தாயுமானவள் | தினகரன் வாரமஞ்சரி

தாயுமானவள்

பெண்மையின் பூரணம் தாய்மையாம்...  
ஏற்கின்றேன்...  
ஆனால்   
கருத்தரித்து உயிர் சுமந்து   
அதற்கு உருக்கொடுத்து உதிரத்தை   
உறிஞ்சவிட்டு மடி தவழும்   
ஒரு சேயிடம் தாயாவது மட்டுமா   
தாய்மையும் பூரணத்துவமும்???  
இல்லை...  
பூப்பெய்யாதவளும் தாயாகலாம்   
தன் கைப்பாவைக்கு....  
மணமாகாதவளும் தாயாகலாம்   
தன் தாய்தந்தைக்கு  
தாய்வழி வந்த தன் தமையனுக்கு -   
தன் தங்கைக்கு...  
மணம் கொண்ட மறு நொடியே   
தாயாகலாம் தன் மனம் கொண்டவனுக்கு...  
உடல்கீண்டு உயிரொன்று   
உருவப்பெறுவதால் பெறும்   
தாய்மை அல்ல பூரணம்...  
உணர்வுகளால் தாய்மையை  
 உணரவும் உணர்த்தவும் பெறுவதே   
பெண்மையின் பரிபூரணம்...  
அவள் பிறக்கும் போதே தாயுமானவள்...  
இனியும் ஏன் மலடி என்ற   
மலட்டுப் பெயரொன்று நம்மிடையில்???  
 
விதூஷா ராஜசிங்ஹ  

Comments