ஹற்றன் கல்வி வலயத்தின் கல்வி ரீதியிலான சவால்களும் சட்ட நியாயாதிக்கமும் | தினகரன் வாரமஞ்சரி

ஹற்றன் கல்வி வலயத்தின் கல்வி ரீதியிலான சவால்களும் சட்ட நியாயாதிக்கமும்

2016ஆம் ஆண்டு வலய கல்விப்பணிப்பாளராக பி.ஸ்ரீதரன் கடமைப் பொறுப்பேற்றதன் பின் ஹற்றன் கல்வி வலயத்திற்கு எதிராக, இதுவரை ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இவற்றில் தற்போது மூன்று வழக்குகளில் கல்வி பணிமனை வெற்றியடைந்துள்ளது.

கடந்த காலங்களிலும், தற்போதும் எமது ஹற்றன் கல்வி வலயம், கல்வி ரீதியிலும் இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் பல்வேறு வகைகளிலும் முன்னேற்றம் அடைந்து வரும் நிலை காணப்பட்டாலும், கல்விச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சில வழக்குகள் தொடரப்பட்டன. அவ்வழக்குகள் தொடர்பாக பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் கருத்து தெரிவிக்கையில், 

பாடசாலை என்பது மாணவர்களை மையப்படுத்தப்பட்ட விடயமாகும். அங்கு எடுக்கப்படும் தீர்மானங்களும் மாணவர்களை மையப்படுத்தியே மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறாக எமது ஹற்றன் கல்வி வலயத்தை பொறுத்தளவில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் பணிப்பாளர் என்ற வகையில் நான் உட்பட கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், உதவி கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், வலய  அதிபர்கள், ஆசிரியர்கள் பலரும் உழைத்து வருகின்றோம். இதில் கல்வி வளர்ச்சி என்பது மாணவர்களின் அடைவு மட்டங்களிலே தங்கியுள்ளது. அந்தவகையில் அடைவு மட்டங்களை அதிகரிக்க வேண்டுமென்றால் வளங்கள் முறையான வகையில் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். அப்போதுதான் கல்வியிலும் வளர்ச்சியைக் காணமுடியும். அவ்வாறு கல்வி வளர்ச்சியடைய பல தீர்மானங்களை மேற்கொள்ளும் போது பல சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி வருகின்றது. அவற்றில் நாம் சந்தித்த வழக்குகளும் குறிப்பிடத்தக்கதாகும். 

வெற்றியடைந்த மூன்று வழக்குகளில்,  வெலிஓயா பிரதேச பாடசாலையொன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவனை தாக்கி காயப்படுத்திய வழக்கும் அடங்குகின்றது. குறித்த ஆசிரியருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைபாட்டையடுத்து அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் குறித்த ஆசிரியரினால் இவ் இடமாற்றத்திற்கு எதிராக 2016ஆம் ஆண்டு நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மூன்று வருடங்களின் பின் விசாரிக்கப்பட்டு 2019.3.28அன்று நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பும் வெளியாகியிருந்தது. இவ் வழக்குத் தீர்ப்பின்படி ஹற்றன் கல்வி வலய பணிப்பாளரினால் வழங்கப்பட்ட இடமாற்றமானது அவருடைய அதிகாரத்தினால் வழங்கப்பட்ட இடமாற்றம் என்பதோடு குறித்த ஆசிரியருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் சரியானது என்றும், இதில் எவ்வித சட்டச் சிக்கலும் இல்லை என்றும் நுவரெலியா மேல் நீதி மன்றத்தினால் தீர்ப்பும் வழங்கப்பட்டது. 

ஹற்றன் நகர்ப்புற பாடசாலையொன்றில் உதவி அதிபர் ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை எதிர்த்து குறித்த உதவி அதிபரினால் நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பும் வெளியாகியிருந்தது. அதன்படி வலயக் கல்வி பணிப்பாளரின் சிபாரிசினுடாக மத்திய மாகாண கல்விச் செயலாளரினால் வழங்கப்பட்ட இடமாற்றமும் சரியானது என நுவரெலியா மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அத்தோடு இவ்வருட நேர சூசியின்படி குறைவான பாடவேளைகளைக் கொண்டவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இவ் இடமாற்றத்திற்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் ஆசிரிய சங்கத்தின் தலைவரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மூன்று உயர்நீதி மன்ற நீதியரசர்களினால் இரண்டு தவணைகளில்  நிராகரிக்கப்பட்டுள்ளது. 

குறைவான பாடவேளை கொண்டவர்கள் தொடர்பாக  கடந்த காலங்களில் பல தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்தவகையில் பாடசாலைகளில் 40பாடவேளை இல்லாத ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை காணப்பட்டது.  5பாட வேளைகளையோ அல்லது  10பாடவேளைகளையோ  கற்பிப்பதால் பாடசாலைக்கும் அங்குள்ள மாணவர்களுக்கும் எவ்விதத்திலும் பயனில்லை. இவர்கள் குறித்த பாடசாலைக்கும் அதிபர்களுக்கும் பெரும் சவாலாக காணப்பட்டனர். அவர்கள் கற்பிப்பதற்கு பொருத்தமான வெற்றிடம் நிலவிய பாடசாலைக்கு தேவை கருதி இடமாற்றம் செய்யப்பட்டனர். இருப்பினும் இவ் ஆசிரியர்கள், தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக பல வழிகளிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

பொதுவாக கல்வி வலயத்தை எடுத்துக்கொண்டால் கஷ்டப் பிரதேசம், அதிகளவிலான  கஷ்டப் பிரதேசம் என பாடசாலைகள் காணப்படுகின்றன. இப்படியான பாடசாலைகளில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதோடு இங்கு கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி நிலையிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நகர பாடசாலைகளை அண்மித்த பாடசாலைகளில் தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் தமது நீண்ட கால பாடசாலைகளாக நகரத்தை அண்மித்த பாடசாலைகளை கொண்டுள்ளனர்.  சில ஆசிரியர்கள் குறைந்த பாடவேளைகளுடன் இருக்கின்றனர். அதன் காரணமாக தேவையுள்ள பாடசாலைக்கு இவர்களை இடமாற்ற வேண்டிய ஒரு தேவையும் காணப்படுவதால் குறைந்த பாடவேளைகளைக்கொண்ட ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டனர். 

இவ்வாறான வழக்குகளுக்கு அப்பாலும் ஹற்றன் கல்வி வலயம் தேசிய ரீதியில் குறிப்பாக பாராளுமன்றத்திலும் பேசப்படுகின்றது என்றால்  வலயத்தால் எடுக்கப்படும் கல்வி ரீதியிலான தீர்மானங்களும் அதனூடாக  வலயத்தின் கல்வி வளர்ச்சி நிலையையுமே அது காட்டுகின்றது.

இரா. யோகேசன்

Comments