BIGG BOSS கலாசாரத்தின் கறை ? | தினகரன் வாரமஞ்சரி

BIGG BOSS கலாசாரத்தின் கறை ?

அண்மைக்காலத்தில் தமிழர் இல்லங்களில் இரவு வேளைகளில் அதிகமாக உச்சரிக்கப்படும் சொல் பிக்பாஸ்! இரவு வீடுகளில் பிக்பாஸில் மூழ்கிக்கிடந்துவிட்டு மறுநாள் காலையில், பாடசாலைகளிலும் அலுவலகங்களிலும்கூட இதுதான் பேசுபொருள். பதின்ம வயது பிள்ளைகளின் பிரதான தலைப்பும் இதுதான். 

அவனுக்கும் அவளுக்கும் இதுவாம்; அவளா சொன்னாள்? இருக்காது! இப்படியும் இன்ன பிறவும்தான் பேச்சு! மொத்தத்தில் குடும்பத்தில் உள்ளவர்களின் முகத்தை ஒருவருக்ெகாருவர் பார்த்துக்ெகாள்ள முடியாத இகழ்ச்சி. அநாகரிக ஆடையலங்காரம், சொற்பிரயோகம்! தமிழர் கட்டிக்காத்து வரும் கலாசாரத்தின் மீதான துஷ்பிரயோகம் என்பது ஒரு சாராரின் குற்றச்சாட்டு. 

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களையெல்லாம் நவீன தொழில்நுட்பம் குழி தோண்டிப் புதைத்துக்ெகாண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் அவர்கள். அதுவும் கைப்பேசியின் உயர் தொழில்நுட்ப பயன்பாடு, மனிதனைத் தனிமைப்படுத்தி வருகிறது என்பதற்கும் அப்பால், இந்த நிகழ்ச்சி அந்தத் தனிமையில் விஷத்தைக் கலக்கும் பணியைச் செய்வதாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்த உயர் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகியிருப்பவனும் மனிதன், குற்றச்சாட்டை அடுக்குபவனும் மனிதன் என்பதுதான் இங்கு முரண்பாடு. 

ஒரு காலத்தில் வெள்ளித்திரையின் மீது மக்களுக்கிருந்த மோகம் இப்போது சின்னத்திரையின் மீது சார்ந்திருக்கிறது. கைப்பேசி இருக்கிறதோ இல்லையோ, சின்னத்திரை இல்லாத வீடுகளே இல்லை. குடிப்பதற்குக் கூழ் இல்லாவிட்டாலும், படிப்பதற்கு நூல் இல்லாவிட்டாலும், மற்றவரின் நடிப்பைப் பார்ப்பதற்குத் தொழில்நுட்பத்தைப் பெருக்கிக் ெகாண்டுள்ளார்கள். செய்மதியை வரிந்துகொண்டுள்ள மனிதர்களின் வாழ்வியல் செல்நெறி திசைமாறிச்சென்றுகொண்டிருக்கிறது. 

அதிலும், காலாகாலமாகத் தனித்துவமான கலாசாரத்தையும் பண்பாட்டுக் கோலங்களையும் பேணி வரும் தமிழர் சமுதாயம், அண்மைக்காலமாக அதன் வாழ்வியல் போக்கில் பிறழ்வினைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதற்காரணி சின்னத்திரை! 

தமிழர் வீடுகளில் சாப்பாடு இல்லாவிட்டாலும், தொலைக்காட்சி ஓடிக்ெகாண்டிருக்கிறது. 

கைப்பேசி செய்கின்ற மனப்பிறழ்வை இப்போது தொலைக்காட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன. அதிலும், அநேகரின் கவனத்தையும் வ-லுக்கட்டாயமாக இழுத்துக் கட்டிப்போட்டிருக்கும் நிகழ்ச்சிதான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. ஒரு மணித்தியாலம் அனைவரையும் கட்டிப்போட்டுக் கொள்ளையடிக்கும் நிகழ்ச்சி.

இந்தியாவில் ஏழு மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் மூன்றாவது தடவையாக நடிகர் கமல்ஹாசனைக்ெகாண்டு நடத்தப்படுகிறது. 

முதலாவது நிகழ்ச்சியைப் பார்த்து உலகெங்கும் கோடிக்கணக்கான தமிழர்கள் பிரமித்துப்போனார்கள். ஆனால், சற்று அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர்களுக்கு இது வெறும் கற்பனைக் கதை என்பது புரிந்தது. இரண்டாவது நிகழ்ச்சியின்போது புரியாதவர்களுக்கும் புரிந்தது. 

முற்றிலும் யதார்த்தத்திற்கு மாறுபாடாக வீட்டின் அன்றாட நிகழ்வுகள் நகர்வதைக் கண்டு, இது நடிப்பு, பசப்பு என்றார்கள் ரசிகர்கள். இருந்தும் அநேகர் இதனை ஒரு கதையாகவோ நடிப்பாகவோ பார்க்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மனிதனின் உண்மை முகத்தைக் காண்பிக்கும் நிகழ்ச்சி என்று அப்பாவித்தனமாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். இதனை இளையவர்கள் முற்றாக நம்பினார்கள்; நம்புகிறார்கள். இது குடும்பத்தில் மாத்திரமன்றிச் சமூகத்திலும் பெரும் சீரழிவை ஏற்படுத்தியிருக்கிறது என்பது சமூக ஆர்வலர்களான பெண்களின் குற்றச்சாட்டு. 

