இலங்கையில் மஹீந்திரா வாகன உற்பத்தி! | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் மஹீந்திரா வாகன உற்பத்தி!

இலங்கைப் பொருளாதாரத்தை நீண்டகால வளர்ச்சிப் பாதையில் நிலைத்திருக்கக் கூடிய வகையில் இட்டுச் செல்லத் தேவையான கைத்தொழில் முதலீடுகளின் பற்றாக்குறையே முக்கியமான பிரச்சினையாக உள்ளது.  இது பல்வேறு சந்தர்ப்பங்களில் பலராலும் சுட்டிக் காட்டப்படும் ஒன்றாகும். கட்டட நிர்மாணம் மற்றும் சேவைத்துறைகளில் கணிசமானளவு முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதும் அதன் காரணமாக அண்மைக் காலங்களில் அத்துறைகளில் விரிவாக்கங்கள் ஏற்பட்டுள்ளமையும் தெளிவாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 

தற்போது மாறிவரும் உலக வர்த்தக சூழலில் உற்பத்தி வலைப்பின்னல் (Production Networks)களுடனும் பெறுமதிச் சங்கிலிகளுடனும் (Value Chains) இணைவதன் மூலம் நாடுகள் கைத்தொழில் விருத்தியில் கணிசமானளவு முன்னேற்றங்களைக் காணலாம். 

தற்போதைய உலகில் எந்த ஒரு நாடும் முழுமையான ஒரு கைத்தொழிற் பொருளை உற்பத்தி செய்வதில்லை. மாறாக அப்பொருளின் ஒரு சிறுபகுதியை மாத்திரம் உற்பத்தி செய்து அப்பொருளின் உற்பத்தி வலைப் பின்னலில் தாமும் ஒரு அங்கமாக இணைந்து கொள்கின்றன. 

அவ்வாறு செய்வதன் ஊடாக அந்தப் பொருளின் உற்பத்திப் பெறுமதியில் ஒவ்வொரு நாடும் பங்களிப்பதன் மூலம் அதன் பெறுமதிச் சங்கிலியில் தொடர்புபட்டு நன்மை பெறுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் முழுமையாக ஒரு கைத்தொழில் பொருளை உற்பத்தி செய்வதை விடுத்து அதன் ஒரு பாகத்தை உற்பத்தி செய்வதன் மூலம் அதிக நன்மை அடையலாம் என்பதே இதன் கருத்தாகும். கிழக்காசியாவிலும், மேற்கைரோப்பா  மற்றும் அமெரிக்க நாடுகளிலும் இத்தகைய வகையிலான கைத்தொழிற் செயற்பாடுகள் முனைப்படைந்து வருகின்றன. இது தவிர சர்வதேச ரீதியில் இயங்கும் பல்தேசியக் கம்பனிகள் குறிப்பாக குறைந்த செலவில் ஊழியத்தை பெறக்கூடிய நாடுகளை நோக்கி தமது முதலீடுகளை விஸ்தரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மறுபுறம்  உற்பத்தி நிறுவனங்கள்  தமது பொருட்களுக்கான சந்தைகளுக்கு அருகாமையில் தமது உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைக்கும் நோக்கில் முதலீடுகளை நகர்த்திச் சென்றுள்ளமையை அவதானிக்கலாம். 

1980   -90களில் ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களான சுசூகி, ஹொண்டா போன்ற கம்பனிகள் நமது அண்டை நாடான இந்தியாவின் உள்ளூர் கம்பனிகளான மாருதி, ஹீரோ போன்ற கம்பனிகளுடன் இணைந்து இருசக்கர மற்றும் மோட்டார் வண்டி உற்பத்தியில் ஈடுபட்டன. இந்த ஜப்பானிய முதலீடுகள் இந்தியாவின் வாகனத்தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை ஆற்றின. இந்தியாவின் டாட்டா,  மஹிந்திரா போன்ற கம்பனிகள் அத்தகைய வெளிநாட்டு பங்காளர்கள் இல்லாமலேயே அசுர வளர்ச்சி கண்டன. இவ்வாறு இந்தியக் கம்பனிகள் வெற்றிகரமான வளர்ச்சியை எய்தியமைக்கு, இந்தியாவின் உள்ளூர் சந்தை சார்பளவில் பெரிதாக இருந்தமையும், இந்திய அரசாங்கமும் அரச துறை நிறுவனங்களும் இந்திய வாகனங்களை மட்டுமே வாங்கும் கொள்கையை கடைப்பிடித்தமையும் முக்கிய காரணங்களாகும். இன்று உலகின் பிரதான வாகன உற்பத்திக் கம்பனிகள் அனைத்துமே இந்தியாவில் வலுவாக வேரூன்றி செயற்படுகின்றன. தமிழ் நாட்டின் சென்னை நகரத்தில் இக் கம்பனிகளின் ஒட்டுமொத்தப் பிரசன்னத்தையும் ஒருவர் இலகுவாகக் காணமுடியும். 

