கிழக்கு தமிழர் கூட்டணி வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஓர் அத்திவாரம் | தினகரன் வாரமஞ்சரி

கிழக்கு தமிழர் கூட்டணி வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஓர் அத்திவாரம்

கிழக்கில் தமிழர்களின் இருப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. இதனைத் தடுப்பதற்கு நாம் கிழக்கில் தனித் தமிழர்களாக உருவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் 10,15 வருடங்களில் ஆபத்தான நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவரது முழுமையான நேர்காணல்;

கேள்வி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறு பார்க்கின்றனர்?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் தமிழ் மக்களுக்கு சொல்லப்பட்ட தீர்வு சார்ந்த விடயம் பூச்சியத்தில் உள்ளது. அபிவிருத்தி சார்ந்த விடயமும் பூச்சியம். கம்பெரலிய என்ற ஒன்றை தூக்கிக்ெகாண்டு மாயையை ஏற்படுத்துகின்றனர். அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் ஆயிரக்கணக்கான மில்லியன்களை கொண்டுவந்து தமது பகுதிகளை அபிவிருத்தி செய்கின்றனர்.

அம்பாறை, திருக்கோணமலை, மட்டக்களப்பு மற்றும் வடக்கிலும் இதே நிலைதான். ஆனால், முஸ்லிம் அமைச்சர்கள் மாத்திரம் ஆயிரக்கணக்கான மில்லியன்களை அபிவிருத்திக்காக கொண்டுவருகின்றனர். அபிவிருத்தி சார்ந்த விடயத்திலும் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். உடனடி தீர்வுகள் என்று சில விடயங்கள் இருந்தன. கைதிகள் விடுவிப்பு, காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என அனைத்திலும் தோல்வி.

ஜனாதிபதியும் இவர்களுடன் சேர்ந்துதான் இருந்தார். உண்மையில் இந்த நாட்டில் எதிர்க்கட்சி என்ற ஒன்று இருக்கவில்லை. ஜனாதிபதி, பிரதமர், அரசுக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சித் தலைவர். நானும் எதிர்க்கட்சியில் இருந்தேன். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கவில்லை. ஆளுங்கட்சியொன்றுக்கு வழங்கப்பட்ட அனைத்துச் சலுகைகளும் எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக இருக்கவில்லை.

இந்த மூன்றரை வருடத்தில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் நடைபெறவில்லை. ஆகவே, மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்துள்ளனர். அரசாங்கத்தில் மாற்றம் வேண்டுமென்ற நிலையே காணப்படுகிறது.

கேள்வி: கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்குவார் என்ற நம்பிக்கையுள்ளதா?

பதில் : தமிழ் மக்களுக்கான பிரச்சினை என வரும்போது முதலாவது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, இரண்டாவது உடனடித் தீர்வுகள், மூன்றாவது அபிவிருத்தி சார்ந்த விடயங்களென பிரிக்கலாம். இவை மூன்றும் எமக்கு முக்கியம். கோட்டாபய ராஜபக்ஷவுடன் தமிழ் தலைமைகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கோட்டா – ரணிலுக்கு அப்பால் நாம் இருவரிடமும் நிபந்தனைகளை வைக்க வேண்டும். நிபந்தனைகளை வைத்து பேரத்தை பேச வேண்டும். முஸ்லிம் தலைமைகளும், கட்சிகளும் அவ்வாறுதான் பேச்சுகள் நடத்துகின்றனர். கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ், எந்தப்பக்கம் வெற்றியுள்ளதென பார்த்து முடிவெடுக்க வேண்டுமென கூறுகிறார். முஸ்லிம் தலைவர்கள் இராஜதந்திரமாக பேசுகின்றனர். ஆனால், கூட்டமைப்பிடம் அந்த இராஜதந்திரம் இல்லை.

போர்க்குற்றம் தொடர்பில் பேசும் போது, கோட்டாபய ராஜபக்ஷ, சரத் பொன்சேகா தற்போதுள்ள ஜனாதிபதி கூட ஏதோ ஒருவிதத்தில் தொடர்பட்டவராகதான் உள்ளார். எனவே, எமது தேவைகளை நிறைவேற்றக் கூடியவரைத்தான் நாம் இன்று சிந்திக்க வேண்டும். ஐ.தே.கவை பொறுத்தமட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. பல வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆனால், ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.

ஐ.தே.க. சொல்வதை தென்னிலங்கை கேட்கப்போவதுமில்லை. மகிந்த ராஜபக்ஷ எதனைக் கூறினாலும் தென்னிலங்கை கேட்கும். அவரை நான் நியாயப்படுத்தவில்லை. என்றாலும், சி;;றுபான்மைச் சமூகத்திற்கு அவரால் ஏதும் நிறைவேற்றப்பட்டால் அதனை தென்னிலங்கை எதிர்க்காது. அவர் வாக்குறுதிகளை அளித்தால் நடைமுறைப்படுத்தக் கூடியவர். இவர்கள் ஆயிரம் வாக்குறுதிகளை கொடுத்தாலும் ஒன்றையும் நிறைவேற்றுவதில்லை.

