காஷ்மீர்: மோடியின் சேர்ஜிகல் அட்டாக்! | தினகரன் வாரமஞ்சரி

காஷ்மீர்: மோடியின் சேர்ஜிகல் அட்டாக்!

பாஜகவை நிராகரிக்கும் மாநிலங்களுக்கான எச்சரிக்கையா?

மோடியின் சலுகை பறிப்பு அணுகுமுறையை இலங்கையும் கற்றுக் கொள்ளலாம்

இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மத்திய பா.ஜ.க அரசு காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிய முயற்சி செய்யாமல் அம் மாநிலத்தின் அந்தஸ்தை யூனியன் பிரதேசமாகக் குறைத்துள்ளதோடு 1947முதல் அம் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370சட்டப் பிரிவையும் 35ஏ பிரிவையும் இரத்துச் செய்துள்ளது. இத்தகைய அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒரு அரசியல் நிகழ்வு இந்தியாவில் சமீப காலத்தில் நிகழ்ந்ததில்லை. 1971இந்தியா – பாகிஸ்தான் யுத்தம், 1975ஜுன் 26ம் திகதி இந்திராகாந்தியால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால நிலை பிரகடனம் போன்ற இரண்டு மிக முக்கிய நிகழ்வுக்குப் பின்னர் அவற்றுக்கு ஒப்பான நிகழ்வாக காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்புரிமைகள் அவசர அவசரமாக இரத்துச் செய்யப்பட்டதைக் கருதமுடியும். ஏனெனில் பா.ஜ.கவுக்கு மத்தியில் அரசு பலம் இருப்பதால் மட்டும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடவடிக்கைகளை எடுத்துவிட முடியாது. காஷ்மீர் விவகாரம் மிகவும் உயிர்ப்புத்தன்மை கொண்டதாகவும், மதம், கலாசாரம் மற்றும் அண்டைய நாட்டின் பகைமை என்பனவற்றுடன் தொடர்பு கொண்டதாகவும் விளங்குவதால் எவ்வளவு தூரத்துக்கு காஷ்மீர் மக்களும், தீவிரவாதிகளும் மற்றும் பாகிஸ்தான் அரசும் இந்நிகழ்வுகளை எடுத்துக் கொள்வார்கள் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாக உள்ளது.

இந்தியா என்றைக்குமே தனி ஒரு நாடாக இருந்ததில்லை. ஆங்கிலேயர் மட்டுமே அகண்ட இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தனர். ஆனாலும் காஷ்மீரத்தை மன்னர் ஹரிசிங் சுதந்திரமாக தன் விருப்பப்படி ஆட்சி செய்யவும் ஹைதராபாத் நிஸாம் மன்னர்கள். தமது சமஸ்தானத்தை ஆட்சி செய்யவும் ஆங்கிலேயர் அனுமதி அளித்திருந்தனர். இந்தியாவெங்கும் பல சமஸ்தானங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தும் அடங்கியும் ஆட்சியை ஒட்டி வந்தன. இது தவிர, கோவா பிரதேசத்தை போர்த்துக் கேயரும் பாண்டிச்சேரியை பிரான்சும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியப் பெருநிலம் இரண்டாகத் துண்டாடப்பட்டது. பாகிஸ்தான் பிறந்தது. பாகிஸ்தான் தனி நாடாகத் துண்டாடப்பட்டபோது பெரிய அளவில் இந்து – முஸ்லிம் கலவரங்கள் எழுந்தன. ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர். ‘த டிரேய்ன் டு பாகிஸ்தான்’ என்ற நூல் வழியாக அன்றைக்கு இந்துக்களும் முஸ்லிம்களும் எத்தகைய கொடூரங்களை சந்திக்க நேர்ந்தது என்பதை அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங்க எடுத்துச் சொல்லியிருப்பார்.

இந்த இரத்தக் களறியை அவதானித்த ஜவஹர்லால் நேருவும் முகம்மதலி ஜின்னாவும் மிகவும் கவலையடைந்த போதும் காலவோட்டத்தில் இவை மறைக்கப்பட்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே நட்புறவும் புரிந்துணர்வும் ஏற்படும் என்று நம்பினர். நாடு இரண்டாகப் பிரிந்த புதிதில் முகம்மதலி ஜின்னாவிடம் ஒரு பத்திரிகையாளர், இந்தியாவை இன்னொரு நாடு தாக்க முற்பட்டால் அண்டைய நாடான நீங்கள் என்ன நிலைப்பாட்டை எடுப்பீர்கள்? என்று கேட்டார். ஜின்னா யோசிக்கவில்லை. சொன்னார். இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் படைகள் உதவிக்கு அனுப்பப்படும் என்று கூறினார்.

