இன வெறுப்பினை பரப்புவதில் முன்னிற்பவை ஊடகங்களே | தினகரன் வாரமஞ்சரி

இன வெறுப்பினை பரப்புவதில் முன்னிற்பவை ஊடகங்களே

நான் வாடிக்கையாக வாங்குகின்ற ஐந்து ஆங்கிலப் பத்திரிக்கைகளில் ஒன்றை வாங்குவதையும், வாசிப்பதையும் நிறுத்திவிட்டேன். இனங்கள் மீதான வெறுப்புணர்வினை மேலும் மேலும் அதிகரிக்கின்ற விதமாக கட்டுரைகளைப் பிரசுரித்திருந்தனர் என்கிறார் ‘யுனிடிமிஸன் ட்ரஸ்’ நிறுவனத்தின் நிறுவுனரும் ஒருங்கிணைப்பாளருமான பேர்ட்டல் பின்றோ ஜெயவர்தன.இனங்களுக்கிடையிலா வெறுப்பினை பரப்புவதில் ஊடகங்களே முன்னிற்கின்றன என்று கூறும் பேற்றல் பின்றோ ஜெயவர்தனவுடனான நேர்காணல். 

கேள்வி: இந்த ‘யுனிடி மிஸன் ட்ரஸ்ட்’ நிறுவனத்தினை உருவாக்க காரணம் என்ன? 

அப்போது நான் வங்கி ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தவுடன் வடக்குப் பகுதியில் இருந்த மக்களுக்கு உதவி செய்யும் முகமாக தெற்கிலிருந்து நாம் ஒரு குழுவாக அங்கு சென்றோம். 2இலட்சத்துக்கும் அதிகமான மக்களைக் கொண்ட மெனிக் பாம் முகாம் அது. அத்தியாவசியப் பொருட்களைத்தான் நாம் கொண்டுசென்றோம். அதில் பால்மாவும் அடங்கும். அங்கிருந்த தேவையுடன் ஒப்பிடுகையில் அந்த பால்மா மிகமிக சொற்பமாக இருந்தது. அந்தநேரம் சிறுவர்கள்மீது எமது கவனம் குவிந்தது. எனவே நாங்கள் பால்மாவினை மட்டும் அதிகளவில் சேகரித்துக் வழங்கத்தொடங்கினோம். கொழும்பில் எனதும் மனைவியினதும் தனிப்பட்ட தொடர்புகளினூடாகவும் வேறு உதவிகளுடனும் நாங்கள் 6மாதகாலத்துக்கு தேவையான அளவு பால்மாவினைச் சேகரித்து வழங்கினோம். இதன் அடுத்த கட்டமாக, சிறுவர்களுக்குத் தேவையான கல்வியினை வழங்குவதற்கு அந்த முகாம்களில் வாழ்ந்த ஆசிரியர்களின் உதவியை நாடினோம். அவர்கள் உடுத்த உடையுடன் இருந்தனர் மாற்று ஆடைகள் எதுவும் இருக்கவில்லை. இதனால் முதலில் ஆசிரியர்களுக்கு தேவையான ஆடைகளைப் பெற்றுக்கொடுத்து சிறுவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கையை சிறிய மரத்தடியில் வைத்து ஆரம்பித்தோம். 

இவ்வாறு பல மாதங்களுக்குப் பின் முகாம்களில் வசித்தவர்கள் அவர்களது வீடுகளுக்கு திரும்பினர். அப்போது அவர்களின் ஊர்களுக்குச் சென்று சிறுவர்களுக்கு உதவ ஆரம்பித்தோம். அதற்காக ஒருமுறை ஊர்காவற்துறைக்குச் சென்றிருந்தோம். கற்றல் உபகரணங்களுடன் சிறுவர்களுக்கான சப்பாத்துகளையும் எடுத்துச் சென்றிருந்தோம். அதை சிறுவர்களிடம் கொடுத்தபோது அதில் ஒரு ஆறு வயதான சிறுமியொருவர் ‘இதை என்ன செய்வது?’ என சிரித்துக்கொண்டு எங்களிடம் தமிழில் வினவினாள், எங்களுடன் சென்ற பல பெண்கள் அவ்விடத்திலேயே அழுதுவிட்டனர். இதுதான் இந்த யுத்தினால் கிடைக்கப்பெற்ற பெறுபேறு. அந்தச் சிறுமியின் கேள்வியே இன்று யுனிற்டி மிஷன் ட்ரஸ் என்ற ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று உருவாவதற்கு மிகப்பெரிய காரணமாயிற்று. எல்லாச் சிறுவர்களையும் ஒன்றிணைத்து இன மத பேதமற்ற உறவை அவர்களுடே கட்டியெழுப்பவேண்டும் என சங்கற்பம் கொண்டதன் விளைவே இந்த நிறுவனம். 

