வரலாற்று புகழ்மிக்க கண்டி எசல பெரஹர | தினகரன் வாரமஞ்சரி

வரலாற்று புகழ்மிக்க கண்டி எசல பெரஹர

இந்துக்களின் பூஜை வழிபாடுகளுக்கு ஒப்பான சம்பிரதாயங்கள்

வரலாற்று புகழ்மிக்க வருடாந்த கண்டி எசல பெரஹரவானது, இலங்கையில் இன ஒற்றுமைக்கும், மத ஒற்றுமைக்கும் காரணமாக விளங்குகின்றது. பெளத்தத்திற்கும், தமிழுக்கும் அது போல பெளத்தத்திற்கும் சைவ சமயத்திற்கும் இடையிலான நீண்ட வரலாற்று தொடர்புகள் உள்ளன என்பதை கண்டி எசல பெரஹர பறைசாற்றி நிற்கின்றது. இந்துக்களது பூசை வழிபாட்டு முறைகளிலே காணப்படும் சாஸ்திர, சம்பிரதாயங்கள் கண்டி எசல பெரஹர வழிபாட்டிலும் காணப்படுகின்றன. 

‘பெரஹர’ என்பது பிரகாரம் என்ற சொல்லிலிருந்து மருவி வந்த பதமாகும். பிரகாரம் என்பது தலத்தினை சுற்றி எனப் பொருள்படும். அதாவது தலத்தினைச் சுற்றிச்செல்லும் ஊர்வலமாகும். இப்பெரஹர, தமிழரின் சம்பிரதாயப்படி ஆடித் திருவிழாவாகவே நடாத்தப்பட்டுள்ளது. இலங்கை மன்னன் மகாசேனன்(கி.பி 274-301) புதல்வனான மன்னன் கீர்த்தி ஸ்ரீ மெஹாவன (கி.பி 301- – 328) இந்தியாவின் கலிங்க இளவரசனும் பின்னர் மன்னருமான சமுத்ரா குப்தாவுடன் கொண்டிருந்த நட்புறவு காரணமாக புனிததந்தம் இலங்கைக்கு வழங்கப்பட்டது. 

இறுதியாக புனிதப்பல் கண்டி இராச்சியத்தில் வைக்கப்பட்டு கண்டியில் புனிதப்பல்லுக்கான கோயிலாக  தலதா மாளிகை கட்டப்பட்டுள்ளது. 1707முதல் -1739வரை கண்டியை ஆட்சிசெய்த கடைசி சிங்கள மன்னன் வீர பராக்கிரம நரேந்திரசிங்கன் இறந்த பின், அவரது பட்டத்து ராணியான நாயக்க வம்சத்து ராணியின் இளைய சகோதரனான மதுரையைச் சேர்ந்த தமிழ் மன்னராக ஸ்ரீ விஜய இராஜசிங்கன் (173  – 1783) இராஜாதி இராஜசிங்கன்(1781- – 1798) இறுதியாக நாயக்க வம்சத்து மன்னராக ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன் (1798- _1815) போன்றோர் ஆட்சி செய்தனர். ஏழுபத்தைந்து (75) வருடங்களாக தமிழர்களே ஆட்சி புரிந்தனர். ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனின் இயற்பெயர் கண்ணுசாமி. இவர்களிடமே புனிதப்பல் இருந்தது. எனவே கண்டியில் இவர்களே எசல பெரஹர- திருவிழா ஊர்வலத்தினை நடாத்தினர். 

கண்டி பெரஹரவில் இந்துசமய தமிழ் கலாசார பண்பாட்டு பண்புகள் பல,  நீண்ட காலமாகவே காணப்பட்டு வந்துள்ளன. இலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள சிங்கள மக்களினதும், தமிழ் மக்களினதும், அதுபோல பெளத்தர்களினதும், இந்துக்களினதும், ஒற்றுமைக்கு காரணமாக  பெளத்தர்களின் பெரஹரவில் காணப்படும் இந்து, கலாசார, தமிழ்ப் பண்பாட்டு அம்சங்களை வெளிக்காட்டுவதும், அவை பற்றி விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 

கண்டி வரலாற்று புகழ்மிக்க எசல பெரஹரவில் காணப்படும் இந்து வழிபாட்டு முறைகள் இந்து மதத்திற்கும், தமிழர்களுக்கும், பெரஹரவிற்கும் உள்ள தொடர்பினை பறைசாற்றி நிற்கிறது. இந்திய தமிழ் நாட்டுடனான தொடர்பு, கண்டி இராச்சிய மன்னர் காலம் தொட்டு, இந்திய அரச குடும்பங்களில் பெண் எடுக்கும் வழமை, கண்டி இராச்சியத்தினை தமிழ் நாயகர்கள் ஆட்சி செய்தமை என்பன சில காரணங்களாக அமைகின்றன. மேலும், நாயக்கர் ஆட்சியிலும் அதற்கு முன்னரும் கண்டியில் இந்துக்கள் குடியிருந்தமை, தமிழ் நாட்டின் ஆடித்திருவிழாவாக கண்டியில் எசல பெரஹர அறிமுகப்படுத்தப்பட்டமை போன்றவை இந்து முறைப்படியான வழிபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். 

