சந்திரனில் நிகழ்ந்த விபத்தில் இருந்து வீரர்கள் தப்பியது எப்படி? | தினகரன் வாரமஞ்சரி

சந்திரனில் நிகழ்ந்த விபத்தில் இருந்து வீரர்கள் தப்பியது எப்படி?

இனி சந்திரனில் இறங்குவது சாத்தியம் இல்லை. ஒரே வழி, சந்திர சுற்றுப் பாதையைவிட்டு வெளியேறி பூமிக்குத் திரும்புவதுதான். அந்த முயற்சியில் ஏதேனும் சிக்கல் வருமா? வளிமண்டலத்தில் நுழையும் போது சந்திரகலம் தீப்பிடித்து பொசுங்கிப் போய் விடுமே! ஒடிசி கலத்தில் வெடிப்பு நிகழ்ந்தபோது ஒடிசி கலத்தின் வெளிப்புறமாக உள்ள கலத்தை உயர் வெப்ப அழுத்தத்தில் இருந்து காக்கும் வெப்ப எதிர்ப்பு ஓடுகள் கொஞ்சமேனும் சேதமடைந்திருக்குமோ?

பொதுவாகவே மேல் நாட்டினருக்கு இலக்கம் 13என்றால் ஆகாது. உயர் மாடிக் கட்டடங்களில் 13ம் மாடி இருக்காது. 12க்குப் பின் 14ம் மாடியே அமையும். ஹோட்டல்களிலும் 13ம் இலக்க அறை இருக்காது. இலக்கங்களில் பலருக்கும் பலவிதமான நம்பிக்கைகள் இருப்பதால் இப்போது ஹோட்டல் அறை இலக்கத்தோடு மாடி இலக்கத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஒன்பதாவது மாடியின் 13ம் இலக்க அறை என்றால் அந்த அறையின் இலக்கம் 913என்றிருக்கும்! நன்கு படித்தவர்கள், சிந்தனைத் தெளிவு கொண்டவர்கள், விஞ்ஞானிகள் என்போரிடம் இந்த நம்பிக்கை பெரும்பாலும் காணப்படுவதில்லை. இதில் இந்திய விஞ்ஞானிகள் விலக்கு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் அகில இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டையும் கூட நல்ல நேரம் பார்த்துத் தான் தொடங்குவார்கள். சந்திராயனை விண்ணில் செலுத்துவதற்கு முன்னர் கூட கோவிலில் பூஜை செய்துதான். இஸ்ரோ சிவன் காரியாலயத்திற்கு வந்து சந்திராயனை விண்ணுக்கு ஏவுகிறார். ‘ஆண்டவன் கிருபையால் சந்திராயன் நல்லபடியாக போய் வரட்டும்’ என நினைப்பது எப்படி விஞ்ஞானமாகும்? 

மேற்கத்தியர் விரும்பாத இந்த 13என்ற இலக்கமே அபல்லோ- 13க்கு சூட்டப்பட்டது. அபல்லோ 13 1970ம் ஆண்டு ஏப்ரல் 11ம் திகதி விண்ணுக்கு ஏவப்பட்டது. ஃபிரெட் ஹெயிஸ், ஜெக் ஸ்விகர்ட் மற்றும் ஜிம் பொவல் ஆகிய மூவரும் அதில் பயணித்தனர். 

 ஜெக் ஸ்விகர்ட்டுக்கு அப்போது 38வயது. 1966முதல் விண்வெளி வீரராக பயிற்சி அளிக்கப்பட்டு வந்தாலும் இதுதான் அவருக்கு முதல் விண் பயணம். ஆனால் அவர் இப் பயணத்தில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்படவில்லை. ஒரு பயணத்தை ஏற்பாடு செய்யும் போது மாற்று ஏற்பாடுகளும் செய்து வைத்திருப்பார்கள். தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படுமானால் தயாராக வைக்கப்பட்டிருக்கும் குழுவில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்வார்கள். உண்மையில் அபல்லோ 13இல் பயணிக்கவென தெரிவு செய்யப்பட்டிருந்தவர் கென்மெட்டிங்லி. பயணம் தொடங்க 48மணித்தியாலயம் இருக்கையில் அவருக்கு ஜெர்மன் மீசல்ஸ் எனப்படும் சின்ன முத்து நோய் கண்டது. எனவே அவருக்குப் பதிலாக ஜெக் அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டார். 