ஆனால் நடைமுறையில் அது சாத்தியமானதாக இருக்கவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் அண்ணன் தம்பிகளாகக் கை கோர்த்திருப்பார்கள் என்ற தலைவர்களின் எதிர்பார்ப்பில் உடனடியாகவே மண விழுந்தது. இரு நாடுகளும் மோதிக் கொண்டன. 1961இந்திய – சீன யுத்தத்தின் பின்னர் அவ்விரு நாடுகள் மத்தியிலுமான பிணக்குகள் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தனவே தவிர போராக வெடிக்கவில்லை. இந்தியா – பாகிஸ்தான் பிணக்கு அவ்வப்போது கடும் யுத்தங்களாக வடிவெடுத்து வந்துள்ளது. இதற்கான ஒரே காரணம், காஷ்மீர்.

காஷ்மீர், ஜம்மு மற்றும் தற்போது பாகிஸ்தான் வரமுள்ள ஆஸாத் (சுதந்திர) காஷ்மீர் மற்றும் சீனா வசமுள்ள அக்சைசின் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராந்தியத்தை இந்து அரச வம்ச மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர்.

காஷ்மீரின் ஆதிக் குடிகள் இந்துக்கள். சிவனை முதன்மைக் கடவுளாகக் கொண்டவர்கள். காஷ்மீர் சைவத்தை ப்ரத்ய பீஜனா என அழைப்பார்கள். இவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருந்ததால் ‘பட்டாஸ்’ என அறியப்பட்டார்கள். இந்த பட்டாஸ் என்ற பெயரே பின்னர் பண்டிட் என மருவியது. பண்டிட் என்றால் நாம் பண்டிதர் என அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் காஷ்மீரத்து பண்டிட் என்றால் உயர் குலம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. புரிதல். நேரு குடும்பம் காஷ்மீர் பண்டிட் பிராமண வம்சத்தவர்கள். எனவே இவர்களுக்கு தாம் ஒரு உயர் குல பண்டிட்கள் என்ற கர்வம் இருக்கத்தான் செய்தது. இந்து மதத்துக்குப் பின்னர் அசோக மன்னர் காலத்தில் பௌத்தம் படிப்படியாக காஷ்மீரத்தில் வேரூன்ற ஆரம்பித்தது. ஆரம்பத்தில் பௌத்தத்தை உள்ளேவிட மறுத்த இந்துக்கள் பெளத்தர்களை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் பௌத்தகளுக்கு அசோக சக்கரவர்த்தியும் கனிஷ்க மன்னனும் இருந்ததால் இந்துக்களின் எதிர்ப்பு எடுபடவில்லை. பௌத்தர்கள் மடாலயங்களையும் கல்விச் சாலைகளையும் அமைத்தனர். அஷ்வகோஷ், வசுமித்ர மற்றும் நாகார்ஜுன ஆகிய கல்வியிலும் ஞானத்திலும் சிறந்த பௌத்தர்கள். காஷ்மீரத்தில் வாழ்ந்தனர். பிற்காலத்தில் லடாக் பௌத்த மயமானது. இன்று இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ளது.

பெளத்தத்தின் பின்னர் இஸ்லாம் உள்ளே வந்தது. கி.மு. 3ம் நூற்றாண்டில் சுகதேவ் மன்னன் ஆட்சியில் இருந்தபோது முஸ்லிம்களுக்கு காஷ்மீரில் இடம் வழங்கலாம் எனக் கருதினான். முஸ்லிம்களுக்கு ஒரு கிராம் ஒதுக்கித் தரப்பட்டது. பின்னர் காஷ்மீருக்கு படையெடுத்துவந்த முஸ்லிம் மன்னன் துலூக்ஷா தன் படை பலத்தால் சுகதேவை விரட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினான். இப்படித்தான் காஷ்மீருக்கு முஸ்லிம்கள் வந்தனர் என்கிறது வரலாறு.

இந்துக்கள் காஷ்மீரில் வாழ்ந்தாலும் அவர்களுடைய மன்னர் எவ்வாறு சீக்கியர்களாக இருக்க முடிந்தது என்று கேட்கிறீர்களா?

