10 அம்சக் கோரிக்கையை நிராகரித்த மஹிந்த தமிழர் சார்பாக பேசுவது மிகவும் வேடிக்கை | தினகரன் வாரமஞ்சரி

10 அம்சக் கோரிக்கையை நிராகரித்த மஹிந்த தமிழர் சார்பாக பேசுவது மிகவும் வேடிக்கை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இளைஞர், யுவதிகளின் கரங்களுக்கு மாறவேண்டும் என்றும் அப்போதே அது தடம் மாறாமல் பயணிக்கும் என்றும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

தூரநோக்கற்ற சுயநலமிகள் கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திண்டாடுகின்றது. இந்த நேரத்தில் தந்தை செல்வா கூறியதுபோல “கடவுள் தான் தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று எண்ணத்தோன்றுகின்றது. பொதுநல சிந்தையுடைய அதேநேரம், ஆற்றலுடைய புதிய இளைஞர்கள், யுவதிகள் கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சென்றால் தான் அதன் பயணம் தடம் மாறாமல் செல்லமுடியும் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலை வர் மஹிந்த ராஜபக்ஷவிடம் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாம்  10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். இதில் ஒன்றைக்கூட  நடைமுறைப்படுத்த முற்படவில்லை. வட மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட இராணுவ  ஆளுநரை மாற்றுமாறு கோரினோம். ஆனால், அவரின் பதவிக்காலத்தை மீண்டும்  நீடித்திருந்தார். தமிழ் மக்களின் ஜனநாயகம் அப்போது பறிபோனது  தெரியவில்லையா? எனக் கேள்வியெழுப்பிய வட மாகாண முன்னாள் முதலமைச்சர்,  மஹிந்த ராஜபக்ஷ இன்று தமிழர்களுக்கு சார்பாக பேசுவது  முதலைக் கண்ணீருக்கு ஒப்பானதென்றும் கூறினார். 

தினகரன் வாரமஞ்சரிக்கு நேற்று சனிக்கிழமை வழங்கிய பேட்டியிலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

நீங்கள் உருவாக்கிய புதிய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் பயணம் எவ்வாறு அமைந்துள்ளது? என்ற கேள்விக்குப் பதில் அளித்த விக்கினேஸ்வரன்,

நாம் வடக்கு, கிழக்கில் மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை அறிந்துவருகின்றோம். போகும் இடமெல்லாம் மக்களின் உற்சாகம் புலப்பட்டது. அது எமது கட்சிக்குரிய வரவேற்பா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மனோநிலையின் பிரதிபலிப்பா என்பது எனக்குத் தெரியவில்லை. நாம் எமது கடமையை முடிந்தளவில் சரியாகச் செய்து கொண்டு போகின்றோம். 

கேள்வி:தேர்தல் நடத்தாது வடக்கு மாகாணசபையின் ஜனநாயகம் பறிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? 

பதில்:மாகாண சபைக்கு சுதந்திரமும் ஜனநாயக வளர்ச்சியும் கொடுத்துவந்தது போல் மகிந்த கூறுகின்றார். 2014ம் ஆண்டு ஜனவரியில் நாம் அவரிடம் முன்வைத்த 10 விடயங்கள் எல்லாவற்றிற்கும் எம்சார்பாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டு எதனையுமே அவர் செய்யவில்லை. உதாரணத்திற்கு இராணுவ ஆளுநரை மாற்றச் சொன்னோம். அவர் பதவிக்காலம் ஜூலையில் முடிந்ததும் அவ்வாறு மாற்றுவதாக கூறி மீண்டும் அவரையே ஆளுநர் ஆக்கினார். இவ்வாறான செயல்களுக்குக் காரணம் ஜனாதிபதிக்கும், ஆளுநருக்கும், மத்திய அரசாங்கத்துக்குமே அதிகாரம் இருந்துவருவதே. ஜனநாயகத்தை மறந்து செயல்படுவதில் மகிந்த போன்றவர்களுக்கு அத்தனை குஷி. மத்திக்கு அதிகாரம் இல்லை என்றாலும் அவற்றை வலிந்து அவர்களே பாவித்து வருகின்றார்கள். 2009இல் போர் முடிந்ததும் அவர் எமது ஜனநாயக உரிமைபற்றிச் சிந்தித்தாரா? இந்தியாவின் நெருக்குதலினால்தான் 2013இல் வடமாகாண தேர்தலை வைக்க இணங்கினார். அரசியல் யாப்பின் ஏற்பாடுகளைத் தமிழர்கள் சார்பாக மாற்றாமல் இவ்வாறு பேசுவது முதலைக் கண்ணீருக்கு ஒப்பானது"

கேள்வி:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவை வழங்கிவருகின்ற போதிலும் புதிய அரசியலமைப்பு உட்பட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் பூர்த்திசெய்யப்படாத சூழலில் எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கா அல்லது தமிழ் மக்கள் கூட்டணிக்கா மக்களின் ஆதரவுகிடைக்கும்? 

பதில்:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய சிந்தனைகள், நடைமுறைகள் யாவுமே எமது மக்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மையே. தேர்தலில் என்ன நடக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது. நாம் புதியதொரு கட்சி. 

கேள்வி:அடுத்துவரும் தேர்தல்கள் தமிழ் மக்களுக்கு தீர்மானமிக்கதாகவுள்ள சூழலில் தமிழர்கள் எவ்வாறு செயற்படவேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? 

பதில்:தமிழர்கள் ஒற்றுமைப்படவேண்டும். ஒருமித்து அரசியல் கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். சேர்ந்து சிங்களத் தலைவர்களை எதிர்கொள்ள முன்வர வேண்டும். நாங்கள் சுயநலமும் கட்சிநலமும் சார்ந்துநின்றால் அரசாங்கம் எம்மை சுலபமாக ஏமாற்றிவிடும். இதுவரையில் அதுதான் நடந்துள்ளது என்றார்.    

சுப்ரமணியன் நிஷாந்தன்

Comments