ஐ.தே.கவின் புதிய கூட்டணியில் கைச்சாத்திட அவசரப்படவில்லை | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

ஐ.தே.கவின் புதிய கூட்டணியில் கைச்சாத்திட அவசரப்படவில்லை

ஐக்கிய தேசிய முன்னிணியின் புதிய கூட்டணியில் அவசரப்பட்டுக் கைச்சாத்திடப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள், கட்சிகளின் கொள்கைத் திட்டங்கள் மற்றும் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் முன்வைக்கும் விடயங்களை ஆழமாக ஆராய்ந்த பின்னரே தீர்மானம் எடுக்கப்படுமெனவும் அறிவித்திருக்கின்றன.  

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்றைய சூழலில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கமுடியாதுள்ளதாக கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், சிறிய கட்சிகள் என்ற ரீதியில் நாம் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பதில் தீர்மானம் எடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணி அதன் யாப்பை இதுவரையில் முழுமையாக வெளியிடவில்லை. நாம் அறிந்த அளவில் அதில் சில முக்கிய குறைபாடுகள் காணப்படுகின்றன.  

நாம் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகள் திருத்தப்பட்டதன் பின்னர் அதுபற்றி கலந்துரையாடுவோம். அதேசமயம் வேட்பாளர் யாரென்பது குறித்து தெரிந்துகொள்ளாமல் எந்த வேட்பாளரை, எந்தக் கட்சியை ஆதரிப்பது என்று தீர்மானம் எடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.  

வேட்பாளரின் கொள்கை அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடு, முஸ்லிம் சமூகம் தொடர்பில் வேட்பாளர் கொண்டிருக்கும் நிலைப்பாடு, சமூத்துக்கு அவர் முன்மொழியும் திட்டங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளைப் பரிசீலனைக்கு எடுத்த பின்னரே நாம் முடிவெடிக்க முடியும். வேட்பாளர் யார் என்பதை இரண்டு அணிகளும் இதுவரையில் முன்வைக்காததால், உடனடியாக எம்மால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.  

ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியில் நாம் அங்கம் வகிக்கின்ற போதிலும் புதிய கூட்டணியின் கொள்கைத் திட்டம், அதன் வேட்பாளர் குறித்து வெளிப்படையாக முன்வைக்கப்படாத நிலையில், அவசரப்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் எந்த முடிவையும் எடுக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.  

இதேவேளை, முஸ்லிம்களின் மற்றொரு கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் புதிய கூட்டணியில் இணைவது உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது குறித்து அவசரம் காட்டவில்லை எனக் குறிப்பிட்டார்.  

ஐக்கிய தேசிய முன்னணி அரசில் நாம் அங்கம் வகிக்கின்ற போதும் புதிய கூட்டணி உருவாக்கப்படும் போது அதன் பாதை எவ்வாறானது என்பதையும் வேட்பாளர் யார் என்பதையும் தெரிந்துகொள்ளும் வரை எம்மால் எந்த முடிவுக்கும் வரமுடியாது.

இந்தக் கூட்டணியின் பிரதான கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அதன் ஜனாதிபதி வேட்பாளர் கூட அக்கட்சியிலிருந்துதான் வரவேண்டும் என்கிறார்கள். அக்கட்சி முடிவெடுத்து அறிவித்ததன் பின்னர் அது குறித்து கவனம் செலுத்தப்படும் அதே நேரம், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன முன்னணியின் யோசனைகள், வேட்பாளர் தொடர்பிலும் தாம் கவனத்திலெடுக்க வேண்டியுள்ளது. வெற்றிவாய்ப்பு கூடியதொரு தரப்புக்கே தாம் ஆதரவளிக்க வேண்டியுள்ளது.  

2005இல் நாம் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்தோம். அதில் வெற்றிபெற்றார். 2010இலும் மஹிந்தவை ஆதரித்து வெற்றியை பெற்றுக்கொண்டோம். 2015இல் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்தோம். வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலிலும் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.  

அண்மைக் காலமாக முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகொள்ளக்கூடிய வகையிலான முடிவையே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுக்கும் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். 

எம்.ஏ.எம். நிலாம்

Comments