இவ்வாரம் காலியில் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

இவ்வாரம் காலியில் ஆரம்பம்

இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட் தொடர்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட், மூன்று ரி/20போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதல் போட்டி எதிர்வரும் 14ம் திகதி புதன்கிழமை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இப் போட்டி இரு அணிகளுக்குமிடையிலான உலக சம்பியன் ஷிப் போட்டியின் முதல் போட்டியாகவுமுள்ளது. 

உலகக் கிண்ணத் தொடரின் பின் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றி சொந்த மண்ணில் தனது ஒருநாள் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை அணி அடுத்து நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ளது. 

இவ்வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு -0என்ற ரீதியில் வெற்றி பெற்ற இலங்கை அணி டெஸ்ட் அரங்கில் சற்று வலுவான நிலையிலேயே உள்ளது. 

கடந்த காலங்களில் இலங்கை அணியின் டெஸ்ட் வெற்றிகளுக்கு சுழற்பந்து வீச்சாளர்களே பெரும் பங்காற்றியிருந்தனர். ஒரு நாள் அணியைப் போன்றில்லாமல் டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களும் தங்களது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளனர். தலைவர் திமுத் கருணாரத்ன டெஸ்ட் போட்டிகளில் பொறுப்புடன் ஆடி ஓட்டங்களைக் குவித்து வருகின்றார். இளம் வீரர்களான ரொஷேன் சில்வா, குசல் பெரேரா கடந்தகால டெஸ்ட் வெற்றிகளுக்கு தமது துடுப்பாட்டத்தால் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர்.  

வழமைபோல் இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைவதால் அகில தனஞ்ஜயவை முன்னிலைப்படுத்திய சுழற் பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நீண்ட துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட நியூசிலாந்து அணி சுழற்பந்து வீச்சுக்கும் மிகவும் லாவகமாக முகம்கொடுக்கக் கூடியது. ஒரு நாள் தொடர்களைப் போலவே டெஸ்ட் தொடர்களிலும் சுழற் பந்து வீச்சை துவம்சம் செய்யும் பல துடுப்பாட்ட வீரர்கள் அவ்வணியில் உள்ளனர். நியூசிலாந்து அணியின் ஒரே பிரச்சினை இங்குள்ள காலநிலை மாற்றமாகும். சீக்கிரமே அதற்கும் அவர்கள் பழக்கப்பட்டு விட்டால் இலங்கை அணிக்கு இத்தொடர் சற்று கடினமாகவே அமையும். 

நியூசிலாந்து அணியின் துடுபாட்டத்தில் தலைவர் கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், நிக்கலோஸ், டொம் லெதம், கிரஹம்ஹோம் போன்ற துடுப்பாட்ட வீரர்கள் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடக்கூடியவர்கள் மட்டுமல்ல சுழற்பந்து வீச்சுக்கும் சிறப்பாக முகம்கொடுக்கக் கூடியவர்கள். 

அவ்வணியின் பந்து வீச்சும் பலமாகவே உள்ளது. ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர்களான மெட் ஹென்றி, வோக்னர், பௌல்ட் ஆகியோர் எவ்வகை மைதானங்களிலும் சிறப்பாகப் பந்து வீசக்கூடியவர்கள் எனவே எமது துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து நின்று ஆட முயற்சிக்க வேண்டும். இன்னிங்ஸ் ஆரம்பத்தில் ரி/20போட்டியைப் போன்று அதிரடியாக ஆட முயற்சித்து தமது விக்கெட்டுகளை விரைவாக இழக்காமல் நிதானமாக ஆடவேண்டும். நியூசிலாந்து அணியிலும் அஜாப் படேல், மிட்ச்செல் சாட்னர் போன்ற துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளதால் ஒவ்வொரு துடுப்பாட்ட வீரரும் தமது பொறுப்பை உணர்ந்து விளையாடினால் எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.  

ஒரு காலத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற மேற்கத்தேய நாடுகள் இலங்கையில் டெஸ்ட் விளையாட அச்சப்பட்டனர். இலங்கையில் டெஸ்ட் சுற்றுலா என்றாலே முகத்தை சுளித்துக்கொள்வார்கள் அந்தளவுக்கு இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு அவ்வணிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததோடு, அவ்வணிகளின் சுழற்பந்து வீச்சுக்கு இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக ஆடி ஓட்டங்கள் குவித்து இலகுவாக வெற்றிபெறுவார்கள். ஆனால் கடந்த வருட இறுதியில் இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து நமது சுழற்பந்தை அடித்து நொறுக்கி 3--0என்ற முழுமையான டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

ரங்கன ஹேரத்தின் ஓய்வுக்குப் பின் இலங்கை அணியில் அவரின் இடத்தை நிரப்புவதற்கு ஒரு சுழற் பந்துவீச்சாளர் இன்னும் உருவாகவில்லை. வளர்ந்து வரும் இளம் சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய நியூசிலாந்து வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருபார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கடந்த வாரம் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலும் சிறப்பாகப் பந்து வீசியிருந்தார். இவருக்கு ஒத்துழைப்பாக லக்ஷான் சந்தகென், தனஞ்சய டி சில்வா பந்து வீசினால் சிறந்த பெறுபேறைப் பெறலாம். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரை, கசுன் ராஜித, லஹிரு குமார டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர்கள். இரு அணிகளும் துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிளும் சமபல அணிகளாக உள்ளதால் தொடர் விறுவிறுப்பாக அமையும். சொந்த மண்ணில் நடைபெறுவதால் இலங்கை அணிக்கு சற்று அனுகூலமாக இத்தொடர் அமையும் என எதிர்பார்க்கலாம். 

