கெப்பெட்டிபொலவின் மரணத்துடன் முடிவுக்கு வந்த ஊவா கிளர்ச்சி | தினகரன் வாரமஞ்சரி

கெப்பெட்டிபொலவின் மரணத்துடன் முடிவுக்கு வந்த ஊவா கிளர்ச்சி

‘ஊவா – வெல்லெஸ்ஸ கிளர்ச்சியின் தோல்வியும் தலதா சின்னம் ஆங்கிலேயர் வசம் வந்ததும், இனிமேல் ஆங்கிலேயர்தான் கண்டி இராஜதானியை தொடர்ந்தும் ஆளப் போகிறார்கள் என்ற எண்ணத்தை மலைநாட்டு சிங்களவர் மனதில் வேரூன்றச் செய்தது’  

தனது துரைசாமி நாயக்கர் வேடம் கலைந்ததையடுத்து வெல்லஸ்ஸ பிரதேசத்திலிருந்து வலப்பனையை நோக்கிச் செல்வதற்குத் தயாரானான் முன்னாள் பௌத்த பிக்குவான வில்பாவே. 

இச்சந்தர்ப்பத்தில் பிலிமத்தலாவை (இளைவர்) மற்றும் மடுகல்லே ஆகிய முதன்மைப் பிரபுக்களும் கிளர்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மடுகல்லே நேரடியாக கெப்பெட்டிபொலையுடன் இணைந்து கொண்டான். அப்போது மடுகல்லே, வில்பாவேவை வலப்பனைக்கு செல்லாமல் தமது சொந்த ஊராகிய தும்பறைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டான். மகாவலி கங்கையைக் கடந்து செல்லுமாறும் கூறினான். 

வில்பாவேவை அப்போதும் துரைசாமி நாயக்கர் என்றே மடுகல்லே நம்பியிருந்தான். அதனால் அங்கு மகத்தான வரவேற்புபசாரத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மடுகல்லே தனக்கு வழங்கும் மரியாதை நிமித்தம் துரைசாமி நாயக்கன் அரசன் என்ற முறையில் மடுகல்லேயை துணை முதலமைச்சராகவும் மாத்தளை மாநில திசாவையாகவும் பதவியில் நியமித்தான்.  

சில தினங்களில் பிலிமத்தலாவையும், மடுகல்லேயும் துரைசாமி நாயக்கனாக வேடமிட்டு வில்பாவே நாடக மாடியிருப்பதை அறிந்து கொண்டனர். இந்த ஏமாற்றுவித்தை குறித்து ஆத்திரமடைந்த மடுகல்லே, பிலிமத்தலாவையின் ஆலோசனையின்படி கெப்பெட்டிப்பொலையையும், வில்பாவேவையும் பிடித்து கெப்பெட்டிப் பொலையை செப்டம்பர் மாதம் மூன்றாம் திகதி பிட்டவல என்னுமிடத்துக்கு அனுப்பி வைத்தான். 

நாடகமாடிய வில்பாவேயை மீகாவலையில் மக்கள் முன்னால் நிறுத்தி அவமானத்திற்குள்ளாக்கினான் மடுகல்லே. அதன் பின்னர் வில்பாவே மத்திய மலைநாட்டுக்கு வடக்கே நுவரகலாவியவிற்கு தப்பியோடி தலைமறைவாகினான். அங்கு ஆதிவாசிகளாகிய வேடர் சமூகத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தான் வில்பாவே. இவ்வாறு அரச குடும்பத்து நாயக்கர்களில் ஒருவனைப் போல நடித்து ஏமாற்றுவதில் ஈடுபட்ட வில்பாவே, கெப்பெட்டிப் பொலையின் கையாள் என்னும் உண்மை பின்னர் தெரியவந்தது. 

இவ்வாறு அஞ்ஞாதவாசம் செய்துவந்த வில்பாவே, பல்வேறு திகில் நிறைந்த சம்பவங்களின் பின்னர் 1830ம் ஆண்டு ஆங்கிலேய அரசினால் கைது செய்யப்பட்டான். இவன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் பின்னர் நாடு கடத்தப்பட வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது. 

எனினும் பகிரங்கமாக நிபந்தனைகளின்றி வில்பாவேவை விடுதலைசெய்யுமாறு அரசு உயரதிகாரி கொட்ரிச் விடுத்த வேண்டுகோளையேற்று 1832ம் ஆண்டு போலி ‘துரைசாமி நாயக்கர்’ விடுதலையானான். அவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் சாட்சிகளின் அடிப்படையில் அவன் மாற்றாரின் கைப்பொம்மையாக செயல்பட்டவன் என்னும் உண்மை வெட்டவெளிச்சமாக தெரியவந்தது.  

