ஜனாதிபதி தேர்தல் வெற்றி; கணக்கு! | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி தேர்தல் வெற்றி; கணக்கு!

தேர்தல்களில் யாருக்கு வாக்களிப்பது எனத் தீர்மானிக்காமல் இருப்பவர்களின் வாக்குகளே வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும் காரணியாகும்.'- அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் இவான் இஸார் 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பொதுஜன பெரமுனவும் ஜனதா விமுக்தி பெரமுனவும் (ஜேவிபி) ஏற்கனவே அறிவித்துவிட்டன. ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற இழுபறி ஐக்கிய தேசியக்கட்சிக்குள் நீடித்துக்கொண்டே செல்கின்றது. பிரதான கட்சிகளைத் தவிர சுயேட்சையாகவும் நாகனந்த கொடிதுவக்கு போன்றவர்கள் போட்டியிடலாம் என்ற ஊகங்கள் இருக்கின்றன.  

கடந்த தேர்தலிலும் பார்க்க அதிகவேட்பாளர்களைக் கொண்டதாக ஜனாதிபதி தேர்தல்களம் அமைந்தாலும் யார் இறுதியில் வெற்றிபெறுவதற்கு அதிக சாத்தியம் உள்ளதென்பதை கடந்தகால தரவுகளை முன்னிறுத்தி ஆராய்வோம். 

கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதான கட்சியாகக்கொண்ட புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 6,217,162 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 5,768,090 வாக்குகளையும் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட ரத்னாயக்க ஆராச்சிகே சிறிசேன 18.174 வாக்குகளையும் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட நாமல் அஜித் ராஜபக்ஷ 15,726 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.  

கடந்த ஏப்ரல் மாதத்தில் உக்ரேய்ன் நாட்டில் இடம்பெற்ற தேர்தலில் அரசியல் கட்சிகளைச் சேராத அரசியலுக்கு முற்றிலும் வெளியே இருந்து போட்டியிட்ட நகைச்சுவை நடிகர் வொளோடிமிர் ஷெலன்ஸ்கி மகத்தான வெற்றியைப் பெற்றிருந்தார். அப்படியானதொரு ஆச்சரியம் அண்மைய எதிர்காலத்தில் இலங்கையில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று அரசியல் ஆய்வாளர்களுடனான கலந்துரையாடல்களின் போது உணரமுடிந்தது.  

இலங்கையின் கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்களை ஆராய்ந்தால் ஐக்கிய தேசியக் கட்சி அன்றேல் அதனைத் தலைமையாகக்கொண்ட கூட்டணி அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அன்றேல் அதனைத் தலைமையாகக்கொண்ட கூட்டணியே வெற்றிபெற்றிருந்தது. இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இடத்தில் பொதுஜன பெரமுன இருக்கின்றன. அந்தவகையில் பொதுஜன பெரமுண தலைமையிலான கூட்டணி அன்றேல் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியிலிருந்து போட்டியிடுகின்ற வேட்பாளருக்கே இறுதி வெற்றிக்கான வாய்ப்பு இருக்கின்றது.  

இம்முறை தேர்தலில் களமிறங்கியிருக்கும் ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் சட்டத்தரணி சமூக செயற்பாட்டாளர் நாகனந்த கொடித்துவக்கு ஆகியோர் கடந்த தேர்தலில் சிறிசேனவிற்கு வாக்களித்த தரப்பினரின் வாக்குகளிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜேவிபிக்கு 710,932 வாக்குகள் கிடைத்திருந்தன. அநுரகுமார திஸாநாயக்க என்ற ஆளுமைமிக்க அரசியல்வாதியின் மீது மக்களுக்கு நம்பிக்கையிருந்தாலும் அவர் சார்ந்து நிற்கின்ற ஜேவிபியிடம் நாட்டின் எதிர்காலத்தை கொடுப்பதற்கு பெரும்பான்மையான மக்கள் இன்னமும் தயாராகவில்லை. அப்படிப்பார்க்கையில் எதிர்வரும் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்கவால் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைத் தாண்டிப் பெறுவதற்கு வாய்ப்பில்லை. கடந்த 2015 பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி 543,944 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் என்று வருகின்றபோது யாரால் இறுதி வெற்றியைப் பெறமுடியும் என்ற எண்ணத்திலேயே அதிகமானவர்கள் வாக்களிப்பதனால் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஜேவிபி பெற்ற வாக்குகளை விடவும் குறைவான வாக்குகள் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போதைய நிலைவரப்படி அநுர குமார திஸாநாயக்கவால் சுமார் ஐந்து லட்சம் வாக்குகளையே அதிகபட்சமாகப் பெறமுடியும் என அரசியல் அவதானிகளின் கருத்துக்கள் மூலம் அறிந்து கொள்ளமுடிகின்றது. 

சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என பேசப்படும் சட்டத்தரணி நாகனந்த கொடித்துவக்கு தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு அதிருப்தி வாக்காளர்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய அதிகபட்ச வாக்குகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டுவதற்கு வாய்ப்பில்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் எதிர்வுகூறலாக இருக்கின்றது.  

