பச்சிலைப்பள்ளியில் தலைக்கு மேலே வெள்ளம் | தினகரன் வாரமஞ்சரி

பச்சிலைப்பள்ளியில் தலைக்கு மேலே வெள்ளம்

பச்சிலைப்பள்ளியில் தலைக்கு மேலே வெள்ளம். என்ன, இந்தக் கோடை காலத்திலேயே வெள்ளமா என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். தலைக்கு மேலே பிரச்சினை என்றால் வேறு என்னவாம்! அப்படியென்ன தலைக்கு மேலே பிரச்சினை என்று கேட்கிறீர்களா?

167.7சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் தினமும் பத்துத் தொடக்கம் பதினைந்து டிப்பர் மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டு வெளியே கொண்டு செல்லப்படுகிறது. தினமும் பதினைந்து டிப்பர் அளவு மணல் என்றால், மாதமொன்றுக்கு சராசரியாக நானூற்றைம்பது டிப்பர் மணல். மாதமொன்றுக்கு நானூற்றைம்பது டிப்பர் மணல் என்றால் ஆண்டுக்கு 164250லோட் மணல். இப்படி ஒவ்வோராண்டும் இவ்வளவு மணல் அகழப்படுகிறது என்றால் இந்தப் பிரதேசத்தின் கதி என்ன? நிலை என்ன?

இவ்வளவும் சட்டவிரோதமாகவே நடக்கிறது. இந்தச் சட்டவிரோத மணல் அகழ்வில் சில பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் சம்பந்தம் உண்டென்று சனங்கள் சொல்கிறார்கள். குறிப்பாக மூன்று டிப்பர்கள் இவர்களுடையவை என்பது சனங்களின் கருத்து.

இரவு நேரங்களில் மணலை அகழ்ந்து களவாக ஏற்றக்கூடிய இடத்தில் சேர்ப்பது. அதிகாலையில் அதை ஏற்றிக் கொண்டு டிப்பர்கள் போகும். இதற்குக் காவலாக இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் முன்னே செல்வர். இடையில் பொலிஸ் நின்றால் டிப்பருக்குத் தகவல் வழங்கப்படும். தகவல் கிடைத்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு மறைந்து விடும். 

இவ்வளவு மணலையும் அகழ்ந்து வெளியே விற்பது உள்ளூர்வாசிகளே. இதில் இரண்டு பேர் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள். இயக்கச்சிப் பகுதியில் மணல் அகழ்வது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டவர். கிளாலியில் அகழ்வது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர். இப்படி அரசியற் பின்னணியோடு பொதுப்பணியில் ஈடுபடுவதற்கு முன்வந்தவர்கள் அதிலிருந்து திசை திரும்பிப் பொதுநன்மைக்கு மாறாகவே செயற்படுவது என்பதை எப்படிச் சொல்வது?

பச்சிலைப்பள்ளி என்பது யாழ்ப்பாணக் குடாநாட்டையும் இலங்கையின் ஏனைய பகுதியையும் இணைக்கின்ற பிரதேசமாகும். அதாவது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வாசல். உங்களுக்குத் தெரியும். ஆனையிறவுக் கடனீரேரிக்கும் வடக்கில் உள்ள வீரக்களி ஆற்றுக்கும் இடைப்பட்ட ஒடுங்கிச் சிறுத்திருக்கும் சிறியதொரு நிலப்பரப்பு இது. இந்த நிலப்பரப்பிலும் இரண்டு பக்கத்திலுமாக அரைக் கிலோ மீற்றர் அளவுக்கு உவர் நிலம். தண்ணீரும் உவரே. ஆகவே இதில் சனங்கள் குடியிருக்கவோ பயிர் செய்யவோ பண்ணைகளை அமைக்கவோ முடியாது.

ஆக மூன்று தொடக்கம் ஆகக் கூடியது நான்கு கிலோ மீற்றர் அகலமான நிலப்பரப்பில்தான் ஓரளவுக்கு நல்ல தண்ணீர் உண்டு. இதிலும் பல கிணறுகளில் நல்ல நீர் கிடையாது. பளை, இயக்கச்சி, முகமாலை போன்ற இடங்களில் பல கிணறுகள் செம்மஞ்சள் நிறத்திற் காவி நீராக உள்ளன. அல்லது சவராக உள்ளது.