இலங்கையிலும் 1970களில் ‘உபாலி’ எனப்படும் உள்ளூர் கம்பனியானது இத்தாலியின் ‘பியட்’ மற்றும் கொரியாவின் ‘மஸ்டா’ போன்ற கம்பனிகளுடன் இணைந்து வாகன உற்பத்தியில் ஈடுபட ஆரம்பித்திருந்தது. ஆயினும் ‘உபாலி’ கம்பனி உரிமையாளர் ஒரு விமான அனர்த்தத்தில் காணாமல் போனதைத் தொடர்ந்து அம்முயற்சிகள் துரதிருஷ்டமான வகையில் நின்றுபோயின. 

அண்மைக்காலமாக  ‘மைக்ரோ’ என்னும் கம்பனி வாகன உதிரிப் பாகங்களை இணைத்து வாகனங்களை இலங்கைச் சந்தைக்கு விற்பனை செய்து வருகிறது. எவ்வாறாயினும் அதன் உற்பத்திகள்  சர்வதேச தரத்தில் இல்லை என்பது முக்கிய குறைபாடாக உள்ளது.    அதுதவிர அக்கம்பனியின் வாகனங்களுக்கு அறவிடப்படும் விலையும் அதிகமாக உள்ளதுடன் அவ்வாகனங்களின் இரண்டாந்தரச் சந்தை மிகக் குறைவு என்பதாலும் – பலரும் அவற்றை நாடிச் செல்வதில்லை.  மறுபுறம் அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சு தவிர எந்த ஓர் அமைச்சும் மைக்ரோவின் வாகனங்களை கொள்வனவு செய்ததாகத் தெரியவில்லை. 

ஜேர்மனியின் ‘வொக்ஸ்வாகன்’ கம்பனி குளியாப்பிட்டியில் இலங்கைச் சந்தையை நோக்காக் கொண்டு ஒரு தொழிற்சாலையை அமைக்கப்போவதாக இந்த அரசு பதவிக்கு வந்த பின்னர்  பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஆயினும் வொக்ஸ்வாகன் கம்பனி அப்படி ஒரு முதலீட்டை தாங்கள் செய்ய எண்ணவில்லை என்று மறுப்புத் தெரிவித்திருந்தது. 

இத்தகைய ஒரு புறச்சூழலில் தான் நேற்று (17.08.2018) இந்தியாவின் மஹிந்திரா வாகன உற்பத்தியாளர்கள் இலங்கையின் புதிய முதலீட்டை மேற்கொண்டு வாகனங்களை இணைத்தமைக்கும் தொழிற்சாலை ஒன்றை திறந்து வைத்துள்ளனர். 

களுத்துறை மாவட்டத்தில் வெலிப்பன்ன என்ற இடத்தில் சுமார் மூன்று பில்லியன் ரூபா முதலீட்டில் இத் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ‘ஐடியல் குறுப்’ எனப்படும் உள்ளூர் கம்பனியுடன் இணைந்தே இம் முதலீடு மேற்கொள்ளப்படுவதுடன் 35 சதவீத  முதலீட்டை இந்திய கம்பனி மேற்கொள்கிறது. ஆரம்பத்தில் 1200CC இயந்திர   இயலளவு கொண்ட மஹிந்திரா  KVV 100 எனப்படும் SUV வகையான  மோட்டார் கார்கள்   இத்தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படவுள்ளதுடன் 32 இலட்சம் ரூபா  விலையில் இலங்கைச் சந்தையில் அவை விற்கப்பட உள்ளதாகவும் அறியமுடிகிறது. 

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரிப்பாகங்களுடன், வாகனத்தின் இருக்கைகள், ரேடியேட்டர், டயர்கள், மின்கலம் போன்றன இலங்கை உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் என்றும் காலப்போக்கில் உள்ளூர் உள்ளீடுகளின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் உள்ளூர் உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் வெற்றிகரமாக இயங்கும் பட்சத்தில் அவர்களின் உற்பத்திகள் இந்திய தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படும் எனவும் தெரிகிறது.   ஆரம்பத்தில் 35% உள்ளீடுகள் இலங்கையில் இருந்து பெறப்படுமெனவும் அது படிப்படியாக அதிகரிக்கப்படுமெனவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் மாதாந்தம் சுமார் 100 கார்களை இணைத்தமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் பின்னர் அது 1000 ஆக அதிகரிக்கப்படுமெனவும் கம்பனி கூறுகிறது. 

