பூமிவாசியை பிரபஞ்ச பிரஜையாக்கிய சந்திர பயணம் | தினகரன் வாரமஞ்சரி

பூமிவாசியை பிரபஞ்ச பிரஜையாக்கிய சந்திர பயணம்

புவியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒன்றுதான் நிலவின் ஈர்ப்பு சக்தி. அதாவது நீங்கள் ஒரு அடி உயரத்துக்கு எம்பிக் குதித்தால் அங்கே ஐந்தடி உயரத்துக்கு செல்வீர்கள். எனவே நிலவில் நடைபழகுவது மிகுந்த சிரமம். நிறைய பயிற்சி எடுத்துக்கொண்டதால் அவ்விருவரும் சமாளித்தார்கள். இதுபற்றி அல்ட்ரின் ஹுஸ்டனுடன் பேசும்போது, “எங்கள் உடல் எடையை எங்கள் கால்களின் மீது வைத்துக்கொள்வதற்கு படாதபாடுபட வேண்டியிருக்கிறது” என்றாராம். 

ஆர்ம்ஸ்ட்ரோங்கும் அல்ட்ரினும் தாம் எடுத்து வைத்த அடிகள் எழுப்பிய ஓசையைக் கேட்கவே இல்லை. ஏனெனில் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டது ஒலி வாங்கிகள் மூலம்தான். அவர்களது உடல்கள் முற்றிலுமாக விண் ஆடைகளினால் மறைக்கப்பட்டிருந்ததால் அவர்களின் அவயங்கள் சந்திரத் தரையோடு எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை. சந்திர ஒளியைத்தான் அவர்கள் பார்த்தார்களே தவிர சந்திர ஒலியை அவர்கள் கேட்கவில்லை. 

இங்கே இன்னொரு விஷயமும் உள்ளது. பூமிக்குத் திரும்பிய ஆர்ம்ஸ்ட்ரோங் பல நாடுகளுக்கு விஜயம் செய்தார். ஒரு தடவை எகிப்துக்குச் சென்றிருந்தபோது கெய்ரோ வீதியொன்றில் பகல் பொழுதில் நடந்துசென்றார். அப்போது பள்ளிவாசல் ஒன்றில் இருந்து பாங்கு ஒலித்தது. அதைக்கேட்ட அவருக்கு அதிர்ச்சி! ஏனெனில் இதே ஓலியை அவர் சந்திரனில் நடந்து கொண்டிருந்த போது அவர் காதுகளில் ஒலித்தது. அதை நினைவுபடுத்திக் கொண்ட அவர், பக்கத்தில் இருந்தவர்களிடம் அது என்ன ஓசை எனக் கேட்டார். அவர்கள் அது பாங்கு ஒலி என்பதை விளக்கினார்கள். பின்னாளில் இஸ்லாம் மதத்தைத் தழுவ இச் சம்பவம் காரணமாக அமைந்தது என்பது அந்தக் கதை. எழுபதுகளில் இக்கதை இலங்கையில் பரவியது பின்னர்தான் இக் கதையில் ஓட்டை இருப்பதை உணர்ந்து கொண்டார்கள். சந்திரனில் இருந்த போதே அவர் சந்திர ஒலி எதையுமே கேட்க வாய்ப்பில்லை. வெளித் தொடர்பு என்றால் ஹுஸ்டனுடன் மட்டும்தான். இனி எப்படி வேறொரு ஒலியை அவர் கேட்க முடியும் என்பதை இக் கதைதையக் கேட்ட பலரும் கேள்வி எழுப்பாமல் அப்படியே நம்பி விட்டார்கள்! 

ஆர்ம்ஸ்ட்ரோங்கும் அல்ட்ரினும் சந்திரனில் பதித்த காலடிகள் மங்கிப் போகாமல் அப்படியே ஐந்து இலட்சம் வருடங்கள் இருக்கும் என்று அப்போது மதிப்பிட்டிருந்தார்கள். சந்திரனில் நடந்த அவர்கள், அமெரிக்கக் கொடியை நாட்டினார்கள். கொடிக் கம்பு சுலபமாக தரையில் இறங்கவில்லை. ஒரு வழியாக நாட்டி முடித்து படங்களையும் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் புறப்பட்ட போது ஈகள் கலத்தின் ரொக்கட் சீறி எழுந்ததால் ஏற்பட்ட அதிர்வில் தேசியக் கொடி கீழே சாய்ந்துவிட்டதாக ஒரு கதை உண்டு. 