இந்த நீர் மாற்றம் பத்து ஆண்டுகளுக்குள்தான் வேகமாக நடந்துள்ளது என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கிறார்கள். இதற்குப் பிரதான காரணம் அதிகரித்த மணல் அகழ்வு என்று சொல்கிறார் பேராசிரியர் இரா. சிவச்சந்திரன். இதே கருத்தை முன்னர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளையும் சொல்லியிருக்கிறார். ஆனாலும் இதையிட்டு யாரும் அக்கறை கொண்டதாகவோ கவலைப்பட்டதாகவோ இல்லை. இதனால்தான் இப்படி தொடர்ந்து மணல் அகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதைத் தடுப்பதற்கு சில ஊர்களில் இளைஞர்கள் முன்வந்திருந்தனர். அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இதில் முன்னணி வகித்தவர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பிலான பிரதேச சபை உறுப்பினர் வேலுப்பிள்ளை வசந்தரூபன். இவர் பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை உறுப்பினராக இருந்து கொண்டு மணல் அகழ்வுக்கெதிராகப் போராடி வருகிறார். ஆனாலும் இவருக்குப் போதிய வலுவில்லை என்பதால் இந்த எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாதுள்ளது.  இதைத் தமக்கான வாய்ப்பாக மணல் அகழ்வோர் எடுத்தாளத் தொடங்கி விட்டனர். அப்படி யாராவது எதிர்ப்புத் தெரிவித்தால் அவர்களுக்கு மணல் அள்ளிகள் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். அப்படிப் பயப்பீதியை சனங்களிடம் உண்டாக்கி சனங்களின் எதிர்ப்பு மனோ நிலையை உறைய வைத்துள்ளனர். இதனால் என்ன நடந்தாலும் எங்களுக்கென்ன? அல்லது நாம் இதை எப்படித் தடுப்பது? என்று கருதுகிறார்கள் சனங்கள். போதாக்குறைக்கு தடுக்கக் கூடிய அதிகாரிகளும் இதையிட்டெல்லாம் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். சில அதிகாரிகளும் உத்தியோத்தர்களும் அவர்களே மணல் அகழ்வில் ஈடுபடுகிறார்கள். இப்படிக் காவற்காரனே கள்வனாகவும் இருந்தால் நிலைமை எப்படியிருக்கும்?

இவ்வளவுக்கும் இந்தப்பிரதேசம் காடும் வயலும் குளங்களும் கடலும் இணைந்த வளமான நிலப்பகுதி. தென்னையும் பனையும் மாவும் இந்தப் பிரதேசத்தின் சிறப்படையாளங்கள். மட்டுமல்ல இவற்றின் மூலமான பொருளாதார வளமும் உள்ளது. முல்லையும் மருதமும் நெய்தலும் இணைந்த வாழ்க்கைப் பண்பாடு இங்கே உண்டு. இது வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டதென்பது வரலாற்றறிஞர் கருத்து. ஆதிக்குடிகளில் ஒன்றான இயக்கர்கள் இங்கே வாழ்ந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அப்படி வரலாற்றுக்காலத்துக்கு முந்திய இந்தப் பிரதேசம் இன்னும் இயற்கை வளங்களான கடல், காடு, குளம் போன்றவற்றை அப்படியே கொண்டிருக்கிறது ஆச்சரியம். அபூர்வம். நான் முன்பொரு தடவை குறிப்பிட்டதைப்போல யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயற்கை வளமும் இயற்கை அமைப்பும் இன்னும் கெடாமல் இருப்பது இந்தப் பிரதேசத்தில்தான். இன்னும் மானும் பன்றியும் நரியும் காட்டுப் புலியும் உள்ளது இங்குதான்.

ஆனால், இதற்கு இப்பொழுது சவாலை ஏற்படுத்திக் கொண்டிருப்பதே கவலையளிப்பது மட்டுமல்ல, கவனத்தில் எடுக்க வேண்டியதுமாகும்.

மணல் அகழ்வைப்போலவே காடழிப்பும் பனை அழிப்பும் நடந்துகொண்டிருக்கிறது. காணிகளைத் துப்புரவு செய்கிறோம். கண்ணி வெடியை அகற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டு ஏராளம் பனைகள் பிரட்டி மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ளன. இன்னும் இந்தத் தவறான காரியம் நடந்து கொண்டேயிருக்கிறது. குறிப்பாகப் பனைகளை அழிப்பது என்றால் அதற்கு சிறப்பு அனுமதி எடுக்கப்பட வேண்டும். பனை அபிவிருத்திச் சபையும் பனை வள அபிவிருத்தி மற்றும் பனை ஆய்வு மையங்களும் இதற்குப் பொறுப்பானவை.

