தியாகத் திருநாளில் | தினகரன் வாரமஞ்சரி

தியாகத் திருநாளில்

வெள்ளி ஜூம்ஆவின் பின் ஒரு குழு கூடி நின்றது.  

உரையாடலில் முக்கிய இடம்பிடித்தது, எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாள் ‘உழ் ஹிய்யா’ குர்பான் மாடறுத்தல்!  

இலக்கியவாதிகள் மட்டுமல்லாமல், அந்த போட்டிலேயே பிரபல சாப்பாட்டுக் கடை முதலாளி எஹியா நாநா முதற் கொண்டு தஃப்லிக் தௌஃபீக் வரை நின்றிருந்தனர்.  

“எப்படி எங்கட இமாம் அவுங்ட ஹஜ்ஜு  பயானும், டிரஸ்டியோட உழ் ஹிய்யா அறிவிப்பும்” என்று பேச்சைத் துவக்கியது முதலாளி எஹியா தான்.  

“அது வழக்கமாக வருவாவருசம் சொல்லப்படுகிறது தான். சொல்லவும் வேண்டும் நம் மக்களுக்கு உழ்ஹிய்யா விசயத்துல சரியா நடைமுறைகளை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறதே” சிரேஷ்ட ஒலி – ஒளிபரப்பாளர் ரஹீத் எம். ஹஃபீள் கருத்தை வைத்தார்.  

“உழ்ஹிய்யா – குர்பானுக்குப் பொறகு நம் மக்கள் அந்தக் கழிவுகளை அப்புறப்படுத்துற வெஷயத்துல ரொம்பவே மோசம்” தஃ்ப்லீக் தௌபீக் கசப்பான உண்மையைப் பளிச்சிட்டார்.  

எப்பொழுதும் அமைதியைக் கடைப்பிடிக்கிற கவிதா அனிஸ் கனைத்துக் கொண்டு “இந்த முறை எதையும் கணக்க யோசித்துச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கு.  

ஏப்ரல் 21தறுதலைத் தனங்களால் நம் சமூகம் பல பிரச்சினைகளில் மூழ்கி மூச்சிவிட இன்னமும் கஷ்டப்படுது. ஏதோ நோன்புப் பெருநாளை ஒப்பேத்திட்டம்! வாற ஹஜ்ஜுப் பெருநாள் குர்பான் வெசயத்துல. ரொம்பக் கவனம் தேவை. யோசித்து செய்ய வேண்டிய விஷயம். சரியா அந்தச் சமயத்தில் எஸல பெரஹராவும் வந்து சேருது’ என்று ஒரு லெக்சரே அடித்து விட்டார்.  

அவரைக் கட்டியணைத்தார் ரஷீத் கருத்தான பேச்சுக்கு!  

“அப்லோ குர்பானை நிப்பாட்டச் சொல்றீங்களா மாஸ்டர்?” ‘பொடு போக்கு’ முஹூசீன் தூக்கா மூக்கை நுழைத்து விட்டார். நுழைத்து! அவருக்கு அனிஸ் ஒரு கவிஞர் என்று தெரியாது. ஸாஹிரா மாஸ்டர் தான்!  

“அடடா... அதச் சொல்ல வரல்லேப்பா அவுறு! நாட்டு நடப்பயும் நாம் நடந்து கொள்ள வேண்டிய வெசயத்திலயும் அவதானம் தேவை எண்டு சொல்லவாராறு... புரியாதவானாயிருக்கிறியே...?” இது தஃப்லீக் தௌஃபீக்.  

கவிஞர் அனிஸ் வழக்கம் போல் மென்னகையுடன் மௌனம்!  

அதைக் கலைத்துக் குலைத்து கதைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தவர் எஹியா முதலாளி தான்!  

அனிஸ் மாஸ்டர் பேச்சில எவ்வளவோ, பொயிண்ட்ஸ் எனக்கு வௌங்குது. நாடு இழுக்குற இருப்பில. நாம இருக்கிற நெலமையில, உழ்ஹிய்யா குர்பான் பத்தி யோசிச்சித்தான் முடிவு எடுக்க வேண்டும்.  

எஸல பெரஹரா அவுங்கட பெரிய பெரஹரா.  

கூடியிருந்தவர்களுக்கு குப்பென்று வியர்த்தது!  