தமிழில் ஆடி மாதம் என்பதே சிங்களத்தில் எசல மாதமாகும். எனவே தான் இந்த பெரஹரவுக்கு “எசல பெரஹர” என பெயர் ஏற்பட்டது. இந்துக்களின் திருவிழாக்களில் கொடியேற்றம் செய்வது போல அல்லது திருவிழா ஆரம்பிக்கும் போது காப்பு கட்டுவது போன்று ''பெரஹர'' விலும் ''கப் நாட்டல்" இடம்பெறுகின்றது. பெரஹர ஆரம்பிக்கும் முகமாக பால் மரக்கிளை (பலாமரக்கிளை) ஒன்றினை விஷ்ணுதேவாலயத்தில் நாட்டுதல் மூலம் பெரஹர சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. பால்மரக் கிளையினை நட்டு சாம்பிராணி தூபமேற்றி பாலாபிஷேகம் செய்யப்படுகின்றது. 

இச்சம்பிரதாயம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்நான்கு தேவாலயங்களிலும் பூசைகள் இந்துசமய முறைப்படி நடத்தப்படுகின்றன. 16நாட்கள் (5நாள் உள்வீதி, 11நாள் வெளி வீதி) பத்து நாள் இரவு பெரஹரவும், இறுதிநாள் பகல் பெரஹரவும் நடைபெறும்.  

இந்து மதத்தில் பிராமணர்கள் பூசை செய்வது போல இங்கு கதிரேசன் தவிர்ந்து மூன்று தேவாலயங்களிலும் கப்புறாளையினால் பூசை செய்யப்படுகிறது. கதிரேசன் கோயிலில் மட்டும் முருகனுக்கும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் பிராமணர்களால் பூசை செய்யப்படுகிறது. கப்புறாளையினால் செய்யப்படும் பூசைகளிலும் இந்துக்களின் முறைப்படி விளக்கேற்றல், நெய்விளக்கேற்றல், கற்பூர தீபம் காட்டுதல், பஞ்சாரத்தி காட்டல், அடுக்கு தீபம், ஒற்றைத் தீபம் காட்டல், சாம்பிராணி தூபம் காட்டுதல், மஞ்சல் நீர் தெளித்தல், பூ சாத்துதல், பூமாலை சாத்துதல், பட்டு சாத்துதல், நைவேத்தியம் படைத்தல், பால் நிவேதனம் செய்தல், பழங்கள் படைத்தல், ஆகியன செய்யப்படுகின்றன. நைவேத்தியம் படைத்தலையும், பிரசாதம் வழங்குவதையும் “தான” தானம் வழங்குதல் என அழைக்கின்றனர். நீர்த்துப் பூசணிக்காய் வெட்டுதல், குங்குமம் பூசுதல், பச்சை சாத்துதல், சந்தனத்தில் பொட்டு வைத்தல், அர்ச்சனையின் பின் வெற்றிலை பூ கொடுத்தல் போன்றனவும் இந்து சமய வழிபாட்டு முறைகளிலேயே செய்கின்றனர். 

பெரஹரவில் தேவாலங்களின் இறுதியாக செல்லும் யானை மீது அம்பாரி கட்டி அதனுள் பனிச்செம்பு வைத்து கொண்டு செல்லப்படுகிறது. இதில் பனிச்செம்பு பட்டுத்துணியில் சுற்றி வைக்கப்படுவதோடு இதற்கு மல்லிக்கைப்பூ, பூச்சரம் செய்து சூட்டப்பட்டு மல்லிகைப் பூத்தூவி, சாமரம் வீசி சாம்பிராணி தூபத்துடன் எடுத்து செல்லப்படுகிறது. அம்பாரி கட்டியுள்ள யானைக்கு அருகில் வலப்புறமும், இடப்புறமும் செல்லும் யானைகளில் மேலிருந்தே பூ தூவுவதோடு சாம்பிராணி தூபம் காட்டி சாமரமும் வீசப்படுகிறது. இவையெல்லாம் தலாதா மாளிகை புனித பேழையை கொண்டு செல்லும் ஊர்வலத்தில் வலப்புற, இடப்புற யானைகள் மீதிருந்தே மேற்கொள்ளப்படுகிறது. கதிரேசன் கோயில் பூசைகளில் காலாஞ்சி வழங்கப்படுகிறது. இங்கு அம்பாரி கட்டி பனிச்செம்பு கொண்டு செல்லும் யானையின் முன் பூசை செய்யும் பிரதான குருவான பிராமண சிவாச்சாரியார் பெரஹர ஊர்வலத்தில் செல்வது வழமை. ஏனைய தேவாலங்களில் பிரதான கப்புறாளைமார் இவ்வாறு முன் செல்வார்கள். 

