நிகாப், புர்கா இஸ்லாம் நியமித்த ஆடைகள் அல்ல | தினகரன் வாரமஞ்சரி

நிகாப், புர்கா இஸ்லாம் நியமித்த ஆடைகள் அல்ல

வாரமஞ்சரி (18. 08. 2019) இதழில் ஐந்தாம் பக்கத்தில் எஸ். எம். நூர்தீன் எழுதிய ‘முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாசாரத்துக்கு சட்டத்தின் மூலம் தடை, முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் செயல்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று பிரசுரமாகி இருந்தது. 

அக் கட்டுரையின் சாரம்சம் என்னவெனில் முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப்பும் (தலையையும் கழுத்தையும் சுற்றி) புர்க்கா (முகமூடி) ஆடைகளை அரசாங்கம் சட்ட ரீதியாக தடை செய்வது பற்றியதாக இருந்தது. 

அரசாங்கத்தின் சட்டம் பற்றி அரசாங்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முன், இவைகளை கட்டாயம் அணியத் தான் வேண்டும்? என்பது இஸ்லாத்தில் கட்டாயமான ஒரு சட்டமா? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். 

இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை சொல்வதும் செய்வதும் புனைவதும் புகுத்துவதும் விலக்கப்பட்ட குற்றமாகும். ஏனென்றால், புனித இஸ்லாம் மதம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயுளிலேயே சம்பூர்ணமாக்கப் பட்ட மதமாகும். அதில் நூற்றி பதினான்கு அத்தியாயங்களும் ஆறாயிரத்து அறுநூற்றி அறுபத்தாறு வசனங்களும் மேலும் அதன் அட்டவணைகள், எழுத்துக்கள், குத்துக்கள். கமாக்கள், புள்ளிகள் எனபன அட்டவணை இடப்பட்டுள்ளன. அதனை யாரும் மாற்றவோ, புகுத்தவோ, இணைக்கவோ, வேறு திருகுதாளங்கள் பண்ணவோ முடியாது. 

எனவே திருக்குர் ஆனிலுள்ள வார்த்தைகளை விடவும் நபிகள் நாயகம் அவர்களின் சொல்லையும் செயலையும் விடவும் எமக்கு வேறு எதுவும் பெரிதல்ல. 

மக்கா யாத்திரையின் போது புனித மக்கமா நகரிலும் புனித மதீனா நகரிலும் முழுவதுமாக முற்றாக முகமும் கை மணிக் கட்டும் விரல்களும் தெரிய வேண்டும் என்பதும் கண்டிப்பான திருக் குர்ஆன் சட்டமாகும்  

 நபிகள் நாயகம் அவர்களுக்கு பின்னர் இஸ்லாத்தில் வேறு நபிகளும் இல்லை. மத பெரியார்களுமில்லை. தலைவர்களுமில்லை. ஏனென்றால் இஸ்லாம் எல்லாருக்கும் திறந்த புத்தகம். 

திருக்குர் ஆனை ஓதி மனனம் செய்து மௌலவியாகி விட்டார்கள் என்பதற்காகவோ, பள்ளிவாசலில் இமாம் தொழில் செய்து, தொழுகை நடத்துவதால் அவர்கள் இஸ்லாத்தில் பெரியார்களும் இல்லை. இஸ்லாமிய மதத் தலைவர்களும் இல்லை. உயர்ந்தவனுமில்லை. தாழந்தவனுமில்லை. எல்லோரும் சரி சமமே. இதைத்தான் தொழுகையின் போது தோளுக்கு தோள் இணைந்து வரிசையாக நின்று தொழுகிறோம். 

மார்க்கம் கற்று, தொப்பி போட்டு, ஜுப்பா அணிந்து, முழக்கணக்கில் நீண்ட தாடி வளர்த்தாலும் அவர் இஸ்லாம் மார்க்க பெரியார்களோ, சமயப் பொரியார்களோ அல்லர்.  

திருக்குர் ஆனை ஓதி மனனம் செய்து மௌலவியானவர்கள் மார்க்கத்தில் பரந்தளவான ஞானமும் அவர்களின் தாய் மொழி அறிவும் விளக்கமும் அதில் தெளிவும் (தக்வா) உள் அச்சமும் இருக்க வேண்டும்.  

“ஒரு துண்டு பேரீச்சம் பழத்தாலாவது  மற்றவனுக்கு உதவி செய்” எனப் போதித்து இறைவன் அருளிய புனித வேதம் திருக்குர் ஆன். தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டால் அந் நபருக்கு நிச்சயம் கொடும் நரகமே உரித்தாகும் என்ற இறை வசனத்தின் தாய் மொழி அறிவும் விளக்கமும் அதில் தெளிவும் (தக்வா) உள் அச்சமும் இல்லாததால் தான் மதத்தால் மதம் கொண்டு அப்பாவி மக்களை அவர்களது இறை வணக்கத்தின் போது கொன்று குவித்தான் அந்த பயங்கரவாதி.  

அதனால் தானும் நரகவாதியாகி கருணையும் அன்பே வடிவாகவும் வாழ்ந்து மற்ற மதத்தவர்களையையும் இஸ்லாம் மதத்தின்பால் ஈர்க்க வேண்டிய இஸ்லாமிய சமுதாயம், இன்று புனித தீருக்குர் ஆன் ஒரு பயங்கர, நாசகார ஆயுதம் என்றும் இஸ்லாமியன் என்பவன் ஒரு பயங்கரவாதி என்றும் பல நூறு வருஷங்களுக்கும் அழியாத அவப் பெயரை உண்டு செய்து,  எம்மை உயிரோடு இந்த பூமியின் மேல் தவிக்க விட்டு, ஒழுங்கான ஒரு மரணச் சடங்கு கூட இல்லாமல் மீண்டும் பல முறைத் தோண்டி எடுக்கக் கூடிய அவலப் பிணமாக புதையுண்டுப் போனான்கள் அந்த அரக்கர்கள்.  

