மைத்ரியின் தொட்டலாகல விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

மைத்ரியின் தொட்டலாகல விஜயம்

மிகவும் பின்தங்கிய, ஹப்புத்தளை நகரிலிருந்து பல மைல்கள் அப்பால் அமைந்திருக்கும் ஒரு சாதாரண பாடசாலைக்கு கரடு முரடான பாதையைக் கடந்து அம்மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் சந்திப்பதற்காகவே பிரத்தியேகமாக நாட்டின் தலைவர் விஜயம் செய்வதென்பது ஓர் அரிய நிகழ்வாகும்.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பல தசாப்தங்களாக தோளோடு தோள் நின்று உழைக்கும் தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் உயர்வுக்காக என்னதான் பங்களிப்பினை செய்தபோதிலும் அவர்களை இரண்டாம்பட்ச பிரஜைகளாக பார்ப்பதே இந்த நாட்டில் இன்னமும் வழக்கத்தில் இருந்து வருகின்றது.

இந்த பின்னணியில் நூற்றுக்கு நூறு சதவீதம் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்றுவரும் ஊவா மாகாணத்தின் ஹப்புத்தளை தொட்டலாகல தமிழ் வித்தியாலயத்திற்கு இம்மாதம் முதலாம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதி ஒருவர் நேரடியாக விஜயம் செய்தமையானது வரலாற்றில் பதிய வேண்டிய ஒரு நிகழ்வாகவே அமைகின்றது. காரணம் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்கின்ற, குறிப்பிட்டுக் கூறத்தக்க அளவு கல்வியிலும் பௌதீக ரீதியிலும் வளர்ச்சி கண்டிருக்கும் பாடசாலைகளுக்கு நாட்டின் தலைவர் விஜயம் செய்யும் சாத்தியம் இருந்தபோதிலும் மிகவும் பின்தங்கிய, ஹப்புத்தளை நகரிலிருந்து பல மைல்கள் அப்பால் அமைந்திருக்கும் ஒரு சாதாரண பாடசாலையான இப்பாடசாலைக்கு கரடுமுரடான பாதையைக் கடந்து அம்மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் சந்திப்பதற்காகவே பிரத்தியேகமாக நாட்டின் தலைவர் விஜயம் செய்வதென்பது ஓர் அரிய நிகழ்வாகும்.  

ஊவா மாகாணத்தின் தமிழ் கல்வி அமைச்சரான செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை வகுப்பறைக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  இவ்விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் தோட்டத் தொழிலாளர்களாகவே மாறும் நிலைமை மாற வேண்டும் என்றும் அவர்கள் சிறந்த கல்வியைப் பெற்று கல்வியின் மூலம் சமூகத்தில் உயர்ந்த நிலைமையை அடைய வேண்டும் என்றும் அதற்கு அம்மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதோடு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தம்மாலான அனைத்து உதவிகளையும் பெற்றுத் தருவதாகவும் கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் நுவரெலிய ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்தபோது அங்கே தொழிலாளர்களாக கடமை புரியும் சில இளைஞர்களுடன் கதைத்ததாகவும் அதன்போது அவர்கள் சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சித்தி பெற்ற பெருந்தோட்டத்துறை சார்ந்த இளைஞர்கள் என்பது தெரிய வந்ததாகவும் கல்வித் தகைமைகள் இருந்தும் இவ்வாறான சிறு தொழிலில் எதற்காக ஈடுபட்டிருக்கின்றீர்கள்? உங்களது கல்வித் தகைமைக்கு ஏற்ற வேறு தொழில்களை பெற்றுத்தரவா? என தான் வினவியபோது, அவர்கள் தாம் செய்துவரும் அச்சிறு தொழில்களையே செய்து கொண்டு அவர்களது பிரதேசங்களிலேயே வாழ்வதே தமக்கு வசதியாக இருப்பதால் அதனையே தாம் பெரிதும் விரும்புவதாகவும் தம்மிடம் கூறியதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  