வில்பாவே பற்றிய உண்மைகள் இவ்வாறு வெளிவந்தமையைத் தொடர்ந்து பிலிமத்தலாவை, மன்னாரில் வசித்துவந்த வீரவாகு என்னும் தமிழரை ‘அரசன்’ எனக் கூறி அம்பலப்படுத்துவதில் ஈடுபட்டான். எனினும் இத்தகைய செயல்கள், கிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் ஒற்றுமையின்மையையும், ஆங்கிலேயரிடம் சரணடைவதையுமே துரிதப்படுத்தின. கெப்பெட்டிப்பொல தன்னுடன் இணைந்திருந்த போராளிகளுக்கு சகலவிதமான உதவிகளை வழங்கியபோதும் கிளர்ச்சி தளர்ச்சி காண ஆரம்பித்தது. 

பிரித்தானியர்களின் நடவடிக்கைகள் காரணமாக தும்பறை மற்றும் மாத்தளை ஆகிய பிராந்தியங்கள் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்தன. கெப்பெட்டிபொல மடுகல்லே, பிலிமத்தலாவை ஆகிய முக்கிய தலைவர்கள் மூவரும் நுவரகலாவிய பிரதேசத்திற்குத் தப்பியோடினர். இவர்களைப் பின் தொடர்ந்து சென்ற ஆங்கிலேயர்களின் இராணுவம் அக்டோபர் மாதம் 28ம் திகதி பலவாகமையில் வைத்து கெப்பெட்டிப் பொலையையும், பிலிமத்தலாவையையும் கைது செய்தது. லெப்படினண்ட் ஓனில் இவர்களை கைது செய்தான்.  

இவ்வாறு கைது நிகழ்வதற்கு முன்னர் ஆளுநர் பிரவுன்றிக்கினால் பிலிமத்தலாவையுடன் சமாதான உடன்பாட்டுக்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. நிபந்தனையின்றி சரணடையுமாறு ஆளுநர் பிலிமத்தலாவையைக் கோரியிருந்தான். மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டதோடு தலைமறைவாகியிருந்த மடுகல்லே நவம்பர் மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்டான். 

கிளர்ச்சித் தலைவர்களில் கைது செய்யப்படாது தப்பியிருந்தவன் கிவுல்கெதற மாத்திரமே. அவனும் தனிமைப்பட்டவனாகி யாசகனாக ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து நவம்பாம் மாதம் 20ம் திகதி பிந்தென்னையில் கைது செய்யப்பட்டான். அதன் பின்னர் மன்னனாக வேடமிட்டு வலம் வந்து கொண்டிருந்த வீரவாகு, மன்னார் வருவாய்த்துறை அதிகாரி பிளக் ஹவுஸ் என்பவனால் கைது செய்யப்பட்டான். இறுதியாக நவம்பர் மாதம் இரண்டாம் திகதி புனித தந்தம் அரசினால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மகத்தான ஊவா – வெல்லஸ்ஸ கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. 

புனித தந்தம் ஆங்கிலேய அரசின் கைக்கு வந்தமையும் ஊவா – வெல்லஸ்ஸ புரட்சி நிறைவடைந்தமையும் இனிமேல் மத்திய மலைநாட்டு மக்களைத் தொடர்ந்து ஆளப்போகிறவர்கள் பிரித்தானியர்களே என்பதற்கான அறிகுறியே’ என வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது. இச்சம்பவமானது இந்நாட்டின் சகல பிரிவினரையும் பாதிக்கும் செயலாகக் கருதப்பட்டது.  

புனித தலதா சின்னத்திற்கு உரித்துடையவர்கள் நான்கு திசைகளையும் ஆட்சி புரியும் உரிமை கொண்டவர்களாக கருதப்படுவதே மரபு என்ற வகையில் ஆங்கிலேயர்கள் இதன் மூலம் இந்நாட்டின் ஆட்சியுரிமை கொண்டவர்களாகின்றனர் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

இரண்டாயிர வருடகால வரலாற்றில் புனித தலதா சின்னம் நம்மிடமிருந்து விலகிச்சென்ற முதலாவது சந்தர்ப்பமிதுவென மக்கள் வேதனையடைந்தனர். கெப்பெட்டிப் பொல, பிலிமத்தலாவை, மடுகல்லே ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட சம்பவமானது ஆங்கிலேயர்களிடையே எத்தகைய அபிப்பிராயத்தைத் தோற்றுவித்த போதும் மக்களிடையே இக் கைது சம்பவத்தை விட புனித தந்தத்தை வெள்ளையர் கைப்பற்றியதையே பாரதூரமானதாக மக்கள் கருதினர். இது ஒரு பேரிழப்பாக அவர்கள் பார்த்தனர். 

