பேராதனை பகடிவதை முகாமில் சாட்சிகளுடன் சிக்கியவர்கள் விடுவிக்கப்பட்டது எப்படி? | தினகரன் வாரமஞ்சரி

பேராதனை பகடிவதை முகாமில் சாட்சிகளுடன் சிக்கியவர்கள் விடுவிக்கப்பட்டது எப்படி?

பகடிவதைக்காரர்கள் சட்ட ரீதியாக விரிவுரைகளில் பங்கேற்பது பிழையான பின் உதாரணம்

பேராதனை பல்கலைக்கழகத்தில் மனநோயாளிகளால் நடாத்திச் செல்லப்பட்ட மிருகத்தனமான வதைகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. அந்த வதைகள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முறைகள் தற்போது சமூக பேசுபொருளாக ஆகியிருக்கின்றது.

கலஹா வீதியில் அமைந்துள்ள வாடகை வீடொன்றை வதை இல்லமாக மாற்றிக் கொண்டு பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவர்களை மிருகத்தனமான வதைகளுக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தபோது சட்டத்தின் பிடியில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படவில்லை. அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடையும் நீக்கப்பட்டு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு வந்தமை தொடர்பில் தற்போது பேசப்படுகின்றது.

1998ம் ஆண்டின் 20ம் இலக்க கல்வி நிறுவனங்களில் பகிடி வதைகள் மற்றும் வேறு வகைகளிலான வன்முறைச் செயற்பாடுகளைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ் அவ்வாறான படுமோசமான பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைச் செய்வது மாத்திரமின்றி மோசமான வகையில் உடல் மற்றும் உளவியல் ரீதியான வதைகள் மேல் நீதிமன்றத்தினால் கூட பிணை பெற்றுக் கொள்ள முடியாத குற்றங்களாகும். அவ்வாறிருந்தும் கலஹா சித்திரவதை கூடத்தில் சாட்சியங்களோடு கண்முன்னாலேயே கைகளில் அகப்பட்டுக் கொண்ட மனிதாபிமானமற்ற சித்திரவதைகளைச் செய்தவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள இடமளிக்கப்பட்டிருக்கின்றது. இந்த வெளிப்படுத்தப்படுதலில் இருப்பது நாட்டின் சட்டம் தொடர்பில் மிகவும் தவறான முன்னுதாரனமாகும்.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் தொடர்பில் நேரடியான அதிகாரங்களுடன் செயற்படும், இடம்பெறும் சம்பவங்களுக்கு உரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய பல்கலைக்கழகங்களின் நிர்வாக சபைகள் தமது பல்கலைக்கழகங்களினுள் இடம்பெறும் சட்டவிரோத சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பில் செயற்பட்டிருப்பது நம்ப முடியாத, ஆளுமையற்ற முறைகளிலாகும்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் சித்திரவதைகள் இடம்பெற்றிருப்பது அதற்கு மற்றொரு உதாரணமாகும். அன்று கலஹா வீதியின் சித்திரவதை கூடத்தில் கடும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சித்திரவதையாளர்கள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்கள் என்பதை அவ்வாறான பின்புலத்திலேயே கேட்க வேண்டியுள்ளது. அந்தச் சுற்றிவளைப்பில் கலந்து கொண்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னணி விரிவுரையாளர் ஒருவர் தனது அனுபவங்களை இவ்வாறு விபரித்தார்.

விரிவுரையாளரின் அனுபவம்

'பல்கலைக்கழகத்தினுள் பகிடிவதைகளைச் செய்வதைத் தடுப்பது அல்லது நடாத்திச் செல்வதற்கு இடமளிப்பது பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. அது தொடர்பில் நான் அனுபவங்களுடனேயே கூறுகின்றேன். பகிடி வதைகளுக்கு எதிராக நேரடி கொள்கையுடன் இருந்ததால் நான் விவசாய கல்வி பீடாதிபதியாக இருந்த 80ம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து 10வருடங்கள் வரையில் எனது பீடத்தில் எந்த ஒரு பகிடி வதைச் சம்பவங்களும் இடம்பெறவில்லை. எவ்வாறாயினும் மீண்டும் பகிடிவதைச் சம்பவங்கள் மிகவும் திட்டமிட்ட மிக மோசமான வகையில் இடம்பெற்றுள்ளது.

அவர்கள் பின்னர் இந்த வதைகளைச் செய்ய ஆரம்பிப்பது பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியிலாகும். அதன் முதல் கட்டங்களில் மோசமான பகிடிவதைகளைச் செய்வதற்கு சிரேஷ்ட மாணவர்கள் புதிய மாணவர்களை தமது தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு இன்னும் திட்டமிட்ட வகையில் அடுத்த கட்டங்கள் இடம்பெறும்.

(மிகுதி அடுத்த வாரம்)

சுபாஷிணி ஜயரத்ன
தமிழில்: - எம்.எஸ்.முஸப்பிர்

Comments