ஜிம் லொவலுக்கு 42வயது. ஏற்கனவே ஜெமினி விண் பரிசோதனை பயணங்களில் கலந்து கொண்டு விண் பயணம் செய்தவர். முதன் முதலாக சந்திரனை அடைந்து சந்திரசுற்றுப் பாதையில் வலம் வந்த அபல்லோ 8இல் கலந்து கொண்டு சந்திரனை வலம் வந்தவர். மொத்தம் 572மணித்தியால விண்பயண அனுபவம் கொண்டவர். 

மூன்றாவது பயணி ஃபிரெட் ஹெயிஸ். 36வயது. அபல்லோ 8மற்றும் 11பயணங்களின் போது மாற்று ஏற்பாட்டுக் குழுவில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தவர். சந்திர பயணத்துக்கு தெரிவு செய்யப்படும் அனைவருமே விண் பயணத்துக்கான முழுமையான அனுபவம் பெற்றவர்கள். பயணத்தின் போது எதிர்கொள்ளக் கூடிய ஆபத்துகள், குளறுபடிகள் போன்றவற்றை எப்படிக் கையாள்வது என்பதிலும் பயிற்சி பெற்றவர்கள் இந்த அனுபவம் தான் அபல்லோ -13. பிரச்சினையை சந்தித்தபோது இம் மூவருக்கும் கை கொடுத்தது. 

அபல்லோ என்பது மொத்த பயணத்துக்கான பொதுப் பெயர். அபல்லோவில் விண் வெளிவீரர்கள் பயணம் செய்யும் கலத்துக்கு ஒரு பெயர் சூட்டப்பட்டிருக்கும். சந்திரனில் இறங்கும் கலத்துக்கு இன்னொரு பெயர் சூட்டப்பட்டிருக்கும். விண் கலத்தை பூமி சுற்றுவட்டப் பாதைக்கு உந்தித்தள்ளும் பூஸ்டர் ரொக்கட் மூன்றாவது பிரிவு. இந்த மூன்றும் சேர்ந்துதான் அபல்லோ. மூன்றாவது சந்திர பயணத்தை மேற்கொண்ட அபல்லோ 13இன் வீரர்கள் பயணித்த கலத்தின் பெயர் ஒடிசி. நீண்ட பயணம் என்பதற்கான கிரேக்க பெயர். கிரேக்க காவியமொன்றின் பெயரும் ஒடிசிதான். ஒடிசியின் மூக்கில் பொருத்தப்பட்டிருந்த சந்திர கலத்தின் பெயர் அக்குவாரியஸ். நட்சத்திர மண்டமொன்றை இப்பெயரால் அழைப்பார்கள். சந்திரனில் இறங்கவுள்ள இரு வீரர்களும் ஒரு சிறிய இணைப்புபாதை வழியாக ஊர்ந்து சென்றுதான் அக்குவாரியசை அடைய வேண்டும். சந்திரத் தரையில் இருந்து கிளம்பி மேலே வரும் சந்திரகலம் திரும்பவும் ஒடிசியின் மூக்கில் தன்னை இணைத்துக் கொள்ளும். வீரர்கள் தவழ்ந்து பிரதான கலத்துக்குள் சென்று விடுவார்கள். இச் சந்திர கலத்துக்கு கடும் உஷ்ணத்தைத் தாங்கும் சக்தி கிடையாது. பூமி வளி மண்டலத்துக்குள் விண்கலம் நுழையும் போது வளியுடன் ஏற்படும் உராய்வு எந்தவொரு கடினமான பொருளையும் பொசுக்கி விடும். அப்படி நடைபெறாத வகையில் உஷ்ண தடுப்பு தகடுகள் விண் கலத்தின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும். வளியுடன் விண்கலம் உராயும்போது விண்கலம் பயங்கரமாகக் குலுங்கும். தாறுமாறாக சுழற்றி எறியப்படும். விண்வீரர்கள் பட்டிகளால் தம்மைப் பிணைத்துக் கொண்டு இதை சமாளிப்பார்கள். 

