ஜனாதிபதித் தேர்தல்: சிறுபான்மையினருக்கே நெருக்கடி | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதித் தேர்தல்: சிறுபான்மையினருக்கே நெருக்கடி

ஜனாதிபதித் தேர்தலில் மிகப் பெரிய சோதனையையும் நெருக்கடியையும் சந்திப்போராகச் சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சேர்ந்தோரே உள்ளனர். போட்டியிடவுள்ள ஐ.தே.க, சு.க, பொதுஜன பெரமுன, ஜே.வி.பி வேட்பாளர்கள் எவருமே சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சினைகளைக் குறித்து எத்தகைய தெளிவான அரசியல் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியவர்களில்லை. மட்டுமல்ல, கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்மறையான எண்ணங்களுடனேயே செயற்பட்டிருக்கின்றனர். இலங்கையின் தேசியப் பிரச்சினைகளிலும் முன்னேற்றகரமான வெளிப்படுத்தல்களைச் செய்ததில்லை. 

பொதுஜனபெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ, ராஜபக்ஷ குடும்பத்தின் இன்னொரு அரசியல் அதிகாரமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறார். ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் புலிகளை வெற்றி கொண்டவர் என்ற அடையாளமே கோத்தபாயவுக்கான அடையாளமும் அரசியல் அறிமுகமுமாகும். இதுவே கோத்தாவின் அரசியல் முதலீடும் கூட. இல்லையென்றால் அரசியல் அரங்கில் நன்கு அறிமுக மான பஸில் ராஜபக்ஷவை ராஜபக்ஷ குடும்பம் நிறுத்தியிருக்கும். பஸிலை விட கோத்தபாயவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று அவர்கள் கருதுவது புலிகளை வெற்றி கொள்ளக் காரணமாக இருந்தவர் என்பதேயன்றி வேறென்ன? இதையே முன்பு சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக ஐ.தே.க நிறுத்தியபோதும் கருதியிருந்தது. ஆக யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்தாலும் யுத்த வெற்றியை அரசியல் முதலீடாக்கும் சிந்தனை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. 

ஆனால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களோ தொடர்ந்தும் தேர்தல்களில் வாக்களிக்கும் இயந்திராக்களாக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் யுத்தத்தை நடத்தியவர்களுக்கும் யுத்தக் குற்றங்களோடு சம்பந்தப்பட்டவர்களுக்குமே வாக்களிக்கும் நிலைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அளவுக்குத்தான் உள்ளது இலங்கையின் அரசியலும் அரசியல் நாகரீகமும் அவற்றின் யதார்த்தமும். ஜனநாயகத்தின் விசித்திரமும். 

கோத்தபாயவுக்கான அறிமுகம் தனியே யுத்த வெற்றியோடு மட்டும் தொடர்பு பட்டதல்ல. இதேயளவுக்கு ஊடகவியலாளர்கள் பிரகீத் எக்னலிகொட மற்றும் லசந்த விக்கிரமதுங்க, தராகி சிவராம் உள்ளிட்ட பலருடைய படுகொலை, காணாமலாக்கப்படுதல் போன்றவற்றோடும் சம்பந்தப்பட்டது. வெள்ளைவான் கடத்தல்கள் இன்னொரு அடையாளம். இது எதிர்மறையான அடையாளத்தை உண்டாக்குகிறதே என்று யாரும் கேட்கக்கூடும். 

இன்றைய வெகுஜன உளவியலானது நேர் – நேர்மறை என்ற பகுப்பில் எதையும் எவரையும் அடையாளம் காண்பதில்லை. அது எத்தகைய அடிப்படையைக் கொண்டிருக்கிறது என்பதற்கு அப்பால், ஒருவர் அல்லது ஒன்று எந்தளவுக்கு பிரபல்யமாக இருக்கிறதோ அவர் அல்லது அது மக்களிடம் அறிமுகமாகிறது. செல்வாக்கைப் பெறுகிறது என்பதேயாகும். இதனால்தான் மிக மோசமான சினிமாக்களிலிருந்து மோடி போன்றவர்கள் வரை மக்களால் ஆதரிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இங்கும் இதுதான் நிலை. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என அனைத்துச் சமூகத்தினரிடத்திலும் மனித உரிமைவாதிகளின் மத்தியிலும் கடுமையான கண்டனங்களைப் பெற்றவர் எனக் கருதப்படும் கோத்தபாய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கான நாயகராகக் கருதப்படுகிறார் என்றால் அதற்கான நம்பிக்கையும் துணிச்சலும் எங்கிருந்து, எப்படி ஏற்பட்டது? 

நேரடியாகவே தமிழ்ச் சமூகத்தின் மீதான போர், போர்க்குற்றங்கள் உள்ளிட்ட ஒடுக்குமுறையில் முக்கிய பாத்திரம் வகித்தவர், மனித உரிமை மீறல்களில் சர்வதேச ரீதியாக கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தவரை எந்த அடிப்படையில் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்கள்? 

