யார் ஜனாதிபதியாக வருகிறார் என்பதல்ல, யாருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை என்பதே முக்கியம்! | தினகரன் வாரமஞ்சரி

யார் ஜனாதிபதியாக வருகிறார் என்பதல்ல, யாருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை என்பதே முக்கியம்!

வாரமஞ்சரியுடன் மனம் திறந்து உரையாடுகிறார் தமிழ் முற்போக்கு

கூட்டணியின் நுவ​ெரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் 

'கண்ணுக்குப் புலப்பட வேண்டிய அபிவிருத்திகளைச் செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு வந்திருக்கிறது. அடுத்த இரண்டு வருடத்தில் இதனைச் செய்யாது விட்டால் மக்களிடத்தில் இந்த அரசாங்கம் தொடர்பான அபிப்பிராயம் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்னரே கூறினேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது'

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐ.தே.கவில் ஒரு குழப்பம் நிலவுகிறது. பலரது பெயர்கள் வேட்பாளர்களாக பிரேரிக்கப்படுகின்றன. இது தொடர்பாக உங்கள் முற்போக்குக்கூட்டணி எடுத்திருக்கும் நிலைப்பாடு என்ன? யார் ஜனாதிபதியாக வந்தால் நன்றாக இருக்கும் என தனிப்பட்ட ரீதியாக கருதுகிறீர்கள்?  

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் பொதுவாக பிரதான இரு கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள். சிறு கட்சிகளைச் சார்ந்தவர்களும் போட்டியிட்டு வெல்ல முடியாவிட்டாலும் மாற்று சிந்தனைகள் கொண்ட தமது பிரசாரங்களை மேற்கொள்ள இதனை களமாகப் பயன்படுத்துவார்கள்.  

2010ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அரசியலில் ஒரு செல்நெறி வந்திருக்கிறது. கட்சியின் வேட்பாளர்கள் அல்லாத ஒருவரை முன்னிறுத்தி ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவது. அதற்கு பொது வேட்பாளர் எனப் பெயரிடுவது வழக்கம். இரு பிரதான கட்சிகளின் தலைவர்களைத் தவிர இராணுவத் தளபதியை ஜனநாயக நாட்டின் தலைவராக்குவதற்கு சரத் பொன்சேகா பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டார். பின்னர் அதே ஒரு போக்காக மாறி 2015ம் ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் முன்னைய ஜனாதிபதியில் அதிருப்தி கொண்டு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தீர்மானித்த மக்களும் அரசியல் கட்சிகளும் மாற்றம் கருதி அதே கட்சியின் பொதுச் செயலாளர் பொது வேட்பாளர் என்ற பெயரில் எதிர்க்கட்சியின் ஆதரவோடு நிறுத்தப்பட்டார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவானார்.

எனவே இவ்விரண்டு அனுபவங்களும் கடந்த பத்தாண்டு காலமாக எமக்கிருக்கிறது.  அந்த வழியில் இப்போது இரண்டு கட்சிகளைச் சேர்ந்த ஆறுக்கும் மேற்பட்டோர் அந்த இரண்டு கட்சிகளிலிருந்தே முன்வருவதற்கான முயற்சிகளை எடுக்கிறார்கள். அப்படி வரலாம் என்ற பின்னணி கடந்தகாலங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆளாளுக்கு முற்படுவது இந்த போக்கின் தன்மை என்று பார்க்கிறேன். அவர்களை யார் எனத் தீர்மானிப்பது எம்மைப்போன்ற கட்சிகளின் வேலையல்ல, அதற்கான சாத்தியப்பாடும் இல்லை என நான் பார்க்கிறேன். எனவே கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த பின்னர் இந்த யோசனைகளை முன்வைப்பதா, அல்லது வேட்பாளர்களிடம் முன்வைப்பதா என்கிற பிரச்சினையும் இருக்கிறது. கடந்த இரண்டாண்டு அனுபவங்களைப் பார்த்தால் கட்சிகளிடம் முன்வைத்து பிரயோசனமில்லை. ஐ.தே.கவிடம் முன்வைத்தும் பலனில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் முன்வைப்பதும் அவசியமில்லை. ஏனெனில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களது செயலாளர் இன்னொரு அணியில் இருக்கலாம்.  

