ஏ.எல். பரீட்சையில் இந்துநாகரிக மாணவர்களுக்கு ஏமாற்றமா? | தினகரன் வாரமஞ்சரி

ஏ.எல். பரீட்சையில் இந்துநாகரிக மாணவர்களுக்கு ஏமாற்றமா?

இந்த வாரம் வேறு ஒரு விசயத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்ல இருந்தேன். ஆனால், இது கொஞ்சம் சீரியஸ் மாற்றர்.

கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைதான் மாணவர்களின் உயர் கல்வியைத் தீர்மானிக்கும் பரீட்சை. அந்தப் பரீட்சையில் இந்து நாகரிகம் பாடத்திற்குத் ​​தோற்றிய மாணவர்களுக்கு இந்தத் தடவை ஏமாற்றம் எஞ்சியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகவே, அதுபற்றிச் சற்றுச் சீரியஸாகப் பார்ப்போம்.

குறிப்பாக, கலைப்பிரிவிற்குத் தெரிவாகும் மாணவர்கள் 9உயர் திறமைச் சித்திபெற்றவர்களோ அல்லது 5திறமைச் சித்தி பெற்றவர்களோ இப்பாடத்தை தெரிவு செய்வதில்லை. குறைந்த சித்திகளைப் பெற்றவர்களும் கணித பாடத்தை அடுத்த தடவை எடுத்து இணைத்துப் படிப்பவர்களாகவும் எழுத, வாசிக்க மற்றும் கிரகிக்க இடர்படுபவர்களாக பல்வேறு பிரச்சினைகளுடன் உள்ளவர்களுக்கு, பாடசாலைகள் இம்மாணவர்களுக்கும் உயர் கல்விக்கான வாய்ப்பை வழங்குவதற்காக பல்வேறு வளப்பற்றாக்குறைகளுக்கும் மத்தியில் இம்மாணவர்களை உருவாக்கி விடுகின்றனர். இவ்வாறான நிலையில், இம் முறை நடைபெற்ற வினாத்தாள் மாதிரி கட்டமைப்பை விடுத்து அறிவிக்கப்படாத புதிய மாதிரி கட்டமைப்பைக் கொண்ட வினாத்தாளை மாணவர்களுக்கு வழங்கப்பட்டதன் நோக்கம்தான் என்ன?. இது பற்றி பரீட்சைத்திணைக்களம் மாணவர்ளுக்கும் கல்விச் சமூகத்திற்கும் உரிய பதிலை வழங்கவேண்டும் என்ற கோரிக்ைக வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்து நாகரிக பாடத்தின் வினாத்தாள் தயாரிப்பு மற்றும் புள்ளியிடுதலின் போது தோட்டப்புற மாணவர்களையும் கருத்திற்கொள்ளப்படவேண்டியுள்ளது. குறிப்பாக இம்மாணவர்களின் நிலையினை வடக்கு, கிழக்கு மாணவர்களின் நிலைக்கு ஒப்பிடமுடியாது. இங்கு கற்கும் மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை வளநூல்கள் இன்மை, கருத்தரங்குகள் செயலமர்வுகள் என்பன நினைத்துப்பார்க்கமுடியாதவை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இறுதி வினாத்தாள் கட்டமைப்பு மாற்றமானது பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பகுதி 1இல் 45க்கு மேல் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் வினாத்தாள் இரண்டில் 5வினாக்களுக்குப் பதிலாக ஒரு வினா அல்லது இரண்டு வினாக்களுக்கு மேல் தெரிவு செய்யப்படவில்லை என்பதை கவலையுடன் தெரிவிக்கப்பட்டதை காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் வினாக்களின் கனதிக்கு ஏற்ப நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் பழைய பாடத்திட்டத்தை விடக் கூடுதலான பகுதிகள் குறைக்கப்பட்டு வழிகாட்டி நூல்களும், வளநூல்களும் வெளியிடப்பட்டள்ள நிலையில், புதிய பாடத்திட்டத்தின் புதிய வினாத்தாள் கட்டமைப்பில் வினாத்தாள் இரண்டின் பகுதி இரண்டின் வினாக்கள் ஒவ்வொன்றும் 20புள்ளிகளுக்கான வினாக்களாகும். ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. இருந்தும் புள்ளித்திட்டங்கள் எவையும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் மாணவர்களை பல்வேறு உள பாதிப்புக்களுக்கு உள்ளாக்கியுள்ளன.