இதே எண்ணத்தை மலைநாட்டு முதல் அமைச்சராக பதவிவகித்த மொல்லிகொடையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருந்தான். 1818ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட கட்டளையின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த ‘மார்ஷல் லோ’ எனப்படும் இராணுவ சட்டம் ஓரளவு தளர்த்தப்பட்டது. எனினும் ஒட்டுமொத்த மத்திய மலைநாட்டிலிருந்தும் இச்சட்டம் 1820ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதியே நீக்கப்பட்டது. 

ஊவா – வெல்லஸ்ஸ புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அனைவருமே போர்க்கைதிகளாகவே கைது செய்யப்பட்டிருந்தனர். எல்லேப்பொலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் இப்புரட்சித் தலைவன் சிரச்சேதம் செய்யப்பட்டான். 

கெப்பெட்டிப்பொல, மடுகல்லே, பிலிமத்தலாவ (இளையவர்) மற்றும் இப்புரட்சியின் தீவிர செயற்பட்டாளனாகக் கருதப்பட்ட இஹகம (தேரர்) ஆகியோருக்கெதிராக நவம்பர் மாதத்தில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் கெப்பெட்டிப்பொல, மடுகல்லே ஆகிய இருவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அதேசமயம் பிலிமத்தலாவை மற்றும் இஹகம ஆகியோர் ஆயுள் உள்ளவரை வெளிநாட்டில் வசிப்பதற்காக நாடு கடத்தப்பட்டனர். 

ஐந்து வருடங்கள் முதல் ஆயுள் பரியந்தம் தண்டனை பெற்று நாடுகடத்தப்படுவதற்கு தீர்ப்பளிக்கப்பட்டிருந்த மேலும் இருபத்தைந்து அமைச்சர்கள், பிரதானிகளுடன் இவர்களும் மொரிஷியஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

கிளர்ச்சி நடைபெற்ற காலங்களில் இராணுவ நீதிமன்றத்தின் மூலம் 47பேர் மரண தண்டனைக்குள்ளாகியிருந்தனர். இவர்களில் 28பேருக்கு உடனடியாக தண்டனை நிறைவேற்றப்பட்டது. இத்தொகை ஒருசிறிய எண்ணிக்கையென வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்துபேர் நாடு கடத்தப்பட்டு எட்டுபேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.  

ஒரு கைதி மரணத்தைத் தழுவியிருந்தான். ஆறு கைதிகள் நாடு கடத்தப்பட்டும் எட்டுபேர் சிறு தண்டனைகளுக்கும் உள்ளாகியிருந்தனர். இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.  

விசேடமாக புனித தந்தத்தைக் களவாடி மறைத்து வைத்திருந்த பிக்குமார்கள் உட்பட ஏராளமான பௌத்த பிக்குமார்களும், பாரிய அளவில் கிளர்ச்சி நடைபெற்ற பிராந்தியமாகிய வெல்லஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த மதகுருமார் பத்து பேரும் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். 

ஓகஸ்ட் மாதம் 21ம் திகதி வெளியிடப்பட்ட ஆணையை அமுல்படுத்துவதற்கு முன்வராத பிரதானிகள், கிராமத் தலைமைக் காரர்கள் எழுபத்தைந்து பேரின் காணி மற்றும் சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டன. எனினும் அந்நிலங்களில் விளையும் பயிர் அறுவடைகளில் ஐந்தில் ஒரு பங்கு அரசுக்கு வழங்க வேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டு பின்னர் அதுவும் விடுவிக்கப்பட்டது. மேலும் ஆயுள் முழுவதும் மாதம் இருநூறு பவுண் என்ற அடிவடையில் மொல்லிகொடைக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. 

அரசு சார்பு போக்கினைக் கடைப்பிடித்த பிரதானிகளுக்குச் சொந்தமான காணிகளின் மீது வரிவிதிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதேவேளை கிளர்ச்சியில் ஈடுபடாதிருந்த பிரதேசங்களில் நெல்வரி பதினான்கில் ஒரு விகிதமாக குறைக்கப்பட்டது. 

(தொடரும் ...)

சி.கே. முருகேசு
தகவல் – கலாநிதி கொல்வின் ஆர். டி  சில்வா 
(பிரித்தானியரின் கீழ் இலங்கை)

Comments