ஏப்ரல் மாதம் 13ம் திகதி மாலைப் பொழுது. அதாவது பூமி நேரப்படி மாலை. பூமியில் இருந்து இரண்டு லட்சம் மைல் தொலைவில் அபல்லோ -13சந்திர சுற்றுவட்டப் பாதையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அப்போது ஒடிசி கலத்தின் ஹைட்ரஜன் தாங்கியில் அழுத்தம் குறைந்து காணப்படுவதை வெளிப்படுத்தும் எச்சரிக்கை சமிக்​ைஞ வெளிப்படுவதை ஹூஸ்டன் கட்டுப்பாட்டு அறை அவதானித்தது. இது ஒரு சின்ன பிரச்சினைதான். ஹைட் ரஜன் வாயு மிகக் குளிரானது. அது உஷ்ணமடையும் போது குளிர்மைப்படுத்துவதற்கான முறைகள் உள்ளன. ஸ்விகர்ட் அதைச் செய்தார். சிறிது நேரத்தில் விண்கலம் பெரிதாகக் குலுங்கியது. இது மூவரையும் தூக்கிவாரிப் போட்டது. வளியற்ற அந்த சூனிய பிரதேசத்தில் விண்கலம் குலுங்குவதற்கு எந்தத் காரணமும் இருக்க வழி இல்லை. திடீரென விளக்குகள் அணைந்தன. ஒக்சிசன் அழுத்தம் பலவீனமடையத் தொடங்கியது. எச்சரிக்கை விளக்குகள் எரிய ஆரம்பித்தன.

ஸ்விகர்ட் ஹூஸ்டனுடன் தொடர்பு கொண்டு Honston, we have had a problem என்று அவசர கதியில் சொன்னார். இது தவறான வார்த்தைப் பிரயோகம் என்பதால் பின்னாளில் இது ரொம்பப் பிரசித்தமானது. அபல்லோ-13என்ற பெயரில் 1995இல் ஹொலிவூட் திரைப்படம் வெளியானபோது Honston, we have had a problem என இந்த வசனத்தை மாற்றி வைத்திருந்தார்கள். 

ஹூஸ்டன் கட்டுப்பாட்டு அறை அதிர்ச்சியில் ஆழ்ந்தது. விஞ்ஞானிகளும் பயண கட்டுப்பாட்டாளர்களும் அவசரமாகக் கூடி என்ன நடந்திருக்கக் கூடும் என்பதை தேடிப் பார்த்தனர். ஒட்சிசன் தாங்கியுடன் இணைக்கப்பட்டிருந்த வயர் தீப்பிடித்துக் கொண்டதால் அந்தத் தாங்கி வெடித்திருக்கிறது. மற்றொரு தாங்கியையும் சேதப்படுத்தி இருக்கிறது. அபல்லோ புறப்படுவதற்கு முன்னர் அணு அணுவாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இது கண்ணில் படாததன் விளைவுதான் இந்த விபத்து! 

இப்போது ஒரே ஒரு வழிதான் உள்ளது. ஒடிசி கலம் இனி பயணிப்பதற்கு லாயக்கற்றது. அதன் மூக்கில் ஒட்டிக் கொண்டிருக்கும் அக்குவாரியஸ் என்ற சந்திரகலத்துக்குள் புகுந்து கொள்வதன் மூலம் தான் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். ஹுஸ்டன் தந்த யோசனையை ஏற்றுக் கொண்டவர்கள் தவழ்ந்து சென்று அக் கலந்துடன் அடைக்கலமானார்கள். 

சந்திர சுற்றுப் பாதையை அணுகிக் கொண்டிருக்கும் போது ஒரு விபத்து. இனி என்ன நடக்கும் என்று எவருக்கும் தெரியாது. செங்குத்தான ஒரு பாறையில் நீங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஏதாவது உதவி கிடைத்தால் தப்பலாம். இல்லையே அதள பாதாளம் தான். இப்படியான ஒரு நிலைதான் அபல்லோ-13விண்வெளிவீரர்களுக்கும். ஏதேனும் பிரச்சினையாகிப் போனால் இறந்து போகும்வரை சந்திரனை சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.  