இலங்கை- நியூசிலாந்து டெஸ்ட் வரலாற்றைப் நோக்குவோமானால் 1983ம் கிரைச்சேர்ச்சில் இரு அணிகளும் தமது முதலாவது டெஸ்ட் போட்டியில் மோதியுள்ளன. இதுவரை இரு அணிகளுக்கிடையில் மொத்தம் 16தொடர்களில் 34போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் நியூசிலாந்து 15போட்டிகளிலும் இலங்கை 08போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன் 11போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன. 

இரு அணிகளுக்கிடையிலும் ஒரு இன்னிங்ஸில் கூடிய ஓட்டமாக இலங்கை அணி 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியூசிலாந்து நேப்பியர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் 498ஓட்டங்கள் பெற்றதே பதிவாகியுள்ளது. நியூசிலாந்து சார்பாக 1991ம் ஆண்டு ஜனவரி மாதம் வெலிங்டனில் நடைபெற்ற போட்டியொன்றில் 4விக்கெட் இழப்புக்கு 671ஓட்டங்களே அவ்வணி பெற்ற கூடிய ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது. குறைந்த ஓட்டங்களாக 1983ம் ஆண்டு மார்ச் மாதம் வெலிங்டனில் நடைபெற்ற போட்டியொன்றில் இலங்கை அணி 93ஓட்டங்களுக்கும், நியூசிலாந்து அணி 1992ம் ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எஸ். எஸ். ஸி. மைதானத்தில் 102ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்ததே பதிவாகியுள்ளது. 

ஒரு இன்னிங்ஸில் இலங்கை சார்பாக கூடிய ஓட்டமாக அரவிந்த டி சில்வா 1991ம் ஆண்டு ஜனவரி மாதம் வெலிங்டன் மைதானத்தில் பெற்ற 267ஓட்டங்களே பதிவாகியுள்ளது. நியூசிலாந்து சார்பில் இதே போட்டில் நியூசிலாந்து வீரர் மார்டின் குரே 299ஓட்டங்கள் பெற்றுள்ளார். 

மேலும் மஹேல ஜெயவர்த்தன 1998முதல் 2014ம் ஆண்டு வரை மொத்தமாக 23போட்டிகளில் 46.21சராசரியுடன் 1028ஓட்டங்களைப் பெற்று இலங்கை சார்பாக கூடிய ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 

நியூசிலாந்து சார்பில் ஸ்டீபன் பிளெமிங் 1166ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 

1993முதல் 2007வரை 14போட்டிகளில் விளையாடி 82விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரனே இலங்கை- - நியூசிலாந்து டெஸ்ட் வரலாற்றில் கூடிய விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து சார்பில் டெனியல் விட்டோரி 11போட்டிகளில் 51விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

ஒரு இன்னிஸ்சில் கூடிய விக்கெட்டுகளை இலங்கை சார்பாக ரங்கன ஹேரத் வீழ்த்தியுள்ளார். இவர் 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 43ஓட்டங்களுக்கு 6விக்கெட்டைக் கைப்பற்றி சாதனை புரிந்தார். நியூசிலாந்து சார்பில் ஒரு இன்னிங்ஸில் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெலிங்டன் மைதானத்தில் டெனியல் விட்டோரி 130ஓட்டங்களுக்கு 7விக்கெட்களை வீழ்த்தியதே சிறப்பான பந்து வீச்சாகும். ஒரு போட்டியில் 1984ம் ஆண்டு மார்ச் மாதம் கொழும்பு சி. சி. சி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சர். ரிச்சட் ஹாட்லி 102ஓட்டங்களுக்கு 10விக்கெட்களைக் கைப்பற்றி நியூசிலாந்து சார்பில் சாதனை படைத்துள்ளார்.

இலங்கை சார்பில் ரங்கன ஹேரத் காலி சர்வதேச மைதானத்தில் 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற போட்டியொன்றில் 108ஓட்டங்களுக்கு 11விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகள்  
ஆக. 14--18 1வது போட்டி காலி  
ஆக. 22--26 2வது போட்டி  பி. சாரா ஓவல்  
ரி/20 போட்டிகள்  
செப். 1ம் திகதி 1வது போட்டி பல்லேகல  
செப். 3ம் திகதி 2வது போட்டி பல்லேகல  
செப். 06ம் திகதி 3வது போட்டி பல்லேகல  

எம். ஐ. எம். சுஹைல்

Comments