“என்ன இந்த மனிஷன் இப்படிப் பேசுகிறாரே என்று உள்ளுக்குள் எல்லோரும் புகைந்தார்கள்.  

ஆனால் ‘பொடு போக்கு’ (முஹூசீன்) ஏதோ சொல்ல வாயெடுத்தார்.  

கையைக் கட்டி அடக்கினார் முதலாளி.  

‘நான் சொன்ன பேச்சி, என் பணத்தைப் பாதுகாக்க ஓணுமெண்டதற்காக இல்லே சீதேவிகளே...  

ஒண்டை நீங்களெல்லாம் மறந்துடப்புடாது. ‘உழ் ஹிய்யா’ ஒரு சுன்னத்தான் நபிகள் அவுங்க காட்டிய கடமையே தவிர   கட்டாய பாலது இல்லே... இல்லே!”  

அதென்னமோ உண்மைதான்.  

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம். அது அவர்களின் சுன்னத்தான நடைமுறை வழி காட்டல் ஒண்டுதான். வசதிப்பட்டவர்கள் வசதி இல்லாதவங்களுக்கு நல்ல ஆகுமான ஒரு இறைச்சி உணவை வழங்கி, கறி ஆக்கி வைத்து, இபுராஹிம் நபி அவர்களோட தியாகத்தை நினைக்க வைக்கிற நாள் என்று விளக்கிய ஹஃபீள், “சரி, எஹியா முதலாளி, என்னதான் சொல்ல வாறீங்க. எண்டுறதை தெளிவாக சொல்லிடுங்களேன். இதை எதிர்பார்த்திருக்கிற ஏழை எளியதுகளுக்கு ஏமாற்றமாகி விடாதா?” கேள்வி எழுப்பினார்.  

“ஏழைகளுக்கு எவன் குடுக்கிறான். பணக்காரன் பணக்காருக்குத் தான் குடுத்துக் கொளரான அந்தப் பேச்சை எடுத்தா இங்கனைக்குப் பெரிய பலாய்! அதே ‘பொடுபோக்கு’! ஆனால் அர்த்தமுள்ள பேச்சுப்போக்கு!  

எஹியா முதலாளி கையமர்த்திச் சொன்னார்.  

“ஏழை பாழைகளைப் பாதிக்கும் தான். நல்லா கேட்டுக் கோங்கோ, செய்வம்! இந்தத் தடவை மட்டும் தியாகம் ஹஜ்ஜு என்பதே, தியாகம் தான்! தியாகத் திருநாள் தான்!”  

சொல்லியவர் உடனே அனைவருக்கும் ஸலாம் உரைத்தவாறு அவர்களை விட்டுப் பிரிந்து பக்கத்தில் நின்றிருந்த காரில் ஏறி ‘பசிக்குது சுருக்கா வூட்டுக்குப் போப்பா, டிரைவர்’ என்றார். கூட்டமும் கலைந்தது!

                                *

வீட்டைச் சென்றடைந்த எஹியா முதலாளி உணவு உண்டார். சற்று சாய்வு நாற்காலியில் சாய்ந்து அஸர் பாங்கொலிக்கு முன் எழும்பினார். வீட்டிலேயே தொழுகையை முடித்தார்.  

அப்புறம், கடைக்குப் போய்விட்ட மகன்மார் இருவருடனும் ஒரு தொலைபேசித் தொடர்பு கொண்டார்.  

“இன்னைக்கு இஷாவுக்குப் பொறகு ஒரு (மசூறா கலந்தாலோசித்தல்) இருக்குது மக்களே. எங்கேயும் வூட்டுக்கு போயிடா நேசத்தோட வந்து குங்க” என்று தகவல் சொன்னார்.  

பறந்தே பறந்தது நேரம். இஷாவும் வந்தது. முடிந்தது.  

“என்ன வாப்பா மசூறா?” என்று இரு பிள்ளைகளும் அவர் அருகில் வந்தார்கள்.   

“இண்டைய ஜும்ஆவுக்குப்பொறகு மக்களே நா செல முடிவுகள எடுத்தேன். அதன்படிக்கு இந்தத் தடவை ஹஜ்ஜுக்கு உழ்ஹியா நாம செய்யிறதில்லே.”  

“என்ன வாப்பா சொல்றீங்க?”  