நபிகள் நாயகம் அவர்கள் காலமாகும் போது அவர்களுக்குப் பின்னால் யாரையும் இஸ்லாத்தில் பெரியார்களாகவும். இஸ்லாமிய மதத் தலைவர்களாகவும் நியமனம் செய்யவில்லை.  இந்த நிகாப், மற்றும் புர்கா விஷயம் பற்றி நபிகள் (ஸல்) நாயகம அவர்கள் வாழ்ந்த போது நடந்த சம்பவம் ஒன்றை இங்கு தெளிவாக்குவது சாலச் சிறந்தது என நினைக்கிறேன். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது துணைவி ஆயிஷா நாயகி அவர்களோடு திறந்த முன் வாசலில் உரையாடிக் கொண்டிருந்த சமயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க அவர்களது மதிப்புக்குரிய நண்பர்களில் ஒருவராகிய இரண்டு கண்களிலும் பார்வையற்ற மக்தும் (ரலி) அவர்கள் வந்து கொண்டிருப்பதை ஆயிஷா நாயகி அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவித்தார்கள்.

அதைக் கேட்ட நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா நாயகி அவர்களைப் பார்த்து “நீங்கள் வீட்டின் உள்ளே போங்கள்!” என்றார்கள். 

அதற்கு ஆயிஷா நாயகி அவர்கள் “அவருக்குத் தான் இரண்டு கண்களும் தெரியாதே!” என்றார்கள்.  

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவருக்கு கண் தெரியாவிட்டாலும் உங்களுக்கு கண் தெரிகிறதே” என்றார்கள். 

உடனே ஆயிஷா நாயகி அவர்கள் உள்ளே போய் விட்டார்கள். 

இந்த சம்பவத்திலிருந்து பெண்கள் முகத்தை அல்ல, தனது கண்களைத் தான் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும் எனத் தெரிய வருகிறது. அதற்காக கண்களுக்கு ‘பிளாஸ்ட்டர் டேப்’ ஒட்டிக் கொள்ள வேண்டும் என்பதல்ல இதன் கருத்து. அது ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பதே. 

எனவே திருக்குர் ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லும் செயலுமே எமக்கு இஸ்லாமே தவிர பிறிது ஒன்றும் இல்லை.  

“...முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப், மற்றும் புர்கா ஆடைகள் பெண்கள் பாதுகாப்பாக வெளியில் சென்று வரவும் தொழிலை சிறப்பாக செய்யவும் பாதுகாப்புக் கேடயமாக இருக்கின்றது” என்றும் கட்டுரையாளர் கூறுகிறார். இது எம்மைப் பார்த்து மற்றவர்கள் கைகொட்டி சிரிக்கத் தூண்டுகிறது.  

இந்த நிகாப், மற்றும் புர்கா அணியாது வேலைக்கு போன எந்த ஒரு முஸ்லிம் பெண்ணுக்காவது ஒரு அவமானம், அவதூறு ஏனைய எந்த ஒரு வேற்று மதத்தவரால் என்றாவது நடந்ததாக கட்டுரையாளரால் சொல்ல முடியுமா?  

இல்லை இந்த நிகாப், மற்றும் புர்கா பாதுகாப்புக் கேடயம் இல்லாமல் வெளியில் போன எந்த ஒரு முஸ்லிம் அல்லாத வேற்று மத எந்த பெண்ணுக்காவது அது இல்லை என்பதால் தீங்கு வருகிறதா? 

இந்த நிகாப், மற்றும் புர்கா ஆடையால் எப்படி ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்? அப்படியானால் இந்த நிகாப், மற்றும் புர்கா ஆடையை மட்டும் அணிந்தால் வேறு ஆடைகள் அணியத் தேவையே இல்லையே எனக் கட்டுரையாளர் கூறுகிறாரா? 

இந்த நிகாப், மற்றும் புர்கா பாலைவனங்களில் மணல் காற்று வீசும் காலத்தில் மட்டும் கண்களை பாதுகாப்பதற்காக முகத்தை மூடுவதற்கு பயன் படுத்தப்படும் தற்காலிக ஒரு ஆடைக் கவசமாகும். இந்த நிகாப், மற்றும் புர்கா இஸ்லாம் மதக் கோட்பாட்டில் இல்லாதவைகளாகும். 

ஒரு நாட்டில் வாழும் முஸ்லிம், அது முஸ்லிம் நாடாக இருந்தாலும் வேற்று மத நாடாக இருந்தாலும் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டவராக வாழ வேண்டும் என்பது இஸ்லாமிய மதச் சட்டமாகும். 

‘இதனால் முஸ்லிம் பெண்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள் முடங்கி கிடப்பதாகவும் தெரிய வருகிறது” என்றும் கட்டுரையாளர் சொல்கிறார். இது  இஸ்லாமிய சட்டத்துக்கு மாறு செய்வதாகும். 

அந்த பயங்கரவாதி செய்த படுகொலைகளால் பெண்கள் மட்டும் அல்ல. ஆண்களும் தான் வெளியில் இறங்காமல் இருக்கிறோம். அது ஏனென்றால் இஸ்லாமியன் என்று வெளிப்படுத்துவதில் சங்கடங்கள் ஏற்பட்டுள்ளதால். 

இந்த நிகாப், மற்றும் புர்கா என்பன திறந்த பொருளாதாரக் கொள்கையோடு இந்த நாட்டுக்குள் நுழைந்த ஒன்றே அன்றி புனித இஸ்லாம் மதத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒன்றல்ல.  

Comments