கேரளாவில் கடும் மழை, வெள்ளம் 41 பேர் பலி | தினகரன் வாரமஞ்சரி

கேரளாவில் கடும் மழை, வெள்ளம் 41 பேர் பலி

மண்சரிவில் 30வீடுகள் மாயம்; முகாம்களில் 15,000பேர் தஞ்சம்

கேரளாவில் பெய்து வரும் கடும் மழைக்கு ஒரே நாளில் 30பேர் பலியாகியுள்ளனர். 2நாட்களில் பலியானோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணி நடந்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென்று அஞ்சப்படுகிறது. கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இந்த வருடம் ஜூன் 2ஆவது வாரம்தான் பருவமழை தொடங்கியது. ஜூலை வரை முதல் 2மாதங்களில் மழை குறைவாகவே பெய்தது. ஆனால், ஆகஸ்ட் முதல் வாரமே மீண்டும் பருவ மழை தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 4நாட்களுக்கு மேலாக மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி, கண்ணூர் உட்பட வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் பம்பை, அச்சன்கோவில், மீனச்சல், மணிமலை உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  

 இடுக்கி, வயநாடு உட்பட பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், மாலை வயநாடு புத்துமலை பகுதியில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டது. இந்த பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இங்கு மண்சரிவு ஏற்படலாம் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததால், பலர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர். ஆனால், சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கேயே தங்கி இருந்தனர். இந்த மண்சரிவில் 40இற்கும் மேற்பட்டோர் சிக்கினர். நேற்று முன்தினம்(09) 

 காலை தேசிய பேரிடர் தடுப்பு படையினரும், கண்ணூரில் இருந்து இராணுவத்தினரும் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இங்கிருந்து தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட 9பேர் உடல்கள் மீட்கப்பட்டது. அங்கு மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மலப்புரம் மாவட்டம் கவலப்பாறையில் 70வீடுகள் உள்ளன. இங்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டதால், பலர் வீடுகளில் இருந்து வெளியேறினர். ஆனால், 30வீடுகளை சேர்ந்தவர்கள் வெளியேறவில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (09) இரவு அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 30வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில், பலர் சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதில் 3பேர் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் புதைமணல் போல் அப்பகுதி மாறியுள்ளதாலும் மீட்பு பணியில் பெரும் சிரம் ஏற்பட்டுள்ளது. 

 இதேபோல், கோழிக்கோடு மாவட்டம் வடகரை, இலங்காட்டிலும் மண்சரிவு ஏற்பட்டு 5பேர் மாயமாகினர். இதில் 3பேர் உடல்கள் மீட்கப்பட்டன. மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே உள்ள எடவன்னாவில் வீடு இடிந்து ஒரே குடும்பத்ைத சேர்ந்த 4பேர் இறந்தனர். கண்ணூர் மாவட்டம் இரிட்டியில் ஆற்றில் மூழ்கி ஒருவர் இறந்தார். கோழிக்கோடு அருகே உள்ள குற்றியாடி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 2பேர் இறந்தனர்.  

 மலப்புரம் மாவட்டம் கோட்டுக்குந்நு பகுதியில் வீடு மீது மண் சரிந்து ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியாயினர். கேரளாவில் நேற்று மாலை வரை ஒரே நாளில் 30 பேர் மழைக்கு பலியாயினர். இதையடுத்து, 2 நாளில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. கனமழையால் கண்ணூர் மாவட்டத்தில் இரிட்டி ஸ்ரீகண்டாபுரம் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நேற்று மட்டும் 10 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலும் ேசதடைந்துள்ளன.

Comments