பஞ்சாப்பை ஆண்டு வந்த மகாராஜா ரஞ்சித்சிங் நிகரற்ற பஞ்சாப் மன்னராக அறியப்படுகின்றவர். மராட்டியர்களுக்கு வீர சிவாஜியைப்போல, திப்பு சுல்தானைப் போல் பஞ்சாபுக்கு மகாராஜா ரஞ்சித்சிங், 1585இல் பேரரசர் அக்பர் காஷ்மீர் மீது காதல் கொண்டு ஒரு படையை அனுப்பிவைத்தார். அப்படித்தான் காஷ்ரமீர் மீதான படையெடுப்புகள் ஆரம்பித்தன. ரஞ்சித்சிங் காலத்திலேயே சிக்கிய எழுச்சி ஏற்பட்டது. அவர் ஆண்ட பிரதேசம் லாகூர் சமஸ்தானம் என அழைக்கப்பட்டது. அவர் காஷ்மீர் மீது படையெடுத்து வெற்றி பெற்றிருந்தார். 1519இல் அவர் காஷ்மீருக்கு அதிபராக குலாப்சிஸ் என்பவரை அனுப்பி வைத்தார். இப்படித்தான் சீக்கியர்கள் காஷ்மீரின் அரசகுலத்தவர்களானர்.

பின்னர் 1544காலப்பகுதியில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனி படையினருக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் யுத்தம் நடைபெறத் தொடங்கியது. பஞ்சாப்பை ஒட்டிய சிந்து பகுதிகளை ஆங்கிலேயர் வசமாகி இருந்தது. இந்தச் சூழலில் சீக்கியர்களினால் வெகு காலத்துககு தாக்குப்பிடிக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த காஷ்மீரை ஆண்டுவந்த குலாப்சிங், ஆங்கிலேயருக்கு ஆதரவு வழங்குவதே ராஜதந்திரமாக இருக்கும் என்று கருதினார்.

இதையடுத்து ஆங்கிலேய – சீக்கிய யுத்தத்தில் ஆங்கிலேயர் பக்கத்தில் இருந்து உதவி செய்யத் தொடங்கினார். குலாப்சிங். பிரிட்டிஷ் படைகளின் சில வெற்றிகளுக்கு குலாப் சிங்கின் உதவிகள் காரணமாக இருந்தன. 1846மார்ச் மாதம் போர் முடிவுக்கு வந்தது. தோல்வியடைந்த சீக்கிய தரப்பு வெள்ளையருக்கு கப்பம் கட்ட இணங்கினர். இதே சமயம் இன்னொரு ஒப்பந்தத்தில் காஷ்மீரை குலாப் சிங்குக்கு கிழக்கிந்திய கம்பனி நிர்வாகம் நன்றிக் கடனாக எழுதிக் கொடுத்தது. ஆண்டு கப்பமாக ஒரு குதிரை, 12செம்மதி ஆடுகள் காஷ்மீர் சால்வைகள் என நிர்ணயித்ததோடு 75லட்சம் ரூபா பணத்தையும் வாங்கிக் கொண்டது வெள்ளை நிர்வாகம்.மகாராஜா ரஞ்சித் சிங் அடையாளம் கண்டு காஷ்மீருக்காகத் தெரிவு செய்தது குலாப்சிங். அவர் மகன ரன்பீர்சிங். ரன்பீரின் மகன் அமர்சிங் அமர்சிங்கின் வாரிசு ஹரிசிங். இந்த ஹரிசிங். தான் 1947வரை காஷ்மீரை ஆண்டு வந்து இறுதியாக தன் இராச்சியத்தை இந்தியாவுடன் இணைத்தவர். இதை பாகிஸ்தான் ஏற்காததால் காஷ்மீர் பிரச்சினை உருவானது.

இந்தியாவில் இருந்து தனியாக பிரிந்து இஸ்லாமிய நாடொன்றை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற ஆரம்பித்ததில் இருந்தே, எழுபது சதவீதமான இஸ்லாமியரை சனத்தொகையாகக் கொண்டிருந்த காஷ்மீர் மாநிலம் ஏன் இன்னும் இந்து அரசரினால் ஆளப்பட வேண்டும்? என்ற கேள்வி பெரிதாக எழுந்து கொண்டிருந்தது. பாகிங்தான் என்ற நாடு உதயமானதும் அத்துடன் இணைந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் காஷ்மீர் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பரவலாகக் காணப்பட்டது.

