விண்ணேற்பை சிறப்பிக்கும் மடுமாதா பெருவிழா | தினகரன் வாரமஞ்சரி

விண்ணேற்பை சிறப்பிக்கும் மடுமாதா பெருவிழா

மடுத்திருப்பதியின் ஆவணி மாத திருவிழா 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.   கொடியேற்றத்தினைத் தொடர்ந்து தினமும் நவ நாள் ஆராதனைகள் இடம்பெற்று எதிர்வரும் 15ஆம் திகதி திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் இடம்பெறவுள்ளது.  

அன்னை மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவே மடுத்திருப்பதியின் ஆவணி மாத திருவிழாவாகக்கொண்டாடப்படுகிறது. இதனால் இத் திருவிழா இரட்டிப்புச் சிறப்பைப் பெறுகிறது.  

“அன்னை மரியாள் தன்னைத் தேடிவரும் அனைவருக்கும் அடைக்கலம் தரும் நகரம்” என புனித தமசீன் நகர் அருளப்பர் குறிப்பிடுகிறார். அதேபோன்று மடுமாதாவும் தன்னைத் தேடிவரும் அனைவருக்கும் அடைக்கலம் தரும் தாயாகின்றார்.  

இதனால்தான் யுத்த காலத்தில் பல்லாயிரம் மக்களுக்கு பாதுகாப்பும் அடைக்கலமும் அளித்த மடுத்திருப்பதி சமாதானத்தின் அடையாளமாகவும் இன நல்லிணக்கத்தின் குறியீடாகவும் திகழ்கின்றது.  

ஒரு தாய் தன்னுடைய ஒரு மாத கைக்குழந்தையுடன் தரையில் பாய் விரித்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று கருநாகம் ஒன்று வாசல் வழியே வந்து அவர்களுக்கு முன்பாக படமெடுத்து நின்றது.  

இதைப் பார்த்த அக்கம் பக்கத்து வீட்டார் பதைபதைத்துப் போனார்கள். ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றார்கள். பின்னர் அந்த தாயைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்தார்கள். அவளிடமிருந்து ஒரு பதிலும் வராததால் ஒரு நீளமான தடியை எடுத்து அவளைத் தட்டிப் பார்த்தார்கள்.  

அப்போதும்கூட அவள் எழுந்திருக்கவில்லை. இறுதியாக ஒரு மல்லிகைப் பூவை எடுத்து குழந்தையின் மீது எறிந்தார்கள். அடுத்த நிமிடம் தன்னுடைய குழந்தைக்கு ஏதோ ஆயிற்று என்று தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த அத் தாய் குழந்தையின் மீது விழுந்திருந்த மல்லிகைப்பூவை எடுத்து தூர எறிந்தாள். அதன்பின் தன் முன்னால் இருந்த பாம்பிடமிருந்து குழந்தையும் தன்னையும் எந்த ஒரு பதற்றமுமின்றிக் காப்பாற்றினாள்.  

அக்கம் பக்கத்து வீட்டார் தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டபோதும் தடியால் அடித்தபோதும்கூட எழாத தாய் தன்னுடைய குழந்தைக்கு ஏதோ ஒன்று நடக்கிறது என்றவுடன் எவ்வளவு பதறிப்போகிறாள்? ஒவ்வொரு நொடியும் குழந்தையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கின்ற ஒருதாயால்தான் இப்படிச் செயற்பட முடியும். இதுதான் தாயின் உண்மையான அன்பு.  

நம் மரியன்னைக்கு மருத மடு திருப்பதியில் விழா எடுக்கி்சறோம். நாம் ஒரு சாதாரண தாயைவிட மேலாக மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது முழுமையான அக்கறை கொண்டிருப்பவள். கண்மணிபோல கருத்தாய் காப்பவள். அதனால் நாம் அவருக்கு விழாவெடுப்பது மிகவும் பொருத்தமானது.  

மரியன்னையின் விண்ணேற்பு விழா என்பது உலகிலுள்ள அனைத்துக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படும் ஒரு விழா. இயேசு கிறிஸ்து தனது தாயாரை நம் அனைவருக்கும் தாயாக இவ்வுலகில் விட்டுச் சென்றார்.  

“பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்ட தாய்”, “அருள் நிறைந்த பெண்மணி” என்று பெண்குலத்திற்கு மட்டுமல்லாது உலகத்தில் உள்ள தாய்மார்களின் பொக்கிஷமாக திகழ்பவள் தான் நம் மரியன்னை. எனவே அத்தகைய அன்னையின் விழாவைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் அவள் நமக்கு தருகின்ற செய்தியைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.  

மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவானது கி.பி.8ஆம் நூற்றாண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.  

திருத்தந்தை முதலாம் நிக்கோலஸ் (கி.பி.858- 867) இவ்விழா வரலாற்றில் என்றும் மறையாத அளவிற்கு திருவழிபாட்டில் ஊன்றச் செய்தார். திருத்தந்தை 12ஆம் பத்திநாதர் 1954ஆம் ஆண்டில் அன்னை மரியாள் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள் என்றும் திருச்சபையின் போதனையை விசுவாச சத்தியம் என்றும் பிரகடனப்படுத்தினார்.  

இதற்கு ஓர் இறையியல் அடிப்படையென்றால், “பாவமறியாத மரியாளை மரணம் எப்படித் தீண்ட முடியும்?” என்பதுதான். இதன்வழியாக அன்னை மரியாள் மரணத்தின் பிடியில் சிக்காமல் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்ற நம்பிக்கை வேரூன்றியுள்ளது.  

திருத்தந்தை 12ஆம் பத்திநாதர் தனது சாசனத்தில் அன்னை மரியாளின் மரணம் பற்றி திட்டவட்டமாக எதுவும் கூறாமல் ‘தனது வையக வாழ்வு நிறைவெய்தியவுடன் மரியாள் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள்’ என்று மட்டும் குறிப்பிடுகிறார்.  

மரியாள் இயேசுவை தமது உள்ளத்தில் ஏற்று உதரத்தில் தாங்கி அவருடைய உணர்வுகளோடு ஒன்றாகி மீட்புத் திட்டத்தில் முழுமையாகத் துணை நின்றதால் அவள் இயேசுவின் உயிர்ப்பிலும் முதன்மையாக பங்கு பெறுவது தகுதியும் நீதியுமாகும்.  

இது நாம் அனைவரும் பெறப்போகும் விண்ணக மகிமையின் முன்னடையாளமாகவும் இருக்கும்.  

இயேசு கிறிஸ்துவைப் போன்று, அன்னை மரியாளைப் போன்று இறைவனின் திருவுளத்தின் படி நடக்கின்ற நாம் ஒவ்வொருவருமே விண்ணக மகிமையைப் பெறுவோம் என்பதில் எந்த ஐயமுமில்லை.  

எனவே அன்னையின் விண்ணேற்பு பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் நமது இல்லங்களில் இருக்கக்கூடிய அன்னையரைப் பேணிப் பாதுகாப்போம்; அவர்களுக்கு தொண்டு செய்து வாழ்வோம். இன்னும் சிறப்பாக அன்னை மரியாளைப் போன்று நம்மோடு வாழும் மக்களின் துன்பம் கண்டு இறங்கி, அவர்களின் துயர் துடைப்போம். அதன் வழியாக இறையருள் பெறுவோம்.  

அருட்தந்தை அந்தோனிராஜ்

Comments