வேட்பாளரை அறிவிப்பதில் பிரதான கட்சிகள் தயக்கம் | தினகரன் வாரமஞ்சரி

வேட்பாளரை அறிவிப்பதில் பிரதான கட்சிகள் தயக்கம்

மஹிந்த இன்று பெயரை அறிவிப்பாரா?

கூட்டணி அமைப்பதில் ஐ.தே.க திண்டாட்டம்

ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக நியமிப்பது என்பதுபற்றிய முடிவை எடுக்க முடியாமல், பிரதான அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் இன்னமும் தயக்கமும் இழுபறியும் நீடித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியை அமைப்பதிலும் வேட்பாளரைத் தெரிவதிலும் அக்கட்சி இறுதி முடிவை எடுக்க முடியாத திண்டாட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அதுவும் காலந்தாழ்த்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தகவல்கள் கூறின. ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் இழுபறியான நிலைமை நீடித்து வருவது கட்சிக்கு ஆரோக்கியமானது அல்லவென்று கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் வலியுறுத்தித் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவையும் பாராளுமன்றக் குழுவையும் ஒரே நேரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வெகு விரைவில் முடிவொன்றை எட்டுமாறும் கோரிக்ைக விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், புதிதாக உருவாக்கப்படவிருக்கும் கூட்டணியில் சிறுபான்மைக் கட்சிகளை அரவணைப்பதை மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்றும் கட்சியின் தலைவர்களுக்குக் கட்சியின் முக்கியஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வலுவான ஒரு புதிய கூட்டணி மூலம் எதிர்கொள்ள வேண்டும் என்பதில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளபோதிலும், அந்த வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தே களமிறக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய தேசிய கட்சியைச் ​சேர்ந்த ஒருவர் நாட்டின்  தலைவராகத் தெரிவுசெய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இந்தத் தடவை அந்தத் தவறை செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், பெரும்பாலான உறுப்பினர்கள் அமைச்சரும் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாசவை வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். எனினும், இது தொடர்பில் இன்னமும் ஓர் இணக்கம் ஏற்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் பிரதமரும் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். எனினும், அந்தச் சந்திப்பிலும் முடிவு எட்டப்படவில்லை. இதுகுறித்து கடந்த  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆளுந்தரப்பு பாராளுமன்ற குழுக்கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அந்தக் கூட்டத்திலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

புதிதாக அமைக்கப்படவுள்ள ஜனநாயக தேசிய கூட்டணியின் யாப்பினையும் கொள்கையையும் விரைவாக வரைந்ததன் பின்னர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கலாம் என்று பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் கோரிக்ைகயாக முன்வைக்கப்பட்டுள்ளது. என்றாலும், ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துவிட்டு அதன் பின்னர் கூட்டணியை அமைக்கலாம் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச அறிக்ைகயொன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம், சில பகுதிகளுக்குச் சென்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நானே வேட்பாளர், என்னை ஆதரியுங்கள் என்று அமைச்சர் பிரேமதாச பிரசாரமும் செய்துவருகிறார். நாளைய தலைவர் சஜித் பிரேமதாசவே என்ற அடிப்படையில் இணையத்தள விளம்பரங்களும் சுவரொட்டி விளம்பரங்களும் சூடுபிடித்து வருகின்றன.

இந்தப் பின்னணியில் கட்சியின் சில முக்கியஸ்தர்கள், அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்துக் கூட்டங்களையும் ஒழுங்கு செய்து வருகின்றனர்.

அதன்படி நாளைய தினம் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தலைமையில் பதுளையில் கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்பட்டால், கடும் ஒழுக்காற்று நடவடிக்ைக எடுக்கப்படும் என்று கட்சியின் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எச்சரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. (வி)

எம்.ஏ.எம். நிலாம்

Comments