நான்கு தலைமுறையை காவுகொண்ட கோர விபத்து | தினகரன் வாரமஞ்சரி

நான்கு தலைமுறையை காவுகொண்ட கோர விபத்து

அந்த ஒரு நொடி இத்தனை பெரிய சோகம் நிகழுமென்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அன்று அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதினைந்திற்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு கட்டுநாயக்காவில் இருந்து யாழ்ப்பாணம் புறப்பட்ட பேருந்து அனுராதபுரம் மதவாச்சியில் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறைகளின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்துக் குறித்து இன்றைக்கு வரைக்கும் அதிர்ச்சி கலையாகமல் இருக்கின்றார்கள் அந்தக் குடும்பத்தில் எஞ்சியுள்ளவர்கள். குறுகிய கால விடுமுறையில் மிக சந்தோசமாக உறவுகளைப் பார்க்க வேண்டும். தாயகத்தைப் பார்க்க வேண்டும், தாயகத்தில் இருக்கின்ற ஆலயங்களுக்கு செல்ல வேண்டும், நல்லுார் கந்தன் ஆலய மணலிலே  குழந்தை விளையாட வேண்டும் என்ற அந்த எதிர்பார்ப்புக்களோடு, விருப்பங்களோடு அந்தக் குடும்பம் ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் புறப்பட்டது.  

ஜேர்மனியில் இருந்து கட்டுநாயக்காவில் இறங்கும் வரைக்கும் அந்தக் குடும்பம் குதூகலமாக தாயகத்தின்உறவுகளை,  ஆலயங்களை,  கிராமத்து மக்களை, உறவினர்களை,  நண்பர்களைப் பார்க்கப் போகின்றோம் என்ற மகிழ்ச்சியிலேயே திளைத்து கொண்டிருந்தது. கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கிய அவர்களை அழைத்து வருவதற்காகச் சென்ற அவர்களது குடும்பத்தினரும் அங்கு காத்திருந்தனர்.  

அனைவரும் கட்டித்தழுவி அந்த அன்பைப் பகிர்ந்து கொண்டனர். அந்த உற்சாகத்தோடு அவர்கள் அங்கிருந்த பேருந்தொன்றில் யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தனர். வரும் வழியிலே  தங்களுடைய கடந்த காலங்கள் குறித்தும், தங்களுடைய உணர்வுகளையும் அன்பையும் பரிமாறிக் கொண்டு இலங்கையில் தாம் தங்கியிருக்கும் அந்தக் குறுகிய காலத்திலே மேற்கொள்ளப் போகின்ற தங்கள் பயணங்கள் குறித்தும் அளவளாவிய படி  பயணிக்ைகயிலயே அந்த மிகப் பெரிய துயரம் இடம்பெற்றிருக்கிறது.  

திடிரென்று அந்த வாகனம் பாரிய சத்தத்துடன் மோதி சரிந்த பொழுது அதுவரை மகிழ்ச்சியாக  இருந்த அந்தக் குடும்பம் ஒரே நொடியில் சிதைந்து போனது.  ஒரே குடும்பத்தின் தயார், மகள், மகளின் பிள்ளை என சம்பவ இடத்திலே மூன்று உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. அதில் ஜேர்மனியிலிருந்து வருகின்ற தன்னுடைய மகளின் குடும்பத்தை அழைத்து வருவதற்குச் சென்ற தயாரான சதாசிவம் சுகந்தி வயது 52 என்பவரும், தன்னுடைய சகோரியைப் பார்க்கச் சென்ற சுகந்தியின் மகளான ஆசிரியை அஐந்தன் கோபிகா வயது 29 என்பவரும் ஐேர்மனியிலிருந்து தன்னுடைய குடும்பத்தாருடன் யாழ்ப்பாணம் வந்த, செல்வரஞ்சன் சிமிநாத் வயது 12 என்ற சிறுவனும் உயிரிழந்திருந்தனர். 

இந்த விபத்தில் ஜேர்மனியிலிருந்து வந்த சுகந்தியின் மகளும் சிமிநாத்தின் தயாருமான செல்வரஞ்சன் சத்தியா என்ற இளம் குடும்பப் பெண் உட்பட பலர் காயமடைந்தனர். இந் நிலையில் இறந்தவர்களில் சதாசிவம் சுகந்தி மற்றும் அஐந்தன் கோபிகா ஆகியோரது  சடலங்கள் யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த விபத்து குடும்பத்தையே சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்த நிலையில் சில தினங்களின் பின்னர் சுகந்தியின் தாயாரான கார்த்திகேசு மனோன்மணி வயது 85  இந்த அதிர்ச்சியினால் உயிரிழந்திருந்தார். 

ஜேர்மனியிலிருந்து வந்து உயிரிழந்த சிமிநாத் என்ற சிறுவனின் சடலம் கொழும்பில் வைக்கப்பட்டிருந்தது.  அவரது தாயரான சத்தியா காயமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவருக்கு குணமாகியவுடன் தனது மனைவியான சத்தியாவையும் அழைத்துக் கொண்டு சிறுவனின் சடலத்தையும் ஜேர்மனிக்கு கொண்டு செல்லவே தந்தையான செல்வரஞ்சன் திட்டமிட்டிருந்தார். ஆனாலும் எதிர்பாராத விதமாக சிகிச்சை பெற்றுவந்த சத்தியாவும் இரு வாரங்களின் பின்னர் உயிரிழந்து விட்டார்.  