எனவே வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்பட்ட பின்னரேயே அதில் பொருத்தமான வேட்பாளர் யார் என்பதை நாங்கள் தீர்மானிப்போம். எங்களது வேலைத்திட்டங்களை முன்வைத்து அவர்களிடம் பேரம்பேசுவதும் எமது வழிமுறையாக இருக்கும். அதற்கான வேலைத்திட்டங்களைச் செய்துகொண்டிருக்கிறோம். ஐ.தே.முன்னணியுடன் கூட்டணி என்பது ஏற்கனவே ஐ.தே.க முன்னணி அரசாங்கத்தில் இருக்கிறோம் என்ற அடிப்படையில் அந்த முன்னணியை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தில் நாங்களும் பங்குவகிக்கிறோம். இந்த முன்னணி உருவாக்கம்தான் ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்கும் என்றோ ஜனாதிபதித் தேர்தலுக்காகத்தான் இந்த முன்னணி உருவாக்கப்படுகின்றது என்றோ கருதுவதற்கில்லை. எம்மைப் பொறுத்தவரையில் நாம் கைச்சாத்திடுகின்ற ஐ.தே.முன்னணியையும் ஜனாதிபதி வேட்பாளரையும் ஒன்றாகப் பிணைத்துப் பார்க்கவில்லை. இரண்டையும் வெவ்வேறு அம்சங்களாகப் பார்க்கிறோம். இருக்கின்ற அணி என்ற அடிப்படையில் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியை எவ்வாறு பலப்படுத்தலாம் என்ற யோசனையில் அதனைச் செய்கிறோம்.  

2015இல் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள். ஐ.தே.கவுக்கும்தான்! நான்கரை ஆண்டுகளின் பின் இருவரின் செல்வாக்குகள் தொடர்பாக உங்கள் மதிப்பீடுகள் என்ன?  

முதல் இரண்டு வருடங்கள் என்பது நல்லாட்சி தொடர்ந்த காலத்தில் அந்த மாற்றம் மக்களின் கண்களுக்கு புலப்படாத மாற்றங்களாக இருக்கலாம். குறிப்பாக 18ஆவது அரசியலமைப்பு மாற்றம் என்னவென்பதை மக்கள் அறியாமல் இருந்து 18ஆவது அரசியல் யாப்பின் பலத்தோடுதான் மூன்றாவது தடவையாகவும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். மூன்றாவது தடவை மட்டுமல்ல, அதன் பின்னரும் எத்தனை தடவையும் போட்டியிடும் வாய்ப்பை உருவாக்கியிருந்தார்.

இப்போதும் 18ஆவது திருத்தப்பட்டு 19கொண்டுவரப்படாத பட்சத்தில் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அந்த 18ஆவது திருத்தத்தில் இருந்தது. 18ஆவது மாற்றப்பட்டதென்பது தன்னைக்குறிவைத்தே மாற்றப்பட்டதாக மஹிந்த சொல்லிக்கொண்டாலும் அவரல்லாத வேறு யாராக இருந்தாலும் சர்வாதிகாரத்தின் பக்கமாக ஒருவரின் கீழேயோ அல்லது ஒரு குடும்பத்தின் கீழேயோ ஆட்சி கொண்டுபோவதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகளை இந்த அரசாங்கம் நிறுத்தியிருக்கிறது.

அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உடன்பட்டிருக்கிறார். பாராளுமன்றமும் ஒத்துழைத்திருக்கிறது. அதனை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.  

அதேபோல 17ஆவது அரசியலமைப்பின் கீழ் சுயாதீன ஆணைக்குழு கொண்டுவரப்பட்டும் அது நடைமுறைப்படுத்தப்படாமலிருந்தது. இந்நிலையில் 19நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று அதனால்தான் தேர்தல்கள் சம்பந்தமாகவோ நீதிமன்றம் சம்பந்தமாகவோ வேறு ஏதேனும் விடயங்கள் சம்பந்தமாக ஒரு சுயாதீனமான தீர்மானமெடுக்கக்கூடிய ஜனநாயகம் நாட்டில் இருக்கிறது. இவையெல்லாம் இப்போது யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதாவது 2009இற்கும் 2014இற்கும் இடைப்பட்ட ஆட்சிக்காலத்தின்போது ஜனநாயகத்தைப் பற்றியோ சுதந்திரத்தைப்பற்றியோ பேசமுடியாமல் இருந்தது. குறிப்பாக தகவலறியும் உரிமைச் சட்டம்கூட கொண்டுவரப்படவில்லை. அதுவும் இப்போது கொண்டுவரப்பட்டுள்ளது.  

இதுபோல ஜனநாயக அம்சங்களை வலுப்படுத்தக்கூடிய விடயங்கள் இந்த ஆட்சியின் முதல் இரண்டு வருடகாலத்தில் நடைபெற்றதை யாரும் மறுக்க முடியாது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, இந்த கண்ணுக்குப் புலனாகாத அபிவிருத்தியையே அனுபவிக்க முடியாத அதுபற்றி யோசிக்காத இலங்கை போன்ற சூழலில் மக்கள் எதிர்பார்த்ததெல்லாம் கண்ணுக்கு புலப்படக்கூடியதே. கண்ணுக்குத் தெரியக்கூடியதை செய்ய வேண்டியதும் அரசின் கடப்பாடு. அதை நான் நல்லாட்சியின் இரண்டாண்டு முடிவில் இது தொடர்பில் எழுதியிருக்கிறேன். நல்லாட்சி காலத்தில் செய்யப்பட்டவை பாராட்டுக்குரியவை. ஆனால் இந்த கட்புலனாகாத ஜனநாயக மாற்று அபிவிருத்திகளை செய்தது மக்களை சென்றடைவது குறைவாக இருப்பதன் காரணமாக கண்ணுக்குப் புலப்பட வேண்டிய அபிவிருத்திகளைச் செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு வந்திருக்கிறது. அடுத்த இரண்டு வருடத்தில் இதனைச் செய்யாது விட்டால் மக்களிடத்தில் இந்த அரசாங்கம் தொடர்பான அபிப்பிராயம் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்னரே கூறினேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. 