ஈகள் கலம் கீழே இறங்கியபோது பாறைக் குவியலில் எக்குத்தப்பாக இறங்கி குப்புறக் கவிழ்ந்து விடுமோ, தரை புதை மணலாக இருந்து ஈகளின் கால்கள் மண்ணில் புதைந்து விடுமோ, ஆர்ம்ஸ்ட்ரோ தரையில் கால் வைத்துதும் புதைந்து போய் கால்களை மேலே தூக்க முடியாமல் போய்விடுமோ என்றெல்லாம் பல குழப்பங்கள் – சந்தேகங்கள் – தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தினருக்கு இருந்தன. இங்கே அவர்கள் அதிர்ஷ்டத்தைத்தான் நம்பியிருந்தார்கள். அவர்களுக்கு இன்னொரு பிரச்சினையும் இருந்தது. 

இருவரும் தரையில் நடமாடிக் கொண்டிருக்கும் போது திடீரென ஒருவருக்கு சுகவீனமாகிப் போய்விட்டது என்று வைத்துக் கொள்வோமே! அவர்கள் இருப்பதோ மூன்று இலட்சம் கி.மீ. தூரத்துக்கு அப்பால், ஒரு உப கிரகத்தில். இருவரில் ஒருவருக்கு சுகவீனம். மனிதர் மயங்கிவிட்டார். யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சுகவீனம் வரலாம் அல்லவா? அவ்வாறான ஒரு துரதிர்ஷ்டம் நிகழ்ந்தால் என்ன செய்வது? 

சுகவீனமானவரை மீட்டெடுத்து தாய்க் கலத்தில் சேர்ப்பது என்பது மிகமிகக் கடினமான வேலையாகவே இருக்கும். இது தொடர்பாக பயணக் கட்டுப்பாட்டு அதிகாரியான டொனால்ட் ட்ரைடன் என்ன சொன்னார் தெரியுமா? “அவரைக் காப்பாற்ற நாங்கள் பெரு முயற்சி செய்வோம். அதில் சந்தேகம் வேண்டாம். அதில் வெற்றி பெறுவோமா இல்லையா என்பது வேறு விஷயம்.” என்றார் அவர். ஈர்ப்பு விசை குறைந்த அச் சூழலில் விண்வெளி ஆடைகளுடன் காணப்படும் ஒரு நபருக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு கிடையாது. இதயத்தையோ வேறு அவயங்களையோ மஸாஜ் செய்வதும் சாத்தியம் இல்லை. அந்நபரை தோளில் தூக்கிக்கொண்டு சிறிய படிகளில் ஏறி மூடிய கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைவது என்பது பிரம்மப் பிரயத்தமாகவே இருக்கும். தாய்க் கலமான கொலம்பியாவுடன் இணைந்த பின்னர் மயக்கமானவரை பிரதான கலத்தினுள் எடுத்துச் செல்வதும் கஷ்டமான காரியமாகவும் சேதங்களை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அப்படியானால் சுகவீனமுற்றவரை அப்படியே தரையில் விட்டுவிட்டு மற்றவர் ஈகளில் ஏறி தாய்க் கலத்துடன் இணைந்துகொள்வது என்ற கடினமான வழியைத்தான் இரண்டாவது வீரர் எடுக்க வேண்டியிருக்கும். இப்போது விளங்குகிறதா, எவ்வளவு சவாலான பயணத்தை இவ்வீரர்கள் மேற்கொண்டிருந்தார்கள் என்பது! 

அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் நிலவில் நின்ற வீரர்களுடன் பேசினார்.  