அபல்லோவில் விபத்து; வீரர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி பூமியில் வெளியானதும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இரண்டரை லட்சம் மைல் தொலைவில் மூன்று பூமி வாசிகள் விபத்தொன்றில் சிக்கியிருக்கிறார்கள். ஒடிசி கலத்தில் மின்சாரம் இல்லை. பிராணவாயு மிகவும் குறைவு. எனவே, ஒடிசி கலத்தைக் கைவிட்டு அக்குவாரிஸ் என்ற பெயர் கொண்ட சந்திர கலத்தினுள் புகுந்து அதில் அடைக்கலம் பெற்றுள்ளார்கள். இனி சந்திரனில் இறங்குவது சாத்தியம் இல்லை. ஒரே வழி, சந்திர சுற்றுப் பாதையைவிட்டு வெளியேறி பூமிக்குத் திரும்புவதுதான். அந்த முயற்சியில் ஏதேனும் சிக்கல் வருமா? வளிமண்டலத்தில் நுழையும் போது சந்திரகலம் தீப்பிடித்து பொசுங்கிப் போய் விடுமே! ஒடிசி கலத்தில் வெடிப்பு நிகழ்ந்தபோது ஒடிசி கலத்தின் வெளிப்புறமாக உள்ள கலத்தை உயர் வெப்ப அழுத்தத்தில் இருந்து காக்கும் வெப்ப எதிர்ப்பு ஓடுகள் கொஞ்ச மேனும் சேதமடைந்திருக்குமோ? அவ்வாறு அந்த வெப்ப எதிர்ப்பு ஓடுகள் கொஞ்சமேனும் சேதமடைந்திருக்குமானால் உராய்வின் போது உருவாகும் அதிஉயர் வெப்பம் கலத்தினுள் பரவி உள்ளே இருப்பவர்களை பொசுக்கி விடலாம்... 

அபல்லோவில் விபத்து என்றசெய்தி வெளியானதும் ஊடகங்கள் பல்வேறு கோணங்களில் இவ் விடயத்தை அலசத் தொடங்கின. இப்படி ஒரு இக்கட்டான சம்பவம் இதற்கு முன்னர் நிகழ்ந்தது இல்லை என்பதால் தான் இந்த பதற்றம். நாஸா, நாங்கள் அவர்களை மீட்டு பூமிக்கு அழைத்து வருவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று சொன்னாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற யதார்த்தமான மன நிலையே மக்கள் மத்தியில் நிலவியது. சமயத் தலைவர்கள் மக்களிடம் அம் மூவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்கள். அன்றைய பாப்பரசர் உலக கத்தோலிக்க சமுதாயத்திடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அந்த மூவரும் ஆண்டவர் கிருபையால் நல்லடியாக பூமி திரும்ப உதவுமறு கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். அபல்லோ 11சந்திரனில் மனிதனை இறக்கியபோது எப்படி உலக மக்கள் பூமி வாசிகளாக ஒன்றிணைந்து மகிழ்ந்து கொண்டாடினார்களோ அவ்வாறே மீண்டும் பூமிவாசிகள் ஒன்றிணைந்து ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் அந்த மூன்று அமெரிக்கர்களுக்காக பிரார்த்தனை செய்தார்கள் என்பது இங்கே கவனத்துக்குரியது. 

பூமியில் அச்சமும் பரபரப்பும் தொற்றிக்கொண்ட அதேசமயம் ஹுஸ்டன் பயண கட்டுப்பாட்டாளர்களும் நிலவில் சிக்கிக் கொண்ட மூவரும் தீவிரமாக மீட்புப் பணிகளிலும் மீட்டுக்கொள்ளும் வேலைகளிலும் ஈடுபட்டிருந்தனர். வாழ்வா, சாவா போராட்டம்! 