இரு பிள்ளைகளும் அதிர்ச்சியில் உறைந்தபடி வினா!  

“பதற வாணாம்! ஒரு புதியகடமையைச் செய்ய யோசனை. அதுக்கு முந்தி ஒண்டை வௌங்கிக் கொள்ளனதும், ஹஜ்ஜுக்கு நாங்க தான். செய்யிற உழ்ஹிய்யா ஒரு சுன்னத்து (கட்டாயக் கடமை அல்லாதது) நா செய்யப்போறது பாலதுக் கடமையப் போல ஒரு சப்ஜெக்ட்!  

ஆங்கிலமும் வந்தது முதலாளிக்கு! பேச நாவு எழமால் தந்தையாரை ஏறிட்டுப் பார்த்தார்கள் இரு மக்களதும் “சொல்லுங்கள் விளக்கமாக” என்பது போல் பார்வை.  

எஹியா முதலாளி கனைத்துக் கொண்டு, அந்த முக்கிய முடிவைச் சொல்ல ஆரம்பித்தார்.  

“ஏப்ரல், மே மாசங்களில நடந்த ஜரமாயில் எங்கடவங்க பாதிப்புக்குள்ளான எடங்கள் நீர்கொழும்பு – பள்ளிமுற்ற, கன்னொருவை – மினுவாங்கொடை, மாராவில – செலாபம், அங்கையெல்லாம் கடையள்வள், வூடுவள் எண்டு சரியான கணக்கு’ இன்னும் இல்லே. இதுக்குள்ளே நோம்பு, நோம்புப்பெருநாள் வந்து முடிஞ்சி. அதுவும் இப்போ ஹஜ்ஜு, ஏழை பாழைகள் இன்னமும் கஷ்டங்களுல இருந்து மீள இல்லே. அவுங்களப்பத்தி யோசிக்காம என்ன உழ்ஹியா, என்ன குர்பான்?”  

இளய தலைமுறையினர் இருவரும் நெற்றியைப் பிடித்துக் கொண்டனர்.  

“நீங்க சொன்ன பிறகு தான் அவுங்களப் பற்றியே நினைக்கிறேன் வாப்பா!”என்று ஒரு பிள்ளை சொன்னான் மறைக்காமல்.  

“நெனைவு வாறதே பெரிய வெஷயம் மகனே. இன்டைக்கு ஜும்ஆ பயானிலையும் லேசாத் தொட்டார் இமாம். ஆனா டிரஸ்டி குர்பான் வெஷயத்துல நம்ம மக்கள் நடந்து கொள்கிற பொடுபோக்குகளை லேசா அறிவிப்பில சொல்ல அத கார்மானமாகச் செய்யுங்கோ எண்டு கேட்டுக் கொண்டார்.  

“ஓ... வாப்பா... நாங்களும் கேட்டோம். அப்படி செய்திட எங்க ரெண்டு பேராலையும் எலும், நீங்க அனுமதி குடுத்தா...?  

“நான் தான் வேற முடிவுக்கு வந்துட்டனே... இந்தத் தடவை வெளியிடங்களிலே சுமண பண்டாவுக்கிட்டயும், சிறிபாலாக்கிட்டயும் சல்லி குடுத்து மாடு வாங்குறது பெரிசில்லே... ஆனா கொழும்புக்கு லொரி புடிச்சி, அவனுக்கும் இவனுக்கும் வெலிக்கம் சொல்லி வூட்டுக்கு வாறது லேசில்லே மக்களே...!”  

“சரி வாப்பா, நாங்க என்ன செய்ய வேணும் சொல்லுங்க.”  

“நீங்க மக்கள் வள் நாளைக்கே புறப்பட்டுப் போய், அடாவடிகளுக்கு அம்புட்டு, வூடுவாசல் சேதமாகி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற ரெண்டு மூன்று இன்ஸான்களைக் தேடிப்பிடிக்கிறீங்க! அவுங்களுக்கு எங்களால் எண்ட பொருளுதவி செய்ய நிய்யத்துச் செய்வோம். அது நாளைஞ்சி ஹஜ்ஜு உழ்ஹியா குர்பான் கதைக்குச் சமமாக ஆகக் கூடும்!”  

“சரி வாப்பா நாளைக்கே புறப்படுகிறோம்.

தமிழ்மணி மானா மக்கீன்

Comments