கடந்த தேர்தலில் போட்டியிட்ட வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் யாருக்கு வாக்களித்து வெற்றியைப் பெற்றுக்கொடுப்பது என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானமின்றி இருந்தாலும் யார் வரக்கூடாது என்பதில் திட்டவட்டமான முடிவுடன் இருப்பதாக கருத்தாடல்களின்போது உணர்ந்துகொள்ள முடிகின்றது. மஹிந்த ராஜபக்ஸவிற்காவது ஒரு ஜனநாயக முகம் இருக்கின்றது அவர் மக்களை வசீகரிக்கக்கூடிய ஆகர்ஸியம் மிக்க தலைவர். ஆனால் கோத்தபாய என்று வரும்போது அவரை இராணுவ முகத்துடன் மாத்திரமே மக்கள் பார்பார்கள். கடந்த தேர்தலில் மஹிந்தவிற்கு வடக்கு கிழக்கில் கிடைத்த வாக்குகள் கூட எதிர்வரும் தேர்தலில் கோத்தபாயவிற்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று சுட்டிகாட்டப்படுகின்றது. இலங்கையில் மிக அண்மையில் இடம்பெற்ற தேர்தலான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அளவுகோலாக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை பார்க்கின்றபோது அந்த தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த 337,877 வாக்குகள் கிடைத்திருந்தன. கடந்த பாராளுமன்றத்தேர்தலில் 515,963 வாக்குகள் கிடைத்திருந்தன. நல்லாட்சி அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை முற்றாக நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் காணப்பட்டபோதும் ராஜபக்ஸ தரப்பினர் மீண்டும் வந்துவிடுவார்கள் அப்படி வந்தால் நல்லாட்சியில் காணப்பட்ட நிம்மதியான வாழ்க்கை பறிபோய்விடும் என்ற அச்சம் காணப்படுகின்றது. அந்தவகையில் ராஜபக்ஷவின் கடந்த காலத்தை நினைவூட்டினாலேயே தமிழ் மக்களின் வாக்குகளை மீண்டும் தக்கவைத்துக்கொள்வதற்கு அதிக வாய்ப்புக்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு உள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய தேர்தல்களில் இன்னமும் காத்திரமான சக்தியாக உருமாறவில்லை. ஈபிடிபி அதற்குரிய வாக்குவங்கியை தொடர்ந்து தக்கவைத்துவருகின்றபோதும் அது ஒட்டுமொத்த வாக்களில் வெறுமனே அரைச்சதவீதத்தையும் தொடவில்லை.  

முஸ்லிம் வாக்குகளைப் பொறுத்தவரை 2015ம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாக்களித்த தரப்பினர் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் எழுந்த சூழ்நிலைகளால் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. 

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்ட சூழல் தேசிய பாதுகாப்பு விடயத்தில் கரிசனையை உருவாக்கிவிட்டுள்ளது. இதனால் தேசியவாதத்தை முன்னிறுத்தும் தரப்பினருக்கு அவர்களில் பெரும்பான்மையான வாக்குகள் அளிக்கப்பட வாய்ப்புண்டு. ஈஸ்டர் தாக்குதலில் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதியின் மீதும் வெறுப்பு இருந்தாலும் ஒட்டுமொத்த கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களும் அதே நிலைப்பாட்டில் இல்லை. 

தமிழ் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் 2015ம் ஆண்டு போன்றே இம்முறையும் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளருக்கு கிடைக்கும் என்ற எடுகோளின் அடிப்படையில் அநுரகுமாரவும் நாகனந்தவும் சுமார் ஆறுலட்சம் வாக்குகளை இந்தக்கூட்டணிக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளில் இருந்து பிரித்துச் சிதறிடித்துவிடுவார்கள் என்ற எடுகோளின் அடிப்படையிலும் நோக்கினால் எவ்வாறு இக்கூட்டணியால் வெற்றிபெறமுடியும் என்பது எமக்கு முன்பாக உள்ள கேள்வியாகும்.  

இந்த நிலையில் கடந்த தேர்தலின் பின்னர் புதிய வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற 12 லட்சம் இளம் வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கப்போகின்றது என்பதும் எதிர்வரும் தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடிய மிகப்பெரும் காரணிகளில் ஒன்றாகும்.  இந்தப்புதிய வாக்குகளை ஈர்ப்பதற்கு கட்சிகள் என்ன வியூகங்களைக் கையாளப்போகின்றன என்பதிலேயே தேர்தலின் இறுதி வெற்றி தோல்விகள் தங்கியுள்ளன. தேர்தலில் வெற்றி பெறுவதென்பது ஒரு கலை. சிறப்பான முறையில் பிரசார உத்திகளை வகுத்து செயற்படுகின்றவர்கள் மக்கள் அலையை உருவாக்கி இறுதிவெற்றியை தம்வசப்படுத்துவதைக் கண்ணுற்றிருக்கின்றோம்.

இளம் வாக்காளர்கள் அதிகமாக சமூக வலைத்தளங்களில் உலாவருபவர்களாக உலகின் பல பாகங்களிலும் நடைபெறுகின்ற விடயங்களை உடனுக்குடனே அறிந்துகொள்பவர்களாக இருப்பதனால் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் புதிய வாக்காளர்களான இளம் தலைமுறையினரை ஈர்ப்பதற்கு உதவும். 

ஆகமொத்தத்தில் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியென்பது புதிய வாக்காளர்களை தம்வசப் படுத்துவதிலேயே தங்கியிருக்கப்போகின்றது என்பது திண்ணம். 

அருண் ஆரோக்கியநாதர்

Comments