கேள்வி: யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் யூனிற்டி மிஷன் ட்ரஸ் நிறுவனம் ஆரம்பத்தில் எத்தகைய ஒத்துழைப்புகளை வழங்கினீர்கள்? 

பதில்: யுத்தத்தின் இறுதிக்ககாலங்களில் இருந்து முகாம்களில் உள்ள சிறுவர்களுக்கு உணவும் கல்வியும் அளிக்கும் விடயத்தில் நாம் தீவிரமாகச் செயற்பட்டோம். பின்னர் மீள தமது இடங்களுக்கு அவர்கள் சென்றபின் மிகவும் வறிய நிலையிலுள்ள கிராமங்களை இனங்கண்டு அவற்றுக்கு நீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்வதற்கு உதவிகளை வழங்கினோம். அத்துடன் சுகாதார வசதிகள் மிகவும் பின்தங்கியிருந்ததால் நாம் மருத்துவ முகாம்களை ஆரம்பித்தோம். ஊர்காவற்றுறை என்னும் இடத்தில் அப்போது 25,000பேருக்கு ஒரு வைத்தியரே காணப்பட்டார். அப்போது 40வைத்தியர்களை அழைத்து பல இடங்களில் வைத்திய முகாமை ஆரம்பித்தோம். இதனை அடுத்து மன்னாரின் விடத்தல்தீவிலும் இத்தகைள வைத்திய முகாம்களை நடத்தினோம். 

கேள்வி: இந்த நிறுவனத்தினூடாக தற்போது எத்தகைய பணிகளை ஆற்றிவருகிறீர்கள்? 

பதில்: இன்று இந்த நிறுவனம் நாடாளாவிய ரீதியில் 21கிளைகளாக வளர்ந்து பரந்து விரிந்துள்ளது. சிறுவர்களுக்கும் அவர்கள் வளர்ந்து இளைஞர்களாகியுள்ள நிலையில் அவர்களுக்கும் நாம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறோம். தமிழ் சிங்களச் சிறுவர்களை இணைத்து நல்லுறவைப் பேணும் நிகழ்ச்சிகளையும் செய்துவருகிறோம்.

இளைஞர்களின் படிப்பு, வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம். இன்றைய நவீன தொடர்பாடலைப்பயன்படுத்தி இளைஞர்களைக் குழுக்களாக்கி உரையாட வைத்துள்ளோம். அவர்களது கிராமங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வழிகளுக்கு ஆலோசனைகளையும் உதவிகளையும் கிரமமாக வழங்கி வருக்கிறோம். அதேநேரம் ஒவ்வொரு மதங்கள் தொடர்பிலும் உரையாடல்களை நிகழ்த்தி வருகிறோம். 

கேள்வி: தமிழ் சிறுவர்கள், இளைஞர்களுடனான உரையாடலின்போது மொழித்தடையை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? 

பதில்: ஆரம்பத்தில் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன்தான் செயற்பட்டோம். பின்னர் சில மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்பதற்கான வழிகளை உருவாக்கினோம். சிங்களத்தையும் கற்றனர். அவர்களுள்ளே பலர் ஆங்கிலத்தில் எம்முடன் தொடர்புகளைப் பேணி வருகின்றனர். குழுக்களாக நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்பாடலை மேற்கோள்ளும்போது ஆங்கிலத்தையே அவர்கள் பயன்படுத்துகின்றனர். 

கேள்வி: எமது நாட்டின் பல்வகைமைத்தன்மையை எவ்வறு பேணலாம் என எண்ணுகிறீர்கள்? 

பதில்: பல்வகைமை என்பது எமது நாட்டிற்கே அழகானது. நாங்கள் ஒவ்வொருவரும் மற்றைய இனத்தவர்களின் கலாசாரப் பின்னணியினைக் கொண்டு போசிக்கப்பட்டுள்ளோம். அதையுணர்ந்து நாங்கள் அத்தனை பேரும் ஒருவரது கலாசாரத்தைப் பற்றி மற்றையவர்கள் ஓரளவேனும் அறிந்துகொள்ள வேண்டும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். ஒரு கலாசாரத்தைச் சார்ந்தவர்கள் ஒரு மதத்தை, இனத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறி அவர்களுக்குள் மட்டும் ஒன்றிணைந்து இருத்தல் போதாது. அவ்வாறு ஒதுக்கி இருப்பது சரியில்லை. இலங்கையர் என்ற ரீதியில் நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

அவ்வாறு பணியாற்றுகின்ற போது, எங்களால் அனைத்துக் கலாசாரங்களையும் போசிக்கமுடியும். உதாரணமாக, இஸ்லாத்தினை எடுத்துக்கொண்டால் சிறப்பான கருத்துக்கள் பல உள்ளடக்கப்பட்ட ஒரு அழகான மார்க்கம். வாழ்க்கைக்கான வழியினை போதிக்கின்ற ஒரு மார்க்கம்.

ஆனால் இன்று பலரும் இஸ்லாம் என்றால் வஹாபிசத்தினையே முன்னிறுத்துகின்றனர். இஸ்லாம் என்றால் வஹாபிசம் அல்ல. என்னைப் பொறுத்தவரையில் இஸ்லாம் மதத்தினில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் கருத்துகளில் இருந்து வஹாபிசம் முற்றிலும் வேறுபட்டதும்,  மாறுபாடானதுமான கருத்தினைக் கொண்டது. இந்த வஹாபிசவாதிகளின் கருத்தினால் இலங்கையானது துண்டாடப்படுகின்றது. நாங்கள் இன்றும் எமது நிறுவன பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கின்றோம். ‘இஸ்லாம்’ என்றால் என்ன என்பதைப் பற்றி, இஸ்லாம் என்ற மதத்தினைப் பார்த்து பயங்கொள்ள வேண்டாம் என, இஸ்லாத்திலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அது வாழ்க்கைக்கான வழிகாட்டுகின்ற மார்க்கம் என்பதை எடுத்துச் சொல்கின்றோம். இவை பல்வகைமையைப் பேணுவதற்கான வழிகள். 

கேள்வி: இத்தனை வருட காலத்தில் ‘ஒற்றுமை’ என்பதை கட்டியெழுப்புவதில் பிழைத்த இடம் எது? அதனை எவ்வாறு சரி செய்துகொள்ளலாம்? 

பதில்: இது ஓர் ஆழமான அரசியல் தாக்கங்களுடன் கூடியதொரு பிரச்சினை. அதைப் பற்றி நான் அதிகளவில் பேச விரும்பவில்லை. அதே நேரம் ஊடகங்களுக்கும் இதில் பாரிய பங்குண்டு. நான் வாடிக்கையாக வாங்குகின்ற ஐந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றை, வாசிப்பதையும் வாங்குவதையும் நிறுத்திவிட்டேன். இனங்கள் மீதான வெறுப்புணர்வினை மேலும் மேலும் அதிகரிக்கின்றவிதமாக அவர்கள் கட்டுரைகளைப் பிரசுரித்திருந்தனர். அதிலிருந்தே வெறுப்பூட்டும் பேச்சுக்களும் உணர்வுகளும் பரப்பப்படுகிறது. அடுத்து பாடசாலைகள்! என்னைப்பொறுத்தவரை ஒற்றுமையின்மைக்கு பெரும் பங்களிப்புச் செய்வதே பாடசாலைகள்தான். சிங்கள, தமிழ், இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம், பௌத்தம் எனப் பாடசாலைகளுக்குள் பிரிவினை ஏற்படுத்திக்கொண்டிருப்பதே!

மதங்களும் கலந்த ஒரு கலவன் பாடசாலையாக வடிவமைக்கப்பட்டு நடாத்தப்படுமேயானால் இந்தப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். அவர்கள் ஒன்றாக விளையாடும் போது, ஒன்றாக இருந்து கல்வி கற்கின்ற போது இந்த இனரீதியான பாகுபாட்டினை அவர்கள் மறந்துவிடுவார்கள்.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் சிறுவர்களளை நாம் ஒன்றாக இணையவிடவேண்டும். நான் என்னுடைய குழாத்தில் இருக்கும் பிள்ளைகளிடம் கற்பிப்பது ஒற்றுமையைப் பற்றி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மற்றையவருக்கு மதிப்பளிப்பது தொடர்பில்தான். ஒதுங்காதீர்கள் ஒன்றிணையுங்கள் ஒன்றாகப் பணியாற்றுங்கள் என்பதை முன்னிறுத்தி பல்வேறு செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றோம்.

இவ்வாறான குழுக்கள் பல்கிப் பெருகும் போது நாட்டின் ஒற்றுமை கட்டியெழுப்பப்படும். நாங்கள் இலங்கையர்கள். முஸ்லிம்களென்றோ, சிங்களவர்களென்றோ, தமிழர் என்றோ உங்களுக்குள் பாகுபாடுகளை ஏற்படுத்தி வேறுபடாதீர்கள். ‘அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு.’ 

கேள்வி: உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் உங்கள் குழுக்களுள் உள்ள இளைஞர்களின் நிலைப்பாடு எவ்வாறிருந்தது? 