ஒரே குடும்பத்தின் தாயார் , பிள்ளை,  தாயாரின் தயா, பூட்டன் என்று நான்கு தலைமுறையினரைப் பலிவாங்கிய சோகத்திலிருந்த அந்தக் குடும்பத்தினர் இதுவரையில் அதிலிருந்து விடுபடவில்லை. அன்றையதினம் இடம்பெற்ற அந்த விபத்திலே மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்து விட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் தாய்  கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேலாக உயிரக்குப் போராடி வந்தார். அவரை மீட்டு விடலாம் என  தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த போதும் அவருடைய உயிரும் இறுதியில் பிரிந்து விட்டது.  

ஆக இறந்து போன மகனின் இறுதிக்கிரியைக்காகவாவது தயார் வருவார் என அந்த மகனின் உடலலையும் பத்து நாட்களுக்கு மேலாக  தந்தை வைத்துக் காத்திருந்த நிலையில்தாய் மற்றும் பிள்ளையின் இறுதிச் சடங்களை ஒன்றாகச் செய்ய வேண்டிய துர்ப்பாக்கியம் தந்தைக்கு ஏற்பட்டிருக்கிறது. 

விபத்து என்பது ஒரு நொடி தான். ஒரு நொடியில் ஏற்படும்  கவனயீனமானது எந்தளவு துன்பத்தை ஏற்படுத்தும் என்பது குறித்ததான படிப்பினையை இந்த விபத்து ஏற்படுத்தியிருக்கின்றது.  

இந்தத் துயரத்தில் இருந்து இந்தக் குடும்பம் எவ்வாறு மீளப் போகின்றது என்பது தான் கேள்விகள் ஒருபுறமிருக்க, இவ்வாறான துயரங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தவிர்ப்பது எவ்வாறு என்பது குறித்து அதிக சிரத்தை எடுக்க வேண்டிய காலம் இதுவாக இருக்கிறது.  

விபத்துக்களுக்கு குறைவில்லாத நாடாக இலங்கை இருக்கிறது. அதுவும் குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதிகளிலே வாகனங்களின் சடுதியான அதிகரிப்பால் விபத்து என்பது அன்றாடம் நடைபெறும் ஒன்றாகியிருக்கின்றது. இந்த பெரும் சோகம் மிகப் பெரும் படிப்பினையை எங்களுக்குத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறது. குறிப்பாக இப்போது வெளிநாடுகளில் விடுமுறைக் காலம் என்பதால் அதிகளவானோர் தாயகம் நோக்கிப் படையெடுப்பர்.  இந்தக் காலப்பகுதியிலே அவர்கள் தங்களுடைய பயணங்கள் குறித்து முன்கூட்டிய திட்டமிடல்கள் அது தொடர்பான எச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த விபத்து ஏற்படுத்தியிருக்கின்றது.  

மதவாச்சியில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறை பலியெடுக்கப்பட்டிருக்கிறன. இவ்வாறு பலியெடுக்கப்பட்ட அந்த நான்கு தலைமுறைகளின் சோகம் என்பது அழியாத வடுவாக மாறியிருக்கின்றது.

இந்த விபத்து எங்களுக்கு உணர்த்திச் சென்றிருக்கின்ற செய்தி என்னவெனில், புலம் பெயர் தேசங்களில் இருந்து தாயகம் திரும்புபவர்களாக இருந்தாலும் சரி,  அல்லது தாயகத்தின் வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து கொழும்பு உள்ளிட்ட தெற்குப் பகுதிகளுக்கு பயணம் செய்பவர்களாக இருந்தாலும் சரி போக்குவரத்துக்கு முன்னரான திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது தான்.

அவர்கள் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தும் போது அந்த வாகனங்கள் மற்றும் அந்த வாகனங்களின் சாரதிகள் வாகன நிறுவத்தின் பின்புல, அதேவேளை அந்த வாகனத்திலே அமர்த்தப்படுகின்ற சாரதியின் முன் அனுபவம் போன்றவை குறித்து கவனம் செலுத்த வேண்டும். 

அவ்வாறு இல்லாமல் வெறுமனே வாடகைக்கு வாகனத்தை அமர்த்துகிறோம் பயணம் செய்கிறோம் என்றில்லாமல் பல கவனிக்க வேண்டியிருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரையிலே ஒப்பீட்டளவிலே அதிக விபத்து இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணங்களாக போக்குவரத்து நடைமுறையில் உள்ள இலகு முறைகள்,  சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் உள்ள இலகு முறைகள்,  வாகனங்களின் பெருக்கம், அதனை விட வாகனங்களின் தரம் குறித்தான சான்றிதழ்களை பெறுவதில் உள்ள இலகு நடைமுறைகள் அதனைவிட போக்குவரத்து சேவையில் அல்லது போக்குவரத்த கண்காணிப்பு சேவையில் ஈடுபடுபவர்களின் அசமந்தம், ஊழல் போன்றவை இவ்வாறான விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணிகளாக அமைகின்றன.  