தமிழர்களின் பிரச்சினையில் மட்டுமல்ல, முஸ்லிம்களின் மீதான அச்சுறுத்தலை மேற்கொள்வதற்கு பொதுபல சேனாவின் தோற்றத்தோடு தொடர்புபட்டிருந்தவர் என்றும் கோத்தபாய கருதப்படுகிறார். கூடவே பள்ளிவாசல்களின் மீதான தாக்குதல்கள், பேருவளை, மாவனல்லை போன்ற முஸ்லிம் நகரங்களின் மீதான தாக்குதல்களை மேற்கொண்ட பொதுபல சேனாவுக்குப் பின்னணியாக இருந்தவர் என்றெல்லாம் நம்பப்படுகின்றவர். இந்த நம்பிக்கை என்பது வெறுமனே ஊக நிலைப்பட்டதல்ல. பொதுவெளியில் பகிரங்கமாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இவற்றைக் குறித்து பி.பி.ஸி போன்ற சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது சீற்றத்தோடு பதிலளித்தவர் கோத்தபாய. 

இருந்தாலும் அவர் தமிழ், முஸ்லிம், மலையக சமூகத்தினரின் வாக்குகளைப் பெறவுள்ளார். எந்த அளவுக்கு அவருக்கான ஆதரவுத்தளம் இந்தச் சமூகத்தினரிடத்திலே இருக்கும் என்பது கேள்வி. ஆனாலும் அவர் இந்தச் சமூகங்களின் வாக்குகளையும் கோருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மையே. இந்த நிலையில்கூட தம்முடைய கடந்தகால நடவடிக்கைகளையிட்டு சுய விமர்சனம் செய்யவோ, மக்களிடத்திலே மன்னிப்பைக் கேட்கவோ தயாரில்லை. மட்டுமல்ல, இலங்கையின் தேசியப் பிரச்சினைகளிலும் முன்னேற்றகரமான வெளிப்படுத்தல்களைச் செய்ததில்லை. 

கோத்தபாய ராஜபக்ஷ அளவுக்கில்லை என்றாலும் ஜே.வி.பி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் அனுரகுமார திஸாநாயக்கவும் சிறுபான்மையினச் சமூகத்தினரின் அரசியல் உரிமைகளைக் குறித்து தெளிவான எந்த நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியவரல்ல. 

மட்டுமல்ல, ஜே.வி.பியின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகளும் நிலைப்பாடுகளும் தமிழ்ச்சமூகத்தை அதனிலிருந்து தூர விலக்கி வைத்திருந்ததுண்டு. குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணங்களை இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு மாறாக இரண்டாகப் பிரித்தது, சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளைக் குறித்து எதிர்மறையான நிலைப்பாட்டுடன் இருப்பது, மலையக மக்களை இந்தியாவின் விஸ்தரிப்புவாதத்துக்கான அடையாளமாகக் கண்டு எதிர்த்தது, புலிகளை அழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்காக யுத்தத்தை ஆதரித்தது, தேர்தல் வெற்றிகளுக்காக இனவாத அரசியலின் பின்னால் இழுபடுவது என கடுமையான எதிர்மறை அடையாளங்கள் ஜே.வி.பிக்கு உண்டு. இதை அது எப்படிக் கடக்கப்போகிறது? என்பதே இன்றைய கேள்வி. 

ஜே.வி.பி தற்போதுள்ள நிலையில் தன்னைச் சுயமதிப்பீட்டுக்கும் சுய விமர்சனத்துக்கும் உள்ளாக்க வேண்டும். இல்லையானால் அதனுடைய கடந்த கால, நிகழ்காலத் தவறுகள் அதற்கான தடையாக அமையும். தேர்தலில் அனுரகுமார வெற்றியடைவாரா இல்லையா என்பது ஒரு புறமிருக்கட்டும். ஏறக்குறைய ஐந்து லட்சம் வாக்குகளுக்கு மேல் அனுரகுமார பெறவில்லை என்றால் ஜே.வி.பியின் எதிர்காலம் உடனடியாகப் பாதிக்கும்.

பத்துலட்சம் வாக்குகளுக்குமேல் ஜே.வி.பி பெறுமாக இருந்தால் அது அடுத்து வரும் காலத்தில் மிகப் பெரிய உற்சாகத்தையும சனங்களிடத்திலே அதிகரித்த ஆதரவையும் உண்டாக்கும். 

ஆக என்ன செய்யப்போகிறார் அனுரகுமார என்பதே இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது. முக்கியமாக அனுரகுமாரவின் அறிவிப்புகளையும் முடிவுகளையும் சிறுபான்மையினச் சமூகத்தினர் எதிர்பார்த்திருக்கின்றனர். ஐ.தே.கவிலும் பொதுஜன பெரமுனவிலும் நம்பிக்கை இழந்திருக்கும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு ஜே.வி.பி கொடுக்கப்போகின்ற மதிப்பு என்ன? நம்பிக்கை என்ன? வெகுமதி என்ன? அது சிங்கள அரசியலில் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கக் கூடியது? என்பது இன்னொரு வகையில் கவனத்திற்குரியதாகும். 

