ஆறாத வடு | தினகரன் வாரமஞ்சரி

ஆறாத வடு

நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர், குறிப்பாக 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் வலுவான விடயமே நிலைமாறு கால நீதி என்பதாகும். நிலைமாறுகால நீதி என்பது 'அடக்குமுறையான ஆட்சிக்கு பின் உடனடியாக ஏற்படுகின்ற காலம்'. அதாவது நம்பிக்கையினை மீளக்கட்டியெழுப்புதல், மௌனத்தினை உடைத்தல், உண்மையினை வெளிப்படுத்தல், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பொறுப்புகூற வைத்தல், அங்கீகரித்தல் மற்றும் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் இதில் அடங்குகின்றன.

இந் நிலைமாறுகால நீதி என்பதற்கு நான்கு பிரதான அம்சங்கள் உள்ளடங்குகின்றன. அதாவது இந் நான்கு தூண்களிலேயே இந் நிலைமாறு கால நீதி கட்டியெழுப்பப்பட முடியும். அதில் முதலாவது உண்மையை அறிந்துகொள்வதற்கு பாதிக்கப்பட்டோருக்கும் பரந்தளவில் சமூகத்திற்கும் உள்ள உரிமையாகும்.

இந்த முதலாவது தூண் சாத்தியப்பட்டிருக்கின்றதா என ஆராய்ந்தால் அது இன்று வரை நடைமுறை சாத்தியமாகவில்லை.

நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்த சூழலானது தமிழ் மக்களிடையே பாரிய பாதிப்பையும் ஆறாத வடுவினையும் ஏற்படுத்திவிட்டது. அதற்கு காரணம் பெருமளவு உயிர்கள் காவு கொள்ளப்பட்டு பலர் அநாதைகளாகவும், போக்கற்றவர்களாகவும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் உட்பட அதற்கு முன்னரான தொடர் போராட்ட காலத்தில் பலர் தமது உறவுகளைக் காவு கொடுத்தனர். அதேநேரம் யுத்த நிறைவுக்கு பின்னரும் அதற்கு முன்னரும் பலர் தமது உறவுகளை தொலைத்திருந்தனர்.

இவ்வாறு தமது உறவுகளை தொலைத்தவர்கள் நீதி கோரி இன்று வரை போராடி வருகின்றார்கள். இவ் உறவுகள் அனைவரது கேள்வியும், அவர்கள் எதிர்பார்ப்பதும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்பதாகும். இதுவே நிலைமாறுகால நீதியின் நாம் மேற்சொன்ன முதலாவது தூணாகும். உண்மையை அறிந்து கொள்வதற்கான பாதிக்கப்பட்டோருக்குள்ள உரிமை.

குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பலரும், யுத்த காலத்தில் கடத்தப்பட்டும், இராணுவத்தால் கைது செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். இவர்களை தவிர மேலும் ஒரு தொகுதியினர் இறுதி யுத்தத்தில் இராணுவத்தில் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவர்களைத் தேடியே அவர்களது உறவுகள் கடந்த பத்து வருடங்களாக போராடி வருகின்றார்கள். சிலர் தமது உறவுகளை மீட்டுத் தரக் கூறி நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அதனை தவிர, வடக்கு, கிழக்கு எட்டு மாவட்டங்களிலும் உள்ள காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இப் போராட்டங்கள் கிளிநொச்சி வவுனியா, முல்லைத்தீவு, கிழக்கு மாகாணத்தில் அம்பாறையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவர்களது இத் தொடர் போராட்டமானது கடந்த மூன்று வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தின் ஓராண்டு நிறைவு, இரண்டாண்டு நிறைவு, காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், ஜனாதிபதி, பிரதமரது விஜயங்கள் போன்றவற்றுக்கெல்லாம் வீதிமறியல் போராட்டங்கள் முற்றுகை போராட்டங்கள் என பல வடிவங்களில் இம் மக்கள் தமது கோரிக்கையை முன்னிறுத்தி போராடி வருகின்றார்கள். ஆனால் இது வரை அம் மக்கள் எதிர்பார்த்த சரியான தீர்வு மாத்திரம் கொடுக்கப்படவில்லை.

காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பாக அப்போதைய மஹிந்த தலைமையிலான அரசாங்கம் 2010ஆம் ஆண்டு கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. இவ் ஆணைக்குழு வடக்கு, கிழக்கு முழுவதும் அமர்வுகளை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களது வாக்குமூலங்களை பதிவு செய்தது.