உண்மையில்  பயணிகளை ஏற்றி இறக்கக்கூடிய சேவையில் ஈடுபடக் கூடிய வாகனமானது வருடந்தோறும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அது பயணிகளை ஏற்றி இறக்குவதற்கான உரிய தரத்துடன் இருக்கின்றதா என்பது குறித்தான தரச்சான்றிதழைப் பெற்றுக் கொள்வது அவசியமாக இருக்கின்றது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் அவ்வாறான தரச் சான்றிதழை வெறும் ஆயிரம் ருபாவுடன் எந்தவிதமான பரிசோதனைகளும் இன்றி பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதுவும் விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணியாக இருக்கின்றது.  

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அந்த ஒரு நொடியில் பலியான அந்தப் பரிதாபத்தின் பின்னராவது போக்குவரத்து தொடர்பான சட்டங்களை போக்குவரத்து தொடர்பான கண்காணிப்புக்களை போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வாகனங்களின் தரம் தொடர்பான அவதானத்தைச் செலுத்துவதற்கு, இலங்கை போக்குவரத்து கண்காணிப்புத்துறையும் இலங்கை அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் இலங்கை போக்குவரத்தில் பாதுகாப்பற்ற நாடு என்கின்ற அவப் பெயர் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் உருவாகுவது தவிர்க்க முடியாததது.  

இலங்கையைப் பொறுத்த வைரயிலே குறிப்பாக யுத்தம் முடிவிற்கு வந்த பின்னரான காலப்பகுதியில் ஒப்பீட்டளவில் விபத்துக்கள் அதிகமாக இடம்பெற்றிருக்கின்றன. விபத்துக்கள் தொடர்பான இறப்புக்களின் எண்ணிக்கையும் மிக மோசமாக அதிகரித்திருக்கின்றது. இவற்றுக்கு காரணம்  வாகனப் பெருக்கம் என்பதுடன்  போக்குவரத்து ஒழுங்குகள் சரியான முறைகள் பின்னபற்றப்படுவதில்லை என்பதும், சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது சாரதிகளின் பின்புலம் தொடர்பாக அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாக அவர்களின் உடல் உள நலம் தொடர்பாக கவனிப்பதில்லை என்பது பெரும் குறைபாடாக இருக்கிறது.  

உண்மையில் பயணிகள் சேவையில் சாரதியாக ஈடுபடக் கூடிய ஒருவரின் உடல் நலம் மட்டுமன்றி உள நலமும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இலங்கையைப் பொறுத்தவரையிலே உடல் நலம் குறித்து தான் ஓரளவு சிரத்தை எடுக்கப்படுகின்றதே தவிர, உள நலம் குறித்து சிரத்தை அதிகம் எடுக்கப்படுவதில்லை. ஏனெனில் உள  ரீதியாக ஒழுங்கான  நிலைப்பாட்டில் இல்லாத அல்லது உள நலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் நிச்சயமாக பயணிகளைக் கொண்டு செல்ல முடியாது.   இனிமேலாவது இவ்வாறான துயரங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட தரப்புக்களின் பொறுப்பாக இருக்கிறது. அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்கிறது. அதனை விட பயணம் செய்வோர் தங்களுடைய சுய கட்டுப்பாடு தொடர்பாக அதாவது தங்களுடைய பயணத்திற்கு முன்னரான திட்டமிடல்கள் தொடர்பாக ஆராய வேண்டும். அதன் பின்னரே அவர்கள் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.  

குறிப்பாக எங்களது நாட்டின் சாரதிகளைப் பொறுத்தவரையில்  ஓய்வற்ற நீண்ட தூர வாகனம் செலுத்துதல் என்பது அதிகளவு விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. சாரதி அனுபவம் கொண்டிருந்தாலும் ஓய்வற்ற, தூக்கமற்ற நீண்ட தூர பயணமானது விபத்துக்களுக்கு வழியை ஏற்படுத்தும். ஒரு நொடிப் பொழுதுக்குள்  மிகப் பெரிய விபரீதங்களை உண்டு பண்ணி விடும். 

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கான சேவை என்பது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரையானது.   அந்தளவு தூரத்தை ஒரே ஒரு சாரதியை வைத்துக் கொண்டு நடாத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.  

ஆகவே நீண்ட தூரம் பயணம் செய்யும் வாகனங்களில் இரண்டு சாரதிகள் சேவையில் இருக்க வேண்டியது கட்டாயம் என்கின்ற நடைமுறையை அமுலுக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வருவதன் ஊடாகத் தான் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து ஒரு சாரதி இயங்கி அதன் பின் ஓய்வு கொடுத்து மற்ற சாரதி இயங்கி பயணத்தை தொடர முடியும். அவ்வாறில்லாத பட்சத்தில் தொடர்ந்து இவ்வாறான துயரங்கள் இலங்கையில் தொடரத்தான் போகின்றது. ஆகவே உரியவர்கள் சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.   

எஸ். நிதர்ஷன் 

Comments