ஜனாதிபதி தேர்தல்; பெண் வேட்பாளர் புறக்கணிப்பு? | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி தேர்தல்; பெண் வேட்பாளர் புறக்கணிப்பு?

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் இன்று வரை நாட்டை இரண்டு பெண்கள் மாத்திரமே ஆட்சி செய்துள்ளனர்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் அவரது மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரே இலங்கையை ஆட்சி செய்த பெண் தலைவர்களாக வரலாற்றில் இடம்பிடித்திருந்தனர். 1960, 1965, 1970, 1977மற்றும் 1994 -- 2000வரையான காலப் பகுதிகளில் உலகின் முதலாவது பெண் பிரதமராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பதவி வகித்திருந்தார்.

அதேபோன்று, அவரது மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994இல் ஓகஸ்ட் முதல் நவம்பர் வரை இலங்கை பிரதமராகவும் 1994ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2005ஆம் ஆண்டு நவம்பர் வரையான காலப் பகுதி வரை இரண்டு முறை இலங்கையின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்திருந்தார்.

இவர்களைத் தவிர இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் எந்தவொரு பெண்ணும் பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவிகளை வகிக்கவில்லை.இந் நிலையில், இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கும் பெண் வேட்பாளர் ஒருவர் களமிறங்குவது சாத்தியமற்ற ஒன்றாக காணப்படுகின்றது. இலங்கை நாடாளுமன்றத்தில் 225உறுப்பினர்களில் 13பெண்கள் மாத்திரமே உள்ளனர்.

இலங்கை மக்கள் தொகையில் 52சதவிகிதமாக பெண்கள் இருந்தாலும், இலங்கை நாடாளுமன்றத்தில் 5.8வீத பெண்களே அங்கம் வகிக்கின்றனர்.

1982ஆம் ஆண்டு முதல் 7தடவைகள் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை காண முடிகின்ற போதிலும், பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவதை 1999ஆம் ஆண்டுக்கு பின்னர் காண முடியவில்லை.

இது தொடர்பாக பிபிசிக்கு கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் தெரிவித்த கருத்து....

தெற்காசிய வலயத்தில் இலங்கையில் பெண்களுடைய எழுத்தறிவு, கல்வியறிவு வீதம் உச்சத்திலுள்ளது. அதேவேளை இலங்கையில் 50வீதத்துக்கும் அதிகமான சனத்தொகையை பெண்கள் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். அத்தோடு அனைத்து துறைகளிலும் பெண்கள் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். ஆனாலும், இவ்வளவு பெருமைகளைக் கொண்ட இலங்கையில் அரசியல் என்று சொல்லும் போது அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகத் காணப்படுகிறது.

"கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போவானாம்." அப்படியான ஒரு நிலையில் தான் எங்களுடைய பெண்கள் இருக்கின்றோம். காரணம், உள்ளூராட்சி சபை மட்டத்திலே அதாவது மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகளில் கூட பெண்கள் பல போராட்டத்துக்கு மத்தியில் தான் இந்த 23வீதத்தை எட்டிப் பிடித்திருக்கின்றோம். அவர்கள் வேலை செய்கின்றார்களா? இல்லையா அவர்களுக்கான சிறந்த அனுபவம், களம் கிடைக்கிறதா? இதற்கெல்லாம் அப்பால் ஒரு பலத்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் தான் அவர்களுக்கான ஆசன இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. இதிலும் இந்த கட்சிகளுடைய ஆண் அரசியல்வாதிகளின் மனைவி, சகோதரி போன்றவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கிய பின்னர் தான் சாதாரண பெண்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கிறது. எனவே நிச்சயமாக ஜனாதிபதி தேர்தல்களில் பெரும் தடைக்கள் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால், உலகத்திலே முதலாவது பெண் பிரதமரை உருவாக்கியது இலங்கை தான். அதிலும் முக்கியமான ஒரு பிரச்சினை இருக்கிறது, அம்மா, மகள் இருவரும் ஒரே காலப்பகுதியில் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருந்திருக்கின்றார்கள்.

பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும், ஆண்கள் அதற்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்கிறோம். ஆனால், அம்மாவும் மகளும் இரண்டு பெண்கள் நாட்டிலே ஆட்சி செய்கின்ற போதும் கூட பெண்களுக்கான அங்கீகாரம் அரசியலில் குறைவாகத்தான் கிடைத்திருக்கிறது. அதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதை ஆழமாக சிந்திக்கும் போது, பொதுவாக பெண்கள் அரசியலுக்கு வந்தாலும் ஆண்கள் தாங்கள் நினைத்தவற்றை சாதிப்பதற்காக இந்தப் பெண்களை பதவிகளில் அமர்த்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. காரணம் அவர்கள் அரசியலில் நுழைந்து அது தொடர்பான விடயங்களை தேட ஆரம்பிக்கும் பொழுது அவர்களுக்கான காலம் நிறைவடைகிறது.

எனவே, இருக்கக் கூடிய இந்த ஒழுங்கை மாற்றுவது கஷ்டமாக இருக்கக் கூடும் என்பது என்னுடைய ஒரு நிலைப்பாடாக இருக்கிறது. நிச்சயமாக எல்லா கட்சிகளும் பெண்களினுடைய பிரதிநிதித்துவத்தை வெறுமனே உள்ளூராட்சி சபைகள், பாராளுமன்றில் மாத்திரம் பேசாமல் ஜனாதிபதித் தேர்தலிலும் பெண்களின் பங்களிப்பை பேச வேண்டும். நான் உள்ளூராட்சி சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தி மாநகர சபைக்கு வந்ததற்கு பின் கூட ஆண்கள், முதலாவதாக சொல்கின்ற விடயம் நீங்கள் புதிததாக வந்தவர்கள். உங்களுக்கு படிப்பதற்கு நிறைய காலம் இருக்கின்றது. நான்கு வருடங்கள் என்ன நடக்கின்றதென்று உட்கார்ந்து வேடிக்கை பாருங்கள் என்பார்கள். நான்கு வருடங்கள் இருந்து விட்டு மக்களுக்கு சேவையாற்றாமல் செல்ல முடியாதே. அதில் ஆண்களோடு எங்களுக்கு முரண்பட வேண்டிய சந்தர்ப்பம் இருக்கிறது. இது எனக்கு மாத்திரம் அல்லாமல் நிறைய உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும் புதிதாக கிடைத்த அனுபவம்.

அது மாத்திரமல்லாமல் பெண்களோடு நேருக்கு நேர் நியாயத்தை பேச முடியாத சந்தர்ப்பத்தில் கெட்ட வார்த்தையை பேசுகின்ற ஒரு நடைமுறையை ஆண்கள் கைக்கொள்கிறார்கள். எல்லா கட்சி செயலாளர்களும் அடிமட்ட அரசியலிலிருந்து உயர்மட்ட அரசியல் வரை  பெண்களை எவ்வாறு உள்வாங்குவது அவர்களுக்கான  வாய்ப்புகளை எப்படி வழங்குவது என்பது தொடர்பிலே சிந்திக்க வேண்டிய ஒரு தருணம். இது இலங்கைக்கு முக்கியமான ஒரு தருணம் என்பதே எனது கருத்து. நாடாளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுகின்ற பின்னணியில், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க உள்ளூராட்சி சபை தேர்தல்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. உள்ளூராட்சி சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்களை 25வீதமாக அதிகரிக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டிருந்தது. சட்டங்கள் இயற்றப்படும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு சரியான அங்கீகாரத்தை வழங்க தயக்கம் தெரிவிக்கின்றமையே பெண்கள் முன் வராமைக்கான காரணமாகும்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல், இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். காரணம், அதற்கு முன்னர் பெண்களுக்கான அதிகார பங்கீடு குறித்து அதிகளவில் பேசப்பட்டாலும், 25வீத இலக்கு கிட்டத்தட்ட 23வீதத்தை அண்மித்த ஓர் உள்ளூராட்சி சபைத் தேர்தலாக அமைந்திருந்தது.

ஆனால் இலங்கையில் பெண்கள் அரசியலுக்கு வருவது பெரிதும் சவாலாக உள்ளது. காரணம் சட்டங்கள் இயற்றப்படும் இடம் நாடாளுமன்றம். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான அங்கீகாரத்தை வழங்க தயங்குவது தான் மிக முக்கியமான ஒரு காரணம். உள்ளூராட்சி சபை தேர்தலில் 25வீதம் என்ற இலக்கு எதிர்வரும் காலங்களில் 50வீதம் என்ற இடத்திற்கு வர வேண்டும். ஜனாதிபதித் தேர்தலிலும் பெண்கள் போட்டியிட வேண்டும்.

(பிபிசி)
 

Comments