அடுத்தது பிச்சல், பிடுங்கல், உட்குழப்பங்கள், இழுபறி, அதிகாரப்போட்டி என்ற கொந்தளிப்புகளுக்குள் சிக்கியிருக்கும் ஐ.தே.கவின் வேட்பாளர் என்பது. தானே ஜனாதிபதி வேட்பாளர் என்று செல்லுமிடமெல்லாம் தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார் சஜித் பிரேமதாஸ. இதுவரை காலமும் சாட்டுப்போக்குகளைச் சொல்லி வெட்டியாட அமுக்கி வந்ததைப்போல இனியும் சஜித்தை ரணிலினால் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியாது என்பது நிதர்சனமாகியுள்ளது. ஆனாலும் ரணில் இலகுவில் இறங்கி விட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை. அதோடு இந்தக் கொதி நிலை ஐ.தே.க சார்பிலான ஜனாதிபதி வேட்பாளருக்கான அறிமுகத்தையும் செல்வாக்கினையும் கூட்டும் எனவும் ஐ.தே.க கருதுவதாகத் தெரிகிறது. இறுதியில் ரணிலா, சஜித்தா வேட்பாளர் என்று இப்பொழுது தெரியாது விட்டாலும் அறிவிக்கப்படும் வேட்பாளர்களில் ஒருவர் கூட சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைகள், பாதுகாப்புத் தொடர்பாக வரவேற்கக் கூடிய சிந்தனையைக் கொண்டவர்கள் என்றில்லை. 

ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் நிலைப்பாடும், அணுகுமுறையும் புதியதல்ல. இதை சிறுபான்மைச் சமூகங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றன. சஜித் புதிய தலைவர் என்பதால் எதையாவது புதியதாகச் செய்யக்கூடும் என்ற நம்பிக்கை சிலருக்குண்டு. ஆனால், சஜித் பிரேமதாஸவும் தந்தை பிரேமதாஸவையும் ஐ.தே.கவையும் கடந்து எதையும் செய்வார், புதியதாகச் சிந்திப்பார் என்றில்லை. சஜித் அரசியலில் அறியப்பட்ட தலைவர்களில் ஒருவராகவே இப்போதுள்ளார். அப்படியிருப்பவர் இதுவரையில் ஒரு சொல்கூட சிறுபான்மையினச் சமூகங்களின் எதிர்பார்ப்புக்குறித்து வெளிப்படுத்தியதில்லை. அந்தளவுக்கு தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் அவர் மிகக் கவனமாக – சிங்கள பௌத்த உளவியலுக்கு இசைவானதாக உள்ளார்.  ஆகவே சஜித்தும் நம்பிக்கை அளிக்கும் – நம்பக்கூடிய ஒருவராக இல்லை என்பதே உண்மை. 

ஆனால், தற்போதுள்ள மைத்திரி -ரணில் அரசானது பொருளியல், அரசியல் ரீதியில் தோல்வியுற்றாலும், கடந்த ஐந்து வருடங்களில் ஜனநாயக வெளியினை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கினையாற்றியுள்ளது. அச்சத்துடன் வாழ்ந்த சூழல், இராணுவமயமாக்கல் ஆகியவற்றை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றியுள்ளது. போரின் அழிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அந்தரங்கமாகக்கூட நாட்டு அரசியல் பற்றிக் கதைப்பதற்கு மக்கள் பயப்பட்டார்கள். ஆனால் தற்போதுள்ள அரசியல் சூழலில் மக்கள் வீதிகளுக்கு வந்து இராணுவத்தின் பிடியிலுள்ள நிலங்களை விடுவிக்குமாறு போராட முடிகின்றது. காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்காகப் போராட முடிகின்றது. நாடு முழுவதும் நிலவிய கடத்தப்படுவோம் என்னும் அச்சம் நீங்கி விட்டது. ஊடகங்களுக்குரிய சுதந்திரம் அதிகரித்துள்ளது. அடக்குமுறை குறைந்துள்ளது. எதிர்ப்பினை வெளிப்படுத்தும் ஆர்ப்பாட்டக் கலாசாரம் மீண்டும் திரும்பி விட்டது. இதெல்லாம் முன்னேற்றகரமானதே. இதை நாம் ஆதரிக்கலாம் அல்லவா என ஐ.தே.கவுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுப்போர் கூறுகிறார்கள். 

இவையெல்லாம் தவிர்க்க முடியாத நிலையின் வெளிப்பாடுகள். கோத்தபாய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றாலும் இதையேதான் செய்வார். அவரால் இனியும் வெள்ளைவான்களைக் கொண்டு திரிய முடியாது.

ஆனால், இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடக்கம் நாட்டின் முன்னேற்றம், ஜனநாயக மேம்பாடு, பொருளாதார மறுமலர்ச்சி போன்றவற்றில் பிம்பங்களைக் கட்டமைப்பதை விட யதார்த்தமாக, உண்மையாக எதனைச் செய்யப்போகின்றனர் என்பதே முக்கியமானது. அதைக்குறித்தே நாம் நமது கவனத்தைச் செலுத்த வேண்டும்.

கருணாகரன்

Comments