இலங்கையில் முதன் முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்துக் கற்கைகள் பீடத்தில் மூன்று துறைகளும், கிழக்கு பல்கலை மற்றும் தென்கிழக்குப் பல்கலை, கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்படுவதற்கு குறித்த பாடத்துறையில் மாணவர்களின் சித்தியின்மையானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து பரவலாக காணப்படுகின்றது.

உயர் கல்விக்கான வாய்ப்புகளில் இந்து நாகரிக பாடத்துறையூடாக பல்கலைக்கழகத்திற்கு சட்டம், கட்டட நிர்மாணம், கட்டடக்கலை, வடிவமைப்பு, முகாமைத்துவமும் தகவல், தொழிநுட்பமும், தொழில் முயற்சியும் முகாமைத்துவமும், விருந்தோம்பல் சுற்றுலா முகாமைத்துவம், பட்டினமும் நாடும் திட்டமிடலும், முகாமைத்துவக் கற்கைகள், தகவல் தொழிநுட்ப முகாமைத்துவம், அழகியல் துறைசார் பாடங்கள், நவநாகரிக வடிவமைப்பும் உற்பத்தியும், நிலத்தோற்றம் முகாமைத்துவம் முதலான 26இற்கும் மேற்பட்ட துறைகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்படுன்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பல்கலைக்கழக அனுமதி பெறுவோர் 0.82சதவீதம். இதில் பொறியியலாளர்கள், வைத்தியர்கள் 0.12 .உயர்தர பரீட்சை எழுதியோரில் 41வீதம் சித்தி பெற்றாலும் 4.7வீதமானோரே அனுமதி பெறுகின்றனர்.

மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் பலர் இருந்தும் அவர்களில் அதிகமானோர் பொருத்தப்பாடற்றவர்களாகவும், தகைமையற்றவர்களாகவும் பயிற்றப்படாதவராகவும் காணப்படுகின்றனர். இவ்வாறான ஆசிரியர்களினால் வழிநடத்தப்படும் மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெறுவதில் குறைபாடுள்ளது.

இதன் காரணமாக காலாவதியான ஆசிரியர்கள் அதிகரிக்கின்றனர். இவர்கள் தம் கல்வி நிலையினை நிகழ்காலத்தோடு இணைத்துக் கொள்ளாமல், கடந்த காலத்திலேயே நின்று விடுகின்றனர். இதனால், ஆசிரியர் மீது மாணவர்களுக்கு நம்பிக்கை குறைவதால் கல்வி நிறுவனங்களில் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதிலும் கடினம் ஏற்படுகிறது.

அரசியல் தலையீட்டினால் கிராமப் புற பாடசாலைகளின் கல்வியினை விருத்தி செய்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. உதாரணமாக க.பொ.த உயர்தரம் சித்தியடைந்தவர்களை ஆரம்ப இடைநிலைப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாகப் பணிக்கு அமர்த்தலை குறிப்பிடலாம்.

ஆசிரியரின் தொழில் சார்ந்த உளநிறைவில் வீழ்ச்சியும் கல்வியில் செல்வாக்குச் செலுத்துகிறது.இது கல்வி வளர்ச்சியை பாதிப்புக்குள்ளாக்குகிறது.இங்கு ஆசிரியர்களால் ஆசிரியர்கள் தாழ்த்தப்படும் நிலையானது வாண்மைச் செயற்பாடுகளை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. இங்கு உயர்நிலையிலுள்ளோர் மற்றும் தனியார் பாடசாலைகளில் கற்றோர் ஏனைய அரச பாடசாலையில் கற்ற ஆசிரியர்களை இழிவாகப் பார்ப்பதால், நல்ல தகைமையான ஆசிரியர்களும் வாய்மைச் செயலில் திறமையாக ஈடுகாட்டுவதில்லை.

எனவே, உயர் கல்வியை எதிர்பார்த்திருக்கும் கலைத்திட்ட மாணவர்களுக்கு அஃது எட்டாக்கனியாகிவிடாமல் இருப்பதற்கு ஏற்ற நடவடிக்ைகயை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும்! மேற்கொள்ளுமா?

Comments