வல்வெட்டித்துறையின் மைந்தர்களே உலக சாதனை படைத்த தமிழர்கள் | தினகரன் வாரமஞ்சரி

வல்வெட்டித்துறையின் மைந்தர்களே உலக சாதனை படைத்த தமிழர்கள்

மற்றொருவர் எழுவாரா, இல்லையா? தென்பகுதி அரசியலே தீர்மானிக்கும்

உலக சாதனைகள் படைத்தவர்கள் வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து தான் தோன்றியிருக்கிறார்கள். அதில் ஒருவர் ஆழிக்குமரன் ஆனந்தன். மற்றவரைப் போன்ற இன்னொருவர் எங்கள் மத்தியில் இருந்து எழுவாரா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது தெற்கிலே இருக்கிற நீங்கள். உங்களுடைய அரசியலும் நீங்கள் உருவாக்குகின்ற அரச தலைவர்களும் தான் அப்படியானதொன்று இனி நடக்குமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதாக இருக்குமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.தெரிவித்தார்.  

யாழ்.வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்ட சாதனையாளர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் திறந்து வைக்கும் நிகழ்வு (09) நடைபெற்றபோது, நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,  

உலக சாதனைகள் படைத்தவர்கள் வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து தான் வந்திருக்கின்றார்கள். அவர்கள் படைத்த உலக சாதனைகளில் சில கின்னஸ் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. மற்றைய சாதனையாளருடைய சாதனைகள் பல்வேறு வடிவங்களில் எழுத்தில், படத்தில் வரையப்பட்டிருக்கின்றன. அவரைப் போன்ற இன்னொருவர் எங்கள் மத்தியில் இருந்து எழுவாரா? இல்லையா? என்பதை தீர்மானிப்பது தெற்கிலிருக்கின்ற நீங்கள் தான் என அமைச்சர் மங்கள சமரவீரவைப் பார்த்து தெரிவித்துள்ளார்.  

நாட்டுத் தலைவரை உருவாக்குவதிலே அமைச்சர் மங்கள சமரவீர தான் முதன்மையானவர் என்ற பெருமையைக் கொண்டவர் என்பதால் நாட்டுத் தலைவருக்கான போட்டி அண்மித்துக் கொண்டிருக்கிற இந்த வேளையில் அவருடைய  பங்களிப்பு இப்பொழுது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. உங்களுடைய அரசியலும் நீங்கள் உருவாக்குகினற அரச தலைவர்களும் தான் அப்படியானதொன்று இனி நடக்குமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

 சாதனைக்கு புகழ் போன வல்வை மண்ணிலே இன்றைக்கு சரித்திரப் புகழ் பெறும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஆனந்தன் மறைந்து 25வருடங்களுக்குப் பின்னர் இப்படியான ஒரு நிகழ்வு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  

அவர் செய்த பல உலக சாதனைகளை சிறுவனாக நேரிலே கண்டவன் நான். நீச்சல் தடாகத்திலே பல நேரம் நீந்தியதை எங்கள் பாடசாலை நீச்சல் தடாகத்தில் தான் அதனைச் செய்தார். ஒவ்வொரு நாளும் நான் சென்று பல மணி நேரம் அவரைப் பார்த்திருக்கிறேன்.

காலிமுகத்திடலுக்கு முன்பதாக ஒரு மேடையை அமைத்து அவர் நீண்ட நேரம் நடனமாடிக் கொண்டிருந்த போது ஒரு சிறுவனாக அவரோடு கூட நடமாடியவன் நான். ஒற்றைக்காலிலே நின்ற போதும் மெதுவாக நடந்த போதும் இன்னும் பல சாதனைகள் கின்னஸ் புத்தகத்திலே எழுதப்படாத பல வித்தியாசமான சாதனைகளைப் புரிந்தார். அதில் பலவற்றை நேரில் கண்டு வியந்தோம்.  

அவர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு நீந்திக் கடந்து சாதனை புரிந்த அவருடைய மாமனார் நவரட்ணசாமியைப்போல், ஆனந்தனும் அதனைச் செய்தார். ஆங்கிலக் கால்வாயைக் கடக்க வேண்டுமென்பது அவருடைய நீண்டகால ஆசை. ஒரு பாரிய வீதி விபத்திலே சிக்குப்பட்டு உடல்நலக் குறைவாக இருந்த போதிலும் நீண்ட நாட்களாக செய்யவிருந்ததைச் செய்ய வேண்டுமென்ற வைராக்கியத்தோடு ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முற்பட்ட போது தான் அவர் மரணத்தை எய்தினார்.  

இப்படியான ஒருவர் இந்த மண்ணிலே உதித்தவர் எம் மத்தியில் வாழ்ந்தவர். உலக சாதனைகள் ஒன்று இரண்டு என்று அல்லாமல் ஏழு எழுதப்பட்டுள்ளது. அதற்கு மேலாகவும் பலவற்றைச் செய்தவர். அவருக்கு மதிப்பளிக்கின்ற வகையிலே இந்த நீச்சல் தடாகம் கொடுக்கப்படுகிறது. நிதி அமைச்சர் அவர்கள் இந்த விடயத்திலே தன்னுடைய தனிப்பட்ட கரிசனையை எடுத்திருக்கின்றார். ஏனென்றால், அவர் ஆழிக்குமரன் ஆனந்தனின் குடும்பத்து உறவினர். அவருடைய மாமி முறையானவர் தான் திருமதி ஆனந்தன்.  

இந்தத் தருணத்திலே நிதி அமைச்சர் அவர்களிடத்திலே முக்கியமான வேண்டுகோளை நான் விடுக்க விரும்புகின்றேன். இந்த நாட்டிலே நாட்டுத் தலைவர்களை உருவாக்குகிறவர் என்ற பெருமையைக் கொண்டவர் நிதி அமைச்சர்.

அவர் நாட்டுத் தலைவர் ஆகுவதில்லை. ஆனால், நாட்டுத் தலைவரை உருவாக்குவதிலே அவர் தான் முதன்மையானவர் என்ற பெருமையைக் கொண்டவர். இன்னொரு நாட்டுத் தலைவருக்கான போட்டி அண்மித்துக் கொண்டிருக்கிற இந்த வேளையிலே அவருடைய பங்களிப்பு இப்பொழுது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.  

என்னுடைய உரையின் ஆரம்பத்திலே இந்த மண்ணில் இருந்து தோன்றிய இரண்டு சாதனையாளர்களைப் பற்றிச் சொன்னேன். அதில் ஒருவருக்காக இந்த நீச்சல் தடாகம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

மற்றவரைப் போன்ற இன்னொருவர் எங்கள் மத்தியில் இருந்து எழுவாரா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது தெற்கிலே இருக்கிற நீங்கள். மேலும் உங்களுடைய அரசியலும் நீங்கள் உருவாக்குகிற அரச தலைவர்களும் தான் அப்படியானதொன்று இனி நடக்குமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதாக இருக்கும்.

ஆகையினாலே நிதானமாக செயற்பட்டு நாங்கள் பழைய நினைவுகளோடு மட்டும் இந்தச் செயற்பாடுகளொடு தொடர்ந்து எதிர்காலத்தில் பயணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 

பருத்தித்துறை விசேட நிபர்  

Comments