அறிய வருகிறது.

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட திருத்த யோசனையும் பெரும்பான்மை உடன்பாட்டுடன் நீதி அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஷம்ஸ் பாஹிம்,
ஏ.எஸ்.எம்.ஜாவித்

 

Comments