யாழ்ப்பாணத்தில் 220 வீடுகள் மக்களிடம் கையளிக்க ஏற்பாடு | தினகரன் வாரமஞ்சரி

யாழ்ப்பாணத்தில் 220 வீடுகள் மக்களிடம் கையளிக்க ஏற்பாடு

பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துவைக்கவும், பூர்த்தி செய்யப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மக்களுக்கு கையளிக்கவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பிரதமரின் விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம்,மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி மேலும் தெரிவிக்ைகயில், 10,000செங்கல் மற்றும் கொன்கிறீட்டிலான (Mortar) கல் வீட்டுத்திட்டம் தற்போது வீட்டு உரிமையாளரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அவற்றில் ஏற்கனவே 4,750வீடுகள் முடிவுறுத்தப்பட்டுள்ளன.  தற்போது அமைக்கப்படும் 2,565வீடுகளுக்கு ரூபா 2,565மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

 2,565வீடுகளில் 1,500வீடுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.  மைலிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 200வீடுகளும், கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 20வீடுகளும் மொத்தம் 220வீடுகள் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்படவுள்ளது.

 150மில்லியன் செலவில் மைலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.  இத்துறைமுக மேம்படுத்தலில் 50மீற்றர் நீளமான அணை மேம்பாடு, வலைபின்னும் மண்டபங்கள், எரிபொருள் நிலையங்கள், தண்ணீர் சேகரித்தல் மற்றும் தண்ணீர் தாங்கிகள் அபிவிருத்தி, மலசலகூட தொகுதிகள் மற்றும் 2.5மீற்றர் ஆழம் கொண்ட துறைமுகத் தொகுதிகளை உள்ளடக்கிய பேசின், 2.65ஹெக்டேயர் பரப்பளவினை 2.5மீற்றருக்கு ஆழமாக்கல் மற்றும் 1.5ஹெக்டயார் பரப்பளவனை 1மீற்றர்களுக்கு ஆழமாக்கல் ஆகியவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 

முதலாம் கட்டத்தில் நிறைவடைந்த வசதிகள் மீன்பிடி சமூகங்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்ட அபிவிருத்தியில் 200மீற்றர் நீளமுள்ள வாகனங்கள் சென்றுவரக் கூடியதான தடுப்பு அணை, ஏலமிடும் மண்டபம், நிர்வாகக்கட்டடம், கடலோர காவல்துறை அலுவலகம், முகாமையாளர் குடியிருப்பு மற்றும் பிற வசதிகள் தொடங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

 ரூ.30மில்லியன் செலவில் சாவகச்சேரியில் தளபாடங்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய 3மாடிக் கட்டடத்தைக் கொண்ட ஆற்றுப்படுத்தும் மையமொன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மையம் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் அதிர்ச்சி போன்ற உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் மையமாக விளங்கும். இம்மையம் பயனாளிகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்டவுள்ளது.

 மேலும், இந்திய அரசின் மானிய உதவியான ரூ.1,800மில்லியன் செலவில் யாழ்ப்பாணத்தில் நிர்மானிக்கப்படுகின்ற வடக்கின் கலாசார சின்னமாக விளங்கவுள்ள கலாசார மையத்தையும் பிரதமர் பார்வையிடுவார். 

இந்தக் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயிலுள்ளது.  வடமாகாணத்தின் பண்டைய கலாச்சார பாரம்பரியத்தை ஆதரிக்கவும், புத்துயிர் பெறச்செய்யவும் மற்றும் கலாச்சாரத்தை வளர்தெடுக்கும் மிகப்பெரிய சின்னமாக இந்த கலாச்சார மையம் அமையவுள்ளது.

 6,000க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொண்ட குருநகர் மீன்பிடித் துறைமுகத்தை பார்வையிட்டு புதிய வேலைகளையும் பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

 ரூ.58மில்லியன் செலவில் குருநகர் மீன்வளத்துறை முகத்தை ஆரம்பிப்பதுடன் வகைப்படுத்துகை மண்டபம், விற்பனை நிலையம், ஏலம் இடும் மண்டபம் மற்றும் எரிபொருள் சேமிப்பு தாங்கிகள் போன்றன வழங்கப்பட்டுள்ளன.

 அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக மாவட்ட அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து மூலோபாய வழிகாட்டுதல்களையும் பிரதமர் வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments