மதத்தில் உண்மையான பற்று இருந்தால் இன உறவு தானாகவே வளரும்! | தினகரன் வாரமஞ்சரி

மதத்தில் உண்மையான பற்று இருந்தால் இன உறவு தானாகவே வளரும்!

பிரிக்க முடியாத தமிழ் - முஸ்லிம் பிணைப்பு:

சு.கட்சி சம்மாந்துறைத்தொகுதி புதிய அமைப்பாளர் எம்.பி.அச்சி மொஹமட் உடன் ஒரு நேர்காணல்

கல்முனை பிரச்சினையை அங்குவாழும் மக்கள் நிச்சயம் பேசித்தீர்ப்பார்கள்!

தமிழ் முஸ்லிம் உறவென்பது பிறப்பால் இணைக்கப்பட்டது. அது பிரிக்கப்படமுடியாதது.  தமிழ்மொழியால் ஒன்றிணைந்த தமிழ்மொழியின்பால் இரண்டறக்கலந்த சமூகங்களை  என்றும் பிரியாது, என்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி புதிய அமைப்பாளர் எம்.பி.அச்சி மொஹமட். 

சமகாலத்தில் தமிழ்- முஸ்லிம் உறவில் சற்று விரிசல்  ஏற்பட்டுள்ளது போன்று தெரிகிறது. அதுபற்றிக் கூறுங்கள் என்று கேட்டபோதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

சம்மாந்துறை சரித்திரத்திலே அதிகூடிய 7000வாக்குகளை  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கடந்த தேர்தலில் பெற்றுக் கொடுக்க  மூலவிசையாகத் தொழிற்பட்ட அச்சி மொகமட் சம்மாந்துறை வலயக் கல்விப்பணிமனையில்  சமாதான இணைப்பாளராக அரச பணியாற்றிவருகிறார். இனநல்லுறவில் முக்கிய  பங்காற்றி வருபவர்.  

அதுமட்டுமல்ல, சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதேச சபை  உறுப்பினருமாவார். சம்மாந்துறையில் பல பொதுஅமைப்புகளில் முக்கிய வகிபாகம்  கொண்டவர்.

அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  சம்மாந்துறைத்தொகுதி அமைப்பாளர் பதவிக்கான நியமனக்கடிதத்தை வழங்கினார்.  அமைப்பாளர் நியமனக்கடிதத்தைப் பெற்ற அவர், வாசகர்களுக்காக தனது  கருத்துக்களைத் தெரிவிததார். 

கேள்வி: பல வருடகாலம் அரசியலில் இருந்த போதிலும் நீங்கள் பிறந்த மண்ணிற்கு அமைப்பாளராக தெரிவாகியுள்ளமை பற்றிக் கூறுங்கள்?  

பதில்: உண்மையில் நேர்மையான உழைப்பிற்கு ஜனாதிபதி தந்த  ஒருபரிசாக இதனைக் கருதுகிறேன். மகிழச்சியாகவுள்ளது. என்னாலியன்ற சேவையை  வழங்க விருக்கிறேன்.  

கேள்வி: சமகாலத்தில் பேசுபொருளாக இருப்பது கல்முனை வடக்கு  பிரதேச செயலகப் பிரச்சினை என்பதை அறிவீர்கள். அதை ஒரு சமாதானப் பிரியர்  என்ற அடிப்படையில் எவ்வாறு நோக்குகிறீர்கள்?  

பதில்: இது அந்த மக்களது பிரச்சினை. அங்கு நிரந்தரமாக  பல்லாண்டுகாலமாக வாழும் இருசாராரும் பேசித்தீர்க்க வேண்டிய விடயம். இதில்  மூன்றாந்தரப்பிற்கு இடமளிக்கக்கூடாது.  

விட்டுக்கொடுப்புடன் பேசி அவர்களே தீர்வு காணவேண்டும்.  என்னதான் விரிசல் என்றாலும் கல்முனை நகரில் பள்ளிவாசலுமிருக்கிறது.  ஆலயமிருக்கிறது, தேவாலயம் இருக்கிறது, பன்சல இருக்கிறது. இதுவரை அவற்றுக்கு  எந்தப்பிரச்சினையும் நேரவில்லை. கல்முனையின் மக்கள் இருசாராரும்  மனிதநேயம்மிக்க பண்பாளர்கள் என்பதற்கு இது நல்ல சாட்சி.  

கேள்வி; அந்தளவிற்கு சிறந்தமுறையில் தமிழ்முஸ்லிம் பிணைப்பு அங்கிருக்கிறதா?  

பதில்; ஆம். நிச்சயமாக. அங்கு மட்டுமல்ல இப்பிராந்தியத்திலே  அவ்வாறுதான் வாழ்ந்து வந்தார்கள். பிட்டும் தேங்காய்ப் பூவும் என்று  சொல்லமாட்டேன். அது பிரிப்பதற்கு உதாரணம். ஒருமுட்டைக்குள் மஞ்சட்கரு  வெள்ளைக்கரு இருப்பது போல் இரு சமூகங்களும் இருக்கின்றன.  

கல்முனை விடயத்தில் அங்கு நிரந்தரமாக வாழும் இருசமூகங்களும்  இணைந்தே தீர்வைப்பெறவேண்டும். இவர்கள் காலங்காலமாக  சண்டையிட்ட  வண்ணமிருக்கவில்லை.ஒன்றாகவே வாழ்ந்து வந்தவர்கள். எனவே சிறுசிறு  பிரச்சினைகளை மறந்து சமகாலத்திற்கேற்ப இருசாராரும் விட்டுக்கொடுப்புகளுடன்  நிரந்தர தீர்வைக் காணவேண்டும். நிச்சயம் காண்பார்கள்.  

கேள்வி: சம்மாந்துறைத் தொகுதியின் விஸ்தீரணம் எத்தகையது?  

பதில்: இத்தொகுதிக்குள் சம்மாந்துறை, நாவிதன்வெளி,  இறக்காமம், மல்வத்தை, அக்கரைப்பற்றின் ஒருபகுதி என்பன அடங்குகின்றன. பெரிய  தொகுதி.  

கேள்வி: சரி சம்மாந்துறை வரலாற்றில் 7000வாக்குகளை சு.கட்சிக்கு பெற்றுக் கொடுத்ததாக மார்தட்டுகிறீர்கள். அது பற்றிக்கூறுங்கள்?  

பதில்: ஆம். மார்தட்டுவேன். ஏனெனில் அதற்கு முன்னர்  எந்த சந்தர்ப்பத்திலும் சு.கட்சிக்கு இவ்வாறானதொரு வாக்கு  விழுந்திருக்கவில்லை. அதுமட்டுமல்ல, இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்  (மன்சூர் இஸ்மாயில்) 2மாகாணசபை உறுப்பினர்கள் (மாஹிர் அமீர்) இவர்கள்  அனைவரையும் எதிர்த்து இந்த வாக்குகளைப்பெற்றது சாதனைதான்.  

ஆட்சி கூட, எமது சு.கட்சியும் அ.இ.ம.காங்கிரசும் இணைந்து அமைத்துள்ளன.  

கேள்வி: அமைப்பாளரான நீங்கள் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? எதற்கு முன்னுரிமை வழங்கவுள்ளீர்கள்?  

பதில்: நல்ல கேள்வி. பல திட்டங்கள் இருந்தாலும் முதலில்  கல்விக்கே முக்கியத்துவம் வழங்கவுள்ளேன். சமுதாயத்தில் நலிவுற்றிருக்கும்  வலதுகுறைந்தவர்கள், விதவைகள் வயோதிபர்களுக்காக சிறந்ததொரு திட்டத்தை  அமுல்படுத்த எண்ணியுள்ளேன். தொடர்ந்து நீர்ப்பாசனத்திற்கு இங்கினியாகலைக்  குளத்தை நம்பியிராமல், அல்லைப்பகுதியை அபிவிருத்தி செய்து மீள்சுழற்சி  மூலம் எமது பிரதேச வயல்                 நிலங்களுக்குத் தேவையான நீரை வழங்கவிருக்கிறேன்.  

கேள்வி: பிரதேச சபை உறுப்பினராக உள்ளீர்கள். உங்கள் கட்சி நிலைவரம் பற்றிக்கூறுங்கள்?  

பதில்: நான் பிரதேசசபை உறுப்பினராகவிருப்பது இது இரண்டாவது  தடவை. 2011இல் முதலாவதாக உறுப்பினரானேன். 2018இல் இரண்டாவது தடவையான  உறுப்பினரானேன். எமது சபையில் 20உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில்  04உறுப்பினர்கள் தமிழர்கள். எமது கட்சியில் இரு தமிழ் உறுப்பினர்கள்  நேரடியாகத் தெரிவுசெய்யபட்டிருந்தார்கள். அவர்களில் ஜெயச்சந்திரன் என்ற  உறுப்பினரை உபதவிசாளராக தெரிவுசெய்ய வேண்டும் என கட்சித் தலைமைப்பீடத்திற்கு  கடிதம் எழுதியவன் நான்.  

கேள்வி: சபை நடவடிக்கைகளில்,  தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி பற்றி என்ன சொல்ல விளைகிறீர்கள்?  

பதில்: அதிர்ஷ்டவசமாக எமது தவிசாளர் நௌசாட் மற்றும்  உறுப்பினர்கள் உதாரண புருசர்களாக உள்ளனர். உண்மையில் எவ்வித  பாகுபாடுமின்றி, அபிவிருத்தி இடம்பெற்றுவருகிறது. அதிலும் உபதவிசாளர்  ஜெயச்சந்திரன் இதுவரை 10கோடி ரூபா அளவில் அவரது சொந்த முயற்சியில் பெற்று  பிரதேசங்களை அபிவிருத்தி செய்து வருகிறார்.  

கேள்வி: மல்வத்தைக்கு தனியான உள்ளுராட்சிசபைக் கோரிக்கையொன்று  முன்வைக்கப்பட்டுள்ளதே. அப்படி வந்தால் தங்கள் நிலைப்பாடு என்னவாக  விருக்கும்?  

பதில்: நிச்சயம் அதற்குச் சாதகமாக இருப்பேன். மல்வத்தை  வளத்தாப்பிட்டி, மஜீட்புரம் சம்மாந்துறையின்  சிலபகுதி என்பனவற்றை இணைத்து,   தமிழ்மக்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய வகையில் புதிய மல்வத்தை  பிரதேசசபை அமைவதற்கு எனது பூரணஆதரவு இருக்கும்.  

கேள்வி: தங்களைப் போன்ற அரசியல்வாதிகள் இருந்தால் நாட்டில்  பிரச்சினை என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இதனையே சமூகங்களும்  விரும்புகின்றன. இல்லையா?  

பதில்: நாம் வாழும் காலம் சிறிது. இதற்குள் ஈகோ, வைராக்கியம்  இனம்,மதம் மொழி என்று பிரிந்து நின்று வாழ்க்கையை வாழத்தெரியமால் அழிக்க  முற்படக்கூடாது. ஒருசிலருக்காக சமூகங்களை சீரழிய விடமுடியாது.  

கேள்வி: இறுதியாக என்னதான சொல்ல விளைகிறீர்கள்?  

பதில்: எனது காலத்தில் எந்த இனமதபேதமுமின்றி அபிவிருத்தி  தொடக்கம்,  அத்தனை செயற்பாடுகளிலும் நீதியான, நேர்மையான சேவையைச் செய்வேன்.  மக்கள் ஒத்துழைக்க வேண்டும். ஒருவரையொருவர் நம்பவேண்டும்.  

கேள்வி: சமகாலத்தில் சீர்குலைந்துள்ள தமிழ் முஸ்லிம் உறவை மீண்டும் கட்டியெழுப்ப ஏதாவது ஆலோசனை கூறுவீர்களா?  

பதில்: நிச்சயமாக. முதலில் அவரவர் சமயங்களை முறையாகப்  பின்பற்றினால்,  இந்த உறவு தானாகவே வளரும். யாரும் கட்டியெழுப்பத்  தேவையில்லை. பிறசமயத்தை மதித்து வாழவே எல்லா மதங்களும் சொல்கின்றன.  மதபோதகர்கள் முறையாக சமூகத்தை வழிநடாத்தவேண்டும். பின்பு பாருங்கள் இனஉறவு  எவ்வாறு இருக்குமென்று. 

நேர்கண்டவர்
வி.ரி.சகாதேவராஜா

Comments