முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம்; கருத்தாடல்கள் மக்கள் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம்; கருத்தாடல்கள் மக்கள் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்

1970களில் இருந்தே பாலஸ்தீனத்தில் குற்றவியல் வழக்குகளுக்குப் பெண்கள் நீதிபதிகளாக இருந்தனர். அப்படி இருந்தும் இஸ்லாமிய மதம், நீதிமன்றம், நீதிபதி என்று வந்தபோது அங்கிருந்த உலமாக்கள், பெண்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதால் அவர்கள் காதி நீதிபதிகளாக வரமுடியாது, என்ற கருத்தையே கொண்டிருந்தனர். இதே வாதம்தான் இன்று இலங்கையிலும் உலமாக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.  

தேர்தல்களில் பெண்களின் வாக்குரிமையை மறுப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் மேற்குலகு பயன்படுத்திய அதே வாதம்தான் இது.

குர்ஆன், சுன்னாவின் இலட்சியங்களை இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.  

பெண்களின் குறைந்தபட்சத் திருமண வயதை அதிகரிப்பதும், பெண்களை காதிகளாகவும், விசேட காதிகளாகவும் விவாகப் பதிவாளர்களாகவும் நியமிப்பதும் ஷரியாவுக்கு விரோதமானது என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். பல முஸ்லிம் நாடுகளில் குறைந்தபட்ச திருமண வயது 18என்பதைக்கூட ஏற்க தயாராக இல்லாத ஒரு ஜம்மியத்துல் உலமாவின் ஆலோசனைகளுக்கு அமைவாக முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தினைத் திருத்துவது துரதிர்ஷ்டமானது. பலஸ்தீன் போன்ற நாடுகளிலேயேகூட பெண்கள் காதிகளாவும், விவாகப் பதிவாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதையும், உலகம் முழுவதிலும் உள்ள பல கற்றறிந்த உலமாக்கள் அவற்றுக்கு ஒப்புதல் அளித்திருப்பதையும் அவர்கள் கருத்தில் கொள்வதற்கு மறுக்கிறார்கள்.  

1951ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் முக்கியமான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலிருந்து எழுந்துள்ள கோரிக்கை நீண்ட வரலாறுடையது. முஸ்லிம் கல்வியாளர்கள், ஆய்வறிவாளர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூகத்தினர், பெண்கள் அமைப்புகள் எனப் பலதரப்பட்டவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இத்தகைய சீர்திருத்தத்துக்காகக் குரல் கொடுத்துவந்துள்ளனர். 1970, 1984, 1990, 2005, 2009ஆகிய ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தாலும் முஸ்லிம் அமைப்புகளாலும் இதைப்பற்றி ஆராய்வதற்குப் பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இறுதியாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சலீம் மர்சூப் தலைமையில் முன்னாள் நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட 2009ல் நியமிக்கப்பட்ட 19உறுப்பினர்களைக் கொண்ட குழு தனது அறிக்கையைத் தற்போதைய நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரல்லவிடம் 2018ஜனவரியில் சமர்ப்பித்தது.  

ஒன்பது ஆண்டுகால கடும் உழைப்பு, பரந்துபட்ட கலந்தாலோசனைகளின் பின்னரும்கூட இக்குழு ஏகமனதாக ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாமல் போனது. இக்குழு இரண்டாகப் பிளவுபட்டு ஒரே அறிக்கையில் இரண்டு வேறுபட்ட ஆலோசனைகளைச் (ஆலோசளைகள் 1, ஆலோசனைகள் 11) சமர்ப்பித்துள்ளது.  

இக்குழுவின் ஒன்பது உறுப்பினர்கள் ஒப்பமிட்டு சலீம் மர்சூப் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட, அறிக்கையின் மிகப் பெரும்பகுதியை உள்ளடக்கும், ஆலோசனைகள் 1குறிப்பாக முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரை பாராபட்சமானவை என பரவாலாகக் கருதப்படும் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பான விடயங்களில் பால் சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை அடைவதற்குரிய சாதகமான முற்போக்கான நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளன. கணிசமான உலமாக்களும், முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் ஆய்வறிவாளர்களும், பெண்கள் அமைப்புகளும் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் சீர்திருத்தங்களில் சில குறைபாடுகள் காணப்பட்டபோதும், ஏற்கின்றனர். சலீம் மர்சூப் குழுவினரின் ஆலோசனைகள் முஸ்லிம் பெண்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவுசெய்யவில்லை என்றாலும் கூட, பெண்களும் சமமான பிரசைகள் என்ற வகையில் அவர்களது கௌரவத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த ஆலோசனைகள் இருப்பதால் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர்.  