நீர்வெட்டு இந்துக்களின் முறைப்படியே நடைபெறுகிறது. கெட்டம்பே மகாவலி நதிக்கரையில் இந்த நீர் வெட்டு நடைபெற்று நீர்க்கலசங்கள் இந்து முறைப்படி பூசை செய்யப்பட்டு கண்டி கட்டுக்கலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கும் சைவ முறைப்படி பூஜை செய்யப்பட்டு பகல் பெரஹர ஆரம்பிக்கப்படுகிறது.

இங்கு வீபூதி பிரசாதம் வழங்குதல், சந்தன, குங்கும பொட்டிடுதல், தேங்காய் அடித்து உடைத்தல் போன்றன மேற்கொள்ளப்படுகின்றது. பெரஹர ஆரம்பிக்கும் முகமாக தலதா மாளிகையிலிருந்து யானை மீது கட்டுக்கலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கு வருகை தந்து ஆசி பெறுவதும் மேற்கொள்ளப்படுகிறது. இது போல பெரஹர ஊர்வலம் தொடங்கிய பின் ஆறாவது பெரஹர அல்லது முதலாவது ரந்தோலி பெரஹர அன்று அல்லது இறுதி பெரஹர அன்று கட்டுக்கலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திலிருந்து இந்துக்கள் பூசை தட்டுக்களுடன் கோயில் சிவாச்சாரியார்களுடன் ஊர்வலமாக சென்று ஊர்வலத்தில் கொண்டு செல்லப்படும் புனித பேழைக்கு அர்ச்சனை செய்யும் வழக்கமும் சம்பரதாயபூர்வமாக காணப்படுகிறது. இவ் அர்ச்சனைகள் இந்து முறைப்படியே செய்யப்படுகிறது.  

இப்பெரஹரவில் ஏனைய நான்கு தேவாலயங்களும் இணைந்து, கெட்டம்பே மகாவலி நதியில் நீர்வெட்டு செய்த பின் கண்டி கட்டுகலை ஸ்ரீ செல்வவிநாயகர் கோயிலுக்கு கொண்டுவரப்படுகின்றது. பின்னர் இந்நீர்வெட்டு நீர் அடங்கிய பனிச்செம்புகளுக்கு பூசைசெய்யப்படும். அதனைத் தொடர்ந்து நான்கு தேவாலயங்களும் உள்ளடங்கிய பெரஹர ஸ்ரீ செல்வவிநாயகர் கோயிலிலிருந்தே ஆரம்பிக்கப்படுகின்றது. 

பெரஹர இறுதிநாளில் நீர்வெட்டு நடத்தப்படுகின்றது. இந்நீர் வெட்டு இந்துக்களின் முறைப்படி நடத்தப்பட்டு கலசங்களில் நீர் எடுத்துவரப்படுகின்றது. இவ்வூர்வலத்தில் பூசைசெய்யும் பிராமணர், பல்லாக்கினை தூக்கிச்செல்லும் யானையின் முன்பாக  ஊர்வலத்தில் செல்கிறார். 

முருகப் பெருமானின் சேவற்கொடி, மயில்கொடி மயில்வாகனம் ஆகியன பெரஹரவில் கொண்டுசெல்லப்படுகின்றன. எசல பெரஹர ஊர்வலத்தில் கதிரேசன் தேவாலயத்தின் தவில், நாதஸ்வரம், காவடி, கரகம், போன்ற கிராமியக் கலைகள் இந்து கலைஞர்களின் பங்குபற்றுதலுடனேயே நடத்தப்படுகின்றது. பகல் பெரஹரவில் கண்டி செல்வ விநாயகர் கோயில்  பூஜைகளும்  ஒரு அங்கமாகவுள்ளது. கோயில் பூசை முடிந்து கலைஞர்களுக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இடப்பட்டு பெரஹர ஊர்வலத்தில்அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதன் மூலம் இந்துக்களினது அடையாளம் ஏற்று கொள்ளப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றது. 

இந்துக்களின் முறைப்படி சுப முகூர்த்தம் பார்ப்பது வழமை. எக்காரியம் செய்வதானாலும் நாள் நட்சத்திரம் பார்ப்பார்கள், இது போலவே நாள் நட்சத்திரம் பார்த்து கொடியேற்றி, காப்புக் கட்டி பெரஹர ஆரம்பிக்கப்படுகிறது. அதன் பின், தினமும் பெரஹர ஊர்வலம் சுபநேரம் பார்த்தே ஆரம்பமாகின்றது.  