ஒடிசியின் சகல மின் சாதனங்களும் அணைக்கப்பட்டன. மிச்சமிருக்கும் மின்சாரத்தை பூமியில் இறங்கும்போது பயன்படுத்த வேண்டுமல்லவா! அக்குவேரியஸ் சந்திர கலத்துக்குள் வந்துவிட்ட மூவரும் அவசியமற்ற எல்லா மின் உபகரணங்களையும் நிறுத்திவிட்டனர். அச்சிறியகலம் மூவருக்கு போதாது என்றாலும் கூட அதில் பிராணவாயுவும், மின்சாரமும் இருந்தது அதிர்ஷ்டமாக அமைந்தது. இப்போது சந்திர வட்டப் பாதையில் இருந்து கலத்தை பூமியை நோக்கிய பாதைக்குத் திருப்பவேண்டும். அதற்கான ரொக்கட்டை இயக்கினார்கள். அது இயங்கியது. சந்திரபாதையைவிட்டு விலகி பூமியை நோக்கி அக்கலம் பயணத்தை ஆரம்பித்தது ஒடிசியில் மின்சாரம் இல்லாததால் அங்கே சகிக்கமுடியாத கடுங்குளிர் நிலவியது. சில உணவுப் பொருட்கள் சாப்பிடக் கூடியனவாக இல்லை. எனவே இருக்கும் உணவை பகிர்ந்து கொண்டார்கள். மிகக் கொஞ்சமாக சாப்பிட்டார்கள். முக்கியமாகத் தண்ணீரை மிகக் கவனமாக பாவித்தார்கள். அவர்கள் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் சந்திர கலம் நீண்டகால பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல, சந்திரனில் இறக்கவும் புறப்பட்டு மேலே வருவதற்கும் மட்டுமே தயாரிக்கப்பட்டது. ஆனால் பூமி வளி மண்டலத்துக்குள் நுழையும் வரை அதில் தான் அவர்கள் வாழ்ந்தாக வேண்டும். சுமார் மூன்று நாட்களுக்கு! 

இந்த மூன்று நாட்களில் மூவரும் உடல் மெலிந்து போனார்கள். விண்வெளி வீரர் ஹெயிஸ் சிறுநீரக தொற்றுக்கு உள்ளானார். அவர்கள் மனரீதியாக மிகவும் களைப்படைந்திருந்தார்கள். இறுதியாக விண்கலம் பூமியை அண்மித்தது. அடுத்ததாக கலம் வளி மண்டலத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். இங்கே தான் ஆபத்தும் இருந்தது. இச் சந்தர்ப்பத்தில் சந்திர கலத்தைக் காலி செய்து ஒடிசி கலத்துக்குள் வந்து அமர்ந்து கொண்டார்கள். அந்த வெடிப்பு கலத்தின் வெளிப்புற உஷ்ண தடுப்பு தகடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்காவிட்டால் பிரச்சினை இல்லாமல் கடலில் இறங்கிவிடலாம். உலகமே அந்த நேரத்துக்காகக் காத்திருந்தது. 

விண் கலம் வளிமண்டலத்துள் நுழைந்தது. ஒடிசி தீப்பிழம்பாக மாறியது. ஆனால் உள்ளே வீரர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. பிரார்த்தனை பலித்து விட்டதாக மக்கள் பெருமூச்சு விட்டார்கள். பாப்பரசர் கடவுளுக்கு நன்றி சொன்னார். 

அக்காலத்தில் இலங்கையில் புகழ்பெற்ற பகுத்தறிவுவாதியான ஆபிரகாம் கோவூர் பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் என்ற வகையில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டுக்கு கொண்டிருந்தார். டைம்ஸ் மற்றும் டெய்லி நியூஸ் பத்திரிகைகளில் மூடநம்பிக்கைகளை விமர்சித்து காரசாரமான கடிதங்களை எழுதுவார். தொவில், பேய் விரட்டல் என்பனவற்றை கண்டித்து அவற்றுக்கு விஞ்ஞான பூர்வமான விளக்கங்களைத் தருவார். அபல்லோ- 13விபத்தில் சிக்கிக் கொண்டதையடுத்து பாப்பரசர் பிரார்த்தனை செய்யும்படி சொன்னார் அல்லவா? வெற்றிகரமாக அவர்கள் கடலில் இறங்கியதும் பாப்பரவர் கடவுளுக்கு நன்றி சொல்லியதை விமர்சித்து கோவூர் ஒரு கடிதம் எழுதியிருந்தார், டெய்லி நியூஸ் பத்திரிகையில். 