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரும் செயலாளரும் தலைமைதாங்கும் மாற்றுக் குழுவினது ஆலோசனைகள் 11ஆனது, சலீம் மர்சூப் குழுவினரின் ஆலோசனைகளிலிருந்து மிக முக்கியமான அம்சங்களில் முரண்படுகின்றன. “முஸ்லிம் சட்டத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் சமூகத்தின் அவசரமான தேவை நிருவாகச் சீர்திருத்தமே தவிர சட்டத்தைத் திருத்துவதல்ல“ என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது. தற்போதுள்ள முஸ்லிம் தனியாள் சட்டம் ஷரியாவின் அடிப்படையிலானது என்றும், அது மாற்றமுடியாதது என்றும் வாதிட்டு வருகின்றனர்.  

சமத்துவம், சமூக நீதி என்பன இஸ்லாத்தின் அடிப்படையான இரு மூலக்கோட்பாடுகள் என்று கூறுகின்ற உலமாக்களே முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கு எதிராக இருப்பது பிற்போக்கானது. மலேசியா, இந்தோனேசியா, எகிப்து, மொறோக்கோ, டுனீசியா போன்ற பல இஸ்லாமிய நாடுகள் ஏற்கனவே தனியார் சட்டங்களில் பல முன்னேற்றகரமான திருத்தங்களைப் பாலின சமத்துவத்தையும், பெண் கௌரவத்தினையும் அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தியுள்ளன. ஏன் முஸ்லிம்கள் "புனித பூமி”யாக கருதுகின்ற பாலஸ்தீனத்திலேயே கூட இஸ்லாமிய ஷரீஆவின் முஸ்லிம் தனியார் சட்டத்தில் காலத்திற்கு ஏற்புடைய பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அங்கு பெண்கள் 2006இலேயே காதி நீதிமன்றங்களில் காதி நீதிபதிகளாக பணியாற்றத் தொடங்கிவிட்டனர்.  

முஸ்லிம் விவாக விவாகரத்துத் தனியார் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் கருத்தொருமைப்பாடு கொண்டுள்ள போதிலும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அழுத்தம் அவர்களைத் தடுமாறச் செய்து வருகின்றது. விவாக விகாரத்துச் சட்டத் திருத்தம் வெறுமனே அரசியல் தளத்திற்கான காயாக இருப்பதிலிருந்து மக்கள் தளத்திற்கு நகர்த்தப்படவேண்டும். கடந்த முப்பதாண்டு காலத்தோடு ஒப்பிடுகையில் இந்த நிலையில் மெச்சத்தக்க முன்னேற்றங்கள் பல நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தனியார் சட்டத் திருத்தம் தொடர்பான கருத்தாடல்களை மக்களிடையே எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளும் நடந்துதான் உள்ளன. சிவில் அமைப்புகளும், பெண் செயற்பாட்டாளர்களும் பல்வேறுபட்ட அழுத்தங்களையும் செயற்பாடுகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வந்துள்ளனர். ஆனால் இவை போதவில்லை. ஆண்களின் தலைகளுக்கு மேலாக உயர்ந்து ஒலிக்க இன்னும் பெண்கள் வலுப்படவேண்டியதன் அவசியத்தையே அண்மைக்கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.  

சட்டத் திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களிலும் சந்திப்புக்களிலும் வெறுமனே ஆண்களே குழுமியிருக்கிறார்கள். பெண்களுக்காக பெண்களின் நலன்களுக்காகத் தீர்மானிக்கும் சக்தியாக தங்களை தாங்களே முன்னிறுத்திக் கொள்ளும் தன்முனைப்பு வியாதிலிருந்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், ஏனைய உலமாக்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தங்களை விடுவித்துக் கொள்ளவேண்டும்.  

பெண்ணின் திருமண வயது அதிகரிக்கப்படுவது மட்டுமல்ல, விவாகப் பதிவுப் பத்திரத்தில் மணமகளின் கையெழுத்தை கட்டாயமாக்குதல் வேண்டும். பெண்கள் காஸி நீதவான்களாக நியமிக்கப்படவேண்டும்.

விவாகரத்தின் போது பெண்ணுக்கு நஷ்டஈடு தரப்படவேண்டும். குழந்தைகள் பராமரிப்புக்கு நியாயமான தீர்வுகள் அளிக்கப்படவேண்டும். பலதாரமணம் முற்றாகவே இல்லாமலாக்கப்படவேண்டும். பொதுச்சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் தங்களது திருமணங்களைப் பதிவு செய்யும்படியான நெகிழ்வுத்தன்மை கொண்ட ஒரு தனியார் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவேண்டும். 

ஸர்மிளா ஸெய்யித்

Comments