இங்கே மேற்கொள்ளப்படும் உற்பத்திகள் இந்தியாவின் ஊடாக ஆபிரிக்க சந்தைகளுக்கு அனுப்பப்படும் எனவும் தெரிகிறது. தற்போது திறந்து வைக்கப்படும் தொழிற்சாலையில் சுமார் 100 தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாலும் அது பின்னர் படிப்படியாக அதிகரிக்குமெனவும் கூறப்படுகிறது. 

இருசக்கர, முச்சக்கர மற்றும் மோட்டார் வாகனச் சந்தையைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் மிக முக்கிய சந்தையாக இலங்கை உள்ளது. ஆபிரிக்க நாடுகளிலும் தற்போது சந்தை விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியாவுக்கு மிக அண்மையில் உள்ள இலங்கையில் ஒரு உற்பத்தி பொறித் தொகுதியை அமைப்பது இரு நாடுகளுக்கும் நன்மை தரும். உண்மையில் இந்தியாவின் தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தமட்டில் இலங்கை மிகவும் கிட்டிய தூரத்தில் உள்ளது. வட இந்தியாவிலிருந்து வாகனங்களை இணைத்தமைத்து வரவழைப்பதைவிட இலங்கையிலிருந்து தருவிப்பது நேரச் சிக்கனமுடையது. இலங்கை இந்திய வர்த்தக ஒப்பந்தத்தின் நன்மைகளை இதன் மூலம் இருநாடுகளும் பெற்றுக் கொள்ள முடியும். 

இலங்கை வாகனச் சந்தையில் சிறியரக லொறிகள் உள்ளிட்ட மஹிந்திராவின் தயாரிப்புகள் வெற்றிகரமாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்திய அரசாங்கத்தின் கடனுதவி திட்டத்தின்கீழ் பொலிஸ் திணைக்களத்திற்கு  ஜீப் ரகத்திலான வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாவனைக்கான இந்தியாவில் பிரபலமான ‘ஸ்கோர்பியா’ ரக வாகனங்களை இலங்கையில் பெரிய எண்ணிக்கையில் காணமுடிவதில்லை. இந்தியாவில் இவற்றின் விலைகள் மலிவாக இருந்தாலும் மிக உயர்ந்த தீர்வைகள் காரணமாக இவை இங்கு யானை விலை குதிரை விலைக்கு விற்கப்படுகின்றன. இப்புதிய கூட்டு முயற்சி வெற்றியளித்து நிலைத்திருக்க வேண்டுமாயின் அரச துறையின் ஆதரவு இன்றியமையாதது. குறைந்த பட்சம் அரச நிறுவனங்கள் இவ்வாகனங்களைக் கொள்வனவு செய்வதன் மூலம் உற்பத்தியாளருக்கு நீண்டகால ஊக்குவிப்பை வழங்கலாம். அத்துடன் அரசியல் காரணங்களுக்காக இம்முதலீட்டில் அரசாங்கம் செல்வாக்குப் பிரயோகிக்காமலும் வெளிப்படைத் தன்மையுடன் இயங்கினால் இதுபோன்ற முதலீடுகளை நாட்டுக்குள் வரவழைக்கலாம். 

மஹிந்திரா – ஐடியல் குறூப் முதலீட்டு முயற்சியானது இலங்கையின் முதலீட்டுச் சூழலுக்கு கிடைத்த வெற்றியல்ல, மாறாக இரு கம்பனிகளின் வியாபார இலக்குகள் பூர்த்தி செய்யப்பட்டதன் காரணமாக இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒரு அன்பளிப்பாகும். இதனைப் புரிந்து கொண்டு செயற்படுவது அவசியம். உள்ளூர் கம்பனியின் தலைவர் அளித்துள்ள பேட்டியில் உள்ளூர் உள்ளீட்டு உற்பத்தியாளர்களுக்கு மனித வளத்திற்கு உரிய பயிற்சிகளும் நிபுணத்துவமும் பெற்றுக் கொடுக்கப்படுமெனவும் அறிவித்திருக்கிறார். மஹிந்திராவின் வருகை இலங்கைக் கைத்தொழிற்துறைக்கு ஒரு நிலைமாறு கட்டமாக அமையலாம்.

வாய்ப்புகள் கதவைத் தட்டும்போது அவற்றை இறுகப்பற்றி முன்னேறக்கூடிய ஸ்மார்ட்டான ஒரு நாடாக இலங்கை ஒரு போதும் இருந்ததில்லை. பெரும் எடுப்பில் ஊதிப்பெருத்த ஆர்ப்பாட்டங்களுடன் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் காற்றுப்போன பலூனாக சூம்பிப்போன வரலாறுகளே கடந்த காலத்தில் யதார்த்தமாகியுள்ளன. 

மஹிந்திராவின் இக்கட்டு முயற்சி அரசியல் சூறாவளிகளுக்குள் சிக்கிவிடாமல் இலங்கையின் கைத்தொழில் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதாக என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.  

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

Comments