சவேந்திர சில்வா நியமனம் குறித்து இவர்கள்... | தினகரன் வாரமஞ்சரி

சவேந்திர சில்வா நியமனம் குறித்து இவர்கள்...

இறையாண்மையில் தலையிட எந்தவொரு வெளிச்சக்திக்கும் அனுமதி இல்லை - அமைச்சர் ரவூப் ஹக்கீம்

நாட்டின் இறையாண்மையில் தலையிட எந்தவொரு வெளிச்சக்தியையும் அனுமதிக்க முடியாது. அறிவுறுத்தல் என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் அமெரிக்கா அறிக்கை விடுவது நாட்டில் மற்றொரு குழப்பநிலை உருவாக்கவே வழிவகுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவிக்கின்றார். 

புதிய இராணுவ தளபதியாக லெப்டினன்ற் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால நியமித்ததையடுத்து எழுந்துள்ள வாதப்பிரதிவாதங்கள் குறித்து கேட்டபோதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

நாட்டின் தலைவர் என்ற அடிப்படையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் அந்த நியமனத்தை வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்றது. அந்த நியமனம் பொருத்தமுடையதா? இல்லையா? என்பது வேறு விடயம் அது குறித்து உள்ளக மட்டத்திலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும். இதில் தலையிட எந்தவொரு வெளிச்சக்திக்கும் உரிமை கிடையாது. 

இந்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதி அரசுடனோ, அமைச்சரவையிலோ எதுவும் கலந்துரையாடவில்லை. இந்த நியமனத்துக்கும் அரசாங்கத்திற்கும் எந்தவித பொறுப்பும் கிடையாது. புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அதிருப்தியை வெளிப்படுத்தி அறிக்கை விட்டிருப்பதை அறிவுறுத்தலாகவோ ஆலோசனையாகவே இந்தச் சந்தர்ப்பத்தில் கொள்ள முடியாது பதிலாக அவை எமது நாட்டில் கடும் போக்காளர்களின் கரங்களை பலப்படுத்துவதாகவே அமையும். 

தளபதியின் நியமனம்  ஜனாதிபதியின் தனிப்பட்ட தீர்மானமாகும். இதுகுறித்து அவர் அரசுடன் கலந்துரையாடவில்லை.

இதற்கு அரசு பெறுப்புக்கூற முடியாது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட  இதுபோன்றதொரு தீர்மானத்தை எடுத்து அன்றும் பிரச்சினைக்குரியவராக காணப்பட்ட இந்த சவேந்திரசில்வாவை ஐ.நா.வின் துணை பிரதிநிதியாக நியமித்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க முடியாத நிலை உருவாகி இருந்தது. 

அமெரிக்கா இந்த விடயத்தில் மூக்கை நுழைப்பது எமது நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தவே வழிவகுக்கும் அமெரிக்காவோ, வேறு எந்த நாடுமோ இந்த விடயத்தில் அழுத்தங்களைப் பிரயோகிக்க இடமளிக்க முடியாது.

தமிழர்களை தொடர்ந்தும் வன்முறையின் பிடிக்குள்ளே வைத்திருக்கும் முயற்சி - யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்

போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமித்தமையை தமிழ் மக்கள் என்றும் ஏற்றுக்ெகாள்ளப் போவதில்லை, மன்னிக்கவும் போவதில்லை என்று தெரிவித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். அவர் லெப்டினன்ற்  ஜெனரல் சவீந்திர சில்வாவின் நியமனம் குறித்து மேலும் கருத்துத் தெரிவிக்கையில்...

சர்வதேசத்தாலும், ஐ.நா மனித உரிமைப் பேரவையாலும்  போர்க் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு உயர் பதவி வழங்குவதை எவ்வாறு ஏற்றிக் கொள்வது?

காணாமல் போனோரை மீட்டுத் தருமாறு கோரி மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டதாகச் சொன்னார்கள். காணாமல் போனோருக்கான அலுவலகம் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், காணாமல் போனோருக்கான அலுவலகத்தையும் அமைத்து, அவர்கள் காணாமல் போகக் காரணமாக இருந்தவரையே  இராணுவத் தளபதியாக  நியமித்திருப்பதும் எதனை நிரூபிக்கின்றது?

இது பற்றி பிரதமரிடம் கேட்டால் தனக்கு எதுவும் தெரியாதென்கின்றார். ஜனாதிபதியோ நியமிக்கின்றார்.

நல்லிணக்கம் பற்றிப் பேசும் அரசின் உண்மையான நோக்கம் இதன் மூலம் புலப்படுகின்றதல்லவா? இவ்வாறான சம்பவங்களால் சிங்களவர்களுடன் சேர்ந்துவாழ முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு அல்லவா எமது இளைய சமூகம் தள்ளப்படுகின்றது?