அபல்லோ வீரர்களை காப்பாற்றி பூமிக்கு அழைத்து வந்தது மனித முயற்சிகளும் விஞ்ஞான தொழில்நுட்பமும் தானே தவிர கடவுள் அருளால் அல்ல. விபத்து நிகழ்ந்தும் ஒன்றுமே செய்யாமல் பிரார்த்தனை மட்டும் செய்து கொண்டிருந்தால் அவர்கள் பத்திரமாக திரும்பி வந்து விடுவார்களா? எனவே நான் பாப்பரசர்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். அடுத்த அபல்லோ விண்வெளிக்கு புறப்படுவதற்கு முன்னர், விண்னேற்றத்துக்கான ரொக்கட்டுகள் இயக்கப்படுவதற்கு முன்னர், ஏவு தளத்துக்கு பாப்பரவர் சென்று கடவுளிடம் பிரார்த்தனை செய்யட்டும். தன் பிரார்த்தனை சக்தியால் அந்த அபல்லோ விண்கலத்தை ஒரு அங்குலத்துக்கு உயர்த்திக் காட்டட்டும்! அப்போது கடவுள் இருக்கிறார் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன் என்பது அவர் விடுத்த சவாலாக இருந்தது!  அபல்லோ -13ஏற்படுத்திய பிரச்சினைகள் அடுத்த பயணங்களில் சரி செய்யப்பட்டன.

வீரர் ஹெயிஸ் அபல்லோ 19 பயணத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் அமெரிக்க அரசு நாசாவுக்கான நிதியை குறைத்ததால் அபல்லோ -17 உடன் சந்திர பயண திட்டம் முற்றுப் பெற்றது. 

வியட்நாம் யுத்தத்தால் அமெரிக்க பொருளாதாரத்துக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடி, யுத்தத்துக்கு எதிராக அமெரிக்க இளைஞர்களின் ஆர்ப்பாட்டம், வேலை வாய்ப்பின்மை போன்ற உள்ளூர் காரணங்களினால் அரசு செலவீனங்களில் குறைப்பு செய்ய வேண்டியிருந்ததால்தான் நாசாவின் நிதியை குறைக்க வேண்டியதாயிற்று.  
 
வீரர் ஸ்விகர்ட் 1982ம் ஆண்டு அவரது மாநிலமான கொலராடோவில் இருந்து காங்கிரஸ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் எலும்பு புற்றுநோய் கண்டிருந்ததால் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த போதிலும் பதவிப் பிரமாணம் செய்வதற்கு முன்னரேயே அவர் காலமானார்.  
 
1994ஆம் ஆண்டு ஜிம் லொவெல், பத்திரிகையாளரான ஜெப்ரி குளூகர் என்பவரோடு இணைந்து ‘லாஸ்ட் மூன்’ என்ற பெயரில் தனது அபல்லோ-13 அனுபவங்களை நூலாக எழுதி வெளியிட்டார். இந் நூலை அடிப்படையாகக் கொண்டே 1995ம் ஆண்டு அபல்லோ-13 என்ற திரைப்படம் ஹொலிவூட்டில் தயாரிக்கப்பட்டது. பிரபல நடிகர் டொம் ஹேன்க் நடித்திருந்த இப்படம் இரண்டு அகடமி விருதுகளைத் தட்டிச் சென்றது. அபல்லோ-13ஐ அடிப்படையாகக் கொண்ட பல புத்தங்கள் வெளிவந்தன.  
 
விண்வெளிப் பயணம் பெரும் சாகஸமானாலும் கூட கரணம் தப்பினால் மரணம் போன்றதுதான். விண்வெளி விபத்துகளில் உயிர் பிழைப்பது கடினம். அவ்வகையில் நிலவுக்கு அருகே விபத்து ஒன்று நிகழ்ந்தும் அவர்கள் நல்லபடியாகத் திரும்பி பூமிக்கு வந்தார்கள் என்பதை அதிர்ஷ்டம் என்பதா, அற்புதம் என்ற அழைப்பதா அல்லது விஞ்ஞான அறிவின் வெற்றி என்று பெருமிதம் அடைவதா!  
 
(பயணம் முடிவுற்றது)   
டொமினிக் ஸ்தனிஸ்லோஸ் 

Comments