ஆனால், இவற்றிடம் பெரும்பாலானவர்கள் அனுமதி பெறுவதில்லை. இப்படித்தான் காடழிப்பைச் செய்யும்போதும் தெரிவு மரங்கள் எதையும் யாரும் விட்டு வைப்பதில்லை. முன்னர் காடுகளை அழித்து தோட்டம் செய்யும்போதோ குடியிருப்பை அமைக்கும்போதோ வயலை உருவாக்கும்போதோ அங்கே நல்ல, பொருத்தமான மரங்களைத் தெரிந்து விடுவதுண்டு. அந்த மரங்கள் காணியின் அடையாளமாக, ஊரின் அடையாளமாக, தெருவின் சிறப்புக் குறிப்பான்களாக இருப்பதுண்டு.

இப்பொழுது அப்படியெல்லாம் கிடையாது. காடழிப்பு இயந்திரக்களைக் கொண்டு வந்து அப்படியோ முழுமையாக எல்லாவற்றையும் இடித்தழிக்கிறார்கள். இடித்தழித்த நிலத்தைச் சில மாதங்கள் சென்ற பிறகு பார்த்தால் பாலைவனம் போல வெட்ட வெளியான மணல் வெளியாகவே தெரிகிறது.

இது இந்தப் பகுதியின் இயற்கைச் சமனிலையைச் சீர்குலைக்கப்போகிறது. மட்டுமல்ல, மண் வளத்தையும் கெடுத்து விடும். காடும் மரங்களும் இல்லை என்றால் மிகக்குறைந்த காலத்திலேயே மணலின் தன்மை கெட்டுவிடும். ஏனெனில் இந்தப் பிரதேசம் பிற பிரதேசங்களைப்போல செம்மண்ணோ களிநிலத்தையோ கொண்டதல்ல. முற்றிலும் மணலால் ஆனது. அந்த மணல் காடற்றது என்றால் பிறகு சொல்லவே வேண்டியதில்லை. அப்படியே தன்மை கெட்டு விடும். மண்ணரிப்பும் தாராளமாக நிகழும். காற்றே மணலை அள்ளி நிலவெளியை மாற்றி விடும்.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் யாருக்குத்தான் கவலை? பச்சிலைப்பள்ளி அபிவிருத்திச் சங்கம் இது தொடர்பாகச் சில விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. மணல் அகழ்வு, மரம் தறித்தல், இயற்கை வளச் சிதைவு, வளச் சுரண்டல் போன்றவற்றை எதிர்த்தது. ஆனாலும் அதனால் இதைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை. எனினும் அந்தச் சங்கத்தைத் தவிர தற்போதைக்கு வேறு ஏற்பாடுகள் ஏதும் நிறுவன மயப்பட்டதாக இல்லை. என்பதால்தான் எந்தப் பயமும் இல்லாமல், எந்தத் தடையும் இல்லாமல் தினமும் பதினைந்து டிப்பர் மணலை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

இது போதாதென்று இயக்கச்சி சந்தியிலிருந்து தனமும் இரண்டு லட்சம் லீற்றர் தண்ணீர் வெளியே எடுத்துச் செல்லப்படுகிறது. பலாலி, யாழ்ப்பாணம், மிருசுவில், வடமராட்சி, கிளிநொச்சி, பரந்தன் எனச் சகல இடங்களுக்கும் இயக்கச்சியிலிருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போகின்றன நீர்க் கொள்கலன்கள். அத்தனை பவ்சர்களும் பெரிய இடத்துக்குரியவை. பல படைத்தரப்பினுடையவை. இதையெல்லாம் தட்டிக் கேட்பது யார்? சுட்டிக்காட்டுவது எவர்?

குரலற்றவர்களாகச் சனங்கள் ஆகிக் கொண்டிருக்கின்றனர். குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டியவர்களும் அபாயங்களைத் தடுத்து நிறுத்த வேண்டியவர்களும் தமக்கேன் வீண் சோலி என்று கழுவுகிற தண்ணீரில் நழுவுகிற மீனாக இருந்தால் எப்படித்தான் மாற்றங்கள் நிகழும். அபாயங்கள் குறையும்.

ஆம் தலைக்கு மேலே வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் பச்சிலைப்பள்ளியில் நல்ல தண்ணீர் கிடைக்காது. காடிருக்காது. பனைகள் நிற்காது. காட்டு விலங்குகளைக் காணவே முடியாது. இயற்கை அரண் என்று எதையுமே காணவியலாது. மிகத் தொன்மையான வரலாற்றுத் தொடர்ச்சி என்பது எங்களின் கண் முன்னேயே அழிந்து பட்டு விடும்.

இதனால்தான் சொல்கிறேன், தலைக்கு மேலே வெள்ளம் என்று. மீட்பர் யார்? காப்பர் யார்?

கருணாகரன்

Comments