பெண்களுக்கு மட்டும்தானா அர்ப்பணிப்பு வாழ்க்கை? | தினகரன் வாரமஞ்சரி

பெண்களுக்கு மட்டும்தானா அர்ப்பணிப்பு வாழ்க்கை?

மனிதர்கள் போலியாக வாழத் தொடங்கி வெகுநாட்கள் இல்லை வெகு காலமாகிவிட்டது. அதிலும் இப்போதுள்ள மனிதர்கள் சற்று மேலாக இந்தப்போலியிலும் வண்ணம் கலந்து பேசவும் செய்யவும் முடிந்தவர்களாக இருக்கின்றனர்.  

பணமும் பதவியும் அதிகாரத்தை தனிமனிதனிடம் சேர்க்கிறது. அதனால் பல நன்மைகளையும் இந்த உலகம் அடைந்து கொண்டிருக்கும் அதேவேளை, பாரிய இடைஞ்சல்களையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஒவ்வொருவருக்குள்ளும் தான் சொல்வதே சரி என்ற எண்ணம் இருக்கிறது. அந்த எண்ணம் மற்றவர்களை மறுத்துப்பேசுகிறது. சமூகத்தின் அனைத்து முரண்பாடுகளுக்கும் இந்த எண்ணங்களே காரணமாகிவிடுகிறது. நான் சொல்லுறன். நான் விடமாட்டன்.   என்னோட மோதி  வெல்லவோ என்பது போன்ற வீர வசனங்களை குடிகாரர்கள் கூட உரத்துக் கூறுகிறார்கள். அப்போதும் அவர்கள் நான் குடிச்சிட்டு பேசேல்ல என்பார்கள். இப்படி சொல்வது அனைத்து மனிதர்களையும் பொதுமைப்படுத்தாது. என்றாலும் அப்படி ஒரு விடயம் இருக்கிறது என்பதை தெரிவிப்பதாகும்.  

யுத்தம் நடந்த காலத்தில்தான் அதிகமான பெண்கள் விதவைகளானார்கள். இதைவிட பொத்தாம் பொதுவாக விதவைகள் உள்ள அளவுக்கு தபுதாரர்கள் இல்லை. அதாவது ஆண்கள்தான் விரைவில் இறந்து போகிறார்கள். காரணம் குடி, புகைத்தல், போதைப்பழக்கங்கள் பெண்வழிச்சேரல் என தீய பழக்கங்களால் தமது ஆயுளை குறைத்துக் கொள்கிறார்கள். எனவே பெண்கள் கொஞ்சம் அதிக நாட்கள் வாழ்கிறார்கள். (அப்படியென்றால் பெண்களில் யாருக்கும் இந்தப்பழக்கங்கள் இல்லை என்பதல்ல குறைவு என்பதுதான்) 

மாறாக இளம் பெண்கள் விவாகமான சில நாட்களிலோ மாதங்களிலோகூட கணவனை இழந்தவர்களுடன் சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்தவர்கள்வரை தனியான ஒரு தொகைப் பெண்கள் எமது நாட்டின் சிறுபான்மை பெரும்பான்மை என்ற வேறுபாடின்றி இருக்கத்தான் செய்கிறார்கள். அநேகமான பெண்கள் ஏதாவது நிரந்தர வேலைகளில் இருக்கிறார்கள். ஆசிரியத்தொழில்முதல் படைத்துறைவரை இவர்களது சேவை இருக்கிறது.  

அண்மையில் ஒரு குறும்படம் பார்த்தேன். அதில் திருமண வயதில் உள்ள ஒரு பெண், தன் விதவைத்தாய்க்கு மறுமணம் செய்து வைப்பதே கதை. மிக லாவகமான கதைப்போக்கிருந்தது. அவளுடைய காதலன் தனக்கு வரப்போகும் மாமியாரின் திருமணத்தை தவறானதாகவே பார்க்கிறான். அவனுடைய தாய் அதன் தேவையை நியாயத்தை மகனுக்கு எடுத்துரைத்து புரிய வைக்கிறாள்.  படத்தின் ஈற்றில் நடந்த கலந்துரையாடலில், விதவைகள் மறுமணம் செய்வதும், வயோதிபத்தில் தனிமையை போக்க, மறுமணம் செய்வதும் மிக அவசியமானது தான் என சிலர் குறிப்பிட்டனர். அதை மறுக்கவும் சிலர் முன்நின்றனர். பிள்ளைகளின் நலன்கருதி தமது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வதே பெண்களின் வழக்கம். அதுவே சரியானது என சிலர் வாதிட்டனர். 