நூறு நாளின் ஆரம்பத்திலேயே ஒருவருக்கு ஒருவர் மீது காதல் மலர்கிறது. மலர வேண்டும் என்பது நிகழ்ச்சியின் விதி. அது நூறு நாள் வரைக்கும்தான் என்பது அந்த வீட்டாருக்கு மட்டுந்தான் தெரியும். இது தெரியாமல்தான் ஓவியாவும் ஆரவ்வும் காதலித்தார்கள் என்று பேசிக்ெகாண்டார்கள். அது தவிர, சண்டை பிடிப்பது, சிண்டு மூட்டுவது, புறணி பேசுவது, கை, கால், தொடை தெரிய ஆடை அணிவது, தற்கொலைக்கு முயற்சிப்பது, என்னை வெளியில் அனுப்புங்கள் எனக் கெஞ்சிப் புலம்பி கண்ணீர் விட்டழுவது எல்லாமே பணத்திற்காகச் செய்யும் பாசாங்கு என்பது இப்போது பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது! 

ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? 

எல்லாவற்றுக்கும் காரணம் பணம்! பணம் உழைப்பது அவரவர் விருப்பம். இஃது ஏறத்தாழ பதினெட்டுப் பிளஸ் படத்திற்கு நிகரானது. வெள்ளித்திரையில் பார்க்க வேண்டியதைச் சின்னத்திரைக்காக ஒரு வீட்டில் நடிக்கிறார்கள் என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்வதற்காகத் தொலைக்காட்சி நிறுவனத்தினர் எந்த உத்தியையும் கையாளலாம். ஆனால், யதார்த்திற்குப் புறம்பான வகையில், வளர் இளம் பருவத்தினரின் வாழ்க்ைகயை நாசப்படுத்தும் விதத்தில் கலாசாரத்தைச் சீரழிக்கும் விதத்தில் ஏன் கற்பனை செய்கிறீர்கள்? என்பது பெண்குலத்தாரின் ஆதங்கம். 

இதனை அண்மையில் தமிழகத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் தெள்ளத்தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். பிக்பாஸ் வீட்டுக்கு ஏன் நடிகர்களையும் இயக்குநர்களையும் உள்வாங்க வேண்டும்? அவர்கள் இருந்தால், கதையம்சத்தைக் கச்சிதமாக நகர்த்திச் செல்ல முடியும்! இந்த உண்மை தெரியாமல், பிக்பாஸ் வீட்டில் நடப்பதை உண்மை என்று நம்பி இளையர்களின் மனத்தில் களங்கம் வளர்கிறது. எனவே, இந்த நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்பது பெண்களின் கோரிக்ைக. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று எந்த மொழியில் என்றாலும், நாங்கள் தென்னிந்திய கலாசாரத்தைக் கட்டிக்காக்க வேண்டும் என்கிறார்கள்.

அத்தோடு, எதிர்காலத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு ஒரு தணிக்ைகச் சபையை ஏற்படுத்தி, அதன் மூலம் ஒரு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்று கோரிக்ைக விடுக்கிறார்கள். 

இந்த அவல நிலைக்கு ஊடகங்களும் பொறுப்புக் கூற வேண்டும் என்பது அவர்களின் மற்றொரு வலியுறுத்தல். 

பிக்பாஸ் வீட்டில், நடக்கும் விடயங்களைப் பார்த்தால், மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நடிக, நடிகையர்கள், இயக்குநர்களும் அவமானத்திற்கு உள்ளாகிறார்கள்; உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்கள் பணத்திற்காக எந்த நிலைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். என்றாலும், அவர்கள் அந்த வீட்டிலிருந்து வெளியில் வந்ததும் பெரும் நெருக்குவாரத்திற்கு முகங்கொடுக்கிறார்கள். கடந்தமுறை ஜூலிக்கு ஏற்பட்ட நிலையும் இதுதான். அவர் வீட்டிற்குள் பெரும் அவமானத்திற்கு உள்ளானதாக நாம் நினைத்தாலும், அவர் தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்திற்காக நடித்திருந்தார் என்பது பின்னரே தெரியவந்தது. 

தமிழில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்குக் கிடைக்கும் விளம்பரத்தின் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கின்றது. நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்தில் நூறு நாளைக்கும் நூறு கோடி சம்பளம் கேட்டதாகவும் பின்னர் 20கோடிக்கு முடிக்கப்பட்டதாகவும் உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் கூறுகின்றன. அப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பெருந்தொகை    சம்பளமாக வழங்கப்படுகிறது. 30விநாடி விளம்பரத்திற்கு 25இலட்சம் ரூபாய்! ஆனால், அங்கு நடப்பது மட்டும் நடிப்பு. எதுவாக இருந்தாலும், தமிழர் கலாசாரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில், கதையோ உடையோ வேண்டாம் என்பதே கட்டுக்ேகாப்பையும் கண்ணியத்தையும் மதிக்கின்றவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. 

இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதும் வெறுப்பதும் அவரவர் விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தது. ஆனால், பெருநகரங்களில் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் நிகழ்ச்சியைப் பார்க்கத் தூண்டுவதற்கு யார் பொறுப்பு? 

விசு கருணாநிதி

Comments