“மனித வரலாற்றிலேயே விலைமதிக்க முடியாத ஒரு தருணம் இது. நீங்கள் செய்திருக்கும் சாதனையால் முழு உலக மக்களும் தாம் ஒரே இனத்தவர்களே என இச்சந்தர்ப்பத்தில் உணர்ந்து பெருமை கொள்கிறார்கள். நீங்கள் நலமுடன் பூமி திரும்ப வேண்டும் என்பதே எமது பிரார்த்தனைகளில் ஒன்றாக இருக்கிறது” என்று இரண்டு வீரர்களிடம் அவர் சொன்னார். பின்னர் இருவருமாக 15பிளாஸ்டிக் கொள்கலன்களில் சந்திர மண், கற்களை நிரப்பிக் கொண்டார்கள் மொத்தம் 54இறாத்தல்கள்! 

இரண்டு மணித்தியாலம் மற்றும் 31நிமிடங்களை சந்திரத் தரையில் கழித்த இருவரும் சந்திர மண் பைகளை எடுத்துக்கொண்டு ஈகள் படிகளில் ஏறினார்கள். கதவு மூடப்பட்டது இனி ஈகளை மேலே ஏற்றும் ரொக்கட்டை இயக்கி சந்திரத் தரையை விட்டு கிளம்ப வேண்டும். தாய்க் கலமான கொலம்பியாவில் அவர்களுக்காக காத்திருக்கும் மைக்கல் கொலின்ஸ், பேசுவதற்கும் ஆள் இல்லாமல் சந்திரனை சுற்றி வந்து கொண்டிந்தார். ஒவ்வொரு 47நிமிடத்துக்கும் ஒரு தடவை என சந்திரனை அவர் வலம் வந்து கொண்டிருந்தார்.  

ஈகள் கலத்தில் நுழைந்த இருவரும் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக முதல் வேலையாக சாப்பிட்டார்கள். அப்புறம் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். இப்போது சந்திரனில் இறங்கி 21மணித்தியாலம் கழிந்திருந்தது. புறப்படத் தயாரானவர்கள் மேல் நோக்கிக் கிளப்பும் உந்து ரொக்கட்டை இயக்கத் தயாரானார்கள். அந்த உந்து ரொக்கட் கருவி 750இறாத்தல் எடை கொண்டது. மூவாயிரம் தடவைகள் இயக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது சரி பார்க்க வழி இல்லை. இயக்க வேண்டும். இயக்கினால் அது இயங்கவும் வேண்டும். இயங்க மறுத்தால் கதை கந்தலாகிவிடும்! 

ஹுல்டன் : எல்லாம் கிளியர், புறப்படுங்கள்! 

அல்ட்ரின் : ரொஜர், விளங்கிக் கொண்டோம். ரன்வே நம்பர் வன்னில் நாங்கள் நிற்கிறோம், ரெடி! 

பட்டனை அமுக்க, ஈகள் சீறிக் கிளம்பியது ஏழு நிமிடங்களில் சந்திர சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. அவர்கள் சந்திரனில் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான கெமராக்கள், மூச்சுக் கருவிகள், உபகரணங்கள், கறுப்பு வெள்ளை டெலிவிஷன் கெமராக்கள் என்பனவற்றை அவர்கள் விட்டு வந்திருந்தார்கள். சந்திரத் தரையில் இருந்து கிளப்பி மேலே வரும்போது கொலம்பியாவில் இருந்தபடி மைக்கல் கொலின்ஸ் எடுத்த புகைப்படம் ரொம்ப பிரசித்தம். ஈகள் கலம் பிரச்சினையின்றி கொலம்பியாவுடன் இணைந்தது. இனி பூமிக்குத் திரும்ப வேண்டியதுதான். பெரிய சிக்கல்கள் எதுவும் இனி வர வாய்ப்பில்லை.    இதனால் மகிழ்ந்து போன மனிதர்களைத் தாங்கிச் செல்லும் விண் பயணங்களுக்கான பிரதான அதிகாரியான ஜோர்ஜ் ஈ. முல்லர், “இந்த கிரகத்தின் வரலாற்றிலேயே இப்போது தான் முதல் தடவையாக தீர்மானிக்கும் நிலையில் நாம் இருக்கிறோம்” என்றார். 

“நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன் இந்த உலகம் தோன்றியது. 400மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உயிர் வாழ்க்கை உலகில் ஆரம்பமானது. நான்கு மில்லியன் வருடங்களுக்கு முன் மனிதன் தோற்றம் பெற்றான். நூறு வருடங்களுக்கு முன்னர் இன்றைய விஞ்ஞான அபிவிருத்திக்குக் காரணமான தொழில்நுட்ப புரட்சி ஆரம்பமானது. இவை அனைத்துமே மிக முக்கியமான நிகழ்வுகளானாலும் அவை எதுவுமே மனிதர்களில் ஒரு உள்ளுணர்வு ரீதியான தீர்மானமொன்றை, ஒட்டுமொத்த மனித குலத்தின் பேரில் எடுத்ததில்லை. அம் முடிவை இன்று எடுத்திருக்கிறோம். இப்போது, மனிதன் இந்த உலகத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவன் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறோம்!” என்றார் உணர்வு பூர்வமாக! 

ஜுலை 22ம் திகதி கொலம்பியா தன் பூமியை நோக்கிய 60மணித்தியால பயணத்தை ஆரம்பித்தது. ஜுலை 24ம் திகதி ஹவாய்க்கு அப்பால் நிலைகொண்டிருந்த ஹோர்னட் என்ற அமெரிக்க போர்க்கப்பல் சந்திர கலத்தின் வருகைக்காகக் காத்திருந்தது. அதிகாலை 5.41க்கு வானில் ஒரு ஒளிக்கீற்று தென்பட்டது. கப்பல் மேல் தளத்தில் நின்றவர்கள் அதோ, அதோ என ஆர்ப்பரித்தார்கள். ஹோர்னட் கப்பலில் இருந்து ஒன்பது மைல் தொலைவில் பரசூட் மூலம் சந்திர வீரர்கள் மூவரும் கடலில் இறங்கினர். முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடத்தில் இருந்து 1.7மைல்களுக்கு அப்பால் கலம் கடலிறங்கியது. 1961ல் கென்னடி அமெரிக்க மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை அமெரிக்கா நிறைவேற்றி வைத்தது. 

“இது ஒரு புதிய யுகத்தின் தொடக்கம். தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தை மனிதன் அறிந்துகொள்ள ஆரம்பிக்கும் போது மனிதன் தன்னைத்தானே அறிந்துகொள்ளும் யுகமும் ஆரம்பமாகும்” என்பது ஆர்ம்ஸ்ட்ரோங் தனக்கு நியூயோர்க்கில் அளிக்கப்பட்ட வரவேற்பொன்றில் கூறினார். அத்தனையும் நிஜம்! 

இதன்பின்னர் அடுத்தடுத்து சந்திர பயணங்கள் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் முக்கியமானது அப்பல்லோ – 13பயணமாகும். 

பொதுவாகவே மேற்குலகில் 13இலக்கம் துரதிர்ஷ்டமானது என்றொரு நம்பிக்கை உண்டு. அபல்லோ – 13இல் பயணித்த மூவர்களான பிறட் ஹேய்ஸ், ஜெக் ஸ்விகர்ட் மற்றும் ஜிம் லொவல் ஆகியோர் சந்திரனை வலம் வந்துகொண்டிருந்தபோது தாய்க் கப்பலான ஒடிசியில் உள்ள ஒரு ஒக்சிசன் தாங்கி வெடித்துவிட்டது. இதனால் கலத்தின் ஒக்சிசன் அழுத்தம் குறையவே என்ன செய்வது என்ற தவிப்பு அமெரிக்க விஞ்ஞானி்களுக்கு ஏற்பட்டது. 1970ஏப்ரல் 11ம் திகதி புளோரிடாவில் இருந்து புறப்பட்ட அபல்லோ – 13பூமியில் இருந்து இரண்டரை இலட்சம் மைல் தொலைவில் சந்திரனை வலம் வந்து கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து ஏற்பட்ட தினம் என்ன தெரியுமா? 

ஏப்ரல் 13! 

அடுத்த வாரம் வீரர்கள் தப்பிப் பிழைத்து பூமி திரும்பியது எப்படி? 

டொமினிக் ஸ்தனிஸ்லோஸ் 

Comments