என்ன உலகமடா இது? ஒரு மனைவி  இறந்து போனால் எத்தனை பிள்ளைகள் இருந்தாலும், பிள்ளைகளுக்காகவென்றே காரணம் சொல்லி திருமணம் செய்யும் ஆண்களை நாம் அறிவோம்? பெண்களுக்கு மட்டும் அர்ப்பணிப்பு வாழ்க்கை தேவை என்று கூறுவோருடைய மனநிலை எப்படி இருக்கிறது. பெண்களை இன்னும் அடிமைகளாகவே வைத்திருக்க இவ்வுலகம் விரும்புகிறதா?அண்மையில் தொடங்கிய ஒரு தொலைக்காட்சித் தொடரில் ஒரு பாட்டி சொல்கிறாள் பொட்டச்சிகளுக்கு என்ன விருப்பம் வேண்டிக் கிடக்கு சொன்னதை செய்யிறதுதான் அவளோட கடமை என்று.  

ஓர் இளம் விதவை தான் வேலை செய்த இடத்தில் அவளை மனப்பூர்வமாக விரும்பிய ஒருவரை திருமணம் செய்ய விரும்பினாள். அவளுடைய பத்து வயது மகனை அவளுடைய உறவினர்களே தூண்டி, அந்த திருமணத்தை எதிர்க்கும்படி கூறி அவளது ஆசையை அல்லது வாய்ப்பை. முளையிலேயே கிள்ளியெறிந்தனர். இருபது வயதிலேயே அந்தமகன் தனது விருப்பத்தில் திருமணம் செய்து கொண்டு வீட்டைவிட்டே போய்விட்டான். அந்தப்பெண் தனிமையில் பித்துப்பிடித்தவள்போல புலம்பித்திரிந்தாள்.  

 கணவன் கொள்ளையரால் கொல்லப்பட, சின்னஞ்சிறு மகளுடன் தனித்திருந்தாள். ஒரு பெண் ஓரளவு சொத்துகளை அவன் விட்டுச் சென்றிருந்தான். ஒரு வருடத்தின்பின் அவள் ஒருவனை விரும்பி பேச்சுவார்த்தை நடாத்தி பெரியவர்கள் சேர்ந்து திருமணம் செய்ய முடிவானது. அவளது தாயும் தமயனும் சேர்ந்து அதை முறித்துப்போட்டனர். காரணம் இறந்து போனவனின் சொத்து இன்னொருவன் வந்தால் தம்மால் ஆளமுடியாது என்பதால். பாவம் அந்தப்பெண் விரைவிலேயே தன் உறவினன் ஒருவனுடன் திருமணமில்லாமலே வாழத்தொடங்கினாலும் அது சமுதாயத்தில் திருட்டு காதல் என்றே பெயர்பெற்றது. 

யுத்தம் நடத்திய கோரத்தாண்டவத்தில் மரணித்தவர்களின் விதவைகளில் பலர் புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். சிலர் தம்மை பிள்ளைகளுக்காக அர்ப்பணித்து வாழ்கிறார்கள். ஓர் அளவில்தான். பாரதிதாசன் சொன்னது போல இங்கே கோரிக்கையற்று எந்த வேரிலும் பழுத்த பாலாப்பழம் கிடையாது. தமது விருப்பங்களை நிறைவேற்ற பல பெண்களால் இயலவில்லை. சமுதாயம் குடும்ப கெளரவம், பிள்ளைகள் என பல தளைகள் அவளை சூழ்ந்துள்ளது.  

இதைப்பற்றி ஒரு கலந்துரையாடலில் பேசும்போதே ஒரு புண்ணியவான் கேட்டார் அப்படி யாருமே இல்லை. இருந்தால் ஒருவருடைய பெயரையாவது சொல்லட்டும் பார்க்கலாம். என்று. அதிர்ந்துதான் போனேன். ஒரு படித்த மனிதனுக்கு அப்படி ஒரு பெண்ணுடைய பெயரையும் கேட்பது தப்பென்று கூட தெரியவில்லை. இதுதான் வண்ணம்பூசிய கருத்து. இதெல்லாவற்றுக்கும் மேலாக பெண்கள் மனக்கட்டுப்பாட்டுடன் பண்பாக மறுமணம் செய்யாமல் வாழ்வதே முறையாகும் என்றொருவர் பகர்ந்தார். எல்லா இடங்களிலும் எல்லா பிரச்சினைகளிலும் பெண்களை வழிநடத்த இப்படியான ஆண்கள் ஆதிவாசிகள்போல இன்னும் இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் தமது கருத்துகளை மட்டுமே மற்றவர்கள் ஏற்கவேண்டும் என்ற மனநிலையில்தான் வாழ்கிறார்கள். உலகம் இவர்களை தட்டிவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அறியாமலே. நான் சொல்லுறன். எனக்கு எல்லாம் தெரியும் அப்படி யொண்டுமில்லை. ஏலுமெண்டா பேரைச்சொல்லட்டும் என்பவர்களுக்கு நான் சொல்லக்கூடியது ஒன்றுதான். இன்னும்கூட காற்சட்டைக்குள் நின்றுகொண்டு, பெண்களுக்கு சேலைகட்டி விடுபவர்கள் இவர்கள்தான்.    

தமிழ்க் கவி பேசுகின்றார்

Comments