ஜனாதிபதியின் இக்கருத்துக்கு சான்று பகரும் வகையிலான ஒரு நிகழ்வும் இவ்விழாவில் இடம்பெற்றது. ஊவா மாகாணத்திலிருந்து பல தசாப்தங்களின் பின்னர் முதல்  முறையாக ஊவா மாகாண பெருந்தோட்டப்புற பாடசாலையிலிருந்து பொறியியல் துறையில் கல்வி கற்பதற்காக தகைமை பெற்ற மாணவன் உள்ளிட்ட விஞ்ஞான, வர்த்தக மற்றும் சட்டத் துறைகளில் பல்கலைக்கழக கல்வியைக் கற்பதற்கு தகைமை பெற்ற 10மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டால் ஜனாதிபதி அவர்களினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வானது சகலவித தடைகளையும் தாண்டி எவராலும் கல்வியில் வெற்றி பெற முடியும் என்பதற்கும் அதற்கு அவர்களது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியுமே தேவை என்பதற்கும் அவ்வாறு தமது முயற்சியால் வெற்றி பெறும் பட்சத்திலேயே அவர்களால் தாம் சார்ந்த சமூகத்திற்கு விடிவை ஏற்படுத்த முடியும் என்பதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.  

இந்த விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மாணவர்களிடம் சென்று சிநேகபூர்வமாக உரையாடியதோடு அவர்களது குறை நிறைகளையும் கேட்டறிந்தார். அவ்வேளையில் தமது பாடசாலைக்கு முறையான ஒரு பாதுகாப்பு வேலி இன்மையினால் பல பாதிப்புகள் ஏற்படுவதாக அம்மாணவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்ததையடுத்து பாடசாலையை சுற்றி நிரந்தரமான பாதுகாப்பு வேலியொன்றை அமைப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கித் தருவதாக தெரிவித்ததோடு, அலுவலகம் திரும்பியதும் தனது வாக்கை நிறைவேற்றும் வகையில் அப்பாடசாலையில் வேலி அமைப்பதற்கான 25இலட்ச ரூபாய் நிதியையும் ஒதுக்கீடு செய்திருக்கின்றார். அதன்மூலம் அம்மக்கள் மீதும் அம்மாணவர்கள் மீதும் இந்த நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொண்டிருக்கும் பாசத்தினையே வெளிப்படுத்தியிருக்கின்றார்.

இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும் அம்மக்கள் மத்தியில் உளவியல் ரீதியான ஒரு சாதக தாக்கத்தினை ஏற்படுத்தக் காரணமாக அமைகின்றது என்பதையும் இலங்கையின் முன்னாள் பிரதமரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகருமான எஸ்.டபிளியு.ஆர்.டி. பண்டாரநாயக்க கூறிய ‘மனிதனுக்கு சேவை செய்வதே மனிதனின் உன்னத பணியாகும்;’ என்ற கோட்பாட்டையும் மேலோங்கச் செய்கின்றது.  

ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து பல்வேறு கடினமான கசப்பான தடைகளைத் தாண்டி இந்த நாட்டின் அரச தலைவன் என்ற நிலைமைக்கு உயர்ந்தவன் என்ற வகையில் முயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் தம்மால் எந்த இலக்கையும் அடைய முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் ஜனாதிபதியின் தொட்டலாகல தமிழ் வித்தியாலயத்திற்கான விஜயத்தினை ஒட்டுமொத்த தோட்டப்புறத்தைச்சேர்ந்த மாணவ சமுதாயத்தினருக்கும் அவர்களது எதிர்காலத்தை சிறந்ததாக அமைத்துக் கொள்வதற்காக பெற்றுக்கொடுத்த ஒரு உளவியல் உந்துசக்தி பாடமாக எடுத்துக்கொள்ள முடியுமாயின், அதுவே ஜனாதிபதியின் இந்த விஜயத்திற்கும் அதனை மிகுந்த சிரத்தையுடன் ஏற்பாடு செய்த ஊவா மாகாணத்தின் தமிழ் கல்வி அமைச்சரான செந்தில் தொண்டமானின் முயற்சிக்கும் பலன் கிடைத்ததாக அமையும்.

ரவி ரத்னவேல்

Comments