பாகிஸ்தான் என்ற நாடு உதயமான பின்னரும் மன்னர் ஹரிசிங் தமது சமஸ்தானம் சுதந்திர நாடாகவே இருக்கும் என்றே கூறி வந்தார். ஜின்னாவும் நேருவும் தத்தமது நாடுகளுடன் இணையுமாறு கேட்டத்தறு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். எனினும் காஷ்மீர் முஸ்லிம் குடிமக்கள் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். மக்கள் தம் பக்கம் இருப்பதை உணர்ந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான், படை பலத்தின் ஊடாக காஷ்மீரைக் கைப்பற்ற வேண்டும் என்றமுடிவுக்கு வந்தார். நேரடியாக இராணுவத்தைப் பயன்படுத்தினால் இந்தியாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் எனக் கருதியதால் பட்டான்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

பட்டான்கள் மலைவாழ் முரட்டுக் குடிமக்கள். கொலை கொள்ளைக்கு அஞ்சாதவர்கள். அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து கிளர்ச்சி செய்தபோது பாகிஸ்தான் இராணுவம் பத்தான்களையே இறக்கியது. அவர்கள் கிளர்ச்சி நடைபெறும் பிரதேசங்களில் வெறியாட்டம் ஆடினர். கொள்ளையிலும் பாலியல் வன்கொடுமைகளிலும் தாராளமாக ஈடுபட்டனர். பத்து லட்சத்துக்கும் அதிகமான கிழக்கு பாகிஸ்தானியர்கள் எல்லை தாண்டி இந்தியாவுக்கு வந்தபோது பெரும்பாலான பெண்கள் கர்ப்பமுற்றிருந்தனர். பாலியல் வல்லுறவின் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கருவுற்றிருந்ததால் அது சர்வதேச பிரச்சினையாக மாறி இருந்ததோடு பாகிஸ்தானின் உலக செல்வாக்கில் சரிவையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த அட்டூழியங்களுக்கு பதான்கள் காரணமாக இருந்தனர் என்பதையே சுட்டி காட்ட விரும்புகிறோம்.

லியாகத் அலிகான் பத்தான் படையை காஷ்மீருக்குள் ஏவி விட்டார், ஆயுதங்கள், உணவு, தொலை தொடர்பு, வாகன வசதிகளுடன். கை மீறிப் போனால் பாகிஸ்தான் இராணுவம் பக்க பலமாக துணைக்கு வரும் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டது. புகுந்த இடங்களில் எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறுங்கள். கொள்ளையிடலாம். ஆனால் உங்கள் இலக்கு காஷ்மீரின் ஸ்ரீ நகர். அங்கே கொள்ளையிடும் அவ்வளவும் உங்களுக்கே, என்ற அறிவுறுத்தலுடன் பத்தான்கள் காஷ்மீருக்குள் ஏவி விடப்பட்டனர்.

ஹரி சிங்கிடம் அப்போதிருந்ததோ சிறிய படை. முரட்டு பத்தான்ககளுடன் ஹரிசிங்கின் படையால் தாக்கு பிடிக்க முடியவில்லை. அடுத்தடுத்து ஊர்கள் கைப்பற்றப்பட்டு ஸ்ரீ நகரை பத்தான்கள் இலக்கு வைக்க ஆரம்பித்ததும்தான் ஹரி சிங்குக்கு நிலைமை புரிந்தது. அவர் லோர்ட் மவுண்ட் பேர்ட்டனுடன் பேசினார். அப்போது அவர்தான் இந்திய உள்துறை அமைச்சர். அவர் நேருவிடம் பேசினார். தகவல் இதுதான்! உடனடியாக இந்தியப் படையை காஷ்மீருக்கு அனுப்புங்கள். நாடு பறிபோய்க் கொண்டிருக்கிறது!

படைகளை அனுப்புவதில் நேருவுக்கு ஒரு சிக்கல் இருந்தது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. தனி நாடு. அங்கு படை அனுப்புவது ஆக்கிரமிப்பாக பாகிஸ்தானினால் கருதப்படலாம். எனவே முதலில் ஒப்பந்தத்தின் மூலம் காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது. பின்னர் படை அனுப்புவது. இணைத்த பின்னர் இந்தியாவின் ஒரு பகுதிக்குள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு என்றாகிவிடும் என்பது நேருவின் திட்டம். ஹரி சிங்குக்கு அன்றைய அமைச்சரவை உறுப்பினர் கோபால்சாமி ஐயங்கார் மூலம் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீநகர் சென்ற அவர் ஒப்பந்தத்தைத் தயாரித்து கையெழுத்து வாங்கிக் கொண்டார். இனிமேலும் நீங்கள் ஸ்ரீநகரில் தங்க வேண்டாம் எனச் சொல்லி ஜம்முவுக்கு ஹரிசிங்கை அனுப்பி வைத்து புதுடில்லி திரும்பினார் ஐயங்கார். 1947அக்டோபர் 26ம் திகதி காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.

