இலங்கையில் முதலாவது வாகன தயாரிப்பு தொழிற்சாலை வெலிப்பென்னவில் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் முதலாவது வாகன தயாரிப்பு தொழிற்சாலை வெலிப்பென்னவில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பித்து வைப்பார்

இந்தியாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் இலங்கையின் ஐடியல் நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயாரிப்பு தொழிற்சாலையை இலங்கையில் முதல் முறையாக ஆரம்பிக்கவுள்ளது.  

மத்துகம வெலிப்பென்ன என்ற இடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலையின் அதிகார பூர்வ செயற்பாடுகள் எதிர்வரும் 17ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதாக ஐடியல் நிறுவன ஸஸ்தாபகரும் தலைவருமான நளின்வெல்கம தெரிவித்தார். 

உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமொன்று முதல் முறையாக இலங்கையில் நேரடியாக முதலீடு செய்துள்ளது. இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக இலங்கையில் மஹிந்திரா நிறுவனம் முதலீடு செய்துள்ளது. எனவே வாகன இறக்குமதி விடயத்தில் இனி இலங்கை வெளிநாட்டு நிறுவனங்களை நம்பியிருக்க வேண்டியதில்லை என்று நளின் வெல்கம மேலும் கூறினார்.  

இந்தியாவில் 2016இல் தயாரிக்கப்பட்ட மஹிந்திரா KUV 100என்ற ரக வாகனத்துடன் தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகவுள்ளது. இந்த ரக வாகனங்கள் இந்தியாவில் மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று 40ஆயிரம் வாகனங்களை வருடமொன்றுக்கு இலங்கையில் தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

1200CC என்ஜின் கொள்ளளவுடன் கூடிய இந்த வாகனமொன்று இலங்கையில் 32 இலட்ச ரூபாவிற்கு விற்கப்படவுள்ளது. வாகன தயாரிப்பு ஆரம்பிக்கப்பட்டதும் முதல் ஒருசில மாதங்களில் 100 வாகனங்கள் வரை விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் படிப்படியாக விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.   மேற்படி வாகன தயாரிப்பு தொழிற்சாலையின் மூலம் ஆரம்பத்தில் 100 நேரடி தொழில் வாய்ப்புகள் உருவாகும். பின்னர் படிப்படியாக வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.    

Comments