பதில்: எங்களது நீர்கொழும்பு பிராந்தியக் கிளையில் பணியாற்றிய இரு பிள்ளைகள் கூட்டங்களுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார்கள். இச்சம்பவத்தின் பின்னர் எம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டாம் என்று அவர்களது பெற்றோர் கூறியதாகக் கூறினர். அவர்களது பெற்றோர்களின் உளவியல் ரீதியான முதிர்ச்சிக் குறைபாடே இதற்குக் காரணம். அந்தப்பெற்றோர் தனிதனித்தனியாக வளர்க்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள். அவ்வாறான ஒரு வெறுப்புணர்வினை அடுத்த சந்ததிக்கு இவ்வாறுதான் கடத்துகின்றனர். இவ்வாறான பிரச்சினைகள் பிள்ளைகள் மத்தியில் காணப்படுவதைவிடவும் பெற்றோர்கள் மத்தியிலேயே அதிகளவில் காணப்படுகின்றது. அதுதான் நாங்கள் எமது இளைஞர்களிடம் கேட்கின்றோம். நாட்டில் மாற்றத்தை எதிர்பார்க்கும் முன்னர் உங்களின் மத்தியில் மாற்றத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள் என்பதை வலியுறுத்துகிறோம். அதையும் எமது பிள்ளைகள் செய்து காட்டியுள்ளனர். 

கடந்த ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஒரு அலுவலகத்தில் பணியாற்றிய முஸ்லிம் பிள்ளை பிரியாணி கொண்டு சென்றிருந்தார். அங்கிருந்தவர்கள் எவரும் அந்த பிரியாணியை உண்ணவில்லை. இதற்குள் ஏதாவது மாத்திரைகளைக் கலந்திருந்தால், என்ற சந்தேகத்தை அவர்கள் பரஸ்பரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு பிள்ளை மட்டும் அந்த உணவினை முன்வந்து உண்டது. அது எமது குழுவில் உள்ள பிள்ளை. அதன் பின் ஒரு சிலர் உண்டதாகக் கூறினார்.

இதே போல் எல்பிட்டியவிலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான ஒரு முஸ்லிம் மாணவி ஆரம்ப காலங்களில் சிங்கள நண்பிகளுடனேயே பழகியிருந்தார். ஏப்ரல் 21இன்பின்னரான பிரச்சினையின் பின்னர் அவர்களது நண்பிகள் அவரை ஒதுக்க தொடங்கிவிட்டனர். இவர்களது வெறுப்புப் பேச்சின் காரணமாக அவர் பல்கலைக்கழக கல்வியை பாதியில் இடைநிறுத்திவிட்டுச் சென்றிருப்பார்.

ஆனால் எங்களது ஒரு பிள்ளை அவரைச் சமாதானப்படுத்தி அவருடன் நட்பு பாராட்டி வருகின்றார். பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கு அந்த நட்புதான் அவருக்கு உறுதுணையாக உள்ளது. இவ்வாறான சம்பவங்கள் எமது பிள்ளைகளின் சொந்த அனுபவங்கள். 

கேள்வி: யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளம் தலைமுறையினரை வலுவூட்டுவதற்காக எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன? 

பதில்: குறிப்பாக பௌதீக ரீதியான உதவிகளை விட அப்போது உள ரீதியான நம்பிக்கையும் ஆற்றுப்படுத்தலுமே தேவையாக இருந்தது. இதற்காக நாம் அங்கிருந்த சிவில் சமூகத்தில் சிலரையும் அழைத்து சிறு கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தோம். நீங்கள் குழந்தைகள் தொடர்பில் அதிக அக்கறை கொள்பவர்களாக இருக்கின்றீர்கள். ஏன் அவர்கள் தொடர்பில் ஏதாவது மற்றுமொரு திட்டத்தை செய்யக்கூடாது என அவர்கள் கேள்வி எழுப்பினர். அக்கேள்வி எனக்கு உத்வேகமாக அமைந்தது.

நாம் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம். அதன்படி சிறுவர்களில் சற்றுவளர்ந்தோர் பக்கம் எமது கவனத்தைத்திருப்பினோம். உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களை அதில் உள்வாங்கினோம். அவர்கள்தான் கருத்ததுக்களை உருவாக்கப்போகும் அடுத்த படிநிலை மக்கள்.

அன்தபடி முதலில் வடக்கில் இருந்து சுமார் 500பேரை கொழும்புக்கு அழைத்து வந்தோம். கொழும்பில் இருந்து 150சிறுவர்கள் இணைந்தனர். அதற்கு அமைய 650பேர் இதில் பங்குபற்றினர். நான்கு நாட்கள் மிகவும் சிறப்பான நிகழ்வுகளை நடத்தினோம். கொழும்பிற்கு ஒருபோதும் வந்திராத பல சிறுவர்கள் இதில் இருந்தனர். பெரிய பெரிய கட்டிடங்கள் வாகனங்கள் கடைகளை வியந்து பார்த்தனர். இதனூடாக அவர்களுக்கான சிந்தனை உலகத்தை விரிவாக்கினோம்.

நேர்காணல் 
ஏ. மொஹமட் பாயிஸ்,
கமலாராணி கார்த்திகேசு

Comments