இது நடந்த பின்னரேயே புது டில்லி படைகளை அவசர அவசரமாக காஷ்மீருக்கு அனுப்பி வைத்தது. பெரும்போராட்டத்தின் பின்னர் பதான்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு ஆதரவாக நின்ற பாகிஸ்தான் படைகளோடு இந்திய இராணுவம் யுத்தம் செய்ய வேண்டியதாயிற்று. இது தான் 1947இந்தோ – பாக். யுத்தம். யுத்தம் முடிவுற்றபோது ஆஸாத் காஷ்மீர் பாகிஸ்தான் வசமானது.

ஒரு சமஸ்தானம் இந்தியாவோடு விருப்பத்தின்பேரில் இணைந்ததால் அச் சமஸ்தானத்துக்கு விசேட உரிமைகள் சலுகைகள் வழங்கப்பட்டன. ஏனெனில் அம் மக்கள் விரும்பி வந்தவர்கள் ஆனால், காஷ்மீர் முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட சமஸ்தானம் அம் மக்களின் விருப்பப்படி தன்னுடன் தான் சேர்ந்திருக்க வேண்டும் என்றும் ஒரு பெரும்பான்மையற்ற இந்து அரசரின் குயுத்தி செயல் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று பாகிஸ்தான் கருதி வருகிறது. இதுதான் காஷ்மீர் பிரச்சினையின் ஆரம்பப் புள்ளி.

காஷ்மீரின் முதல்வராக ஷேக் அப்துல்லா பதவி வகித்தபோது தனது நண்பரான ஜவஹர்லால் நேருவிடம் காஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தங்து வழங்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை விளக்கினார். அதை நேருஜி ஏற்றுக் கொண்டு சிறப்பு சட்டமொன்றை உருவாக்கும்படி இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் வேண்டுகோளை அம்பேத்கர் நிராகரிக்கவே அமைச்சரவை உறுப்பினரான கோபால்சாமி ஐயங்கார் இந்த 370வது பிரிவை உருவாக்கினார். அரசியல் சட்டத்தின் 370இல் 35ஏ பிரிவு உருவாக்கப்பட்டது. அதனூடாக கீழ்க்கண்ட சலுகைகளை காஷ்மீர் பெறுகிறது.

இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர மற்ற துறைகள் தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது.

* காஷ்மீரில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அசையா சொத்துகள் வாங்க முடியாது. ஆனால் காஷ்மீர் மாநிலத்தவர்கள் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் அசையா சொத்துகள் வாங்க உரிமை உண்டு.

* காஷ்மீர் மாநில பெண்கள் வேறு மாநிலத்தவரை திருமணம் செய்தால் அந்த பெண்களும் காஷ்மீரில் அசையா சொத்துகள் எதுவும் வாங்க முடியாது.

* ஆனால் காஷ்மீர் மாநில ஆண்கள் வேறு மாநில பெண்களை திருமணம் செய்தாலும் அசையா சொத்துகள் வாங்கலாம்.

* காஷ்மீர் மாநில சட்டப் பேரவை பதவிக்காலம் 6ஆண்டுகள்.

* மாநில எல்லைகளை குறைக்கவோ, கூட்டவோ நாடாளுமன்றத்தால் முடியாது.

* சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை ரத்து செய்ய முடியும்.

* தனிக் கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு.

* அரசியல் சாசனத்தின் 238வது பிரிவு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.

இச் சிறப்பு சலுகைகளே தற்போது மோடி அரசினால் நீக்கப்பட்டுள்ளன.

மோடியின் பா.ஜ.க அரசு ஆர்.எஸ்.எஸ். சினால் இயக்கப்படுவது பகிரங்க இரகசியம். பா.ஜ.கவின் கொள்கையான ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி ஒரே சட்டம் என்ற ஏகத்துவ நிலை ஆர்.எஸ்.எஸ். கொள்கையாகும். ஒரே சட்டம் என்கின்றபோது காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் விசேட அந்தஸ்தானது குறுக்கே நிற்பதால் அதை இல்லாமல் செய்ய வேண்டும் என்பது பா.ஜ.க வின் நீண்ட நாள் கனவாகும். தற்போது நாடாளுமன்றத்தில் அசுர பலத்துடன் பா.ஜ.க வீற்றிருப்பதால் இதைவிடச் சிறந்த சந்தர்ப்பம் இனிமேல் கிட்டாது எனக் கருதியே காஷ்மீர் மீது மோடியரசு கை வைத்திருக்கிறது.