சாதாரண விடயமான கல்முனை விவகாரத்தை தீர்க்கக்கூட இவர்களால் முடியவில்லை. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியென கூறும் கூட்டமைப்பால் ஒரு கணக்காய்வாளரை நியமிக்க முடியவில்லை. ஊடகங்களில் மாத்திரம் இராஜதந்திர நகர்வு, அப்படி இப்படி என்றார்கள். ஆனால், ஒரு கணக்காய்வாளரை நியமிக்க முடியாத நிலையில்தான் இந்த அரசாங்கம் உள்ளது.

ஆகவே, இந்த அரசாங்கமா தமிழர்களுக்குத் தீர்வை வழங்கப் போகிறது?. கிழக்குத் தமிழர் கூட்டாக நாம் விரைவில் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேசவுள்ளோம். நிபந்தனைகளை வைக்கவுள்ளோம். பேசினால்தான் எதையும் செய்ய முடியுமா? இல்லையா? ஏனக் கூறுவார்கள்.

கேள்வி: கல்முனை விவகாரம் தற்போது எந்தகட்டத்தில் உள்ளது?

பதில்: 1989ஆம் ஆண்டு பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில்தான் 28 பிரதேச உப செயலகங்கள் உருவாக்கப்பட்டன. 1993ஆம் ஆண்டு அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் 27 பிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டுவிட்டன. ஆனால், கல்முனை உப பிரதேச செயலகம் மாத்திரம் தரமுயர்த்தப்படவில்லை. 36ஆயிரம் தமிழ் மக்கள் இங்கு உள்ளனர். 29 கிராம சேவை பிரிவுகள் உள்ளன. ஆனால், இது இன்னமும் தரமுயர்த்தப்படவில்லை.

ஹாரிஸ் எம்.பி. இனவாதத்தை பரப்பி இதற்கு தடையாக இருக்கிறார். ஒருபோதும் இதற்கும் இடமளிக்க மாட்டோம் எனக் கூறுகிறார். அத்துடன், மீண்டும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க நிபந்தனைகளை விதிக்கும் போது வடக்கு, கிழக்கு இணைக்கப்படக் கூடாதென்ற கோரிக்கையையே முதலாவதாக வைக்கப் போவதாக கூறுகிறார்.

இந்நிலையில், தமிழ் தலைமைகள் அரசாங்கத்தை பாதுகாப்பதில் என்ன பயன்?. ரணிலை பாதுகாக்காவிடின் மகிந்த வந்துவிடுவார் எனக் கூட்டமைப்பு பூச்சாண்டி காட்டுகிறது. ரணிலை பாதுகாப்பதால் எமக்கு என்ன பயன் கிடைத்துள்ளது. கல்முனை விவகாரம் இதற்கு சிறந்த உதாரணம்.

எந்த சிங்கள தலைவர்களும் எமது வாக்குளை வைத்து அவர்களது காரியத்தை சாதிக்கவே பார்ப்பார்கள். ஏன் எம்மால் சாதிக்க முடியாதுள்ளது?. ரணிலா, கோட்டாவா, மஹிந்தவா என்பது முக்கியமல்ல. எமது மக்களுக்கு என்னத்தை பெற்றுக்கொடுக்கப் போகின்றோம் என்பதுதான் முக்கியம்.

கேள்வி: தமிழ் மக்களின் ஆதரவின்றி மஹிந்த தரப்பு தேர்தலில் வெற்றியடைந்துவிட்டால், உங்களை போன்றோரால் பேரம் பேச முடியுமா?

பதில்: இது பாரிய கேள்விக்குறியான விடயமாகும். வடக்கை பொறுத்தமட்டில் டக்ளஸ் தேவானந்த மஹிந்த அணியுடன் இருக்கின்றார். நிச்சயம் அவர் மஹிந்த அரசில் ஒரு அமைச்சராக வருவார். ஐ.தே.கவின் சார்பில் விஜயகலா உள்ளார். கிழக்கில் எவரும் இல்லை. கடந்த 30 வருடத்தில் ஒரு தமிழ் அமைச்சர்கூட கிழக்கு சார்பில் இருக்கவில்லை. இதனால் பேரம் பேசும் சக்தி இல்லாதுபோயுள்ளது. அதனால் கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து சில நிபந்தனைகளை வைத்து பேசவுள்ளோம். யுத்தம் தொடர்பிலான கசப்பான நிலைமை உள்ள போதிலும், எதிர்காலத்தில் இவர்கள் நல்ல விடயங்களை செய்து மக்களிடம் ஆதரவை பெறுவார்கள்.

