ஜனாதிபதி, மஹிந்த, கோட்டாவுடன் சு. கட்சி அடுத்தவாரம் பேச்சு | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி, மஹிந்த, கோட்டாவுடன் சு. கட்சி அடுத்தவாரம் பேச்சு

வலுவான கூட்டணி அமைக்கவும் தீர்மானம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருடன் அடுத்தவாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்த வலுவானக் கூட்டணியை அமைப்பது தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அறிய முடிகிறது.  

கம்போடியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதுடன், இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கான ஒழுங்கமைப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் வலுவானக் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் ஆறுகட்ட பேச்சுகள் இதுவரை நடத்தப்பட்டுள்ள சூழலில் இருதரப்புக்கும் இடையில் எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை.  

என்றாலும், கடந்தவாரம் ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக இருதரப்பினரும் கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.  

குறிப்பாக உப பிரதமர் பதவியொன்றை ஏற்படுத்தி அதனை ஜனாதிபதிக்குக் கொடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.  

இவ்வாறான பின்புலத்திலேயே ஜனாதிபதி நாடு திரும்பியதும், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிய முடிகிறது.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Comments