இதனை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம தலைமையில் காணாமல் போனோர் தொடர்பாக ஓர் ஆணைக்குழு அமைக்கப்பட்டு அவ் ஆணைக்குழுவும் மீண்டும் வடக்கு கிழக்கில் அமர்வுகளை நடத்தி வாக்கு மூலங்ளை பதிவு செய்தது. ஆனால் இவ் இரு ஆணைக்குழுக்களும் வாக்குமூலங்களை பதிவு செய்ததே தவிர இறுதிவரை அவர்களால் இம் மக்களின் கண்ணீருக்கு பதில் சொல்ல முடியவில்லை. வெறுமனே அவை சாட்சியங்களின் பதிவுகளாகவே இருக்கின்றன.

இவ்வாறான ஓரு சூழ்நிலையில் தான் 2015ஆம் ஆண்டு நாட்டில் நல்லாட்சி என்ற கோஷத்துடன் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இவ் ஆட்சி மாற்றத்தின் பிரதான பங்குதார்ர்களாக தமிழ் மக்களே காணப்பட்டார்கள்.

அதற்காக ஆட்சியாளர்கள் புதிய அரசியலமைப்பு, காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, நில விடுவிப்பு என தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு கொடுக்கப்படும் என்ற வாக்குறுதிகளை கொடுத்தார்கள்.

இதனால் தான் தமிழ் மக்கள் தமது ஏகோபித்த வாக்கினை நல்லாட்சி அரசுக்கு கொடுக்க சம்மதித்தார்கள். இத்தகைய பின்னணியிலேயே 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா ஓரு பிரேரணையை கொண்டுவந்தது. அப் பிரேரணைக்கு இணை அனுசரனை வழங்கி அதனை அமுல்படுத்துவதாக இலங்கை சம்மதித்தது.

அப் பிரேரணையில் விஷேடமாக காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். இழப்பீட்டு அலுவலகம் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இப் பிரேரணையே அதனை தொடர்ந்து 2017 மற்றும் 2019 ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

2019ஆம் ஆண்டு 40/1 என்ற பெயரில் இப் பிரேரணையே மீண்டும் நிறைவேற்றப்பட்டு அதற்கு 2021 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால் 2015ஆம் ஆண்டு புதிய நல்லாட்சி அரசாங்கம் அமையும் போது தமிழ் மக்கள் எதனை நம்பி வாக்களித்தார்களோ அந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலம் முடிவடையும் நேரம் நெருங்கிவிட்ட போதும் நிறைவேற்றப்படவில்லை என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கமாகும்.

குறிப்பாக பத்து வருடங்களாக தமது உறவுகளை தொலைத்து விட்டு, பறிகொடுத்து விட்டு வீதிகளிலும், தெருவோரங்களிலும், ஆலயங்களிலும், ஐ.நா அலுவலக வாசல்களிலுமாக தினம் தினம் தொலைத்தவர்களை தேடி கண்ணீர் வடிக்கின்றனர்.

தேடித் தேடி அலைந்து இது வரை 40ற்கும் மேற்பட்ட தாய் தந்தை உறவுகள் உயிரிழந்துவிட்டனர். இவர்களின் உறவுகளுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லை.

இந்நிலையில் தாம் யாரை நம்பி வாக்களித்தோமோ அவர்களும் தம்மை கைவிட்டு விட்டதாகவும்இ தாம் யாருக்கு வாக்களித்தோமோ அவர் தமக்கு துரோகமிளைத்துவிட்டார் என்பதுமே இம் மக்களின் தீராத வேதனையாகும்.

ஏனெனில் இப் புதிய அரசாங்கத்திற்கு வாக்களியுங்கள் என நம்பிக்கை ஊட்டியது தமிழ் தேசிய கூட்டமைப்பாகும். இத் தமிழ் தேசிய கூட்டமைப்பே தற்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக கவனமெடுக்கவில்லை என உறவுகள் ஆதங்கப்படுகின்றனர். 

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மாநாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாநாட்டு மண்டபத்துக்கு முன்பாக போராடிய போது அவர்களை கவனத்திலெடுக்காது பாராளுமன்ற உறுப்பினர் கள் செயற்பட்டமையும் தமது ஆதரவாளர்கள் மூலம் அம் மக்களை தவறான, இழிவான வார்த்தைகளில் பேசியமையும் தம்மை மேலும் வேதனைக்குள்ளாக்கியிருந்தது என உறவுகள் தெரிவித்தனர்.

இதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தருவதாக கூறி ஆட்சிப் பீடம் ஏறிவிட்டுஇ தற்போது இறுதி யுத்தத்தில் போர்குற்றச்சாட்டுக்குள்ளான இராணுவ அதிகாரியொருவரை நாட்டின் இராணுவத் தளபதியாக நியமித்திருப்பது பாதிக்கப்பட்டு நீதிக்காக போராடுகின்ற மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் கூறுகையில்,

இறுதி யுத்ததில் பிரதானமாக களத்தில் நின்று பலரை கொன்றும், பலரை கைது செய்து காணாமல் ஆக்கச் செய்த இராணுவ அதிகாரியை இராணுவ தளபதியாக நியமித்திருப்பது நீதிக்காக போராடுகின்ற எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இனிமேலும் இச் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் கால அவகாசத்தை வழங்காது காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான சர்வதேச பொறிமுறையூடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இத்தகைய பின்னனியில் 2015ஆம் ஆண்டு செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முப்பதாவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரையில் நீதியினை வழங்குவதற்கும், நல்லிணக்கத்திற்கும் என மனித உரிமைகள் பேரவையினால் கொண்டு வரப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புடமை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல்' என்ற தீர்மானத்திற்கு இணை அனுசரணையினை அளிப்பதாக அரசின் சார்பாக அறிவித்தார்.

ஆனால் அன்று அவர் அரசு சார்பாக சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை அரசு செயற்படுத்தியிருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் இல்லை.

அவ்வாறு செயற்பட்டிருந்தால் இன்றும் இவ் உறவுகள் வீதிகளில் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

ஆனால் அன்று ஏற்றுக்கொண்ட விடயங்களில் காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் அமைக்கப்பட்டாலும் அதனை இக் காணாமல் போனவர்களின் உறுவுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதற்காக அவர்கள் கூறும் காரணம், இவ் அலுவலகம் ஊடாக நிதியை வழங்க முடியுமே தவிர நீதியை வழங்க முடியாது எனக் கூறுகின்றனர். காணாமல் போனோர் அலுவலகம் மன்னாரில் அமைக்கப்பட்ட போது ஐந்து பேரின் தரவுகளை பெற்றுக்கொண்ட அதன் தலைவர் இன்று வரை அதற்கான தீர்வை வழங்கவில்லை.

இந் நிலையில் தற்போது யாழ்ப்பாணத்திலும் நேற்று ஓர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோரின் உறவுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் அதிகாலை வேளையில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டிருக்கிறது. இதன் அவசரமென்ன என்பது புரியாமல் இருக்கிறது.

ஐ.நா மனிதவுரிமை பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்காகவே தற்போது யாழிலும் இவ் அலுவலகத்தை திறக்கிறார்கள் என்கிறார்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள். உறவுகள் கேட்கின்ற விடயம், காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுவேயாகும். யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களது உறவுகளுக்கு அந்த வலி அன்றோடு போய்விட்டது. ஆனால் தன் பிள்ளை இருக்கிறதா? இல்லையா?, தன் கணவன் வருவாரா? மாட்டாரா? எனத் தினம் தினம் வலியை சுமந்துகொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் தம் உறவுகள் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையில் இன்றளவும் இவர்களுக்கு தளர்வு ஏற்படவில்லை.

இதற்கு நியாயம் பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும். இவர்கள் கேட்பதெல்லாம் தமது உறவுகளையே தவிர தனித் தமிழீழம் இல்லை என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேடைகளிலும், பொது நிகழ்வுகளிலும் நிலைமாறு கால நீதியையும் இன நல்லிணக்கத்தையும் பேசும் ஆட்சியாளர்கள் நிஜத்தில் ஏன் அதனை நடமுறைப்படுத்த முயலவில்லை என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கேள்வியாகும்.

காணாமல் போனவர்களின் பிரச்சினை பத்து வருடங்களாக தொடர்ந்து வருகின்றது. இனியும் தொடர்ந்தும் நீட்டிச் செல்வதனூடாக ஒரு போதும் நிலைமாறுகால நீதியினை நிலைநாட்ட முடியாது.

எனவே இப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இனியாவது ஒற்றுமையாக செயற்பட்டு அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அழுத்தம் கொடுத்து உறவுகளின் கண்ணீருக்கு விடை கொடுக்க வேண்டுமென்பதையே வலியுறுத்துகின்றோம். 

ரி.விரூஷன்

Comments