இந்து வழிபாட்டு முறைகளில் சங்கு முக்கிய இடம் பெறுகிறது. பெரஹர ஊர்வலத்திலும் சங்கு முக்கியத்துவம் பெறுகிறது. யானை மீது சங்குகள் கொண்டு செல்லப்படுவதோடு தேவாலய பூசைகளிலும் சங்கு ஊதப்படுகிறது. அது போல இந்துக்களின் பூசையின் போது கைமணி, காண்டா மணி அடிப்பது போல தேவாலங்களிலும் கைமணி, காண்டாமணி ஒலிக்கப்படுகிறது. அத்தோடு கைமணி ஊர்லத்தில் யானை மீதும் கொண்டு செல்லப்படுகிறது. 

கதிரேசன் என்றால் கார்த்திகை மாத குமரன் என்பது பொருள். கார்த்திகேயன், குமரன், முருகன், கந்தன், வேலன், ஆறுமுகன், சுப்பிரமணியன் என இந்துக்களினால் அழைக்கப்படும் வேலனை, கதரகம தேவியோ,குமார, விசாக, மகாசேன் என்றுசிங்களவர்கள் வழிபடுகின்றனர். 

முருகன் இலங்கையில் கதிர்காமத்தில் வேடர் இனத்தைச் சேர்ந்த வள்ளி என்ற பெண்ணை மணந்தார் என்பது வழக்காறாகும். முருகனை மகா கதரகம என பெளத்தர்கள் வழிபடுகின்றனர். 

இலங்கையின் சிவனொளிபாதமலையினை தரிசித்துச் செல்ல பல இந்துக்கள் இந்தியாவிலிருந்து வந்ததாகவும் அவர்களுள் செங்கந்தன் என்பவர் காட்டுப் பகுதியில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது. காடு என்பது சிங்களத்தில் ''கெலே'' (காடு) என அழைக்கப்படுவதால் செங்கந்த கெலே என்பதே செங்கடகெல என அழைக்கப்பட்டு செங்கடகல ஆகியது என்றும் கந்த என்பது ஆங்கிலத்தில் (Kandy)கண்டி என எழுதப்பட்டு, இந்நகரின் பெயர் கண்டியாயிற்று என்றும் அறியப்படுகின்றது. செங்கந்தன் வழிபட்ட கோயில் "நாதர்'' கோயில் என்பதும் இராஜராஜசிங்கன் வழிபட அமைத்த கோயில் கதிரேசன் கோயில் எனவும், அதுபோல தமிழ் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட விஷ்ணு கோயில் எனவும் கண்ணகியின் பெருமையினை உணர்ந்து கண்ணகி வழிபாடு இலங்கையில் ஏற்பட்டதாகவும், கண்ணகி கோயில் கண்டியிலும் அமைத்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த கண்ணகி கோயிலே பின்னர் பத்தினி கோயிலானது எனவும் புராணக் கதைகள் கூறுகின்றன.

பெரஹரவை இந்து மன்னர்களே ஆதரவு வழங்கி சிறப்பாக நடாத்தியமை வரலாறு. இன்றும் அம்முறைப்படியே சம்பிரதாயங்கள் மாறாது நடைபெற்று வருகின்றன. இவற்றில் சில எழுதப்பட்ட சம்பிரதாயங்களாக காணப்படுவதோடு சில எழுதப்படாத, வாய்வழியான  சம்பிரதாயங்களாகக் காணப்படுகின்றன.

கால ஓட்டத்தில் இவை இன்னும் மாறுபடாமல் இருப்பதற்கு இந்து பெளத்தர்களது ஒற்றுமையும் ஒரே வகையான வழிபாட்டு முறைகளும், தெய்வங்களை ஏற்றுக் கொள்ளும் பண்பும் காரணமாக அமைந்துள்ளது. சமீபகாலங்களின்  இனவாதம், மதவாதம், பெளத்தவாதம், இந்துவாதம், இனத்துவேசம், மதத்துவேசம் இச் சம்பிரதாயங்களின் மாற்றத்திற்கு காரணமாக அமையாது,  மாறாக இதனை பேணிக் காப்பதற்கு தேவையான காத்திரமான பங்களிப்பினை செய்ய வேண்டும். இது இருபக்க மதத் தலைவர்களாலும் மேற்கொள்ளப்பட வேண்டிய கடமையாகும்.  

ஆர். மகேஸ்வரன்.  
முதுமாணி நூலகத்தகவல் தொழில்நுட்ப 
விஞ்ஞானம் கல்விசார் நூலகர்,  
பேராதனைப் பல்கலைக்கழகம்

Comments