இந்த ஜனநாயக நிலைப்பாட்டினை உருவாக்குவதற்காக அரசாங்கம் அக்கறை செலுத்தியிருந்தது. பிற்பகுதியில் அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் அக்கறை காட்டியது குறைந்திருந்தது. அதன் காரணமாக இந்த வருடத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என நினைக்கிறேன். இரண்டு வருடங்களின் பின்பு இரண்டு கட்சிகளிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு முறுகல்நிலை அவர்களுக்கிடையே ஒரு போட்டித்தன்மை உருவாகி அது நாட்டின் பொதுவான நிர்வாகத்திற்கும் அபிவிருத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதால் இரண்டு தரப்புக்கும் மக்கள் மத்தியில் ஓரளவு ஜனரஞ்சகத்தன்மை குறைந்தே காணப்படுகிறது.  

யுத்தகாலத்து கோட்டாபே ராஜபக்ஷவை சமாதான காலத்திலும் அவர் சர்வாதிகாரப் போக்கைத்தான் கடைப்பிடிப்பார் என்று முடிவு செய்யலாமா? அவர் ஜனாதிபதியாக வருவாரானால் 19ம் திருத்தத்தின் கீழ் எவ்வளவு தூரம் அவரால் சர்வாதிகாரத் தன்மையுடன் நடந்துகொள்ளலாம் எனக் கருதுகிறீர்கள்?  

அதுதான் உண்மை என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து கிடையாது. பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது அத்தகைய கடும்போக்குடன் செயற்பட்டார் என்ற பதிவுகள் இருக்கின்றன. காரணம் முப்பது வருட கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரும் ஒரு பொறுப்புடைய பாதுகாப்பு செயலாளராக இருக்கும்போது அந்த நிலையிலிருக்கக்கூடிய ஒருவர் இலகுவான நடமுறைகளைக் கைக்கொள்ள முடியாது. அது சாத்தியமும் இல்லை. அது இராணுவத்தின் பாணி. அவ்வாறான ஒருவர் நாட்டின் ஜனநாயக நிர்வாகத்திற்கு வருகிறார் எனும்போதுதான் வரலாமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் தான் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட வருகின்ற வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்தது இந்த நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும்தான். அது எப்போதென்றால் 2010இல் கோட்டாபே செயலாளராக இருக்கும்போது இராணுவத் தளபதியாக இருந்தவரை முன்னிறுத்தி ஐ.தே.கவும் ம.வி.முன்னணியும்கூட இவரை ஜனாதிபதியாக்குவோம் என்ற ஒரு காட்சியை காட்டினோம் அல்லவா!  

எனவே எப்படி நாங்கள் சரத்பொன்சேகாவிலிருந்து கோட்டாபேவை பிரித்து பார்க்க முடியும் என்கிற நியாயப்பாடும் இருக்கிறது. பிரச்சினை எங்கே இருக்கிறதென்றால், நல்லாட்சி செய்வார் என்ற அடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதோ அதுபோலத்தான் இதுவும். கோட்டாபே வந்தால் இராணுவ ரீதியான கெடுபிடிகளை சிவில் நிர்வாகத்திலும் கையாள்வார் என்கின்ற எதிர்பார்ப்பு இருப்பது போல அது இல்லாமலும் இருக்கலாம். அது தலைகீழாகவும் மாறலாம்.  

19ஆவது அரசியலமைப்புக்கு கீழாக அதிகாரம் குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக முன்புபோல ஒரு நிறைவேற்று ஜனாதிபதியாக எவராலும் செயற்பட முடியாது. அது உறுதியான தன்மை. ஆனால் அத்தகைய ஒருவரை ஜனாதிபதியாக்குவதற்காக அணிதிரள்வோரின் எண்ணிக்கை பாராளுமன்றத்தில் 150இற்கு மேலாக உறுப்பினர்களாக பெற்றுக்கொள்வாராக இருந்தால் அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு மீண்டும் 19ஆவது திருத்தத்திற்கு போவதற்கான வாய்பை அவர்களால் உருவாக்க முடியும். எனவே இங்கே யார் ஜனாதிபதியாக வருகிறார் என்பதல்ல பிரச்சினை. அந்த ஜனாதிபதிக்குக் கீழ் அமையப்போகின்ற அந்த அணியிலிருந்து எத்தனைபேர் பாராளுமன்றம் வருகிறார்கள் என்பதே முக்கியம்.  