புதிய அரசு பதவிக்கு வந்தபோது, சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழலாம் என்ற நம்பிக்ைக தமிழ் இளைஞர்கள் மத்தியில் துளிர்விட்டிருந்தது. ஆனால், அந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்ைகயையும்  சவீந்திர சில்வாவின் நியமனம் மூலம்  அரசு சிதறடித்திருக்கின்றது? இவ்வாறானதொரு அரசுடன் தமிழர்கள் எந்த அடிப்படையில் நம்பிக்ைக  வைப்பார்கள்?

இது தமிழர்களை தொடர்ந்தும் வன்முறையின் பிடிக்குள்ளேயே வைத்திருக்கும் முயற்சியல்லவா?என்றார்

யுத்தக் குற்றச்சாட்டுகளும் மனித உரிமை மீறல்களும் வீரத்தை மறைக்கவே செய்யும் - விக்கிரமபாகு கருணாரத்ன (தலைவர் - நவசமசமாஜ கட்சி)

சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது தவறான முன்னுதாரணமாகவே நான் கருதுகிறேன். அவர் மீது சர்வதேச ரீதியாக கவனிக்கப்படும் அளவுக்கு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன. சில நிரூபிக்கப்பட்டுமுள்ளன. யுத்தத்தின் இறுதிப் பகுதியில் யுத்தக் களத்தில் அவரது பொறுப்பின் கீழேயே படையணிகள் செயல்பட்டன. எனவே அவ்வாறான குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒருவரை, அவற்றுக்கு ஒரு முடிவு காணப்படாமலேயே, இராணுவத் தலைமைப் பொறுப்புக்கு நியமனம் செய்வது சரியான அரசியல் முடிவாக அமையாது. இது எமக்கு முக்கியமான காலகட்டம். தேர்தல்கள் வரப் போகின்றன. நாடும் பொருளாதார பின்னடைவையும் கடன் சுமையையும் தாங்கிக் கொண்டிருக்கிறது. உலகமே எம்மை அவதானித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் முக்கியமான ஒரு பொறுப்புக்கு உலக நாடுகள் சந்தேகம் கொண்டிருக்கும் ஒரு நபரைத் தெரிவு செய்திருப்பது பொருத்தமான ஒரு நகர்வு அல்ல என்கிறார் தோழர் விக்கிரமபாகு. 

ஆனால் அவர், யுத்தத்தை முடித்து வைத்தவர்களில் ஒருவர் என்ற வகையில் வீரர் தானே? என்று தோழரிடம் வினவியபோது, 

ஒரு வகையில், யுத்தத்தை எடுத்துக் கொண்டால், வீரர் என்று அழைக்கலாம்தான். ஆனால் அந்த வீரத்தை யுத்தக் குற்றச்சாட்டுகளும் மனித உரிமை மீறல்களும் மறைக்கவே செய்கின்றன. ஒரு நாட்டுக்கு பெருமை சேர்ப்பது மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதேயாகும். எனவே அவரை வீரர் என்று சொல்ல முடியாது. 

இந்த நியமனம் ராஜபக்சமார்களுக்கும் உதவும் எனக் கருதுகிறேன். பாருங்கள், பொது ஜன பெரமுனைவின் வேட்பாளராக கோட்டாபே ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். இவரின் கீழேயே இன்றைய இராணுவ தளபதி பணியாற்றியிருக்கிறார். எனவே இந்தச் சூழலில் சவேந்திரவுக்கு தளபதி பதவி அளிக்கப்பட்டிருப்பது பெரமுன் வேட்பாளருக்கு உதவும் வகையிலா என்ற சந்தேகம் எழுகிறது. ஜனாதிபதி இப்பதவியை அவருக்கு வழங்கியதை நான் ராஜபக்சவின் அரசியல் நகர்வுக்கு சாதகமான ஒன்றாகவே பார்க்கின்றேன். 

இதற்கு முன்னர் இலங்கையின் உயர் பதவிகளுக்கு நியமனங்கள் செய்யப்பட்ட போது வெளிநாடுகள் அதுபற்றி கவலை கொள்ளவில்லை. ஒரு பதவி நியமனம் தொடர்பாக வெளிநாடுகள் நமது நட்பு நாடுகள் கவலை கொண்டிருப்பது இதுவே முதல் தடவை எனக் கருதுகிறேன்.

இது எமக்கு தேவையற்றது. மனித உரிமைகள் தொடர்பான ஒரு பிரச்சினை ஏற்கனவே எம்முடன் இருக்கையில் நாமாகவே இன்னொரு பிரச்சினையை எடுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா? பொருத்தமற்ற தருணத்தில் பொருத்தமற்ற பதவி நியமனம்.   

எம்.ஏ.எம். நிலாம்   

Comments