கேள்வி: நீங்கள் கூறுவது போன்று கிழக்குத் தமிழர் கூட்டணி உதயமான பின்னர், கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமை எவ்வாறு இருக்கும்?

பதில் : பாராளுமன்றத் தேர்தலில் 1,250,000 வாக்குகளுக்கு அதிகமாக பெற்றிருந்தோம். உள்ளூராட்சித் தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வரை குறைந்திருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உரிமை சார்ந்ததும், அபிவிருத்தி சார்ந்ததுமான அரசியல் இல்லை என்பதையே இது காட்டுகிறது. இந்நிலையிலேயே கிழக்கில் தமிழரின் இருப்பை பாதுகாக்க பலமான கூட்டணியொன்றை அமைக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் விரும்பினால் இதற்குள் வரலாம். கிழக்கில் தமிழர்கள் பிரிந்து செயற்படுவது தமிழர்களுக்கு பெரும் ஆபத்து.

கேள்வி: கிழக்கில் நீங்கள் தமிழர் கூட்டணியை உருவாக்கினால், வடக்கு,கிழக்கு இணைப்புக்கு பாதிப்பாக அமையாதா?

பதில்: இல்லை. அதிகமானவர்கள் மத்தியில் இந்தக் கேள்வி உள்ளது. ஏன், கிழக்கு தமிழர் பற்றி சிந்திக்கின்றீர்கள் எனவும் சிலர் கேட்கின்றனர். வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற விடயத்தில் நாம் 100 அல்ல 200 சதவீதம் உறுதியாகவுள்ளோம். இன்று வடக்கு,கிழக்கை இணைக்க வேண்டுமென கூறும் தமிழ் தலைமைகள் இன்னும் 15,20 வருடங்களின் பின்னர் வடக்கு,கிழக்கு இணைப்பு வேண்டாமென சொல்வார்கள்.

ஏனென்றால், கிழக்கில் 58 சதவீதமாகவிருந்த தமிழர்கள் இன்று 38 சதவீதமாக மாறியுள்ளனர். 37 வீதம் முஸ்லிம்கள் உள்ளனர். ஒரு வீதம்தான் வித்தியாசம். அடுத்தாக சிங்கள மக்கள் உள்ளனர்.

வடக்கு, கிழக்கு இணைப்பை ஏன் முஸ்லிம் தலைமைகள் விரும்பவில்லை என்றால், இணைத்தால் தமிழர்கள் பெரும்பான்மையாக வந்துவிடுவார்கள். இன்னும் 15,20 வருடத்தில் இணைத்தால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வந்துவிடுவார்கள் என்பதால் வேண்டாம் என்பார்கள். ஆகவே, நாம் பிரதேசவாதம் பேசவில்லை. வடக்கு,கிழக்கு இணைப்பை வலியுறுத்தும் அதேவேளை, கிழக்கில் இன்றுள்ள தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டும். எமது நில விகிதாசாரத்தை பேண வேண்டும்.

தீர்வு தீர்வு எனப் பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால், தீர்வு கிடைக்கும் போது கிழக்கில் தமிழர்கள் இருப்பார்களா?. நிலவளம், இருப்பு இருக்குமா என்பது கேள்விக்குறியாகும். இனமாற்றம், திட்டமிட்ட குடியேற்றம் எனப் பிரச்சினைகளை அடிக்கிக்கொண்டு செல்ல முடியும். வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி பேசுபவர்கள் வடக்கு அரசியலை கிழக்கில் செய்யவில்லை. தேசியப் பட்டியலை பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் செயற்பட கூடாது. தமிழ் கூட்டமைப்புக்கு கிழக்கு தமிழர்கள் மீது அக்கறை இல்லை. கிழக்கு மாகாணத்துக்கு என்று ஓர் அபிவிருத்தி அமைச்சு இல்லை. சம்பந்தன் இதனைப் பேசினாரா?.இல்லை.

ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருந்தால் சமமாக பார்க்க வேண்டும். ந}ம் பேசுவது பிரதேசவாதம் அல்ல. தேர்தல் மேடைகளில் பேசும் தமிழ் தலைமைகள் எமக்கு அவசியமல்ல. வடக்கு,கிக்கு இணைப்புக்கு ஓர் அத்திவாரமாக கிழக்கு தமிழர் கூட்டணி இருக்கும்.

நாம் தனித் தமிழர்களாக கிழக்கில் களமிறங்கவுள்ளோம். வட்கிலுள்ள தமிழ் தலைமைகளும் எமக்கு ஆதரவளித்துள்ளனர்.

நேர்காணல்: சுப்பிரணியம் நிஷாந்தனன்

Comments