ஜனாதிபதித் தேர்தலில் காட்டுகின்ற ஆர்வத்தை விட மிகுந்த அவதானமாக செயற்பட வேண்டியது பாராளுமன்றத் தேர்தல் என்றே நினைக்கிறேன். எவர் ஜனாதிபதியாக வருகிறாரோ அவர் சார்ந்த கட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வராமல் மக்கள் எவ்வாறு பார்த்துக்கொள்கிறார்களோ அதிலிருந்துதான் இந்நாட்டில் எதிர்கால ஜனநாயகம் தங்கியிருக்கிறதே தவிர இவர் வருகிறாரா அவர் வருகிறாரா என்பதல்ல. ஜனாதிபதியாக வருபவரின் கட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் கொடுத்துவிடுவோமாக இருந்தால் அவர்கள் திரும்பவும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே செய்யத் தொடங்கிவிட்டார்கள். 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் எனக்கூறி விஜயதாச ராஜபக்ஷ ஒரு முன்மொழிவைச் செய்திருக்கிறார். இந்த சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுத்துவதற்கும், 18ஆவதிலுள்ள விடயங்களை திரும்பவும் கொண்டுவருவதற்கும் அதாவது 19ஆவது திருத்தத்தை ரத்துச் செய்வதற்கும் வகை செய்யும் திருத்த மசோதா பற்றி அவர் பேசுகிறார். எனவே அது எப்போது முடியுமென்றால் ஜனாதிபதி தேர்தலூடாக அல்ல, பொதுத்தேர்தலின் ஊடாகவே!  

சிறுபான்மையினரை நசுக்கிக்கொண்டு ஒருவரால் நாட்டின் தலைவராக நீடிக்க முடியும் எனக் கருதுகிறீர்களா?  

உண்மையில் இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் என்ற ஒன்றில்லை. இந்த நாட்டின் சிறுபான்மை என்பதற்கான அர்த்தம் வேறு. எண்ணிக்கை அடிப்படையில் கூடிய அல்லது குறைந்த மக்களாக இருக்கிறார்களே தவிர யாரும் சிறுபான்மை கிடையாது. அவர்களுக்கென்று ஒரு இனமும் மதமும் மொழியும் இருப்பதன் காரணமாக அப்படி நினைப்பதற்கில்லை. தனித்த சிங்கள ஆட்சியைக் கொண்டுவருவதற்கோ அல்லது தமிழராட்சியைக் கொண்டுவருவதற்கோ இந்நாட்டில் வாய்ப்பில்லை என்பதுதான் கடந்தகால வரலாறு. தனியான ஒரு தமிழராட்சியை கொண்டுவருவதற்காக கடந்த 30வருடமாக ஆயுதமேந்திப் போராடிய வரலாற்றில் தமிழராட்சி சாத்தியப்படவில்லை. தமிழர்களுக்கெதிரான ஒரு போராட்டத்தினால் தனி சிங்கள ஆட்சியைக் கொண்டுவருவதற்கான முயற்சி கடந்த காலங்களில் எடுக்கப்பட்டபோதும் அதுவும் சாத்தியப்படவில்லை. அதிலும் சிங்கள மக்களின் பெரும்பான்மையான ஆதரவோடு சிறுபான்மையின் வாக்குகளோடு மைத்திரிபால சிறிசேன வந்திருக்கிறார்.  

தனிச்சிங்கள ஆட்சியைக் கொண்டுவருவதற்கான நடைமுறை இன்று நேற்றல்ல, சுதந்திரத்திற்கு பின்னதாக ஒவ்வொரு காலகட்டத்திலும் இடம்பெற்றிருக்கிறது. நாம் அனைவரையும் சிங்கள இனவாதிகளாகப் பார்க்க முடியாது. முற்போக்கான சிங்கள மக்கள் இருக்கிறார்கள். நாட்டில் சிங்கள இனவாதம் பேசப்படுகிறது என்பதற்காக ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் இனவாத அடையாளங்களோடு பார்க்காமல் அதில் முற்போக்கானவர்களுடன் இணைந்து பார்க்கும்போது இலங்கையில் தமிழர்களுக்கான பாதுகாப்பு எப்போதும் இருக்கும். அந்த முற்போக்கான சிங்கள மக்கள் யார் கடும்போக்கான சிங்கள மக்கள் என்பதை அடையாளம் காண்பதே நமது வேலை.

உரையாடியவர் : பி. வீரசிங்கம்

 

Comments