கூட்டணிக்கு ஐ.தே.க இணக்கம்; செவ்வாயன்று வேட்பாளர் தெரிவு | தினகரன் வாரமஞ்சரி

கூட்டணிக்கு ஐ.தே.க இணக்கம்; செவ்வாயன்று வேட்பாளர் தெரிவு

ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியை அமைப்பதற்கு நேற்று (16) நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் பல விடயங்களில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

கூட்டணியின் சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளரை நாளை மறுதினம் (20) நடைபெறும் கட்சியின் செயற்குழுவும் பாராளுமன்றக் குழுவும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவை எட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் தெரிவு நிறைவுபெற்றதும், ஜனநாயக தேசிய கூட்டணியின் யாப்பினை ஏற்றுக்ெகாண்டு கைச்சாத்திடுவதெனவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜித்த சேனாரட்னவின் கொழும்பு இல்லத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

கூட்டணி அமையப்பெற்றதும் அதன் பொதுச் செயலாளராகத் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரே அதன் செயலாளராக செயற்படுவாரெனவும் அவருடன் இணங்கிச் செயற்படுவதற்குக் கூட்டணியினர் உடன்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கூட்டணியின் தலைமையகத்தை சிறிகொத்தாவிற்கு வெளியில் வேறோர் இடத்தில் அமைப்பதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

தவிரவும், தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களுக்குக் கூட்டணியின் அமைப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள்.

அங்கு இருதரப்பினரும் இணங்கிச் செயற்படுவதற்கும் நேற்றைய கூட்டத்தில் இணக்கம் எட்டப்பட்டிருக்கிறதென்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மக்கள் விடுதலை முன்னணியும் தங்களின் ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஜனநாயக கூட்டணி மேலும் தாமதப்படுத்துவது ஆரோக்கியமானதாக இருக்காது என்றும் அதனால், இவ்வாரத்திற்குள் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமையளவில் இதற்கு இறுதித் தீர்மானத்தை மேற்கொண்டு அறிவிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தாமே போட்டியிடப் போவதாகத் தற்போது பிரசாரத்தை முன்னெடுத்து வரும் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றைய கூட்டத்திற்குச் சமூகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய சந்திப்பில், ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம், பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழர் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர்கள் அர்ஜுன ரணதுங்க, ராஜித்த சேனாரட்ன, ரவி கருணாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர். மற்றொரு பங்காளிக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன், புத்தளத்தில் நேற்று நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்ததால், கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று அறிவித்திருந்தார்.(வி)

எம்.ஏ.எம்.நிலாம்

Comments