370மற்றும் 35ஏ பிரிவுகள் நீக்கப்பட்டிருப்பதால் சிறப்பு சலுகைகளை அம் மாநிலம் இழந்துள்ளது. காஷ்மீர், ஜம்மு, லடாக் ஆகியன இணைந்ததே காஷ்மீர் மாநிலம். தற்போது லடாக் பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக்கப்பட்டுள்ளது. மாநிலமான காஷ்மீர் தற்போது யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகம் ஒரு மாநில ஆட்சி முறையைக் கொண்டுள்ளது. பாண்டிச்சேரி ஒரு யூனியன் பிரதேசம். அதன் அதிகாரங்கள் குறைவானவை. மேலும் லடாக் ஒரு சட்டசபையற்ற யூனியன் பிரதேசமாகவே இயங்கிவரும். காஷ்மீருக்கு சட்டசபை இருந்தாலும் தற்போது சட்ட சபை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கே கவர்னர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அவசரகால சட்டமும் பிறபிக்கப்பட்டுள்ளது. சரியாகச் சொன்னால் ஒரு யுத்தமயச் சூழலில் காஷ்மீர் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு சுமுக நிலை தோன்றியதும் காஷ்மீர் மாநில அந்தஸ்தை திரும்பவும் பெறும் என்று மோடி கடந்த வாரம் அறிவித்திருந்தார். காஷ்மீரில் தீவிர வாதம் ஒழிக்கப்படுவதற்கும் அதன் சிறப்பு சலுகைகள் நீக்கப்படுவதற்கும் இடையே என்ன சம்பந்தம் இருக்க முடியும்? என்பது எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்வி. தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்களின் மூலம் தீவிரவாதத்தை பா.ஜ.க. ஒழிக்கப் போகிறதா அல்லது ஏற்கனவே கொதி நிலையில் உள்ள காஷ்மீர் பிரச்சினை வெடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுமா என்பது பெரிய கேள்விதான்.

காஷ்மீர் விவகாரத்தில் மோடி அரசு கை வைத்திருப்பது, முத்தலாக் சட்டத்தை ஒரே நாளில் வெற்றிகரமாக நிறைவேற்றிய தைரியத்தில்தான் என்று கூறும் எதிர்க்கட்சிகள், இது தன்னை எதிர்க்கும் மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்கின்றன. பா.ஜ.க.வை முற்றாக நிராகரிக்கும் தமிழகத்துக்கும் இது ஒரு எச்சரிக்கையே என்கிறார்கள் தமிழக அரசியல் விமர்சகர்கள்.

நாம் இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.

இலங்கையிலும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற குரல் பௌத்த தீவிரவாத அமைப்புகளினால் எழுப்பப்பட்டு வருகிறது. 4/12தாக்குதலின் பின்னர் இங்கேயும் இனவாத மதவாத சக்திகள் தீவிரம் பெற்றுள்ளன. அபாயா தடை, முஸ்லிம் விவாகரத்து, திருமண சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு ஒரே சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை என்பனவற்றை தமது ஒரே சட்டம் என்ற கருத்தியலோடு ஒப்பிட்டுப் பார்த்து களிப்புறும் இவர்கள், மோடியவர்கள் காஷ்மீர் விவகாரத்தை கையாண்டிருக்கும் முறையால் நிச்சயம் மேலும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

இலங்கையில் தொண்ணூறுகளில் பரவலாக பேசப்பட்ட ஒரு விஷயம்தான் தேச வழமைச் சட்டம். வடபுலத்து தமிழர்களுக்கான இச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோஷம் அப்போது எழுந்து அடங்கியது.

இலங்கையில் தேர்தல்கள் முடிவடைந்து புதிய ஆட்சி அமையுமானால் அவர்கள் மோடி காட்டியிருக்கும் முன் மாதிரிகளைப் பின்பற்றவும் செய்யலாம் ஏனெனில் அரசியல் சூழல்கள் மாறியிருக்கின்றன. காஷ்மீரில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ‘சேர்ஜிக்கல் அட்டாக்’ இந்தியாவெங்கும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்கப்பட வேண்டும்.

Comments